தியாகிக்கு செய்த உதவி



சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த, முதிர்ந்த வழக்குரைஞர்களில் ஒருவர் நண்பர் ஆர். காந்தி அவர்கள். தமிழ் இனவுணர்வாளர் - தேசியவாதி - என்றாலும் கட்சியைவிட தனக்குச் சரியெனப்படுவதைத் துணிவுடன் எங்கும் கூறத் தயங்காதவர்.

ஒப்பற்ற உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்ந்து சமூகநீதிக் கொடியை அவர் சென்ற பஞ்சாபில் பறக்கவிட்டதால், ஆதிக்க ஜாதிகளின் மீடியா சதிகளால் பின்னப்பட்டாலும், சற்றும் கலங்காது நெஞ்சை உயர்த்திய ஜஸ்டிஸ் வி. இராமசாமியின் இளையராக - அவரது அலுவலகத்தின் வார்ப்படங்களில் ஒருவராக இவர் விளங்குகிறார்.

அவர் எழுதி, இரண்டாம் பதிப்பாக வெளிவந்த ஆம், கனம் நீதிபதி அவர்களே! என்ற தலைப்பில் உள்ள அவரது தன் வரலாற்று நூலை எனக்கு நமது கழகச் சட்டத்துறைத் தலைவர் வழக்குரைஞர் .வீரசேகரன்மூலமாக நேற்றுமுன்தினம் (25.2.2013) அனுப்பி வைத்தார்.

இரவு கூட்டம் முடித்துச் சென்று, படுக்கைக்குப் போகும் போது அந்நூலை எடுத்துப் படித்தேன் - சுவைத்தேன்!

மிக யதார்த்தமாக எதையும் மறைக்காமல் அந்த காந்தி அண்ணல் போலவே உண்மைகளை அப்பட்டமாகப் போட்டு உடைத்துள்ளார்.

இவரது வாழ்க்கை வரலாறு என்றாலும், நம் சமூகம் எப்படிப்பட்டது என்பதை சில நிகழ்வுகள்மூலம் எல்லோருக்கும் புரிய வைக்கிறார்.

ஈரோட்டில் தந்தை பெரியார் அவர்களுக்கு நெருக்கமான குடும்பம் இவரது குடும்பம். காங்கிரஸ் பாரம்பரியம். இவரது தாயார் மிகவும் நோய்வாய்ப் பட்ட நிலையில் இருந்தபோது, இவர் குழந்தைப் பருவத்தில் - தியாகியான அவரது தந்தை தியாகி இராமசாமி (கவுண்டர்) சிறையில் தண்டிக்கப்பட்டிருந்தபோது, அவரைப் பரோலில் வெளிவந்து மரணப் படுக்கையில் இருந்த இவரது தாயாரைச் சந்திக்க வைக்க தந்தை பெரியார் அவர்கள்தான் பெரும் உதவி செய்தார் என்று நன்றியுடன் ஓர் இடத்தில் குறிப்பிடுகிறார்!

பெரியாரின் மனிதநேயம் பற்றிய பல்வேறு நிகழ்வுகளைத் தொகுத்தால், ஒரு நூலே எழுத முடியும்.


- கி.வீரமணி நூல்: வாழ்வியல் சிந்தனைகள், தொகுதி – 9

Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை