உலகப் பெரியார் ஈ.வெ.ரா.



பெரியாரை நான் முதலில் 1917இல் அவர் இல்லத்தில் சந்தித்தேன்.

ஓர் பெரிய ஜமீன்தாரரைப் போன்றே காட்சியளித்தார். ஆனால் அவருடைய எளிய உள்ளத்தைப் பிறகு தான் கண்டேன்!

செல்வக் குடும்பத்தில் பிறந்தவராயினும் செருக்கற்று இருந்தார் - இருக்கிறார்! அப்போது அவருக்கிருந்த பட்டம், பதவிகள் ஏராளம்! ஈரோடு நகரசபைத் தலைவர்; ஜில்லா போர்டு உறுப்பினர்; இதுபோல் ஏராளம்!

காங்கிரசில் இருக்கும்போது காந்தியாரின் நிர்மாணத் திட்டத்தின்படி பட்டம், பதவிகளை உதறித் தள்ளிவிட்டார்.
காங்கிரஸ் தென்னாட்டில் இவ்வளவு செல்வாக்கும் பெற்றது எங்கள் நால்வர்களால்தான். பெரியார், வரதராசலு, நான், ராஜகோபாலாச்சாரியார் - ஆகிய நான்கு பேரும் இல்லையெனில் தென்னாட்டில் காங்கிரசே தலை நீட்டியிராது.

அதிகத் துன்புற்று வளர்த்தது நான் (திரு.வி..), நாயுடு (வரதராசலு), நாயக்கர் (பெரியார்) ஆவோம்.
நான் எழுதுவேன்!
நாயுடு பேசுவார்!
நாயக்கர் தொண்டாற்றுவார்! (செயலில் வெற்றி காண்பார்).
இதை நான் பெருமைக்காகச் சொல்லவில்லை; வரலாறு கூறும்.
சமூகம் - நாடு - மொழி, வளர கருத்து வேற்றுமை வளரவேண்டும். ஆனால் இன்று கருத்து வேற்றுமைக்காகக் குரோதம், கோபம் வளர்கிறது. இது தவறு, பள்ளியில் மாணவர்கள் சொற்பொழிவு ஆற்றும்போது இரண்டு பிரிவாகப் பேசிப் பழகுவார்கள். இதை ஏன் நம் நாட்டின் முன்னேற்றத்துக்குப் பயன்படச் செய்யலாகாது?

எதிர்ப்பு என்பது இல்லையேல் முன்னேற்றம் எப்படி வரும்? இதை உணர்ந்தவர் பெரியார் இராமசாமி. அதனால் தான் அந்த நாளில் காங்கிரசிலிருந்து கருத்து வேற்றுமையை வளர்த்தார். இது தவறா? பெரியாரின் கருத்து வேற்றுமைக்கும் எங்கள் நட்பிற்கும் பகைமை இருந்ததேயில்லை. இதை எனது வாழ்க்கைக் குறிப்பு பகரும்.

இவர் கல்லூரி காணாதவர்; பாடசாலைப் படிப்பு குறைவு என்பவர். ஆனால் எவருக்கும் எளிதில் கிடைக்காத இயற்கை அறிவை ஏராளமாகப் பெற்றிருக்கும் பெரியார் இவர்!

ஆதலால்தான் இவற்றைப் படிக்கும் பகைவரும் புரிந்து பேசும்படியான நிலை ஏற்பட்டது. இவர் எழுத்து காந்திக்கருகில் நிற்கின்றது - தாகூரைத் தாண்டிவிட்டது - சாக்ரட்டீஸின் ஆவி தான் பெரியாராக வந்து விட்டதோ என அய்யுறுகின்றேன்.

இவர் இயற்கைப் பெரியார். நான் இதுகாறும் செய்த ஆராய்ச்சிகளுள் அகப்படாத பல பெரிய கருத்துக்களும் அரிய யோசனைகளும் இப்பெரியாரின் இயற்கை அறிவில் உதித்திடக் காண்கிறேன்.

