மலம் எடுக்கும் பெண்ணுக்கு வந்த மான உணர்வு!
தந்தை பெரியார் அவர்கள் ஈரோட்டிலே ஒரு சமயம் சுமார் ஒரு மாத காலம் தங்கிக்கொண்டு ஈரோடு சுற்று வட்டாரங்களிலும் மற்றும் கோவை, சேலம் மாவட்டங்களிலும் கூட்டங்களுக்குப் போய் வந்து கொண்டு இருந்தார்கள்.
அப்போது ஈரோடு பெரியார் மன்றத்திற்கு இருபுறமும் உள்ள கட்டடங்கள் பழுது பார்க்கப்பட்டும் புதுப்பிக்கப்பட்டும் வந்தது. திருச்சியில் இருந்த தச்சர், கொத்தனார் போன்றவர்களை எல்லாம் அழைத்துக் கொண்டுபோய் அம்மா அவர்கள் வேலைகளைக் கவனித்து வந்தார்கள்.
தந்தை பெரியார் அவர்களும் மதியம் வரை கட்டிட வேலைகளை பார்வையிட்டு மதியம் உணவிற்குப் பிறகு பொதுக் கூட்டங்களுக்குப் போய் வருவதை வழக்கமாகக் கொண்டு இருந்தார்கள்.
தந்தை பெரியார் அவர்களின் தங்கையும் கள்ளுக்கடை மறியல், வைக்கம் சத்தியாக்கிரகம் போன்ற போராட்டங்களில் தந்தை பெரியார் அவர்களுடன் பங்கு கொண்டு சிறை சென்றவரும் காந்தியார் அவர்களாலேயே புகழ்ந்து பாராட்டப்பட்டவருமான காலஞ்சென்ற எஸ்.ஆர்.கண்ணம்மாள் அம்மையார் அவர்கள் தினசரி காலை 9 மணிக்கெல்லாம் தமது தமையனாரைக் காண பெரியார் மன்றத்திற்கு வந்துவிடுவார்கள்.
தமையனாரும் தங்கையும் உரையாடும் காட்சியே அலாதி, கண்கொள்ளாக் காட்சியாகவே இருக்கும். தந்தை பெரியார் அவர்களின் பொது வாழ்வின் தொடக்கம், போராட்டங்கள், சிறைவாசங்கள், தண்டனைகள், காந்தியார், ஜெயப்பிரகாஷ், இராஜாஜி, அலி சகோதரர்கள் போன்ற தலைவர்கள் எல்லாம் ஈரோட்டுக்கு வந்து தங்கள் இல்லத்தில் விருந்தினர்களாகத் தங்கி அரசியல் விஷயங்களைப்பற்றி உரையாடியது முதல் மற்றும் தங்கள் குடும்பங்கள் அடைந்துள்ள மாற்றங்கள், ஈரோடு நகரம் அடைந்துள்ள வளர்ச்சி போன்றவைகளும் இடம் பெறும்.
தந்தை பெரியார் அவர்களின் தங்கையார் வீடு ஈரோடு கச்சேரி வீதியில் கோர்ட்டுக்கு எதிரில் உள்ளது. வீட்டிற்கு முன் புறத்தில் வீதி ஓரமாக நகராட்சியின் குடி தண்ணீர் குழாய் ஒன்றும் உள்ளது. தங்கள் இல்லங்களில் குடி தண்ணீர் குழாய் வசதி இல்லாத மக்கள் எல்லாம் அந்தப் பகுதியில் இந்த குழாயில்தான் தண்ணீர் எடுப்பார்கள்.
முறமும் - கரண்டியும்
நல்ல கோடை காலம் அதுவும் சித்திரை மாதம் வெயிலின் கொடுமையினை கேட்கவும் வேண்டுமா? அவ்வீதிக்கு அண்மையில் உள்ள காரைவாய்க்கால் போன்றவற்றில் எல்லாம் தண்ணீர் வற்றிவிட்டது.
பகல் 12 மணி இருக்கும். நகரசுத்தி வேலை செய்யும் பெண் தொழிலாளி ஒருவர் வீடுகளில் மலம் எடுத்துச் சுத்தம் செய்துவிட்டு களைத்துப்போய் மலம் எடுக்கப் பயன்படுத்தும் முறத்தையும் கரண்டியையும் கழுவ எண்ணினார்.
வேறு எங்கும் தண்ணீர் கிடைக்காத காரணத்தினால், வேறு யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற அச்சத்துடன் மெதுவாகத் தண்ணீர் குழாயினை அணுகினார்.
வெயில் கடுமையாக இருந்ததனால் ரோடில் உள்ள தார் இளகி அனல் கக்கிக் கொண்டு இருந்தது. ரோட்டில் மக்கள் நடமாட்டம் பெரும் அளவிற்கு இல்லை என்று சொல்லும் அளவுக்கு வெறிச்சோடிக் கிடந்தது.
வீடுகளிலும்கூட அவரவர்கள் தங்கள் வீட்டுக் கதவுகளை தாழிட்டுக் கொண்டு வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார்கள்.
அந்த மலம் எடுக்கும் பெண் யாரும் பார்த்து விடாதபோதே முறத்தினையும் கரண்டியினையும் சுத்தம் செய்து கொண்டுவிட வேண்டும் என்று கருதி குழாயினைத் திறந்து அவசரமாகக் கழுவத் தொடங்கினார்.
வேறு எதற்காகவோ கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்த தந்தை பெரியார் அவர்களின் தங்கை கண்ணம்மாள் அம்மையார் அதனைப் பார்த்துவிட்டார்.
என்னடி அம்மா இந்த அக்கிரமம், பொதுமக்கள் குடிக்கவும் புழங்கவும் தண்ணீர் எடுக்கும் குழாயில் வந்து இந்த அக்கிரமம் பண்ணுகின்றாய். இவைகளை கழுவுவதற்கு வேறு ஆறு குளம் இல்லையா? என்று சத்தம் போட்டார்கள்.
வந்ததே கோபம்!
தம் செயலைப் பார்த்துவிட்டார்களே என்ற அச்சம் அந்த தொழிலாளிக்கு ஒருபுறம் இருந்தாலும் தமது செயலை நியாயப்படுத்தும் வகையில் காரைவாய்க்கால்தான் வறண்டு கிடக்கின்றதே, தண்ணிக்கு நாங்கள் எண்ணப் பண்ணுவோம். அப்படி ஒரே அடியாகத்தான், நான் என்ன தப்பு பண்ணிப்போட்டேன்.
எங்கள் வீட்டில் உள்ளவர்கள் போய் வைத்த மலத்தை எடுத்துவிட்டு வந்தா இங்கே கழுவுகின்றேன்? மற்றவர்கள் வீடுகளில் அவர்கள் போய் வைத்த மலத்தைத்தானே நாங்கள் எடுக்கின்றோம். பைப்பைச் சுற்றி வேண்டுமானால் கழுவி விட்டு விடுகின்றேன். இதுக்கு ஒரே அடியாகக் கோபப்படுகின்றீர்களே என்றார்.
கண்ணம்மாள் அம்மையாருக்கோ அந்த பெண் அப்படி பேசியது சற்றுக் கோபத்தை உண்டு பண்ணியது. இந்தாடி அம்மா இப்போ அப்படி என்ன நான் சொல்லிப் போட்டேன். குடிக்கின்ற தண்ணீர் எடுக்கின்ற இடம் என்று தானே சொன்னேன் என்றார்.
அதற்கு அந்த மலம் எடுக்கும் அம்மையார் இந்தாங்க பெரியம்மா கொஞ்சம் கோபப்படாமல் பேசுங்கள். நேத்தைக்கு பக்கத்தில் உள்ள இதே காரை வாய்க்கால் மைதானத்தில் கூட்டம் நடந்தது இல்லையா. நீங்களும் தான் உட்கார்ந்துகொண்டு கேட்டீங்க. தாடி வைத்துக்கொண்டு பழுத்த பழம் மாதிரி பெரியார் என்று ஒரு அய்யா பேசினாரே. அவருகூட இந்த ஊர்க்காரர் தானாம் என்றார்.
அதற்கு கண்ணம்மையார் ஆமாம் அதற்கு இப்போ என்ன? என்றார்.
அவரு என்ன பேசினார்? நாட்டிலே ஜனங்களுக்குத் தேவையான தொழில்களைச் செய்பவர் கீழாகவும், ஒரு வேலையும் செய்யாதவர்கள் மேலாகவும் மதிக்கப்படுகின்றார்களே இது அக்கிரமம் என்று பேசினாரே.
மலம் எடுக்கும் தொழிலாளி அவன், தான் கழித்த மலத்தையா எடுக்கின்றான். மற்றவர்கள் கழித்த மலத்தை அல்லவா எடுக்கின்றான். அவன் அப்படி செய்யாவிட்டால் ஊரே நாற்றம் எடுத்துப் போய்விடும் என்று பேசினாரே. நாங்களும் மனிதர்கள்தானே என்று பொரிந்து தள்ளினார்.
முதல் நாள் ஈரோடு காரை வாய்க்கால் மைதானத்தில் தந்தை பெரியார் அவர்கள் பொதுக் கூட்டத்தில் பேசினார்கள். அந்தப் பேச்சானது அந்த வழியாகப் போய்க்கொண்டு இருந்த, மலம் எடுக்கும் அந்தப் பெண்ணின் மனத்தில் ஆழப்பதிந்துவிட்டது. ஏன் அந்தப் பெண்ணின் தன்மான உணர்வினையே கிளறிவிட்டு விட்டது என்று கூறலாம்.
மேலும் அந்தப் பெண் இளம் வயதினர். வேறு வார்டில் இருந்து அண்மையில்தான் இந்த வார்டுக்கு நகரசுத்தி வேலைக்காக மாற்றப்பட்டவர். இதன் காரணமாக இந்த வார்டின் முக்கியமானவர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் வாய்ப்பு இல்லை. தந்தை பெரியார் அவர்களின் தங்கைதான் கண்ணம்மா என்பது அந்த அம்மையார் அறிந்து இருக்கவும் நியாயம் இல்லை.
உன்னைச் சொல்லி குற்றமில்லை
கண்ணம்மையாருக்கோ தம்மிடம் அப்படிப் பேசிய பெண்ணின் மீது கோபம் ஏற்படவில்லை. மாறாக தம் தமையரான தந்தை பெரியார் அவர்கள் மீதுதான் கோபம் பிறந்தது.
உடனே அவர்கள் அடி அம்மா உன்னைச் சொல்லிக் குற்றம் இல்லை. நேற்று கூட்டத்தில் பேசினாரே எங்கள் அண்ணன் அவரைத்தான் குற்றம் சொல்லவேண்டும். அந்த பாழும் மனுஷர் அல்லவா உங்களுக்கு இப்படிப்பட்ட துணிவைக் கொடுத்துவிட்டார். அவரைப் போய் நான் கேட்டுக் கொள்கின்றேன் என்று கூறிவிட்டு மதியம் ஒரு மணி அளவில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தந்தை பெரியார் அவர்கள் தங்கி இருந்த பெரியார் மன்றத்திற்கு வந்து சேர்ந்தார்.
பெரியாருக்கு வந்த ஆச்சரியம்!
வழக்கத்திற்கு மாறாக தங்கையார் மதியம் வெயிலிலே தம்மை சந்திக்க வந்து உள்ளது தந்தை பெரியார் அவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. ஏதோ முக்கிய வேலையாக வந்திருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு என்னம்மா இந்த வெயிலில்; ஒரே கோபமாய் வந்திருக்கின்றாய் போல் தெரிகின்றதே; என்ன சங்கதி? என்று கேட்டார்கள்.
அதற்கு அம்மையார், நான் என்ன ஜாதி, மதம் பார்த்து இன்னார் உயர்வு, இன்னார் தாழ்வு என்று பழகுகின்றேனா. இன்றைக்கு ஒரு கக்கூஸ் எடுக்கும் பெண் என்னையே எதிர்த்துப் பேசிவிட்டாள் என்றார்கள்.
அய்யா அவர்கள் அப்படி என்ன பேசினாள்? என்று கேட்டார்கள்.
அம்மையார், தண்ணீர் குழாயில் கரண்டியையும், முறத்தையும் கழுவாதே குடிதண்ணீர் எடுக்கும் இடம் என்று கண்டித்தேன். அவளா அப்படி பேசினாள்? அவள் நேற்று காரை வாய்க்கால் மைதானத்தில் உங்கள் பேச்சை எல்லாம் கேட்டுவிட்டு வந்து இருக்கின்றார்கள். அவள் கேட்கின்றாள், இந்தாம்மா ஒரே அடியாக பேசாதீங்க; நாங்கள் வெளிக்குப் போனதையா நாங்கள் எடுக்கின்றோம். மற்றவர்கள் கழித்த மலத்தைத்தானே எடுக்கின்றோம். நாங்கள் இல்லாவிட்டால் ஊரே நாறிப் போகுமே என்கிறாள். இப்படியெல்லாம் நீங்கள் கூட்டத்திலே பேசியதை அவள் கேட்டுக் கொண்டு இருந்து இருக்கின்றாள். அதனாலேதான் இப்படி எல்லாம் பேசுகின்றாள் என்று பதட்டத்துடன் கூறினார்.
படுத்தவர் எழுந்து உட்கார்ந்தார்!
அய்யா அவர்கள் படுத்து இருந்தவர் எழுந்து உட்கார்ந்து கொண்டு, அட பைத்தியமே உளறாதே. இதுதானா நான் செய்த தப்பு? இந்த நிலை அடித்தளத்தில் உள்ள மக்கள் மத்தியில் வரவேண்டும் என்பதற்காக நான் எவ்வளவு பாடுபட்டு இருப்பேன். எவ்வளவு கனவு கண்டு இருப்பேன். மலம் எடுக்கும் பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள மான உணர்வு கேட்டு எவ்வளவு பூரிப்பும் மகிழ்ச்சியும் அடைகின்றேன். நான் எனது தொண்டில் ஒன்றும் தோல்வி அடைந்து விடவில்லை என்பதை அல்லவா இந்த நிகழ்ச்சி காட்டுகின்றது என்று எடுத்துக் கூறி தமது தங்கையினை சமாதானப்படுத்தினார். தங்கையாரும் ஒருவாறு சமாதானம் அடையலானார்.
தந்தை
பெரியார் 107ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர்
Comments
Post a Comment