தந்தை பெரியார் வாழ்வில் சிந்தையைக் கவரும் செய்திகள்
தந்தை பெரியார் அவர்களை தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு மாணவர் மன்ற ஆண்டு விழாவிற்கு அழைத்து இருந்தனர்.
விழாவில் ஏராளமான மருத்துவக் கல்லூரி மாணவர்கள், பயிற்சி டாக்டர்கள், டாக்டர்கள், பேராசிரியர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், பொது மக்கள் நிரம்பக் குழுமி இருந்தனர்.
தந்தை பெரியார் அவர்களை வரவேற்றுப் பேசியவர் நாம் எல்லாம் மக்களின் உடலுக்கு ஏற்படும் நோயை குணப்படுத்தக் கூடிய மருத்துவர்கள். அந்தத் துறையில் பயிலக்கூடியவர்கள் ஆவோம். ஆனால் தந்தை பெரியார் அவர்களோ மனித சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள நோயினைப் போக்கும் ஒப்பாரும் மிக்காரும் அற்ற சமுதாய மருத்துவர் ஆவார் என்று குறிப்பிட்டார். அடுத்து தந்தை பெரியார் அவர்களை அறிவுரை வழங்கும்படி கேட்டுக் கொண்டார்கள்.
டாக்டர்களும் நாத்திகர்களே!
தந்தை பெரியார் பேசுகையில், பேரன்புமிக்க அறிஞர்களான பேராசிரியர் பெருமக்களே! டாக்டர் பெருமக்களே! டாக்டருக்கு படித்துக் கொண்டு இருக்கின்ற மாணவ மாணவிகளே மற்றும் பெரியோர்களே, தாய்மார்களே.
சிறந்த மருத்துவ விஞ்ஞானிகளும், மேதைகளும், மற்றும் அவர்களால் பயிற்றுவிக்கப்படும் மாணவ மாணவிகளும் நிரம்பி இருக்கக்கூடிய இந்தக் கூட்டத்தில் இந்த துறையினைப் பற்றி ஏதும் அறியாத என்னை ஒரு பொருட்டாக மதித்து அழைத்ததோடு அறிவுரையும் வழங்கப் பணித்துள்ளீர்கள். இது எனக்கு வெட்கத்தையும் சங்கடத்தையுமே அளிக்கிறது என்றாலும் என் மீது உள்ள அன்பு காரணமாக இப்படி அழைத்துப் பேசச் சொல்லியுள்ளீர்கள் என்று கருதியே ஒரு சில வார்த்தைகள் கூற முயலுகிறேன்.
மருத்துவத் துறையினைச் சார்ந்த நீங்களும் ஒருவிதத்தில் என்னை ஒத்தவர்களே. ஆனால், நீங்கள் ஒத்துக் கொள்ள மாட்டீர்கள். பயப்படுவீர்கள். நான் மீண்டும் கூறுகிறேன்; நீங்களும் என்னை ஒத்தவர்களே. நீங்களும் என்னைப் போன்ற நாத்திகர்களே என்று கூறினார்கள்.
குழுமி இருந்த மருத்துவப் பெருமக்களுக்கு ஒரே ஆச்சரியம், அதிர்ச்சி ஏன் பயம் என்று கூடச் சொல்லலாம். தந்தை பெரியார் பேச்சை தொடங்கியபோது கைதட்டி, ஆரவாரம் செய்தவர்கள் எல்லாம் ஏதோ மின்சாரம் பாய்ந்த அதிர்ச்சிக்கு உள்ளானவர்கள் போல காணப்பட்டார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டும் முனகவும் தொடங்கினார்கள். ஆனால் சப்தம் வெளிவரவில்லை. நாம்தான் சுவாமிமலை, பழனி, சிதம்பரம், சில சமயங்களில் திருப்பதிக்குக்கூட போகத் தவறுவதில்லையே. உண்டியலில் காணிக்கை அல்லவா செலுத்தி வருகின்றோம். வீட்டில் பூஜை அறை வைத்துள்ளோமே, நாம் எப்படி நாத்திகராவோம் என்று சிலர் எண்ணினர். நாம் விஞ்ஞானத்தில் சிறந்த பட்டம் பெற்று இருந்தாலும் அறுவை சிகிச்சையில் மேதை என்று நம்மை மக்கள் பாராட்டினாலும் நாம் தான் புட்டபர்த்தி சாயிபாபா சீடர் ஆயிற்றே நாம் எப்படி நாத்திகர், இப்படி சிலர். நாம் மருத்துவமனைக்குச் செல்லும்போது கூட கோட்டும், சூட்டும் அணிந்து ஸ்டெதாஸ்கோப் தோளில் தொங்கினாலும் நெற்றியில் விபூதியும் அதன் மீது குங்குமமும் வைத்துக்கொண்டு போவதை என்றும் மறந்ததில்லையே. நாம் எப்படி நாத்திகர் என்று சிலரும், இப்படியாக பலரும் பலவாறு எண்ணத் தொடங்கிவிட்டனர்.
மறு கணம் தந்தை பெரியார் ஆமாம் நீங்களும் என்னைப் போன்ற நாத்திகர்களே! இல்லை என்று மறுக்க முடியாது.
நான் மக்களை மடமையில் ஆழ்த்தும் கடவுளால் உண்டாக்கப் பட்டது - புனிதமானது என்று கூறப்படும் ஜாதி, மதம், சாஸ்திர, புராணங்களை எதிர்க்கின்றேன் ஒழிக்க வேண்டும் என்கின்றேன். இதன் காரணமாக என்னை கடவுளுக்கு விரோதி, மதத்திற்கு விரோதி, சாஸ்திர புராணங்களுக்கு விரோதி, நாத்திகன் என்று கூறி என்னை மக்கள் வெறுக்கிறார்கள். டாக்டர்களாகிய நீங்களோ மனிதனுக்கு கடவுளால் தண்டனையாக வழங்கப்பட்ட நோயினை கடவுளுக்கு அவனது எண்ணத்திற்கு மாறாக மருந்து கொடுத்து குணப்படுத்துகின்றீர்கள். காளியாத்தாவால் மக்களுக்கு ஒவ்வொரு கரண்டி எண்ணெய் கொடுத்து உண்டாக்கிய காலராவை ஒழிக்க மருத்துவம் செய்கின்றீர்கள். மாரியாத்தாவால் வழங்கப்பட்ட முத்தை ஒழிக்க மருந்து கொடுக்கின்றீர்கள். இவைகள் எல்லாம் கடவுளுக்கு விரோதமான செயல் அல்லவா? எனவேதான் உங்களையும் நான் நாத்திகர்கள் என்றேன் என்று கூறினார்கள். வியப்பிலும் அச்சத்திலும் வியர்க்க, விறுவிறுக்க அமர்ந்து இருந்த அனைவரும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தவர்களாக கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
தந்தை பெரியார் மேலும் பேசும்போது முன்பெல்லாம் மனிதனின் சராசரி வயது 12, 15 இப்படித்தான் இருந்தது. பிரசவிக்கும்போதும் பிரசவித்த சில வாரங்கள், மாதங்களிலேயே அனேகக் குழந்தைகள் இறந்து விடும். சரியான மருத்துவ வளர்ச்சியும், வசதியும் இன்மையே காரணம். போதாக் குறைக்கு மக்கள் மனதில் குடி கொண்டு இருந்த மூட நம்பிக்கை வேறு. இன்றோ மக்கள் சராசரி வயது நாற்பது தாண்டும் அளவுக்கு வந்து விட்டனர். நல்ல மருத்துவம், சுகாதார வசதிகள் நன்கு பாதுகாக்கப்பட்ட குடி தண்ணீர் இவைகளே காரணம். வரவேற்றுப் பேசியவர் என்னை சமுதாய மருத்துவர் என்றார். ஆம் நான் சமுதாயத் தொண்டு செய்கின்றவன். எனவே சமுதாய மருத்துவர் என்று கூறுகின்றார் என்றே நினைக்கின்றேன்.
நமது சமுதாயத்தினை நீண்ட நெடுநாட்களாக பற்றியுள்ள மூட நம்பிக்கைகள் இதற்கு ஆதாரமான கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர்கள் நடப்பு என்பவைகளை எல்லாம் போக்கப் பாடுபடுகின்றேன்.
மருத்துவர்களாகிய நீங்கள், உங்கள் மருத்துவ முறையில் நோயை குணப்படுத்த இருமுறையினைக் கையாளுகின்றீர்கள். ஒன்று மருந்து கொடுத்து குணப்படுத்துவது, இரண்டாவது அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்துவது ஆகும். நோய் முற்றி புண்புரையோடும் நிலையில் உள்ள புண்ணுக்கு மருத்துவர்களாகிய நீங்கள் ஆயின்மென்ட் தடவச் சொல்லியோ மருந்து கொடுத்தோ வைத்தியம் செய்ய மாட்டீர்கள். அறுவை சிகிச்சையை மேற்கொள்வீர்கள்.
என்னுடைய நிலை இரண்டாம் வகையினைச் சார்ந்ததே.
சமுதாயத்தில் மண்டிக் கிடக்கும் மூடநம்பிக்கைகள், கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர்கள் நடப்பு இவைகளில் எல்லாம் இருக்கின்ற குறைபாடுகளை சீர்திருத்திக் கொள்ளலாம் என்று எண்ணுபவன் அல்ல. இவைகள் மிகவும் புரையோடிய அழுகிய புண்கள். எனவே தலைகீழ் மாற்றம் செய்து அறவே ஒழிக்க வேண்டும் என்ற கருத்துள்ளவன் என்று கூறினார்கள்.
தந்தை பெரியார் அவர்களைப் பற்றிய தவறான கருத்துடையவர்கள் கூட தந்தை பெரியார் உரை கேட்டு நெகிழ்ந்து போனார்கள்.
தந்தை பெரியாரின் அவையடக்கம்
1960 என்று நினைவு; திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கத்தின் சார்பாக எழுத்தாளர் மாநாடு திருச்சி தேவர் மன்றத்தில் நடைபெற்றது. மேற்படி சங்கத்தின் தலைவர் திருச்சி காலஞ்சென்ற அ.வெ.ரா. கிருஷ்ணசாமி ரெட்டியார் அவர்கள் மாநாட்டினை துவக்கி வைக்க தந்தை பெரியார் அவர்களை அழைத்து இருந்தார். தந்தை பெரியார் அவர்களும் மாநாட்டில் கலந்துகொண்டார்கள். தந்தை பெரியார் அவர்கள் கலந்து கொள்ளுகின்றார் என்கின்ற காரணத்தால் மன்றத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஏராளமான எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர். ஜெயகாந்தன் போன்றவர்களும் கலந்து கொண்டனர்.
தந்தை பெரியார் அவர்கள் மாநாட்டினை துவக்கி வைத்து உரையாற்றத் தொடங்கினார்கள்.
நான் ஓர் கருத்தாளன்
பேரன்புமிக்க பெரியோர்களே, தாய்மார்களே, குழுமியுள்ள எழுத்தாளப் பெருமக்களே, அறிஞர்களே வணக்கம்.
என்னை இந்த அறிஞர் பெருமக்கள், எழுத்தாளர்கள் மற்றும் பேச்சாளர்கள் கலந்து கொள்ளும்படியான இந்த மாநாட்டினை தொடக்கி வைக்கப் பணித்துள்ளீர்கள்.
நானோ எழுத்தாளனும் அல்ல, பேச்சாளனும் அல்ல என்று தொடங்கினார்கள். குழுமியிருந்த எழுத்தாளர்களுக்கும், பொது மக்களுக்கும் தூக்கி வாரிப்போட்டது. தந்தை பெரியார் எழுத்தாளர் அல்ல, பேச்சாளர் அல்ல என்றால் இந்த நாட்டில் யார்தான் எழுத்தாளர்கள்? யார்தான் பேச்சாளர்? இதை யார்தான் நம்புவார்கள்?
தந்தை பெரியார் காங்கிரசில் இருக்கும்போது மக்களை ஈர்க்கக்கூடிய பெரும் பேச்சாளர். காங்கிரசை விட்டு வெளியே வந்த பிறகும் கூட குடிஅரசு பத்திரிகையினைத் துவங்கி புரட்சிகரமான தமது எழுத்தால் சமுதாய மாற்றத்திற்கு வழி கோலியவர் ஆயிற்றே. குடிஅரசு பத்திரிகையில் அவர் எழுதிய எழுத்து, படிப்பவர்களையே தேன் குடத்து வண்டுபோல அவர் பக்கம் இழுக்க வல்லதாக அல்லவா இருந்தது! படித்தவர்களும், இளைஞர்களும் அவர் பின் அணிவகுத்து நிற்கச் செய்ததே.
குடிஅரசு தடைப்பட்ட காலத்தில் புரட்சி என்ற பத்திரிகையும், பிறகு பகுத்தறிவு என்ற பத்திரிகையும் நடத்தியவர் ஆயிற்றே! ஏன் ஆங்கிலத்தில் ரிவோல்ட் என்ற பத்திரிகையும் அவர் நடத்தியதுதானே! ஏன் விடுதலை நாளேட்டில் அவர் எழுத்து எவ்வளவு வல்லாமையுடையது என்பது எழுத்தாளர்கள் அறிவார்கள். தமிழகத்திலேயே அதிகப்படியாக எழுதிக் குவித்தவரும், பொதுக்கூட்டம், மாநாடு, திருமணம் ஆகியவற்றில் உரை நிகழ்த்தியவரும் அவருக்கு நிகர் அவரேதான்.
என்ன காரணத்திற்காக இப்படி நான் எழுத்தாளனும் அல்ல, பேச்சாளனும் அல்ல என்று கூறுகின்றார்?
மேற்கொண்டு என்ன சொல்லப் போகின்றாரோ என்று ஆவலுடன் எதிர்பார்த்த வண்ணம் அனைவரும் இருந்தனர்.
தந்தை பெரியார், ஆம் நான் பேச்சாளனோ, எழுத்தாளனோ அல்ல, பின் யார்தான் என்று கேட்பீர்களேயானால் நான் ஓர் கருத்தாளன் என்றார். கூடி இருந்த மக்கள் கூட்டத்தின் கையொலியால் மன்றமே அதிர்ந்தது.
தந்தை பெரியார் மேலும் பேசுகையில், எனக்கு மோனை, எதுகை வைத்துப் பேசத் தெரியாது. அடுக்குத் தொடரிலோ இலக்கிய நயத்துடனோ பேசவோ, எழுதவோ வராது. மக்கள் என்ன சொன்னால், எம்மாதிரி எழுதினால் தம்மை வரவேற்பார்கள் என்பது தெரிந்து அதற்கு ஏற்ற வண்ணம் பேசவோ, எழுதவோ எனக்குத் தெரியாது. சிலர் மக்கள் கைத்தட்டலைப் பெற வேண்டும் என்பதற்காகப் பேசுவார்கள். அவர்கள் கையொலி அடங்கும் மட்டும் பேச்சை நிறுத்தி பிறகு தொடருவார்கள்.
சிலர் மற்றவர் சிரிக்க வேண்டும் என்பதற்காக அதற்கு ஏற்ற வண்ணம் பேசுவார்கள். சிலர் நடிப்புக் கலையோடு பேசுவார்கள். ஏற்றம், இறக்கத்தோடு பேசுவார்கள்.
நான் இவர்களில் எத்தரத்தையும் சார்ந்தவனும் அல்ல. எனக்கு முக்கியம் கருத்து, மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும், அதற்காக மக்களுக்கு விளங்கும் வண்ணம் சொல்ல வேண்டும் என்பதேயாகும்.
மற்றபடி நான் முன்பே குறிப்பிட்டது போல அழகுப் பேச்சோ, அலங்காரப் பேச்சோ, எழுத்தோ எனக்கு முக்கியம் அல்ல.
மற்றபடி எனது பேச்சிலோ, எழுத்திலோ மற்றவர்கள் இந்த விஷயம் பற்றி அப்படிச் சொன்னார்கள், இப்படிச் சொன்னார்கள், அப்படி எழுதினார்கள், இப்படி எழுதினார்கள் என்று மேற்கோள்காட்டிப் பேசுவதோ, எழுதுவதோ செய்யாதவன் நான்.
எந்தக் கருத்தைச் சொன்னாலும் அது எனது சொந்தக் கருத்து. எனது மனதில் பட்டதைக் கூறுகின்றேன். வேண்டுமானால் நான் சொன்ன கருத்தை இன்ன இன்னாரும் கூறி இருக்கின்றார்கள் என்று குறிப்பிடுவது வழக்கம் என்று குறிப்பிட்டார்கள்.
காதாட்டிப்பட்டி மக்களுக்கு அறிவுரை
திராவிடர் கழகம் தீவிரமாக காங்கிரசை ஆதரித்து வந்த காலம், தி.மு.கழகத்தை எதிர்த்து காங்கிரசுக்கு முழுமூச்சாக தேர்தலில் பாடுபட்ட காலம். தந்தைபெரியார் திருவையாறு தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட காலஞ்சென்ற கா.பா. பழனி, B.A., B.L., அவர்களை ஆதரித்து காலை 8 மணி முதல் நள்ளிரவு 3 மணி வரை ஒரு நாள் பிரசாரம் செய்தார். சுமார் 70, 80 ஊர்களில் பிரசாரம் செய்தார்கள்.
தந்தை பெரியார் திருச்சியில் இருந்து பயணமாகி தஞ்சை மாவட்ட எல்லைக்கு காலை 8 மணிக்கெல்லாம் வந்தடைந்தார்கள். முதல் முதலாக காதாட்டிப்பட்டி என்ற ஊரில் தமது பிரசாரத்தைத் தொடங்கினார்கள்.
இந்த ஊர் மக்கள் தி.மு.கழக வேட்பாளரையே முழுமையாக ஆதரித்து மற்ற கட்சிக்காரர்களை ஊருக்குள்ளேயே நுழைய ஒட்டாமல் தடுத்து வந்தார்கள். தந்தை பெரியார் அந்த கிராமத்திற்கு வேனில் நுழையும்போது ஊர் இளைஞர்கள் ரோடு முனையிலேயே கூச்சல் போட்டார்களே ஒழிய, அவர்கள் தடுக்கவில்லை. தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு குழுமி இருந்தவர்களுக்கு தந்தை பெரியார் அவர்களின் உருவத்தைப் பார்த்தமட்டில் எப்படியோ தயங்கி நின்றுவிட்டனர்.
ஊரின் முனையில் வேனில் இருந்தபடியே தந்தை பெரியார் அவர்கள் பேசத் தொடங்கினார்கள். மக்களும் அவரவர் வீட்டு வாசலில் இருந்து தந்தை பெரியார் வருகை தந்துள்ளதைப் பார்த்தார்களே தவிர யாரும் கூட்ட மைதானத்திற்கு வரவில்லை. அவ்வளவு தூரம் தி.மு.கழக வேட்பாளரை ஆதரித்தும் மற்ற கட்சி வேட்பாளர்களை புறக்கணித்தும் வந்தனர்.
தந்தை பெரியார் தம் பேச்சில் ஏ! காதாட்டிப்பட்டியில் உள்ள தாய்மார்களே! பெரியோர்களே! இளைஞர்களே!
நீங்கள் இன்ன கட்சிக்காரர்களுக்குத்தான் ஆதரவு கொடுப்போம், மற்றவர்களை ஊருக்குள்ளே கூட விடமாட்டோம் என்று பிடிவாதமாக இருக்கின்றீர்கள். நீங்கள் ஒரு கட்சிக்கு ஆதரவு கொடுப்பதும், மற்றவருக்கு மறுப்பதும் உங்கள் இஷ்டத்தைப் பொறுத்தது.
ஆனால் மாற்றுக் கட்சிக்காரர்கள் இந்த ஊருக்கே வரக்கூடாது, தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என்பது முறையல்ல. தேர்தலில் ஈடுபடும் கட்சிக்காரர்கள் தங்கள் தங்கள் கொள்கைகளை உங்கள் முன் வைத்து ஓட்டு கேட்கின்றார்கள்.
இப்படி வருகின்றவர்கள் கருத்துக்களை நன்றாகக் கேளுங்கள். சீர் தூக்கிப் பாருங்கள். உங்களுக்கு யார் பதவிக்கு வந்தால் நல்லது, மக்களுக்கு பாடுபடுவார்கள் என்பது உங்களுக்குத் தோன்றுகின்றதோ அவருக்கு ஓட்டு அளியுங்கள். மற்றவர்களை தள்ளி விடுங்கள். இது உங்கள் சுதந்திரம். இதில் தலையிட நான் விரும்பவில்லை.
எனவே, காதாட்டிப்பட்டியில் உள்ள மக்களே எல்லோர் சொல்வதையும் உங்கள் காது கொடுத்துக் கேளுங்கள் யார் எதைச் சொன்னாலும் நாங்கள் கேட்க மாட்டோம் என்று காதை ஆட்டிக் கொண்டு இருப்பீர்களேயானால் நிச்சயம் ஏமாந்து போவீர்கள்.
மனிதனுக்கு காது உள்ளது என்பதையும் கவனமாக காது கொடுத்துக் கேட்பதற்கே ஒழிய கேட்கவே மாட்டோம் என்று காதாட்ட அல்ல என்று நகைச்சுவை ததும்ப பேசினார்கள்.
சற்று நேரத்திற்கெல்லாம் வீட்டு வாசல், தூரத்தில் நின்றவர்கள் எல்லாம் நெருங்கி வேனைச் சூழ்ந்து கொண்டு அய்யாவின் அறிவுரையினைக் கேட்டனர்.
இளைஞர்கள் கையெடுத்து வணக்கம் தெரிவித்தனர். தந்தை பெரியார் வாழ்க என்ற வாழ்த்தொலியுடன் வழி அனுப்பி வைத்தனர்.
தந்தை பெரியார் அவர்களுக்கு டாக்டர் அம்மாள் காணிக்கை
ஒரு தடவை தஞ்சை பெரியார் இல்லத்தில் தஞ்சை மாவட்டக் கழக கமிட்டிக் கூட்டம் தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அது முடியும் தருவாயில் தந்தைபெரியார் அவர்களை தமது குடும்பத் தலைவராகவும் வழி காட்டியாகவும் கொண்டு அவரது அடிச்சுவட்டில் சிறிதும் பிறழாது வாழ்ந்து வரும் ஒரு குடும்பம் தந்தை பெரியார் அவர்களைக் கண்டு வணங்கியது.
தந்தை பெரியார் அவர்களுக்கு மிகவும் பழக்கமான பற்றும் பாசமும் உள்ள குடும்பம் ஆனதால் தந்தை பெரியார் அவர்கள் அவர்களை வரவேற்று அளவளாவிக் கொண்டு இருந்தார்.
ஒரு இளம் பெண் தமது கைப்பையில் இருந்து ரூபாய் நோட்டுக் கற்றைகளை அப்படியே எடுத்து தந்தை பெரியார் அவர்களின் இரு கைகளிலும் வைத்தார். தந்தை பெரியார் அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இது என்ன என்று ஆச்சரியத்துடன் கேட்டார். அதற்கு அந்தப் பெண், அய்யா நீங்கள் எங்கள் குடும்பத் தலைவர்; வழிகாட்டியும் ஆவீர்கள்.
நான் டாக்டராக வேலைக்குப் போய் வாங்கிய முதல் மாத சம்பளம்தான் இவை. மூடநம்பிக்கை குடும்பமாக இருந்தால் திருப்பதிக்கோ, பழனிக்கோ சென்று உண்டியலில் செலுத்துவார்கள். நாங்கள் உங்களை பின்பற்றுபவர்கள் எனவே எனது முதல் மாத சம்பளம் உங்களுக்கே உரியது என்று கூறினார்.
அய்யா அவர்கள், உனது முதல் மாத சம்பளத்தை உன்னைப் படிக்க வைத்து ஆளாக்கிய உன் தாய் தந்தையரிடம் அல்லவா கொடுத்திருக்க வேண்டும் என்றார்.
அதற்கு அந்த துடிப்பு மிக்க டாக்டர் அம்மா அவர்கள், அய்யா நீங்கள் இல்லாவிட்டால் நான் டாக்டர் ஆவது ஏது? எங்கள் குடும்பத்திற்கு எல்லாமே நீங்கள்தான் என்று நாங்கள் மதிக்கும்போது தங்களிடம் கொடுக்கும் இவை என் தாய் தந்தையரிடம் கொடுப்பதுபோல ஆகும் என்றார்.
இந்தக் குடும்பம் வேறு யாரும் இல்லை காலஞ்சென்ற பெரியார் பெருந்தொண்டரும், புதுக்கோட்டை ஸ்டேஷன் மாஸ்டருமாக இருந்த தர்மராஜ் அவர்கள் குடும்பத்தினர்கள்தான்.
தந்தை பெரியார் அவர்களுக்கு காணிக்கை செலுத்திய டாக்டரம்மா அவரின் மூத்த மகளும் சென்னை வழக்கறிஞர் வீரசேகரன் அவர்களின் சகோதரியும், இன்றைக்கு தஞ்சையிலே பிரபல டாக்டராக அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் டாக்டர் தமிழ்மணி அவர்கள் ஆவார்கள்.
மெணசி
தர்மபுரி மாவட்டத்தில் அரூர் வட்டம் என்றைக்குமே கழக வளர்ச்சியில் மேலோங்கி நிற்கும் பகுதியாகும்.
நிலவளம் குன்றிய பகுதி என்றபோதிலும் தந்தை பெரியார் அவர்களின் கொள்கை கோட்பாடுகளை ஏற்றுக் கொண்ட மனவளம் மிக்க தோழர்கள் ஏராளம் உண்டு. ஏராளமான கிளைக் கழகங்களைக் கொண்ட வட்டமாகும். மோபிரிப்பட்டி M.T.செல்வன், மூக்கனூர் பட்டி ராமசாமி, அரூர் T.C. வீராசாமி, மெணசி சின்ன வெள்ளை போன்ற ஏராளமான பெரியார் பெருந்தொண்டர்கள் வாழ்ந்து கழகப் பணியாற்றி மறைந்ததும் இந்த மண்ணில்தான். இந்த பகுதியில் தந்தை பெரியார் செல்லாத சிற்றூர்களே கிடையாது என்று கூறலாம்.
ஒரு தடவை தந்தை பெரியார் அவர்கள் மெணசி என்ற ஊருக்குக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். தந்தை பெரியார் எத்தனையோ தடவைகள் இந்த ஊருக்கு வருகை தந்திருந்த போதிலும் இந்தத் தடவை முன்பெல்லாம் விட மிகவும் சிறப்பாக ஊர்வலம், பொதுக்கூட்டம் ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள். ஊரே விழாக் கோலம் பூண்டு இருந்தது. மாலை 4 மணி முதல் சுற்று வட்டாரத்தில் உள்ள கழகத் தோழர்களும் பொது மக்களும் வந்து குவியத் தொடங்கிவிட்டனர்.
தந்தை பெரியார் அவர்கள் அன்னை மணியம்மையார் அவர்களுடன் மாலை 3.30 மணிக்கெல்லாம் வந்து விட்டார்கள். கழகத் தலைவர் சின்ன வெள்ளை அவர்கள் இல்லத்தில் தங்கி இருந்தார்கள்.
ஊர்வலம் - மாலை 6 மணிக்கு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இரதத்தில் தந்தை பெரியார் அவர்களை அமரச் செய்து புறப்பட்டது.
தாரை, தப்பட்டை முழங்க கழகத் தோழர்கள் அலகு குத்திக் கொண்டும், தீச்சட்டி ஏந்தியும், சிலம்பம் போன்ற வீர விளையாட்டுக்களை நிகழ்த்திக் கொண்டும் வந்தனர்.
கருஞ்சட்டைகள் கடலென காட்சி அளித்தது. அந்த ஊர்வலம் இரவு 8 மணி அளவில் பொதுக் கூட்ட மைதானம் வந்தடைந்தது. மக்கள் கூட்டம் மைதானமே நிரம்பி வழிந்தது.
தந்தை பெரியார் அவர்கள் உரையாற்றத் தொடங்கிய சிறிது நேரத்திற்கெல்லாம் மக்கள் அமர்ந்து இருக்கும் ஓர் பகுதியில் சிறிது சலசலப்பு எழுந்தது. கழகத் தோழர்கள் ஒருவரை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முற்பட்டனர்.
அய்யா அவர்கள் தமது பேச்சை நிறுத்திக் கொண்டு மேடையில் இருந்தவர்களை என்ன கூச்சல், குழப்பம் என்று கேட்டார்கள்.
அவர்கள், அய்யா ஒன்றும் இல்லை. ஒரு ஆசாமி நன்றாகக் குடித்துவிட்டு நிலை தவறி சத்தம் போட்டுக் கொண்டு இருக்கின்றார். அவர் மிகவும் நல்லவர். இன்று ஏனோ இப்படி ஆகிவிட்டார். அவரை நம் தோழர்கள் அப்புறப்படுத்துகின்றார்கள் என்று சொன்னார்கள்.
அய்யா அவர்கள் ஒலி பெருக்கியில் அந்தத் தோழரை கழகத் தோழர்கள் ஒன்றும் செய்ய வேண்டாம்; விட்டு விடுங்கள். அவர் நன்றாக ஆடட்டும், குதிக்கட்டும், மக்கள் கள்ளச் சாராயத்தை குடித்து குடல் வெந்து அற்ப ஆயுசில் சாகின்றார்கள். அவர்கள் சற்று நல்ல சாராயத்தையாவது குடித்து சிறிது காலம் அதிகமாவது வாழட்டும் என்ற நோக்கத்தில் நான்தான் மீண்டும் மதுவிலக்கை ஒழித்து கள்ளுக்கடை, சாராயக்கடைகளை திறக்கும்படி சர்க்காரை கேட்டுக்கொண்டேன். அவர்களும் அப்படியே செய்தார்கள்.
கள்ளுக்கடையைக் கொண்டுவரக் காரணமான என் முன்னால் சந்தோஷத்தைக் காட்ட ஆடாமல் வேறு எங்கே போய் ஆடப் போகிறார்?
தோழர்களே! அவரை விட்டு விடுங்கள். அவர் ஆசை தீர ஆடட்டும் என்று நகைச்சுவை ததும்பக் குறிப்பிட்டார்கள். அதற்குள்ளாக கழகத் தோழர்கள் அவரை அமுக்கிப் பிடித்து வெளியேற்ற முற்பட்ட காரணத்தாலும், குடித்து வெகு நேரம் ஆனதாலும் அந்த தோழர் குடி மயக்கம் தெளிவுற்று தாம் நடந்துகொண்ட செயலுக்கு வெட்கித் தலை குனிந்தார்.
- புலவர். கோ. இமயவரம்பன்
தந்தை
பெரியார் 112ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர்
Comments
Post a Comment