இலட்சியத்தை நோக்கி
(26.12.1996 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழக மாநில மாநாட்டில், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரை)
வரலாற்று முக்கியத்துவம் பெறும் வகையில் பன்னாட்டு பெரியார் கொள்கையாளர்கள், பற்றாளர்கள் கலந்து சிறப்பிக்கும் இம்மாநாடுகளைக் கண்டுகளிக்கவும், பயன்பெறவும் பல்லாயிரக்கணக்கில் கூடியுள்ள எனதருமைக் கழகக் குடும்பத்தினர்களே, சான்றோர்களே, தமிழ்நாட்டில் கடந்த 10 நாள்களாகப் பெய்த அடை மழையினால் ஏற்பட்ட அவதி, வெள்ளம், மற்றும் சாலை அரிப்புகள், பேருந்துகள், புகைவண்டிகள் பல தடங்களில் இயங்கிடாத வண்ணம் போக்குவரத்து பாதிப்பு போன்ற பல தடைகளையும் தாண்டி, துன்பங்களை சுமந்தாலும் துவண்டு விட மாட்டார்கள் பெரியார் தொண்டர்கள் என்பதை உலகுக்கு பறை சாற்றிடும் வண்ணம் இங்கே குழுமி உள்ளவர்கள் அனைவருக்கும் எனது தலை தாழ்த்தி வணக்கத்தினையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பல குறிப்புகள்
மக்களுக்குத் தேவையான பல முக்கியமான செய்திகளை எல்லாம் எடுத்துச் சொல்லக்கூடிய ஒரு கால கட்டத்திலே நாம் இருக்கிறோம்.
என்னுடைய உரையிலே, அந்த குறிப்புகளை எல்லாம் எடுத்துச் சொல்ல நான் கடமைப்பட்டிருக்கின்றேன். இங்கே இட நெருக்கடி இருந்தால்கூட அமைதி காத்து இந்த மாநாட்டு வெற்றிக்கு நீங்கள் ஒத்துழைப்புத்தர வேண்டும்.
பிரச்சாரம் அடைமழை போல
கடந்த ஜனவரி மாதம் பன்னாட்டு நாத்திகர்களை அழைத்து பகுத்தறிவு மாநாடு நடத்தினோம். அதில் டாக்டர் நாவலர் அவர்களும், இனமுரசு சத்யராஜ் அவர்களும் கலந்துகொண்டனர். அதற்குப் பிறகு பல்வேறு மாநாடுகள் தொடர்ந்து நடைபெற்றன. அதேபோல பகுத்தறிவு பிரச்சாரம் அடைமழைபோல நடந்திருக்கின்றது. இவ்வளவையும் நம்முடைய தோழர்கள் தெளிவாக செய்திருக்கின்றீர்கள். அதற்காக உங்களுக்கு என்னுடைய தலை தாழ்ந்த வணக்கத்தையும், நன்றியையும் உரித்தாக்கிக் கொள்ளுகின்றேன். அதுவும் கடந்த ஓராண்டுக்குள்ளாக பகுத்தறிவுப் புத்தகச் சந்தையை நம்முடைய தோழர்கள் இரண்டுமுறை நடத்தியிருக்கின்றார்கள். அதுபோலவே பல்வேறு இடங்களில் பிரச்சார நிகழ்ச்சிகள், இவைகளில் எல்லாம் கலந்து கொண்டிருக்கின்றீர்கள்.
அதைவிட குறிப்பாக சொல்லவேண்டுமானால் கடந்த பத்து, பதினைந்து நாட்களுக்கு முன்னாலே அடைமழை பெய்து, சாலைகளில்கூட பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதை எல்லோரும் அறிவோம்.
கட்டுச் சோற்று மூட்டையுடன் வந்திருக்கின்றீர்கள்
தஞ்சாவூர் மாவட்டம், காயிதே மில்லத் மாவட்டம், திருவாரூர் பன்னீர் செல்வம் மாவட்டம் இந்த மாவட்டங்களில் எல்லாம் நம்முடைய விவசாயப் பெருங்குடி மக்கள் மிகப் பெரிய அளவுக்கு கொடுமைகளை அனுபவித்து, பேரிழப்பிற்கு, பேரிடருக்கு ஆளாகியிருக்கின்றீர்கள். அந்த நிலையிலும் அழைப்பு விடுத்த போதும்கூட நீங்கள் கையிலே கட்டுச் சோற்று மூட்டையைக் கட்டிக்கொண்டு வந்து இந்த மாநாட்டு நிகழ்ச்சிகளைப் பார்த்தீர்கள். அது மட்டுமல்ல, நேற்று நான்கு மணி நேரம் பிரமாண்டமாக நடைபெற்ற அந்த ஊர்வலத்திலே நடந்துவந்து நம்முடைய கொள்கை உறுதியைக் காட்டினீர்களே அதைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை நண்பர்களே வார்த்தை இல்லை.