இவர் பட்டம் பதவிகளை துச்சமென எண்ணியவர் இல்லையேல் பெரிய பதவியென மக்கள் கருதி இப்போது போற்றுகிறார்களே அதனை இவர் எளிதில் - போட்டியின்றி பெற்றிருப்பார். ஆனால் மக்களுக்குத் தொண்டாற்றுவதையே பெரிய பதவியாகக் கருதுகின்றார். இப்போது ரயில், பஸ், எல்லா வசதிகளும் உண்டு, ஏன்? ஏரோப்ளேனும் உண்டு. ஆனால் அக்காலத்தில் இருபது இருபத்தைந்து மைல்கள் இரட்டை மாட்டு வண்டியில் பிரயாணம் செய்து பிரசாரம் செய்தோம்.
காஞ்சிபுரத்தில் கூடிய காங்கிரசு மாநாட்டிற்கு நான் தலைவராகயிருந்தேன். அங்குதான் பெரியார் காங்கிரசைத் துறந்தார். ஏன்? காந்தியாரின் ஒத்துழையாமை இயக்கத்தின்படி காங்கிரசு நடந்து கொள்ளவில்லை. பதவிப்பித்துப் பிடித்து சட்டசபைக்குப் போகத் தீர்மானித்தது! இதை எதிர்த்துப் பேசி காங்கிரசை விட்டு வெளியேறினார். இதுவே இவர் பதவிப் பித்தர் அல்ல என்பதற்கு அத்தாட்சி.

கதரைத் தென்னாட்டில் வளர்த்த தனிச் சிறப்பு இவரையே சாரும். ஊர் ஊராய், தெருத் தெருவாய்க் கதரைத் தோளில் தூக்கி விற்ற கர்ம வீரர் - களவு - கரவு - வஞ்சனை அற்ற பெருந்தகையாளர்! காங்கிரசைப் பிரிந்து தமிழர் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டு வருகிறார்.
இவர் வகுப்பு வாதியல்லர். ஆக்க வேலைகட்கு அடிகோலுகின்றார். இவர் சீர்திருத்தவாதி! சிந்தனைக்கு இனி பழைய கட்டுப்பாட்டுகள் தேவையில்லை. சிந்தனைக்கு கட்டுப்பாடு வளர்வது நன்மை தராது. சீர்திருத்தம் வேண்டும் என்பது வகுப்பு வாதமாகாது!

ஜாதி வேற்றுமை வளர்ந்தால் சுய ராஜ்யத்தை இழப்போம். பிறப்பில் உயர்வு தாழ்வு கூடாது. இந்தப் பித்தலாட்டம் இனிச் செல்லாது!
பிரிட்டனில் ரஸல் என்ற எழுத்தாளர் உயர்வு தாழ்வைக் கண்டித்து கட்டுரை தீட்டுகின்றார். அதற்காக அங்கு அவரைக் கண்டிப்பதோ தூற்றுவதோ கிடையாது. ஆனால் இவரை மட்டும் இங்கே தூற்றுவானேன்?

மதம் அபின் என்றார் மார்க்ஸ். இதற்காக எத்தனைச் சண்டைகள்? எத்தனை இரத்த ஆறுகள்? இவற்றை உணர்ந்து தானே தமிழ்ப் புலவர் வள்ளலாரும் மதமெனும் பேய் பிடியாதிருக்க வேண்டும் என்றார்.

பிரிட்டனில் மதம் இல்லையா? கத்தோலிக்கர், புராடெஸ்டெண்ட் என இருவகைகள் இருக்கின்றனவே. உயர்வு, தாழ்வு கருதா மதம் இருப்பதை வேண்டாமெனப் பெரியார் கூறவில்லையே!

இப்போது நமக்கு வந்திருப்பது சுதந்திரமா? இதனைச் சுதந்திரமென்று கூற வெட்கமில்லை? நாடு முன்னேற சீர்திருத்தக் கருத்துக்கள் பரவவேண்டாமா? பெரியாரின் சீர்திருத்தம் நாடு முன்னேற இன்றியமையாததே!

பெரியாரைப் பலர் நாத்திகர் எனக் கூறுகிறார்கள். என்னைக் கூடச் சிலர் சந்தேகிக்கின்றனர்! நான் கேட்கிறேன். திருநீறும், நாமமும் ஆத்திகத்தின் அறிகுறியாகுமா? இல்லை. அப்படிக் கருதுபவர் நாத்திகரேயாவர்.

ஆத்திகர் யாரெனில் நாளை உணவிற்கு வருந்தாது, சேமித்து வையாது - முன்னேற்பாடு செய்யாது - இருப்பவன் தான் ஆத்திகன். ஆகவே உணவுக் கவலை கொள்ளாது ஊர் சுற்றும் .வெ.ரா. ஆத்திகர்தான்.

உருவம் வைத்து வணங்குவது நாத்திகமேயன்றி ஆத்திகமன்று. இதை உணர்ந்துதான் உருவ வணக்கத்தில் தமக்கு நம்பிக்கையில்லையென்று காந்தியார் கூறுவதற்கு முன்னரே பெரியார் கூறினார்! பெரியாரின் கொள்கை பழமையின் தேய்வு; புதுமையின் ஆக்கம்.

பெரியாருக்கோ, எனக்கோ, மறைமலையடிகட்கோ இந்தியின்மீது வெறுப்பல்ல, அதனைச் சிறு பாலகர்கட்குக் கட்டாயமாக்கும் அரசியலாரிடம்தான் வெறுப்பு. சிறு பாலகர்கட்கு மூன்று மொழிகளைத் திணிப்பதால் பாலர்களில் சிலர் சுமை தாங்காமல் பைத்தியமாகலாம்; சிலர் மரிக்கலாம். ஆதலால் இதனைத் திணிக்கலாகாது என்கிறார் பெரியார்.

மார்க்ஸ் பிறந்தது ஜெர்மனியில். அங்கிருந்து பெல்ஜியத்திற்கும், பெல்ஜியத்திலிருந்து பிரிட்டனுக்கும் துரத்தப்பட்டார். அங்கு அவரை ஒரு பாதிரியார், தாங்கள் ஒரு ஜெர்மானியரா? என்று கேட்டதற்கு, இல்லை, நான் உலக மனிதன் என்றார். அதைப் போன்றே பெரியாரும் உலக மனிதராவார்; இவர் உலகப் பெரியாரே!

நான் இதுவரையில் நின்று பேசினேன். ஏனெனில் இவர் பெரியாருள் பெரியார் என்னிலும் ஆறு ஆண்டுகள் வயதிற் பெரியவர். வேற்றுமை களைந்த சமத்துவ சமுதாயம் காண, சமூகம் முன்னேற்றமடைய இடையறாது உதவி வரும் பெரியார் - பட்டம் பதவி வேண்டாத தொண்டர் ஆவார்.

மோட்சம் வேண்டாம், வேண்டுவது மனிதர் தொண்டே, இதுதான் தமிழர் பண்பு. இது பெரியாருக்குத் தான் பொருந்தும், இன்று காந்தியடிகளின் கொள்கையைக் கடைப்பிடித்து ஒழுகும் ஒருவர் உண்டெனில் அது பெரியார் ராமசாமிதான்!

தமிழாசிரியர்களைக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் பெரியார் கொள்கைக்கு உதவுங்கள். இன்பச் சுதந்திரம் பத்தாண்டில் வருவது நிச்சயம். வாழ்க பெரியார்!


(17.8.1948இல் திருவண்ணாமலை நகராட்சி மன்றத்தில் பெரியார் அவர்களது உருவப்படத்தை திறந்து வைத்த போது திரு.வி.. ஆற்றிய சொற்பொழிவு).

Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை