ஆர்.எஸ்.எஸ். பற்றி தலைவர்களின் கருத்து



ஆர்.எஸ்.எஸ். பற்றியும் மற்றும் அதன் கிளை அமைப்புகள் பற்றியும், அவவற்றில் ஏற்பட இருக்கின்ற பயங்கர விளைவுகள் பற்றியும் விரிவாக ஆராய்வதற்கு முன், அவர்களைப் பற்றி தலைவர்கள் என்ன மதிப்பீடு செய்கிறார்கள்? என்று அறிந்து கொள்வது, அவர்களைத் துல்லியமாய்ப் புரிந்து கொள்ள ஒரு பாதை வகுத்துக் கொடுக்கும் என்பதனாலே, அதனை முதலில் குறிப்பிட்டுள்ளேன்.

காந்தி
1946ஆம் ஆண்டு காந்தியின் சீடர்களில் ஒருவர், அகதிகள் தங்கியிருந்த வாகா முகாமில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கடின உழைப்புடனும், தொண்டு மனப்பான்மையுடனும், கட்டுப்பாடுடனும், துணிச்சலுடனும் நடந்து கொண்டதாக காந்தியிடம் பாராட்டிப் பேசினார். அதைக் கேட்ட காந்திஹிட்லருடைய நாஜிப் படைகளும், முஸோலினியின் பாஸிஸ்ட்டுகளும் அப்படிப்பட்ட திறமைசாலிகள்தான் என்பதை மறக்க வேண்டாம் என்று துல்லியமாகவும், சூடாகவும் பதில் அளித்தார். மேலும்சர்வாதிகார கண்ணோட்டமுடைய வகுப்புவாத அமைப்பு ஆர்.எஸ்.எஸ். என்று வன்மையாகக் கண்டித்தார்.

- (
ஆதாரம்: பியாரிலால் எழுதிய மகாத்மா காந்தி; கடைசிக் கட்டம், அஹமதாபாத், பக்கம் 440.)
மேலும்,
தேச விடுதலைக்கு வழி உடற்பயிற்சிக் கழகங்களின் மூலம் செல்லவில்லை. இந்து - முஸ்லீம் சண்டையைக் கருத்தில் கொண்டு தற்காப்புப் பயிற்சி அளிக்கிறது. ஆர்.எஸ்.எஸ். என்றால் அது தோல்வி அடைவது உறுதி. இதே முறையில், இதே முயற்சியில் முஸ்லீம்களும் ஈடுபட முடியும். இரகசியமாக அல்லது வெளிப்படையாக நடைபெறும் இதுபோன்ற வன்முறைப் பயிற்சிகளால் சந்தேகமும், எரிச்சலுமே ஏற்படும். மாறாக அவை பிரச்சினைகளுக்கு மருந்துகள் ஆகா என்று ஆர்.எஸ்.எஸ். அணுகுமுறையைத் திட்டவட்டமாகக் கண்டித்தார் காந்தி.
 - (ஆதாரம்: ஜி.டி.டென்டுல்கர், மஹாத்மா, 3ம் பாகம்,
பம்பாய் 1945, பக்கங்கள் 130-134).

ஆர்.எஸ்.எஸ். அதன் தொண்டர்களுக்கு வழங்குகின்ற உடற்பயிற்சி என்கின்ற வன்முறைப் பயிற்சி இந்து முஸ்லீம் மோதலுக்கே வழிவகுக்கும். முஸ்லீம்களும் இது போன்ற முயற்சிகளில் ஈடுபட முடியும். இந்திய விடுதலைக்கு இதுபோன்ற செயல்பாடுகள் ஒருபோதும் உதவாது என்று தீர்க்கமாக எதிர்த்தார் காந்தியடிகள்.
ஆர்.எஸ்.எஸ்-இன் மதவெறிப் போக்கிற்கு காந்தி எதிர்ப்பாளராகவே இருந்ததால், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் காந்தியாரைத் தாக்கி ஒரு மொட்டைக் கடிதம் எழுதினர். அதுவும் மராட்டிய பார்ப்பனர்களிடமிருந்து அக்கடிதம் வந்தது.
காந்தியே, திலகரைப்போல இந்துக்களை ஒன்றுபடுத்தி, இந்து அடிப்படையில் சுதந்திரத்திற்காகப் போராடாத நீ ஒரு கோழை என்று காந்தியைத் தாக்கி அக்கடிதத்தில் எழுதியிருந்தனர்.

இதைக்கண்டு மனம் நொந்த காந்தி 13.7.1921 யங் இந்தியாவில், எனக்கு மொட்டைக் கடிதங்கள் வருகின்றன. திலகர் வழியிலே ஏன் செயல்படவில்லையென்று அதில் கேட்கிறார்கள். நான் சொல்லிக் கொள்கின்றேன் - என்னுடைய முறை திலகர் காட்டிய வழிமுறை அல்ல. அதன் காரணமாகவே எனக்குப் பல மராட்டியத் தலைவர்களிடமிருந்து தொல்லைகள் வருகின்றன என்று எழுதினார்கள்.

நேரு

1948இல் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டிருந்தபோது, தடை நீக்கும் முயற்சியாக ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் நேருவைச் சந்திக்க அனுமதி கேட்டார்கள். ஆனால் நேரு மறுத்து ஒரு கடிதம் எழுதினார்.

கடந்த ஆண்டு இறுதியில், மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கைகள் பற்றி ஏராளமான தகவல்கள் கிடைத்திருக்கின்றன. நீங்கள் உங்கள் கொள்கையாக எதையெல்லாம் அறிவித்திருக்கிறீர்களோ அதற்கும் நீங்கள் (ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்) மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது. இந்திய நாடாளுமன்றத்தின் கொள்கையையும், அமையவிருக்கும் அரசியல் சட்டத்தையும் எதிர்ப்பதுதான் உங்களுக்கு உண்மையான கொள்கை. எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி உங்களின் நடவடிக்கைகள் தேச விரோதமானவை; சூழ்ச்சியானவை; வன்முறையானவை என்று நேரு அவர்கள் அக்கடிதத்தில் ஆணித்தரமாகக் குறிப்பிட்டிருந்தார்கள்.

நான் முந்திய கட்டுரையில் ஆர்.எஸ்.எஸ். பற்றி கூறியிருந்த கருத்துக்கள் அப்படியே நேரு அவர்களால் சுருக்கமாக சுட்டிக் காட்டப்பட்டிருப்பதை வாசகர்கள் மனதில் கொள்ளவேண்டும்.

நேருவின் கணிப்பு நூற்றுக்கு நூறு உண்மை. ஆர்.எஸ்.எஸ்-இன் உண்மை உருவத்தை, சூழ்ச்சியை, வன்முறை கலாச்சாரத்தை, ஆதிக்கப் போக்கை அழகாகப் படம் பிடித்துக் காட்டினார்கள்.

மேலும்,

இந்து மகா சபையானாலும் சரி, அந்தக் கொள்கையுடைய மற்ற (ஆர்.எஸ்.எஸ்.) அமைப்புகளானாலும் சரி, அவர்கள் நடவடிக்கைகள் எனக்கு ஆத்திரத்தைத் தருகின்றன. அவர்கள் சுயநலமும், தீவிரவாதமும் குறுகிய புத்தியும் கொண்டவர்கள். தேசியம் என்ற பெயரில் இதை மறைக்கப்பார்க்கும் கூட்டம். இந்து முதலாளிகளும், மன்னர்களும், மேல்தட்டு, நடுத்தரவாதிகளையும் கொண்ட வகுப்பு வாதிகள் கூட்டம் அது என்று அவர்களைச் சரியாகக் கணித்து, காட்டமாகக் கூறினார் நேரு.

 - (ஆதாரம்: Selected words of Jawaharlal Nehru Vol. 6 பக்கம் 156)

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் 12.11.1933 அன்று நேரு பேசிய போது,
இந்து மகா சபையானாலும், அதனோடு சேர்ந்த மற்ற (ஆர்.எஸ்.எஸ்.) அமைப்புகளானாலும் சரி எனக்கு நீண்ட நாள்களாகவே அவர்களைப் பற்றிய ஒரு கருத்து உண்டு. அவர்கள் பிற்போக்குச் செயல்பாடுகள் கொண்ட கூட்டம். இந்தியாவில் உள்ள இந்துக்களுக்காக இவர்கள் உரிமை கேட்பதாகவும், பாடுபடுவதாகவும் கூறுகிறார்கள். அவ்விதம் உரிமை கொண்டாட இவர்களுக்கு ஏது உரிமை?

தேசியம் என்ற போர்வையில், தங்கள் மதவெறியை, வகுப்புவாதத்தை மறைத்துக் கொள்ளப் பார்க்கும் இவர்கள், இந்து நிலக்கிழார்களையும் (பண்ணையார்கள்) இந்து மன்னர்களையும் பாதுகாக்க வந்திருப்பவர்கள். அவர்கள் அறிவித்திருக்கிற கொள்கைப்படி அவர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆதரவாளர்கள். அதற்கு ஈடாக அவர்களுக்குச் சில அற்ப ஆதாயங்களும் கிடைக்கக் கூடும். ஆனால், இது (ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் செயல்பாடுகள்) நாட்டு விடுதலைப் போராட்டத்திற்குச் செய்யப்படும் துரோகம்; இந்து மதத்திலே இருப்பவர்களின் மனித உரிமைகளை நசுக்கும் முயற்சி.

இந்து மகாசபையின் தற்போதைய கொள்கையைவிட, இழிவுபடுத்தக்கூடிய, நாட்டுக்கு விரோதமான, முன்னேற்றத்திற்குத் தடையான, கேடு விளைவிக்கக் கூடிய வேறு எதுவும் இருக்க முடியாது. இவர்களைவிட மோசமான ஒரு அமைப்பு இருக்கும் என்று கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.
எனவே, நாட்டில் உள்ள இந்துக்களும் இந்துக்கள் அல்லாதவர்களும் ஒன்று சேர்ந்து இவர்களை (ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை) கடுமையாக எதிர்க்க வேண்டும். சுதந்திரத்தின் விரோதிகளாக இவர்களைக் கருத வேண்டும் என்று மிகவும் கடுமையாக, அவர்கள் கூடாரமான இந்து பல்கலைக் கழகத்திலே தயக்கமின்றி எச்சரித்தார் நேரு அவர்கள்
- (ஆதாரம்: Selected words of Jawaharlal Nehru Vol. 6  பக்கம் 157,
ஓரியன்ட் லாங்மேன் வெளியீடு.)
மேலும், அலகாபாத்தில் The Leaderஎன்ற பத்திரிகைக்கு நேரு அளித்த பேட்டியில், இந்து மகா சபை மற்றும் அதன் தொடர்புடைய அமைப்புகளில் (ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளில்) இருக்கும் முன்னணி வகுப்பு வெறியர்கள் (மத வெறியர்கள்) எல்லாம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு ஒத்துழைப்பு தருகிறார்கள். அதற்காகச் சில சலுகைகள் தங்களுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். இந்தப் போக்கு தேச விரோதமானது. பிற்போக்குத் தன்மையுடையது. இந்துக்களின் குறுகிய மனப்பான்மையோடு பார்த்தால்கூட முட்டாள் தனமானது; குறுகிய கண்டோட்டம் உடையது.
- (ஆதாரம்: The Leader’ 22.11.1933
ஜெயப்பிரகாஷ் நாராயணன்

இந்தியாவின் மரியாதைக்குரிய தலைவராகக் கருதப்பட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்கள், 1966இல் ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் கவர்ச்சி வலையில் சிக்கியிருந்தாலும், இரு ஆண்டுகளிலே ஆர்.எஸ்.எஸ். பற்றிய உண்மை உருவத்தை, அவர்களின் சதித்திட்டத்தை நன்றாகப் புரிந்து கொண்டு அவர்களின் வலையிலிருந்து - பிடியிலிருந்து - மீண்டார்.

1968ஆம் ஆண்டு புதுடில்லியில் நடந்த வகுப்புவாத எதிர்ப்பு இரண்டாம் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு பேசும்போதுஆர்.எஸ்.எஸ். ஒரு வகுப்புவாத - பாஸிஸ இயக்கம் என்பதை உணர்ந்து கொண்டேன் என்றார்.

மேலும்ஜனசங்கம் (ஆர்.எஸ்.எஸ்.-இன் இன்னொரு கிளை) தன்னை ஒரு மதச் சார்பற்ற அமைப்பு என்று கூறிக் கொண்டிருக்கின்றது. ஆனால் இவர்கள் ஆர்.எஸ்.எஸ். என்ற எந்திரத்தால் இயக்கப்படக் கூடியவர்கள் என்று ஆர்.எஸ்.எஸ்.-இன் மோசடியைத் திறந்து காட்டினார்.

ஒரே நோக்கத்தை நிறைவேற்ற, மக்களை ஏமாற்ற பல வடிவங்களில் வரக் கூடியவர்கள் இந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்; எத்தனை வடிவம் எடுத்தாலும் எல்லாவற்றையும் இயக்கக்கூடிய அடிப்படை அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.-ன் வன்முறை கும்பல்தான் என்பதைத் தெளிவாக கண்டறிந்து சொன்னார் ஜெயப்பிரகாஷ் அவர்கள்.

- (ஆதாரம்: Secular Decmocracy’ - ஆண்டு மலர்)

1979ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் இரண்டாம் தேதி, ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்கள் அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கு எழுதிய கடிதத்தில்,
அரசாங்கத்தில் தலைமையைக் கைப்பற்ற ஆர்.எஸ்.எஸ். முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டை என்னிடம் பல நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்.காரர் தங்களை ஒரு கலாச்சார இயக்கம் என்று சொல்லிக் கொண்டு, அந்த முகமூடியோடு, அரசியலில் செல்வாக்குப் பெற முயல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆர்.எஸ்.எஸ்.-இன் இந்து ராஷ்ட்ரா கொள்கையை நான் எப்போதும் கண்டித்து வந்திருக்கிறேன். அது மிகவும் ஆபத்தான தத்துவம். பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட இந்திய நாட்டிற்கு இது நேர் எதிரான தத்துவமாகும்.
(I have always condemed the Hindu Rashtravad of R.S.S. because it is a dangerous ideology and is contradictory to our ideal of composite Indian Nation.)
நீங்கள் இந்த நாட்டின் பிரதமர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வகுப்புவாத வெறியை (மதவெறியை) மாற்றவேண்டியது உங்கள் கடமை. அதை நீங்கள் செய்யாவிட்டால் நாட்டில் உள்ள சிந்தனையாளர்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ்.-அய் எதிர்த்துப் போராடி அதைச் செய்ய வேண்டி வரும்.
- என்று ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் கிளை அமைப்புகளின் வன்முறைக் கலாச்சாரத்தை; அவற்றால் நாட்டிற்கு வர இருக்கின்ற பேராபத்தை வன்மையாகக் கண்டித்தார் ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்கள்.
 - (ஆதாரம்: தினமான் இந்தி வார ஏடு 8.4.1979)

இராஜ் நாராயணன்

முன்னாள் மத்திய அமைச்சர் இராஜ் நாராயணன் அவர்கள்,
கடந்த 40 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பை நான் மிகவும் துல்லியமாகக் கவனித்து வருகிறேன். 1940இல் காந்தியைத் தாக்கிப் பேசி வந்தார்கள். 1942ற்குப் பிறகு காங்கிரஸ்காரர்களைத் தாக்கிப் பேசி வந்தார்கள். தொடர்ந்து பிரிட்டிஷ்காரர்களின் உளவாளியாகவே அவர்கள் செயல்பட்டார்கள் என்று இவர்களின் உண்மையான நோக்கத்தை, ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர்கள் அல்ல, அது மதவெறி கும்பல் என்பதைத் தன் சொந்த அனுபவத்தைக் கொண்டு, மிகவும் சரியாக மதிப்பிட்டுச் சொன்னார்கள்.
- (ஆதாரம்: 25.3.1979 சண்டே வார இதழில் வெளி வந்த
இராஜ் நாராயணன் பேட்டி)

சவுத்திரி பிரம்பிரகாஷ்

மத்திய உணவுத் துறை அமைச்சராக இருந்த சவுத்திரி பிரம் பிரகாஷ் அவர்களை, 1979 பிப்ரவரி மாதம் டில்லியில் நடந்த ஆர்.எஸ்.எஸ். ஆண்டு விழாப் பயிற்சியை பார்வையிட ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அழைத்தபோது, பிரம் பிரகாஷ் அவர்கள் அந்த அழைப்பை மறுத்துக் கீழ்க்கண்டவாறு கடிதம் எழுதினார்கள்.

நீங்கள் (ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்) கட்டுப்பாடு, ஒழுக்கத்தோடு நடத்தும் ஒரு அணிவகுப்பையும், உடற்பயிற்சியையும் பார்த்துவிட்டு, ஆர்.எஸ்.எஸ். ஒரு அப்பாவித்தனமான அமைப்பு, சாத்வீக அமைப்பு என்று என்னை நம்பச் சொல்கிறீர்களா?

உங்களுடைய அணிவகுப்புகளும், பயிற்சியும் குழந்தைகளை வேண்டுமானால் கவர்ந்து இழுக்கலாம் அல்லது ஆர்.எஸ்.எஸ். பற்றி ஒன்றும் தெரியாதவர்களை வேண்டுமானால் கவரலாம். உங்களைப் பற்றிய முழு விவரமும் அறிந்த என்னைப் போன்றவர்களை நீங்கள் இவைகளைக் காட்டி ஏமாற்றிவிட முடியாது. நான் இப்போது சொல்கிறேன். ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நல்ல கட்டுப்பாடு உடையவர்கள்தான்; மரியாதையோடு நடப்பது எப்படி என்று அவர்களுக்குக் கற்றுத் தரப்படுகிறது; அதே நேரத்தில் வதந்திகளைப் பரப்புவதற்கும், ஒருவரைத் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்திப் பிரச்சாரம் செய்வதற்கும் அவர்களுக்குப் பயிற்சி தரப்படுகிறது. அமைதியாக நமஸ்காரம் செய்யும் ஆர்.எஸ்.எஸ். கரங்கள் கத்தியைத் தூக்கி பிடிக்காதவர்களைத் தீர்த்துக் கட்டவும் பயிற்சியளிக்கப்படுகின்றன. என்று மிகவும் வெளிப்படையாக, சமுதாய அக்கறையோடு, ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் கபட வேடத்தை, சதித் திட்டத்தை, வன்முறை மதவாத நோக்கத்தைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
- (ஆதாரம்: டி.ஆர்.கோபால் எழுதிய R.R.S . என்ற நூல் பக்கம் 9-10).
இவர் கணித்தபடியே ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்த கோட்சே, கும்பிட்ட கைக்குள்ளே குண்டுதாங்கிய துப்பாக்கியை மறைத்து வைத்திருந்து, கொடூரமாகக் காந்தியாரைச் சுட்டுக் கொன்றதை இங்கு ஒப்பிட்டுத் தெளிய வேண்டும்.

கலைஞர் மு.கருணாநிதி

ஆர்.எஸ்.எஸ். காட்டுமிராண்டித்தனமான வன்முறைக் கும்பல்.
இந்து முன்னணி வக்கிரமான வன்முறைக் கும்பல்.
பஜ்ரங்தளம் பயங்கரவாதிகளின் கூட்டம்.
விஸ்வஹிந்து பரிஷத் வன்முறையாளர்கள் கூட்டம் என்று நறுக்காகக் கூறினார்.
- (ஆதாரம்: முரசொலி 26.2.1998, 1ஆம் பக்கம்)


முரசொலி மாறன்

பாரதிய ஜனதாவும் அதன் பரிவாரங்களும் காட்டுமிராண்டிக் கட்சிகள். சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கு பா... தலைமையில் உள்ள ஆட்சி கவிழும் போதுதான் உத்தரவாதம் கிடைக்கும்.
- (நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், 15.2.1999, 3ஆம் பக்கம்)

தி.மு.. தேர்தல் அறிக்கையின் கணிப்பு

பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் மதவெறியைத் தூண்டி பிற மதத்தினரை அந்நியப்படுத்தவும்; வர்ணாஸ்ரம ஆதிக்கத்தைப் புதுப்பித்து வளர்க்கவும் முயலும் பிற்போக்கு, தேசவிரோத சக்திகள்.


- (ஆதாரம்: 1998ஆம் ஆண்டு நடந்த 12ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான தி.மு.. தேர்தல் அறிக்கை - பக்கம் 5)



நூல்பி.ஜே.பி ஒரு பேரபாயம்

                                           ஆசிரியர் - மஞ்சை வசந்தன்

Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை