கூடியிருந்தவர்கள் திகைத்துப் போனார்கள்
சுமார் நாற்பது ஆண்டுகளுக்குமுன் அன்றைய நகராட்சித் தலைவராக இருந்தவர் திரு.இரத்தினசபாபதி (முதலியார்) அவர்கள் நீதிக்கட்சியுடன் நெருக்கமானவர். அவர் கோவை அவினாசி சாலையில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்புள்ள பங்களாவில் வாழ்ந்துவந்தார். இன்று அந்தப் பகுதி மாற்றம் பெற்று வர்த்தக வளாகங்களாகவும், நட்சத்திர ஓட்டல்களாகவும், வங்கி கட்டடங்களாகவும் செயல்பட்டு வருகிறது. திரு.இரத்தினசபாபதி முதலியார் அவர்கள் தொழிலில் தவிர்க்கமுடியாத பெரிய நெருக்கடியை சந்தித்தார். கடன் சுமைக்குள்ளானார். அந்த நிலையில் திருச்சியில் தங்கி இருந்த தந்தை பெரியாரை சந்தித்து தன் நிலைமைகளை எடுத்துச் சொல்லி பெரியாரிடம் வாங்கி இருந்த ஒரு இலட்ச ரூபாய்க்கு ஒரு புரோ நோட்டும் அதற்கு ஆதரவாக மேலே சொன்ன இரண்டு ஏக்கர் வீட்டையும் அடமானமாக எழுதிக் கொடுத்தார். எந்த நெருக்கடியானாலும் பெரியாரின் அறக்கட்டளை பணத்திற்கு மோசம் வந்துவிடக்கூடாது என்பது அவருடைய உயர்ந்த கருத்து. அந்த ஆவணங்களை பெரியார் வாங்கி வைத்துக்கொண்டு, வந்தவரின் குடும்ப நலன்களை கேட்டுவிட்டு புரோ நோட்டை கிழித்து எறிந்துவிட்டு வீட்டின் ஆவணத்தை திருப்பிக் கொடுத்து அவரைக் கோவைக்கு வழி அனுப்பினார். அங்கு கூடியிருந்தவர்கள் திகைத்துப் போனார்கள். அப்போது அய்யா கூறியது......
இந்த இரத்தினசபாபதி அவர்கள் கோவையின் தந்தையாக போற்றப்படுபவர். இவர் நகராட்சித் தலைவராக இருந்து கோவைக்கு சிறுவாணி குடிநீர் கொண்டு வந்தார். இந்தத் திட்டம்தான் கோவையின் வளர்ச்சிக்கு அடிப்படை அதற்கு அவர் எதிர்கொண்ட தொல்லைகள் ஏராளம் இன்று கோவையில் இருக்கும் ஆர்.எஸ்.புரம் என்ற சிறந்த துணை நகரம் இவரால் உருவாக்கப்பட்டது. இரத்தினசபாபதிபுரம் என்பதன் சுருக்கம்தான் ஆர்.எஸ்.புரம். தனது மிகுந்த நெருக்கடியிலும் நமது இயக்கத்திற்கு நட்டம் வந்துவிடக்கூடாது என்பது அவர் கருத்து. நாம் அவருக்கு சில ஆண்டுகளுக்கு முன் கொடுத்தது குறைந்த தொகைதான். ஆண்டுதோறும் வட்டி சேர்த்து லட்சமாகியிருக்கிறது என்று சொல்லி பணம் மட்டுமே தனது குறிக்கோள் அல்ல என்பதை எடுத்துக் காட்டினார்.
- வசந்தம் கு.இராமச்சந்திரன்
தந்தை
பெரியார் 135ஆம் ஆண்டு பிறந்தநாள் விடுதலை மலர்
Comments
Post a Comment