நன்றி தெரிவித்துக் கொள்ளுகிறேன்
இந்தக் குடும்பம் எவ்வளவு நெருக்கமான குடும்பம், எவ்வளவு பகுத்தறிவுள்ள குடும்பம், கொள்கைகளுக்காக தங்களை அழித்துக் கொள்கின்ற கருப்பு மெழுகுவர்த்திகளாக இருக்கின்ற குடும்பம் என்பதை நிலைநாட்டக் கூடிய இந்த வகையில் முதற்கண் என்னுடைய நன்றியை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
பாதை இல்லாத ஊர்களுக்கெல்லாம் ஈரோட்டுப் பாதை உண்டு என்பதைத்தான் நம்முடைய அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் காட்டிய மிக அருமையான வழமை. அந்த வகையிலே நீங்கள் இந்த இயக்கத்தினுடைய கொள்கை வீச்சுக்களாக, இயக்கத்தினுடைய பிரச்சாரக் கருவிகளாக ஒவ்வொருவரும் இருக்கின்றீர்கள்.
21-ஆம் நூற்றாண்டு பெரியார் நூற்றாண்டு
அருமை நண்பர்களே! கடந்த மூன்று நாட்களாக இடையறாமல் தொடர்ந்து இங்கே நாம் குழுமியிருக்கின்றோம். பன்னாடுகளில் இருந்து நம்முடைய நண்பர்கள் வந்திருக்கின்றார்கள். பெரியார் பன்னாட்டு அமைப்பு சார்பாக மலேசியாவிலிருந்து, அமெரிக்காவிலிருந்து, சிங்கப்பூரிலிருந்து இன்னும் பல்வேறு பகுதிகளிலிருந்து வடபுலத்திலேயிருந்து எல்லோரும் வந்திருக்கின்றார்கள். அடுத்து வரக்கூடிய இருபத்தியோராம் நூற்றாண்டு நம்முடைய அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய நூற்றாண்டுதான் என்பதை நாம் உலகுக்கு எடுத்துக்காட்டப் போகின்றோம்.
சத்யராஜ் சொன்னார்
அருமைச் சகோதரர் சத்யராஜ் அவர்கள் மிக அருமையாக எளிமையாக சுருக்கமாக எல்லோருக்கும் தைக்கின்ற மாதிரி சொன்னார்களே - தந்தை பெரியார் என்ற மாமருந்து கொள்கை கிடைக்குமேயானால் மன அழுத்தம் கிடையாது மன இறுக்கம் கிடையாது, சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வாக இருக்கும் என்பதற்கு இதைவிட வேறு நல்ல வழிமுறை இருக்காது என்பதை மிக அழகாக எடுத்துச் சொன்னார்கள். அதை உருவாக்குகின்ற போர் வீரர்கள் நாம் என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் களத்தில் நிற்கின்றீர்கள். நீங்கள் காணவேண்டிய களம் அருமை சகோதரர்களே, சகோதரிகளே ஏராளம் இருக்கின்றது. இது ஒரு கடைசி கட்டம். நம்முடைய அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் தொடங்கினார், நாம் முடித்தோம் என்ற பெருமைக்கு ஆளாக வேண்டும், இருவகை உறுப்பினர்கள்
கருப்பு உடை அணியாதவர்களாக இருந்தாலும் அவர்களும் நம்முடைய உணர்வு படைத்தவர்களாக வேற்று உருவிலும் இருக்கிறார்கள். நான் அடிக்கடி சொல்லுவது உங்களுக்குத் தெரியும். ஒரு வெளி நாட்டுக்காரர் என்னை வந்து சந்தித்தார்.
உங்களுடைய இயக்கத்திலே எவ்வளவு உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று கேட்டார். அதை அவ்வளவு சுலபமாகச் சொல்லமுடியாது என்று சொல்லிவிட்டு, எங்களுடைய இயக்கத்திலே இரண்டு விதமான உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என்று சொன்னேன்.
கண்ணுக்குத் தெரிந்த உறுப்பினர்கள் ஒரு வகை, கண்ணுக்குத் தெரியாத உறுப்பினர்கள் மற்றொரு வகை என்று சொன்னேன்.
அவர் அதிர்ந்து போய் நீங்கள் ஏதாவது இரகசிய இயக்கம் வைத்திருக்கிறீர்களா? என்று கேட்டார்; இல்லை. இரகசிய இயக்கத்திலே எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எங்கள் தலைவர் தந்தைபெரியார் அவர்களிடம் எந்த இரகசியமும் கிடையாது. இந்த இயக்கத்திலும் எந்த இரகசியமும் கிடையாது. எங்களுடைய இயக்கம், எங்களுடைய கொள்கை ஒரு திறந்த புத்தகம்.
அதனால்தான் எங்களுடைய இயக்கத்தை எதிரிகளாலும், துரோகிகளாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
நேரடியாக கருப்புச் சட்டை போட்டுக் கொண்டு இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்கின்ற இலட்சோப லட்சம் தொண்டர்கள் ஒரு பக்கம், கருப்புச் சட்டை அணியாமலேயே இந்தக் கொள்கைக்கு அணியமாக இருந்து கொண்டிருக்கின்றவர்கள் - இதோ! இந்த மேடையிலே அமர்ந்திருக்கின்ற இந்த சகோதரர்களைப் போல எத்தனையோ பேர்கள் இருக்கிறார்கள்! அவர்கள் எல்லாம் கண்ணுக்குத் தெரியாத இலட்சங்கள், கோடிகள் ஆன உறுப்பினர் பெருமக்கள் என்று விளக்கியதற்குப் பிறகு தான் கேள்வி கேட்டவருக்குப் புரிந்தது. ஆகவே நண்பர்களே, இந்த இயக்கம் ஓர் அற்புதமான இயக்கம் என்பதை மறந்து விடாதீர்கள். நம்முடைய அறிவு ஆசான் நினைவு நாளையொட்டி இந்த மாநாட்டை நடத்துகின்றோம். நமக்கு எல்லா நாளும் அறிவு ஆசானுடைய நினைவு போற்றும் நாள்தான்!
பட்டியலிட்டுக் காட்ட விரும்புகின்றேன்
இந்த நாளிலே நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சிகளை ஒன்று, இரண்டு, மூன்று என்று பட்டியலிட்டுக் காட்ட விரும்புகின்றேன்.
நமது பண்பாடு பகுத்தறிவு பண்பாடு, நாம் இயக்கத்திற்கு வந்தது உழைக்கவே தவிர பிழைக்க அல்ல என்பதை எல்லோருக்கும் நிலை நாட்டிக் கொண்டிருக்கின்ற இயக்கம் நமது இயக்கம்.
அதுதான் இந்த இயக்கத்தினுடைய தனித்தன்மை. இதை ஊரறியும், உலகம் அறியும். எவர் அறியாவிட்டாலும் நம் உள்ளம் அறியும். அதுதான் மிக முக்கியமானது.
பெரியார் தொண்டர்களுக்கு தனிப்பெருமை
நாம் இலட்சியப் பாதையிலே துணிவோடு செல்லுகின்றோம். அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள், இந்தியாவிலே இப்படிப்பட்ட அற்புதமான ஓர் இயக்கம் வேறு எங்கும் கிடையாது என்று சொன்னார்கள். என்னுடைய தொண்டர்களைப் போல தோழர்களைப் போல வேறு எவரும் கிடையாது என்று மார்தட்டிச் சொன்னார்.
ஆண்டவன்கள் அவதாரமெடுத்தது இந்த பூமியில்தான். ஆண்டவன்களின் அவதாரமாக நடக்கக்கூடியவர்கள் இந்த பூமியில்தான். அவர்களுக்கெல்லாம் இல்லாத பெருமை தந்தை பெரியாரின் தொண்டர்களுக்கு உண்டு.
என் தொண்டர்கள்
துறவிக்கும் மேலானவர்கள்
தந்தை பெரியார் அவர்கள் சொன்ன ஓர் அருமையான வாக்கியம் என்ன தெரியுமா? என்னுடைய தொண்டர்கள் துறவிக்கும் மேலானவர்கள் என்று சொன்னார்.
இப்படிச் சொல்லி விட்டு தந்தை பெரியார் அவர்கள் ஒரு விளக்கம் சொன்னார்; துறவுகோலம் பூண்டவர்களைப் பார்த்து நீ ஏன் துறவியானாய் என்று கேட்டால் அவன் சொல்லுவான், யான் மோட்சத்திற்குப் போக வேண்டும்; ஆகவே துறவியானேன் என்று சொல்லுவான். என்னுடைய தோழர்களுக்கோ, எனக்கோ மோட்சத்திலும் நம்பிக்கை கிடையாது. அது முடிச்சுமாரிகளின் பேச்சு என்று கருதக் கூடியவன், ஆகவே என்னுடைய தோழர்கள் அந்த ஆசைக்குக்கூட ஆளாக முடியாதவர்கள்.
எனவே, துறவிக்கும் மேம்பட்டவர்கள்தான் எங்களுடைய தோழர்கள் என்று தெளிவாகச் சொன்னார்கள்.
நன்றி பாராட்டா தொண்டு
நாம் செய்யும் பணி நன்றி பாராட்டா தொண்டு என்பது உண்மைதான். (Thankless job) அதற்காக நீங்கள் பெறும் சிறு உதவிக்காகவும் நன்றியை உரியவர்களுக்குச் செய்ய மறக்காதீர்கள்!
நாம் பாராட்டை எதிர்பார்த்து பணிபுரிய வந்தவர்கள் அல்ல என்பது உண்மை; உண்மையிலும் உண்மை. அதற்காக நீங்கள் பாராட்ட வேண்டியவர்களைப் பாராட்ட ஒருபோதும் தயங்காதீர்கள்; தள்ளிப் போடாதீர்கள்!
இந்தியாவிலேயே ஏன் உலகத்திலேயே இதுபோன்ற அதிசயமானதொரு கொள்கைக் குடும்பம் இல்லை. மானம் பாராது, நன்றியை எதிர்பார்க்காது, பட்டம், பதவி தேடாது, புகழ் போதை நாடாத ஒரு கூட்டம் வேறு எங்குமில்லை என்று பூரித்துப் பெருமிதப்பட்டாரே நமது அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்தம் பெருமிதம் என்றும் நம்மால் காலங்காலமாய் பாதுகாக்கப்படவேண்டிய வழிமுறை அல்லவா?
எனவே, அவதூறுச் சேற்றைக் கண்டு நாம் அஞ்சாமல், துரோகக் கொள்ளிகளின் துன்பங்களை அலட்சியப்படுத்தி, வில்லெடுத்து நாணேற்றியவனுக்கு குறிதவிர, வேறு எதுவும் தெரியாது என்பதற்கொப்ப எனதருமை கருஞ்சிறுத்தைப் பட்டாளமே, கடமையை ஆற்றுவதில் புதுமுறுக்கோடும், புத்துணர்ச்சியோடும், புதிய தெம்போடும் புறப்படுவீர் 21-ஆம் நூற்றாண்டினை பெரியார் நூற்றாண்டாக்கிடும் பணி செய்ய!
நம்மால் முடியும் என்பது மட்டுமல்ல நண்பர்களே, நம்மால் மட்டுமே அப்பணி முடியும். அப்போது நம் பகையும் முடியும். பொழுதும் விடியும்! இது உறுதி! உறுதி!! உறுதி!!!
ஓராண்டில் ஓராயிரம் பணிகள்
உங்களுக்குக் கடந்த ஓராண்டுக்குள் ஓராயிரம் பணிகளை தந்தாலும், முகம் கோணாது களம்காணும் கருஞ்சட்டைக் கழக வீரர்களை, வீராங்கனைகளைப் பாராட்டி நன்றி சொல்ல எனக்குத் தெரியவில்லை. எத்தனை வட்டார மாநாடுகள்! கலந்துரையாடல்கள்! பயிற்சி முகாம்கள்! புத்தகச் சந்தைகள்! போராட்டக் களங்கள் - சளைக்கவில்லை நீங்கள். இயற்கைகூட தனது பருவங்களை மாற்றி தன் களைப்பைத் தீர்த்துத் தன்னை இளைப்பாற்றிக் கொள்கின்றது. ஆனால் பெரியாரின் பெருங்குடும்பமான இந்த பகுத்தறிவுக் குடும்பமோ கண்துஞ்சாது, காலம் பாராது, குடிசெய்வார்க்கில்லை பருவம் என்ற குறள் வழித் தொண்டாற்றும் லட்சியக் குடும்பமாகத் திகழ்கிறது.
1973-
இல் நம் ஆசான் மறைந்தார் என்றவுடன் ஆட்டம் போட்டவர்களின் அடித்தளத்தை ஆட்டம் காண வைப்பது நமது அயராத பணியாக அல்லவோ ஆகிவிட்டது? ஜாதியொழிப்பு, சமூகநீதி செயல் ஆக்கம், மூடநம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவு பரப்பும் பணி, மனித உரிமை காப்புப்பணி, பெண்ணுரிமை பேணிகாக்கும் பாலியில் நீதி பாதுகாப்பு, பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து இளைய தலைமுறையினரை பாதுகாக்கும் பணி - இப்படி பற்பல பணிகள்!
இல் நம் ஆசான் மறைந்தார் என்றவுடன் ஆட்டம் போட்டவர்களின் அடித்தளத்தை ஆட்டம் காண வைப்பது நமது அயராத பணியாக அல்லவோ ஆகிவிட்டது? ஜாதியொழிப்பு, சமூகநீதி செயல் ஆக்கம், மூடநம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவு பரப்பும் பணி, மனித உரிமை காப்புப்பணி, பெண்ணுரிமை பேணிகாக்கும் பாலியில் நீதி பாதுகாப்பு, பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து இளைய தலைமுறையினரை பாதுகாக்கும் பணி - இப்படி பற்பல பணிகள்!
இருதயத்திற்கு ஓய்வு உண்டா?
நாம் இந்த சமுதாயத்தின் இரத்தத்தில் உள்ள அணுக்கள் போல தனது கடமையை விளம்பரம் இன்றி செய்துகொண்டிருப்போர்! இருதயம் எப்படி இயங்கிக்கொண்டே இருந்தால் தான் வாழ்வோ அப்படி இயல்பாகப் பணி செய்துகொண்டே இருப்பது நம் இயக்கத்தின் வேலையாகும். கைகால்கள் ஓய்வு கொள்ள வாய்ப்புண்டு. இருதயத்துக்கு ஏது அந்த உரிமை? இதை மறவாதீர்கள்; நம் தோழர்களே, தோழியர்களே இதை மறவாதீர் ஒருபோதும்!
நாட்டின் சூழலை எண்ணுங்கள். நமது உழைப்பு வீணாகவில்லை; வெற்றி தடத்தில்தான் வீரநடைபோடுகிறோம் நாம்! பெரியார் என்ற ஒரு தத்துவம் ஒரு புவி ஈர்ப்புச் சக்தியாகும்! எல்லோரும் அதன் இழுப்புச் சக்திக்கு வந்தாக வேண்டும் என்பது அறிவியல் உண்மையாகும்!
அறிவு, முழு பகுத்தறிவு - ஆசாபாசத்திற்கு அடிமைப்படாத, சபலங்களுக்கும் சஞ்சலங்களுக்கும் இரையாகாத அணுகு முறையினை நமக்கு நம் அய்யா தந்தை பெரியார் அவர்கள் வகுத்துத் தந்து விட்டுச் சென்றுள்ளார்கள். அதனை வழுவாமல் கடைப்பிடித்து, அதிலிருந்து நழுவாமல் நாம் செல்லும்போது நமக்கு எந்தத் தடை வந்தாலும் அதனை துச்சமாகக் கருதி, தூள்தூளாக்கிட ஒருபோதும் தயங்கிடமாட்டோம் என்பது உறுதி.
கழக வரலாற்றில் புதுச் சட்டம்
அய்யா வாழ்ந்த காலத்தில் சமூகநீதியின் வெளிப்பாடான வகுப்புரிமை காக்க முதல் அரசியல் சட்டத் திருத்தத்தினை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்தது நமது இயக்கவரலாறு; ஒரு மைல் கல்; அந்த பெரியாரின் துணிவினையும் தெளிவினையும் பெற்ற அவர்தம் தொண்டர்களாகிய நமது காலத்தில் அதே வகுப்புரிமைக்கு மீண்டும் மிகப்பெரியதோர் ஆபத்துவந்த நேரத்தில், தனிச்சட்டமே எழுதித்தந்து-சட்டம் எழுதியவர்கள் திராவிடர் கழகம் தான் என்ற உண்மை சட்டமன்றத்திலும் பதிவாகி, 76-ஆவது அரசியல் சட்டத்திருத்தம், 9-ஆவது அட்டவணை பாதுகாப்புடன் சமூகநீதி என்று ஆக்கியுள்ளோமே, அது கழக வரலாற்றின் பெருமை அல்லவா! ஆரியம் நம்மீது ஆத்திரப்படுவதும், அதனால் விஷமப் பிரச்சாரம் செய்வதும் அதனால்தானே!
பெரியார் மேளா! சாதனையல்லவா?
இராமன் பிறந்த பூமி என்று கூறி, மசூதியை இடித்த மதவெறியர்களான பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவாரங்கள் மலிந்த மண்ணில், அதற்குப்பின் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குப்பின் பெரியார் மேளா கொண்டாட வைத்தோமே அதற்கு இணையான சாதனை வேறு உண்டா?
ராமனைக்காட்டி ரத யாத்திரை நடத்தி, மண்டலை வீழ்த்திட, கமண்டலத்தைத் தூக்கிய, காவிக்கொடியோர்கள் 13 நாட்களிலேயே ஆட்சியை விட்டோடினரே. அந்த அரசியல் சூழல் ஏற்பட்டதற்கு, பெரியாரின் சமூகநீதி அலை பாய்ந்து எழுந்ததே அல்லவா காரணம்!
உள்ளாட்சியில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் என்பதில் மட்டும் எங்களுக்கு திருப்தி ஏற்பட்டுவிடாது. நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் இடஒதுக்கீடு கோரி பெண்கள் வீதிவந்து போராடுகிறார்களே - முழங்குகிறார்களே - அது ஈரோட்டுச் சிங்கத்தின் கர்ச்சனையின் எதிரொலி அல்லவா!
இப்படி எத்தனையோ கூறலாம்! அறிவியலுக்கு முன் மதம் மண்டியிடும் போக்கினை அகிலத்தின் மற்றொரு கோடியில் காணுகிறோமே! டார்வின் கொள்கையை போப் ஒப்புக் கொள்ள முன்வந்தார்; முன்பு உலகம் உருண்டை என்பதை மதஉலகம் மறுத்தது தவறு என்று ஒப்புக்கொண்டது போலவே - இதனை தொலைநோக்கோடு கூறியவர் நமது அறிவு ஆசான் அல்லவா!
இங்கே நம்முடைய தோழர்கள் பேசியதைப் பற்றி அருமைச் சகோதரர் நெடுமாறன் அவர்கள் சொன்னார்கள்.
நான் மெத்தப் பணிவன்போடு கழகத் தோழர்களுக்கு சொல்லிக் கொள்கின்றேன் இயக்கப் பேச்சாளர்களுக்கு சொல்லிக் கொள்கின்றேன். சிலர் பேசிய பொழுதெல்லாம் நான் சற்று சங்கடத்தோடு இருந்தேன். ஏன் தெரியுமா? நாம் ஏன் பிறரை விமர்ச்சிக்க வேண்டும்? விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை. பிறருடைய அவதூறுகளுக்கெல்லாம் சமாதானம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நாம் யார் என்பது உலகத்திற்குத் தெளிவாகத் தெரியும்,
பெரியார் காணாத அவதூறா?
தந்தை பெரியார் காணாத அவதூறா? தந்தை பெரியார் அவர்கள் மீது சொல்லாத இழிவுகளா? பெரியார் தொண்டர்களாக இருக்கின்ற நம்மீது அது வீசப்படும்பொழுது என்மீது வீசப்படும் பொழுது, என் குடும்பத்தின்மீது வீசப்படும் பொழுது, என்னை நீதி மன்றங்களுக்கு அழைத்து நிறுத்தப்படும் பொழுது நான் என்ன நினைக்கிறேன் தெரியுமா? இப்பொழுதுதான் நான் பெரியாரின் பாடத்தை சரியாகப் படித்துக் கொண்டிருக்கின்றேன் இப்பொழுதுதான் நான் பெரியாருடைய பாதையிலே சரியாக சென்று கொண்டிருக்கின்றேன் என்ற உணர்வுதான் என்னை நாளுக்கு நாள் இளைஞனாக ஆக்கிக் கொண்டிருக்கின்றது நண்பர்களே!
வயது குறைகிறது
இந்த மாநாடு எனக்கு வயதைக் கூட்டவில்லை வயதைக் குறைத்திருக்கிறது என்பதை மெத்த பணிவன்போடு தெரிவித்துக் கொள்கின்றேன் எனக்கு மட்டுமா வயதைக் குறைத்திருக்கிறது? இதோ அமர்ந்திருக்கின்ற வயதானவர்கள் அத்துணை பேரையும் இளைஞனாக ஆக்கி இருக்கிறது. இளைஞனை மாணவனாக, குழந்தையாக ஆக்கியிருக்கிறது.
உங்களுக்கெல்லாம் இந்த மாநாடு தந்திருக்கின்ற முதல் பரிசு என்ன தெரியுமா? எல்லோரும் பத்து ஆண்டு வயது குறைந்தவர்களாக இங்கிருந்து திரும்புகின்றீர்கள் வாலிப முறுக்கோடு திரும்புகின்றீர்கள், கொள்கை உணர்வோடு திரும்புகின்றீர்கள். எதிரிப் படை எங்கேயிருந்தாலும் அதை சந்திப்போம், வீழ்த்துவோம் இது கடைசி யுத்தம் என்ற உணர்வோடு திரும்புகின்றீர்கள். எந்த நிலையாக இருந்தாலும் அதை சந்திக்கக் கூடிய துணிச்சலை தெளிவாகப் பெற்றே திரும்புகிறீர்கள்!
