அய்யாவின் பண்பாட்டை அரசியல்வாதிகள் கற்கட்டும்



சம்பூர்ண இராமாயணம் திரைப்படம் எடுக்கும்போது என்னை பரதன் வேடத்தில் நடிக்க அழைத்தார்கள். நான் மறுத்துவிட்டேன். ஏன் நடிக்க மறுக்கிறீர்கள் என்று கேட்டார்கள். நான் சொன்னேன் எனக்கென்று ஒரு கொள்கை உண்டு. அது பெரியார் கொள்கை. நான் முதலில் கழகத்துக்காரன், இரண்டாவதுதான் தொழில் என்று சொன்னேன். இதனால்தான் என்னை அண்ணா அவர்கள் இலட்சிய நடிகர் என்று அழைத்தார்கள். அதுவே எனக்குப் பட்டமாயிற்று.

யார் யாரோ இன்று வேஷம் போட்டுக்கொண்டு வருகிறார்கள். ஆனால் ராஜேந்திரன் ஒரு கொள்கையுள்ள நடிகர். எனக்குக்கூட ஆசைதான். ராஜேந்திரன் நடிக்க மறுக்கும் வேடங்களில் வேறு யாராவது நடித்து பணம் வாங்கிச் சென்று விடுவார்களே, இவரே நடிக்கலாமே என்று. அதனால் பல லட்சங்கள் அவருக்கு இழப்புதானே? ஆனால் அவரைப் பாராட்டுகிறேன் என்று அய்யா அவர்களே என்னைப் பாராட்டினார்கள்.

மதுரை கறுப்புச்சட்டை மாநாட்டில் கலந்துகொண்டது இன்னும் பசுமையாக நினைவிலிருக்கிறது. அங்கு அய்யா அவர்களின் பேச்செல்லாம் ஞாபகத்திலுள்ளது. அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக என் அம்மாவுக்குக் கடிதம் எழுதி, எனக்கு உடல்நிலை சரியில்லை என்று நீங்கள் கடிதம் போடுங்கள் என்று கடிதம் எழுத வைத்து அந்தக் கடிதத்தைக் காட்டியே நாடகக் கம்பெனியில் லீவு வாங்கிக்கொண்டு கறுப்புச்சட்டை மாநாட்டில் கலந்து கொண்டேன்.

மூடநம்பிக்கைகளை ஒழித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று அய்யா கருதினார். எங்கெல்லாம் தவறு இருக்கிறதோ அதை வெளிப்படையாகத் தட்டிக்கேட்டவர் தந்தை பெரியார். அவருக்கு முன்பு அப்படி ஒரு தலைவர் தோன்றியது இல்லை. இறுதியில் தந்தை பெரியாரின் கொள்கைதான் நிற்கும்.

தந்தை பெரியார் அவர்கள் தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கிப் பேசமாட்டார்கள். மதவாதிகளையோ, அரசியல்வாதிகளையோ, பிற்போக்குவாதிகளையோ அவர்களின் கொள்கைகளைத்தான் கண்டித்துப் பேசுவார். இதை இன்றைய அரசியல்வாதிகள் உணர்ந்து பார்க்க வேண்டும்.

திராவிடர் கழகத்தின்று தி.மு.. பிரிந்தபோதும் நான் அய்யா அவர்களைச் சந்தித்து வந்தேன். அய்யாவும் என்மீது அன்பு காட்டுவார். ஒரு முறை அய்யா அவர்களை ஒரு நர்சிங் ஹோமில் போய்ப் பார்த்தேன். அது தி..வும், தி.மு..வும், விமர்சித்துக் கொண்டிருக்கும் காலம். அய்யா அவர்களுக்கு பழங்களைக் கொடுத்துவிட்டு உடல்நலம் விசாரித்தேன். நிறைய சினிமா படங்களில் நடித்துக் கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன். சம்பாதிக்கிற பணத்தையெல்லாம் செலவு பண்ணாதீங்க. சேத்துவைங்க. சேமிப்போட அருமையெல்லாம் இப்ப தெரியாது என்று அய்யா அவர்கள் கூறிவிட்டு, அண்ணாவைப் பார்த்தீர்களா? சமீபத்தில் எப்ப பார்த்தீங்க? அவர் உடல்நலம் நல்லா இருக்கா? கே.ஆர்.இராசாமி எப்படி இருக்கார்? என்று கேட்டார். என் உடன் வந்த நண்பர்களுக்கு ஆச்சரியமாய்ப் போய்விட்டது. அய்யாவின் இந்தப் பண்பாட்டை இன்றைய அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டும்.

1962இல் தி.மு..வில் தேனி தொகுதியில் போட்டியிட்டேன். என்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் கட்சியினர் என்னைக் கறுப்புச் சட்டைக்காரன், சாமி இல்லை, பூதம் இல்லை என்று சொல்பவன் என்று கூறி எனக்கு ஓட்டுப் போடாதீர்கள் எனப் பிரச்சாரம் செய்தார்கள். பண்டித நேரு அவர்கள் எனக்கு எதிராக நின்றவரை ஆதரித்துப் பேசினார். அன்று வேறு எங்கும் தமிழ்நாட்டில் நேரு அவர்கள் பிரச்சாரம் செய்யவில்லை. ஆனாலும் நான்தான் வெற்றி பெற்றேன். அதுவரை எங்கள் பகுதி காங்கிரஸ் கோட்டையாக இருந்தது.

1967இல் தி.மு.. ஆட்சியைப் பிடித்தது. அப்போது ஒரு முக்கிய நிகழ்வு. அப்போதெல்லாம் பெரும்பாலும் என் வீட்டில்தான் அண்ணா இருப்பார். கழகம் வெற்றி பெற்றவுடன் அண்ணா அவர்கள் என்னை அழைத்தார்கள். உடனே கார்களுக்கு ஏற்பாடு செய். அய்யா அவர்களைப் பார்க்க வேண்டும் என்று அண்ணா அவர்கள் கூறினார். உடனே கார்கள் ஏற்பாடு செய்தேன். அன்று இரவே திருச்சி புறப்பட்டோம். அய்யாவைச் சந்தித்து அண்ணா அவர்கள் வாழ்த்துக்கள் பெற்றார்கள்.

என்றைக்கும் எனக்கு அய்யா ஒருவர்தான் தலைவர். அவர் கொள்கையைத்தான் நான் இன்றும் கடைப்பிடிக்கிறேன். 1963இல் நான் எம்.எல்..வாக இருந்திருக்கிறேன். திரைப்படத்துறையிலும் ஏராளமான படங்களில் நடித்துக் கொண்டிருந்திருக்கிறேன். நல்ல வருமானம் ஈட்டிக் கொண்டிருக்கும் காலம். அப்போது சுதந்திர தினத்தன்று இந்தித் திணிப்பை எதிர்த்து கறுப்புக்கொடி ஏற்றும் போராட்டத்தை தி.மு.. அறிவித்தது. நான் அதற்குக் கட்டுப்பட்டு எனது வீட்டில் கறுப்புக்கொடி ஏற்றிவைத்திருந்தேன். அதைக்கண்ட சில காங்கிரஸ்காரர்கள் எனது வீட்டின் முன்பு கலவரம் செய்தார்கள். நான் அஞ்சவில்லை. அப்போதைய முதல்வர் பக்தவத்சலம் அவர்களுக்கு தொலைபேசியில், நான் ஒரு எம்.எல்.., எனக்கு நீங்கள் பாதுகாப்புத்தர வேண்டும் என்று பேசினேன். அதற்கு அவர் பாதுகாப்பெல்லாம் தர முடியாது, கொடியை இறக்கி விடுங்கள் என்று கூறினார்.

நான் அவரிடம் கொடியை இறக்க முடியாது. என்னைப் பார்த்துக்கொள்ள எனக்குத் தெரியும் என்று கூறிவிட்டேன். பிறகு என்னைக் கைது செய்து என் மீது வழக்குத் தொடுத்து விசாரித்தார்கள். நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு தந்தை பெரியார் பேசியதை அப்படியே ஒப்பித்தேன். பெரியார் தானே நமக்கு நீதிமன்றத்தில் எப்படிப் பேசுவது என்று கற்றுக்கொடுத்தார். நீதிபதியிடம் என் கருத்துக்களைக் கேட்க அனுமதி பெற்று நீதிமன்றத்தில் பேசினேன். அப்போது, இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவதை நான் எதிர்த்தேன். அதை மறைக்கவில்லை. அதற்காக நீங்கள் எவ்வளவு தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறேன். நான் திராவிட இயக்கப் பள்ளியில் பயின்றவன். நாங்கள் இந்தியை எதிர்ப்பது எங்கள் சுயநலத்திற்காக அல்ல. என்னுடைய தொழில் நடிப்பு. நான் இந்தியைக் கற்றுக்கொண்டால் இந்திப் படங்களில் நடித்துப் பணம் ஈட்ட முடியும். ஆனால் அது தேவையில்லை. நான் நாட்டு மக்களுக்காக, உங்களுக்காக, என்னைக் கைது செய்த காவல் துறையினருக்காக இந்தியை எதிர்க்கிறேன். ஏனென்றால் ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவாக நாம் ஆங்கிலம் படித்து பணிகளுக்குச் சென்றோம். ஆங்கிலம் உலகப் பொதுமொழி. அது எப்போதும் பயன்படும். ஆனால் இந்தி சொட்டைமொழி. இதை வைத்து நாம் என்ன செய்ய முடியும்? இந்தி கட்டாயப் பாடமாக்கப்படுமேயானால், உங்கள் பணிகளெல்லாம் இந்தி படித்தவனுக்குச் சென்று விடும். நான் போராடியது உங்களுக்காகத்தான். என் தாய்மொழிக்காக நான் இன்று சிறைச்சாலைக்குச் செல்லத் தயாராக இருக்கிறேன். தந்தை பெரியார் ஒரு முறை நீதிமன்றத்தில் சொன்னதையே இன்று நானும் இங்கு சொல்கிறேன். நீங்களும் தமிழர். நானும் தமிழன். எனக்காக தண்டனையைக் குறைத்து விடாதீர்கள். எவ்வளவு அதிகப்படியான தண்டனையைத் தரமுடியுமோ கொடுங்கள் என்று அன்று நீதிபதி முன்பு பேசினேன். அவர் அப்பீல் செய்ய வாய்ப்பளித்தார். நான் மறுத்துவிட்டேன். பின் 6 மாத தண்டனை கொடுத்தார். ஏற்றுக்கொண்டேன். பின்னர் 4 மாதங்களில் விடுதலை செய்தார்கள். இந்தத் துணிச்சலை எனக்குக் கொடுத்தவர் தந்தை பெரியார் அவர்கள்.

ஒரு நிகழ்வு, ஈரோட்டில் அய்யா அவர்களின் அண்ணார் .வெ.கிருஷ்ணசாமி அவர்கள் இறந்தபோது நான் சென்றிருந்தேன். அப்போது அடக்கம் செய்யப் போனோம். அய்யா அவர்கள் நடந்து வந்தார்கள். அன்றைய நாட்களில் சவ அடக்கம் செய்யும்போது உப்பு மூட்டைகளை நிறைய போடுவார்கள். அப்படிக் கொண்டுவரப்பட்ட உப்பு மூட்டைகளில் 3 மூட்டைகள் மீதமிருந்தது. அந்த மூட்டைகளை வீட்டுக்குக் கொண்டு வரும்படி கூறிவிட்டார் அய்யா.

எத்தனையோ சரித்திர நாயகர்களைச் சொல்கிறார்கள். எவ்வளவோ பேர்களைப் பற்றிப் படிக்கிறோம். நாம் நேரில் பார்த்த சரித்திர நாயகர் தந்தை பெரியார்தான். நம்மை மனிதராக்கியவர். நம்மைப் போன்ற எத்தனையோ பேர்களை மனிதராக்கியவர். தமிழர் சமுதாயத்தை தலைநிமிர வைத்தவர். ஒரு பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்து, பொது வாழ்வில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு காலம் முழுவதும் உழைத்தவர் தந்தை பெரியார். புதிய தத்துவங்களைத் தந்தவர். இறுதியில் தந்தை பெரியார்தான் வெற்றி பெறுவார்.

- லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். என்று அன்போடு அழைக்கப்படும் எஸ்.எஸ்.இராசேந்திரன்
- தந்தை பெரியார் 125ஆம் ஆண்டு பிறந்தநாள் விடுதலை மலர்



Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை