தாயன்பு
அய்யா ஆதித்தனார் அவர்களுக்கு தந்தை பெரியாரிடம் எப்போதுமே தனி மதிப்பும், மரியாதையும் உண்டு. அவர் சிங்கப்பூரில் பாரிஸ்டராகப் பணியாற்றிய காலத்திலேயே பெரியாரின் பெருந் தொண்டராக விளங்கினார்.
அதற்கும் முன்பும்கூட பெரியாரின் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவராக ஆதித்தனார் இருந்திருக்க வேண்டும். அவர் பாரிஸ்டர் படிப்புப் படிக்க சென்னையிலிருந்து லண்டனுக்குக் கப்பலேறிய செய்தி, அன்றைய குடிஅரசு இதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆதித்தனாரின் தந்தை வழக்கறிஞர் சிவந்தி ஆதித்தனார் பற்றிய செய்திகள் கூட பெரியார் நடத்திய இதழ்களில் இடம் பெற்றுள்ளன.
தமிழ்நாட்டுக்குத் திரும்பியபின், ஆதித்தனார் - பெரியாரின் உறவு நெருக்கமாக இருந்தது. அன்று டிராம்ஷெட்டாக இருந்த இடத்தை பெரியார், ஆதித்தனார், ஜி.டி.நாயுடு ஆகிய மூவரும் சேர்ந்து வாங்கினார்கள்; அதனால்தான் இன்று தினத்தந்தி, விடுதலை அலுவலகங்கள் அடுத்தடுத்து அமைந்துள்ளன.
ஆதித்தனார் நாம் தமிழர் இயக்கம் தொடங்கி, சுதந்திரத் தமிழ்நாடு என்ற கொள்கைக்காகப் போராடினார். பெரியாரும் அப்போது இதே கொள்கையுடன் இருந்தார். இருவரையும் சுதந்திரத் தமிழ்நாடு அரசியலிலும் ஒன்றாக இணைத்தது.
இதுபற்றிப் பெரியார் குறிப்பிடும்போது ஆதித்தனாரிடம் நடித்து எனக்கு ஒன்றும் ஆக வேண்டியதில்லை; என்னிடம் நடித்து அவருக்கும் ஒன்றும் ஆக வேண்டியதில்லை. சுதந்திரத் தமிழ்நாடு பெற ஆதித்தனார் மார்தட்டிக் கொண்டு ஓடி வருகிறார். அவர் கோழையல்ல. சுத்த வீரர். அதனால்தான் சுதந்திரத் தமிழ்நாடு பெறும் முற்சியில் இருவரும் ஒன்றுபட்டுப் போராடுகிறோம் என்று கூறினார்.
இருவரும் சேர்ந்து போராட்டத் திட்டம் வகுக்க ஒரு மாநாடு நடத்தினார்கள். 6.7.1958 அன்று மன்னார்குடியில் இந்த மாநாடு நடந்தது, சுதந்திரத் தமிழ்நாடு கோரிக்கைக்காக நடந்த முதல் மாநாடு இதுதான்.
தினத்தந்தி செய்தியாளராக இந்த மாநாட்டுக்கு நான் போயிருந்தேன். ஆதித்தனார்மீது பெரியார் எவ்வளவு மதிப்பு வைத்திருந்தார் என்பதை அப்போது நேரில் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவ்வளவு பெருந்தன்மையுடன் பெரியார் நடந்து கொண்டார்.
மாநாட்டுக்கு ஆதித்தனார் தலைமை தாங்கினார்.
மாநாட்டுக்குத் தலைமை தாங்கும்படி ஆதித்தனாரின் பெயரை முன்மொழிந்து பெரியார் பேசினார். தமிழ்நாட்டில் சுதந்திரத்துக்காக நடைபெறும் இந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்க ஆதித்தனாரைத் தவிர வேறு யாரும் கிடைப்பது அரிது என்று பெரியார் சொன்னார்.
மாநாடு தொடங்குமுன் பெரியார், ஆதித்தனார் இருவரும் சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்துப் போகப்பட்டார்கள். இருவரும் ஒரே சாரட்டில் அமர்ந்திருந்தார்கள்.
வழி நெடுக தொண்டர்கள் பெரியார் வாழ்க! பெரியார் வாழ்க! என்று முழக்கமிட்டுக் கொண்டே வந்தார்கள்.
பெரியார் திடீர் என்று வண்டியை நிறுத்துப்பா என்று கூவினார். வண்டி நின்றது. ஆதித்தனார் வாழ்க என்று முழக்கமிடுங்கள் என்று பெரியார் சொன்னார். அதன்பின் தொண்டர்கள் பெரியார் வாழ்க! ஆதித்தனார் வாழ்க! என்று முழக்கமிட்டுக் கொண்டே சென்றார்கள்.
இந்தப் பெருந்தன்மை யாருக்கு வரும்?
தமிழ்நாடு நீங்கிய இந்திய தேசப் படத்தை எரித்துப் போராட்டம் நடத்துவது என்று அந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தவரும் ஆதித்தனாரே!
பெரியார், ஆதித்தனார் இருவரும் கலந்து பேசி போராட்டத் தேதியை அறிவிக்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.
பெரியாரின் பெருந்தன்மைக்கு இவையெல்லாம் எடுத்துக்காட்டுகள்.
திருச்சியில் பெரியாரும், ஆதித்தனாரும் சந்தித்துப் பேசி, 1960 ஜூன் 5ஆம் நாள் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்கள்.
சென்னை நகரில் பெரியாரும், ஆதித்தனாரும் முன்னின்று போராட்டத்தை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் முதல்நாளே இருவரும் கைது செய்யப்பட்டார்கள். சென்னை மத்திய சிறையில் அடுத்தடுத்த அறைகளில் அடைக்கப்பட்டார்கள். இருவரும் மூன்று நாள் சிறையில் இருந்தார்கள். இதுபற்றி ஆதித்தனார் சொல்லுகிறார்:-
சென்னை மத்திய சிறைச்சாலைக் கொட்டறைகளின் கதவுகள் பொழுது புலர்ந்தவுடன் திறக்கப்படுகின்றன.
நேற்றிரவு நல்லாத் தூங்கினீங்களா?
மூட்டைப்பூச்சி கடி உபத்திரம் அதிகம் இருந்ததா?
அனல்காற்றைத் தாங்க முடிந்ததா? ஒரே புழுக்கமாக இருந்ததா?
இப்படித் தாயன்பை அருவியென அள்ளிச் சொரியும் அடுக்கடுக்கான கேள்விகள்! கேட்டவர் - தந்தை பெரியார் அவர்கள். இத்தகைய அன்புக் கேள்விகளுக்குப் பாத்திரமானவன் - நான்.
பெரியாரின் பெருந்தன்மையைத் தாயன்பு என்று ஆதித்தனாரே சொல்லிவிட்டார்! இதற்குமேல் நாம் என்ன கூற வேண்டியிருக்கிறது?
- அ.மா.சாமி, ஆசிரியர் ராணி வார இதழ்
தந்தை
பெரியார் 128ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர்
Comments
Post a Comment