எத்தனையோ ஆட்சிகள் நம்மை எதிர்த்தன?
நமக்கு முன்னால் இருக்கக் கூடிய வேலைகள் மிக முக்கியமானது. ஏற்கெனவே சுட்டிக் காட்டியது போல அது நம்மால் மட்டுமே செய்யக் கூடிய வேலைகள். எங்கோ இருந்து வருகின்ற சுருதி பேதங்களைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகின்றீர்கள்? இதற்கு முன் நம்மை விமர்சனம் செய்தவர்கள் எவ்வளவு பேர்? நம்மை எதிர்த்தவர்கள் எவ்வளவு பேர்? நம்மை எதிர்த்த ஆட்சிகள் எத்தனை ஆட்சிகள்? அவைகள் எல்லாம் இன்றைக்கு இருக்கின்ற இடம் தெரிகின்றதா?
பயிர்களை அழிக்கும் பிராணிகள் அல்ல
நம்மைப் பார்த்து பலர் சொல்லலாம்-இவர்கள் பெரியாரின் பெயரை வைத்து அறுவடை செய்கிறார்கள் என்றுகூட! ஆம், அறுவடைதான் செய்கின்றோம். அறுவடை செய்ய எங்களுக்கு உரிமை உண்டே! நாங்கள் உழவர்கள் ஆயிற்றே அறுவடை செய்யாமல் வேறு என்ன செய்வர். அறுவடை என்றால் என்ன என்பது நமக்குத் தெரியுமே!
நாங்கள் கழனியில் விளைகின்ற களைகளை அகற்றி விளைந்த பயிர்களை - பலன்களை - இன்னொருவருடைய கழனியில் நுழைந்து பயிர்களை நாசம் செய்கின்ற நான்குகால் பிராணிகள் அல்லவே நாங்கள்.
நாங்கள் உழவர்கள். அறுவடை செய்ய எங்களுக்கு உரிமை உண்டு. அதற்குக் காரணம் விதைத்தவர்கள் நாங்கள், உழுதவர்கள் நாங்கள், உழைப்பவர்கள் நாங்கள். ஆகவே அறுவடை செய்தாக வேண்டும். அதற்குப் பெயர் தான் வெற்றிகரமான வேளாண்மை. எங்களுக்கு கடவுளை மற என்று சொன்ன தந்தை பெரியார் மனிதனை நினை என்று சொன்னார்.
மனிதனை நினை என்பதற்குப் பொருள் என்ன? அதுதான் கல்விக்கூடங்கள், அதுதான் மருத்துவமனைகள், அதுதான் கல்லூரிகள், அதுதான் பல்வேறு செயல்கள். இந்த மனிதநேயப் பணிகளை செய்து கொண்டிருப்பதற்கு நான் மகிழ்கின்றேன்; நீங்களும் மகிழுங்கள்.
எனதருமைச் சகோதரர்களே! எனக்கு வேறு குடும்பம் உண்டா? என்னுடைய குடும்பம் என்பது என்ன? உலகம் முழுவதும் வாழுகின்ற தமிழர்கள், பகுத்தறிவாளர்கள், நாத்திகர்கள் எல்லோரும் என்னுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள்தான். என்னுடைய குடும்பம் என்பது என்ன? பரந்துபட்டக் குடும்பம். அந்த குடும்பங்களின் உணர்வுகளை இங்கே நான் பார்க்கின்றேன். இந்த பாசத்திற்கு நான் அடிமையாக கிடக்கின்றேன். இந்த உணர்வுகளிலிருந்து என்னால் வெளியே வர முடியுமா?
என் கடைசி மூச்சு வரை காப்பேன்
எனவேதான் தந்தை பெரியார் விட்ட பணிகளை முடிக்க எந்த நம்பிக்கையை நீங்கள் என்மீது வைத்திருக்கின்றீர்களோ அந்த நம்பிக்கையை என்னுடைய இருதயத்தின் கடைசி துடிப்பு இருக்கின்ற வரையிலே, என்னுடைய உடலில் கடைசி மூச்சு இருக்கின்ற வரையிலே காப்பாற்றுவேன் என்பதைத் தவிர வேறு என்ன நான் உங்களுக்கெல்லாம் சொல்ல இருக்கிறது நண்பர்களே, வேறு என்ன சொல்ல இருக்கிறது?
வேலூர் சிறைக்கு என்ன - இன்னும் எவ்வளவு தொலைதூரச் சிறைச்சாலைக்குச் சென்றாலும் அதை நான் பெருமையாகக் கருதுகின்றேன். அதை வாய்ப்பாகக் கருதுகின்றேன். வாய்ப்புக்கேடாகவோ அடக்கு முறையாகவோ என் மனம் கருதவில்லை. காரணம், என்னோடு இருக்கக் கூடியவர்கள் நீங்கள் அல்லவா?
பெட்டியில் பணம் வாங்கக் கூடியவர்களா?
எவ்வளவோ தொல்லைகளுக்கிடையே நீங்கள் பணத்தை ஒவ்வொரு வரும் முடிந்த வரை வசூலித்துக் கொடுத்திருக்கின்றீர்கள். இந்த மாநாட்டை நடத்துவதற்கு நாம் என்ன பெட்டியிலே பணம் வாங்கக் கூடியவர்களா? இல்லை மறைமுகமாக வாங்கக் கூடியவர்களா?
நம்முடைய சட்டை தான் கருப்பே தவிர நம்முடைய பணம் கருப்புப் பணம் அல்லவே! தேர்தலில் நிற்கின்ற எவராவது கருப்புப் பணத்தை கண்டித்துப் பேசக் கூடிய தகுதி உண்டா இந்த நாட்டில்? தயவு செய்து நினைத்துப் பார்க்க வேண்டும் எதற்காக இதை சொல்லுகின்றோம் நண்பர்களே! நம்மை உயர்த்திக் கொள்வதற்காக அல்ல!
இரவெல்லாம் தூங்கவில்லை
பாதை இல்லாத இடங்களிலிருந்து விவசாயப் பெருங்குடி மக்கள், உழைக்கின்ற மக்கள், குடும்பம் குடும்பமாக பிஞ்சுகள் முதற்கொண்டு இந்த மாநாட்டுக்கு வந்தீர்களே உங்களுடைய உணர்ச்சிகளைப் பார்த்து நான் இரவெல்லாம் தூங்கவில்லை நண்பர்களே, இரவெல்லாம் தூங்கவில்லை, அதைக் கட்டிக் காப்பாற்றிக் கொண்டு இயக்கத்தைச் செலுத்த வேண்டாமா?
ஆனந்தக் கண்ணீர் விட்டாரே ஜெயராமன்
80 வயதைத் தாண்டிய அய்யா சிதம்பரம் கிருஷ்ணசாமியைப் போன்றவர்கள், எங்கள் கழகப் பொருளாளர் குப்புசாமியை போன்றவர்கள்; இன்றைக்குப் பேசி ஆனந்தக் கண்ணீர் விட்டாரே ஆரணி டாக்டர் ஜெயராமனைப் போன்றவர்கள், பெரியவர் மதுரை தேவ சகாயத்தைப் போன்றவர்கள் இன்னும் இதுபோல இலட்சக்கணக் கானவர்கள் இந்த மாநாட்டிற்கு வந்திருக்கின்றீர்கள். ஒரு உதாரணத்திற்காக சொல்லுகின்றேன். இப்படிப்பட்டவர்கள் மட்டுமல்ல; பெரியார் பிஞ்சுகள் இந்த மாநாட்டிற்கு வந்திருக்கின்றார்கள்.
பேரணியிலே கருப்புச் சட்டை அணிந்து கொண்டு கைகளிலே கழகக் கொடிகளைப் பிடித்துக் கொண்டு தந்தை பெரியார் வாழ்க! கடவுள் இல்லை, இல்லவே இல்லை. கடவுளை மற மனிதனை நினை என்று முழங்கிக் கொண்டு வந்தார்களே; இந்த உணர்வு அய்யா அவர்கள் ஊட்டிய அழியாத உணர்வல்லவா?
இந்த உணர்வு பட்டுப் போகுமா? இந்த உணர்ச்சி வீண்போகுமா?
எத்துணை சவால்கள் நம்மை எதிர்த்து வந்தாலும் நீங்கள் அவைகளைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். நமக்கு ஒவ்வொரு நாளும் புதுத்தெம்பு வந்து கொண்டிருக்கின்றது.
நூல் - இலட்சியத்தைநோக்கி
ஆசிரியர் -கி.வீரமணி
நூல் - இலட்சியத்தைநோக்கி
ஆசிரியர் -கி.வீரமணி
Comments
Post a Comment