குள்ளநரி குணாவின் கோத்து மாத்து வேலைகள்


1. பகுதியை வெளியிட்டு பழி சுமத்தல் :
பெரியார் சொன்னவை, எழுதியவைகளை முழுமையாக வெளியிடாமல், துண்டுத் துண்டாகத் தொடர்பில்லாமல் எடுத்து, தனது நூலில் போட்டு, அதைப் படித்தவுடன் தந்தை பெரியார் மீது வெறுப்பு உண்டாகும் கோத்துமாத்து வேலையைக் குள்ளநரி குணா செய்துள்ளார். 77 பக்க நூல் ஒன்று எழுத பத்து ஆண்டுகள் தான் முயன்றதாகக் கூறுவது இந்த மோசடி வேலைகளைச் செய்யத்தான் போலும். எடுத்துக்காட்டாக, நம் தாழ்மைக்குக் காரணம் என்ன?
என்று பெரியார் 27.11.1943இல் எழுதிய ஒரு கட்டுரையில் துண்டுத் துண்டாகச் செய்திகளை எடுத்துப் போட்டு பெரியாரைத் தமிழ்மக்கள் வெறுக்கும்படி செய்துள்ளார் குணா.
இக்கட்டுரையின் தலைப்பே நம் தாழ்வுக்குக் காரணங்கள் எவை என்றே பெரியார் எழுதியுள்ளார். அதாவது தன்னையும் உள்ளடக்கி நமக்குள்ள இழிவுகளை வரிசைப்படுத்திய ஓர் ஒளிவுமறைவு இல்லா உன்னதத் தலைவரைக் கோத்துமாத்து வேலை மூலம் குற்றம் சாட்டியுள்ளார் இந்த ஆரிய அடிவருடி!
நம் தாழ்மைக்குக் காரணம் என்ன?
(பெரியார் .வெ.ரா.)
தமிழர் (திராவிடர்) நிலை தாழ்ந்திருக்கிறது. சமுதாயத்தில் கீழான ஜாதி. கல்வியில் 100 க்கு 80 தற்குறி. செல்வத்தில் 100க்கு 90 கூலி ஜீவனம். தொழிலில் 100க்கு 75 சரீரப் பாடுபட்டு உழைக்கும் தொழில் (ஈனத் தொழில் என்பது). சர்க்கார் உத்தியோகத்தில் ஏவலாளி (பியூன், ஜவான், கிளார்க் வேலை)
ஒற்றுமையில் : 108 ஜாதியும், கட்டுப்பாட்டில் அவனவன் சுயநலமும், ஒருவனை ஒருவன் ஏய்ப்பதும், ஒழிக்க சமயம் பார்ப்பதும்.
சமயத்தில் (மதத்தில்), எதிரிக்கு அடிமையாய் இருந்து உழைத்துப் போடுவது.
அரசியலில், வஞ்சக அயோக்கியருக்கு வால் பிடித்துக் கைதூக்குவது.
மானத்தில் ஈனமும், மதிப்பில் காரி உமிழத்தக்கதுமாகவும் இருக்கின்றது. இதற்குக் காரணம் என்ன?
என்பது ஒரு முக்கியமான கேள்வியாகும்.
அதோடு,
தமிழ்நாடு பூராவிலும் தமிழனால் மதிக்கக் கூடிய  போற்றக் கூடிய ஒரு தமிழன்கூடக் கிடையாது. அதுபோலவே ஒரு தமிழனால் குறை கூறப்படாத மற்றொரு தமிழனும் கிடையாது. ஏதாவது ஒரு உத்தியோகத்துக்கோ, பதவிக்கோ, உயர்நிலைக்கோ வந்த உடன் தனக்கு மேலிருப்பவனையும், தனக்கு உதவி செய்தவனையும், கீழே தள்ள முயற்சிக்காதவனும், சிபாரிசு செய்தவனைத் தூற்றித் திரியாதவனும் தமிழரில் பெரிதும் கிடையாது.
தன்னை முன்னுக்குக் கொண்டு வந்தவனுக்குக் குழி தோண்டாத தமிழன் அரிதிலுமரிது.
நன்றி விசுவாசம் காட்டுவதும், நயவஞ்சகம் செய்யாமையும் தமிழனுக்கு நஞ்சு.
என்றுகூட சொல்லப்படுவதற்கும் அவை அநேகமாய் உண்மையாய் இருப்பதற்குக் காரணம் என்னஎன்பது இரண்டாவது கேள்வியாகும்.
இந்த நிலையும் குணங்களும் பார்ப்பனர்களுக்குள்ளும், முஸ்லீம்களுக்குள்ளும், ஏன் சட்டைக்காரர்களுக்கும்கூட சாதாரணமாய்க் காண்பதற்கு முடிவதில்லை என்று சொல்லப்படுகிறதே.
இதற்குக் காரணம் என்ன? என்பது மூன்றாவது கேள்வியாகும்.
இந்த மூன்று கேள்விகளிலும் உள்ள விஷயங்கள் சிறிது அதிகப்படுத்திக் கூறியிருப்பதாகச் சிலர் கருதலாம். அது உண்மையாக இருந்தாலும் இருக்கலாம். ஆனால் பெரும்பாகம் உண்மை என்பதைப் பெரும்பான்மையோர் ஒப்புக் கொள்ளுவார்கள்.
ஆதலால் இவைகளுக்குக் காரணம் என்ன என்று கவனிக்க வேண்டாமா?
சென்னை மாகாண (திராவிட நாட்டு) ஜனசங்கையில் 100க்கு 3 பேர்களே பார்ப்பனர்கள். 100க்கு எட்டு, அல்லது ஒன்பது பேர்களே முஸ்லீம்கள். 1000க்கு ஒருவராய் இருந்தாலும் இருக்கலாம். சட்டைக்காரர்கள் (அதாவது திராவிட-ஆரியர்) இப்படி மிகச் சிறுதுகையினராக இருக்கும் இவர்கள், தமிழர்களுக்கு ஏற்பட்ட மேற்கண்ட இழிவுகள் இல்லாமல் மேன்மையாய், கட்டுப்பாடாய், சுதந்திரமாய் மதிக்கத்தக்க வண்ணம், அன்னியன் கண்டு பயப்படும்படியும் வாழ்வதற்குக் காரணம் என்ன? என்று சிந்தித்தால் தமிழர் இழிவுக்குக் காரணங்கள் சுலபமாய்க் கிடைத்து விடும்.
காரணம்
1.தமிழனுக்கு அஸ்திவாரமில்லை. அதாவது அவன் யார்? அவனுக்குச் சொந்தம் எது? அவனுடைய பூர்வோத்திரமென்ன? லட்சியம் என்ன? என்பனவாகிய நாலும் தெரியாதவனாகவும் ஆதாரம் இல்லாதவனாகவும் இருக்கிறான். ஆகவே அஸ்திவாரமில்லாத கட்டடம் வெடிப்புக் காணுவதும், அதிருவதும், அதில் (மானமோ மேன்மையோ) குடி இருக்க பயப்படுவதும் இயற்கைதானே? அதுபோலவே தனக்குச் சொந்தம், உரிமை இன்னது என்று தெரியாதவன் தொட்டதற்கெல்லாம் அன்னியனைப் பல்லைக் கிஞ்சி கெஞ்சுவதும் ஒண்டுவதும் ஒருவனுக்கொருவன் போட்டி போட்டுப் பின்தள்ளி விட்டுப் போய், தன் காரியம் பார்த்துக் கொள்ளுவதும் இயற்கைதானே.
2.தமிழனுக்கு ஒரு ஸ்தாபனம் கிடையாது, வேறு எதனுடனாவது சேர்ந்துதான் தன்னைத் தமிழன் என்று காட்டிக் கொள்ள வேண்டியவனாய் இருக்கிறான்  அப்படி இல்லா விட்டால் பார்ப்பனரல்லாதான், முஸ்லீமல்லாதான், கிறிஸ்தவனல்லாதான், இந்து அல்லாதான் என்பன போன்ற  அல்லாதான் என்கின்ற பெயரால் தான் தன்னைக் காட்டிக் கொள்ள முடிகிறது.
3.தமிழன் என்றால் இதில் பார்ப்பான், முஸ்லீம், கிறித்தவன் முதலிய பலர் சேருகிறார்கள். யாரையாவது நாம் சேர்ப்பதில்லை என்றால் அவர்கள், நானும் தமிழன், தமிழ்நாட்டில் பிறந்தவன், தமிழ் பேசுகிறவன் என்கிறார்கள். அது மாத்திரமா? தமிழனே, தமிழ்ப் பண்டிதனே தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் பேசுகிறவன் எவனும் அவன் நம்மை எவ்வளவு இழிவாயும், மானமற்ற தன்மை உண்டாகும்படியும் நடத்தினாலும் சரி அவனெல்லாம் தமிழனே என்று வக்காலத்துப் பேசுகிறான்; ஆதாரம் காட்டுகிறான். 4.           தமிழன் நடந்து கொள்ளுவதற்கு என்று தனிமுறை வழிதுறை கிடையாது. தமிழனுக்கு என்று தனி நடை, உடை, பாவனை கிடையாது.
5.தமிழனுக்கு என்று, தனித்த முறையில் ஆரியம் கலவாத இலக்கியமும் கிடையாது.
6.தமிழனைத் தனித்த முறையில் நடத்த தலைவன் கிடையாது.
7.தமிழருள் முக்கியமானவர்கள் என்று கருதும்படியாக நடந்து கொள்ளுகிறவர்களுக்கும், பிறர் தங்களை அப்படிக் கருத வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்களுக்கும், தமிழர் சமுதாயத்தையும் இனத்தையும் பொருத்த பொறுப்பும் கவலையும் கிடையவே கிடையாது என்பதோடு, அவர்களுக்குத் தங்களை அன்னியன் எவ்வளவு இழிவும், தாழ்மையும் படுத்தினாலும் அதைப் பற்றிய கவலையும் கிடையாது; அதைப் பற்றிய பொறுப்பை ஏற்றுக் கொள்ளுவதும் இல்லை.
8.தமிழர்களுக்குத் தன்மானம், மான உணர்ச்சி ஏற்பட வழி இல்லை. ஏனெனில் தமிழன் எதைக் கொண்டு தனக்கு மான ஈனம் ஏற்பட்டதாக வருந்த முடியும்? இப்போது பெரும்பாலும் ஏதோ தனக்குச் சில கிளர்ச்சியின் பயனாய்ப் புது யோக்கியதை, அதுவும் தனது தகுதிக்கும் தேவைக்கும் மேல் வந்ததாகக் கருதி இறுமாந்து இருக்கிறான். எப்பொழுது தமிழனுக்கு மானம் இருந்தது இப்போது போய்விட்டதே என்று வருத்தப்படுவதற்கு என்று எந்தத் தமிழன் யோசித்தாலும் அவனுக்கு என்ன ஆதாரம் கிடைக்கக் கூடும்.
அநேக அரசர்கள் அன்றும் இன்றும்கூட தாங்கள் மேல் ஜாதிக்குப் பிறந்ததாகப் பாத்தியம் கொண்டாடுகிறார்கள். அது போலவே அநேக விவசாரி மகனும், தான் மேல் ஜாதிக்குப் பிறந்ததாகப் பாத்தியம் கொண்டாடுகிறான். திராவிடத்தில், சில நாடுகளில் பொது மக்களில் பலர் சமீப காலம் வரை, இன்னும் சிலர் தாங்கள் மேல் ஜாதிக்குப் பிறந்ததாகப் பெருமை பேசிக் கொள்ளுகிறார்கள். 30, 40 வருஷங்களுக்கு முன் சில பெருங் குடும்பங்களில் நல்ல பிள்ளைகள் பிறக்க மேல் ஜாதியார்களை வேலைக்கு வைத்துக் கொள்வது என்கின்ற சம்பிரதாயமிருந்ததாக இன்றைய கிழவன்மார்கள் பேசிக் கொள்வதுண்டு.
அண்ணன் தம்பி இரண்டு மூன்று பேர் ஒரே பெண்ணைக் கட்டிக் கொண்டு பாண்டவர்கள் போல் வாழ்வதும், அக்காள் தங்கை 2, 3 பேர் ஒரு கணவனைக் கட்டிக்கொண்டு ஆரியக் கடவுள்கள்போல் வாழ்வதும் முறையே கேரளத்திலும், தமிழ்நாட்டிலும் இன்றும் காணலாம். அண்ணன் இறந்து போனால் அவன் மனைவி உடனே தம்பிக்கு வாரிசு மனைவி ஆகிவிடுகிறாள். இதையும் இன்றும் சமுதாயப் பழக்க முறையில் பார்க்கலாம்.
விபசாரத்திற்குப் பயன்படுவதற்கு என்று ஒரு ஜாதியும், அதற்கென்று சமுதாயத்திலும் சட்டத்திலும் விதிமுறைகளும்; தாய், தகப்பன், அண்ணன், தம்பி, அக்கா, தங்கைமார்கள் தங்கள் வீட்டுப் பெண்களை அத்தொழிலில் நடத்த முதலாளிகளாகவும், குமாஸ்தாவாகவும், ஏவலாளிகளாகவும் இருப்பதும் இன்றும் திராவிடத்தில் பல இடங்களில் பார்க்கலாம்.
இவைதான் போகட்டுமென்றால், தமிழர்கள் ஒவ்வொருவரும் கண்டிப்பாக தங்களைப் பார்ப்பானுக்குக் கீழான ஜாதி என்றே கருதிக் கொண்டும், நடத்தப்படச் சம்மதித்துக் கொண்டும் இருக்கிறார்கள். இவைகளையெல்லாம் ஏன் காட்டுகிறோம் என்றால், தமிழர்களின் பிரமுகர்களுக்குத் தமிழர் சமுதாய இனத்தைப் பற்றி இழிவைப் பற்றிக் கவலை இருந்ததில்லையென்பதையும், இருக்கிறதில்லை என்பதையும் அவர்களில் பெரியவர்கள் என்பவர்களையும் பண்டிதர்கள் என்பவர்களையும் பார்த்தால் இனியும் இருக்கப் போவதில்லையென்பதையும் காட்டுவதற்கு ஆகவேயாகும்.
தமிழர்களில் உள்ள செல்வவான்களோ என்றால், தாங்கள் எப்படியெல்லாமோ தேடிய பொருளைத் தமிழர் சமுதாயத்துக்கு என்று ஒரு காசுகூடச் செலவிடுவதில்லை. அதற்கு மாறாகத் தங்கள் சமுதாயம் இழிவுக்கும் வீழ்ச்சிக்கும் காரணஸ்தர்களாகிய தங்களது எதிரிகளுக்குப் பயன்படும்படியே செலவழிக்கிறார்கள்.
தமிழர்களில் படித்தவர்கள், பண்டிதர்கள் என்பவர்கள் சங்கதியோ சொல்லவே வேண்டியதில்லை. ஒரு விவசாரி மகன், நான் பார்ப்பானுக்குப் பிறந்தவன் தெரியுமா? என்று தன்னைப் பற்றிப் பெருமைப்படுவது போல், தமிழ்ப் படித்தவர்களும், பண்டிதர்களும் இன்றுள்ள பார்ப்பனர்கள் பிறவியினால் பார்ப்பனர்களாவார்கள். நாங்களோ கருமத்தினால் பார்ப்பனர்கள் (அந்தணர்கள்) ஆவோம் என்று இருவருக்கும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் நடக்கிறார்கள். மேல் ஜாதியார் நம்மை இழிவுபடுத்துவதைவிட இவர்கள் நம்மை அதிகமாய் நிரந்தரமாய் இழிவுபடுத்துகிறார்கள். இனி நம் உத்தியோகஸ்தர்களோ உத்தியோகம் கிடைக்கும் வரை நான் தமிழன், தமிழன் என்று பாத்தியம் கொண்டாடி உத்தியோகத்துக்கு அலைந்து திரிந்து அது கிடைத்தவுடன் பியூன்களின் எஜமான் சப்தமும், பங்காவின் குளிர்ந்த காற்றும், பொதுஜனங்களின் தலைகுனிவும் கிடைக்கிற நிலை வந்தவுடன், தீஸ்டர்ட்டி இடியட் நான்பிராமின்ஸ் ஹாவ் பிரெயின், அண்ட் தே டோன் னோ எடிகேட், தே ஆர் கொயட் அன்ப்விட் ப்வார் எனி சிம்பத்தி.
அதாவது, இந்த அசிங்கம் பிடித்த மடப்பசங்களான பார்ப்பனரல்லாதார்களுக்குப் புத்தியும் கிடையாது, மரியாதையும் தெரிகிறதில்லை. இவர்கள் பரிதாபம் காட்டப்படக்கூட யோக்கியதை அற்றவர்கள்.
என்பதாகச் சொல்லித் தன்னை வேறு ஜாதியானாகக் காட்டிக் கொண்டு, தான் இன்னும் மேலே போவதற்கு ஆக உண்மையில் வேறு ஜாதியானாகவே ஆகிவிடுகிறார்.
பெரும் பதவிக்குச் சென்றுவிட்ட தமிழர்களோ, இன்னும் மேல் பதவிக்குப் போவதற்கு ஆக, மற்றவர்கள் எல்லோரையும் கீழ் ஜாதியாக மதித்துத் தங்களைப் பார்ப்பனர் என்றே மதித்துக்  கொண்டு, அதனாலேயே தங்களுக்கு அதிக புத்தி இருப்பதாக நினைத்துக் கொண்டு, தங்களைத் தவிர வேறு யாரும் இப்பதவிக்கு வரக்கூடாதென்று மற்றவர்களைக் கீழே அழுத்தவே முயற்சிக்கிறார்கள்.
வக்கீல்களோ போட்டி போட்டுக் கொண்டு எதிரிகளுக்கு நல்ல பிள்ளைகளாகிறார்கள். தமிழர் மிராசுதாரர்களோ, மேல் ஜாதியைக் காப்பியடித்துப் பார்ப்பனத் தமிழ் பேசிக் கொண்டு, தங்கள் வேலைக்காரர்களையும், ஏழைகளையும் சூத்திரர்கள் போலவே கருதி நடத்தி, மேல் ஜாதி தயவுக்கே காத்திருக்கிறார்கள்.
இனி யார் பாக்கி என்றால் யந்திர சாதனங்களின் முதலாளிகள், இவர்களுக்குக் கடவுள் பணம்தான். என்ன பண்ணியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதும், ஜாதியாவது, இனமாவது, நம் வேலையை நாம் பார்ப்போம், செல்வாக்கிருக்கிறவன் காலண்டைக் கிடப்போம். நமக்கென்னத்துக்கு ஊர் வம்பு, அவ்வப்போது பணம் செலவு செய்து எதையும் சாதித்துக் கொள்ளலாம் என்பதை மோக்ஷ மந்திரமாகக் கொண்டவர்கள்.
நம் தொண்டர்களில் சிலரின் சங்கதியோ, பிரபுக்கள், பணக்காரர்கள், பண்டிதர்கள் ஆகியவர்கள் நிலையே இப்படி இருக்கும்போது நாளைய கஞ்சிக்கு வகையில்லாமல் வீம்பு பேசிக் கொண்டு நடக்கிற சில தொண்டர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும்? பல யோக்கியத் தொண்டர்கள் இருக்கலாம். ஆனால், பசி வந்திட (பெண்டு பிள்ளை கஞ்சிக்கு அழுதிட) பத்தும் பறந்து போகும் அல்லவா...
இவர்கள் இத்தனை பேருக்கும் தங்கள் நலத்தில், பெருமையில், முற்போக்கில், பணத்தில் தங்கள் வாழ்வில் இருக்கும் கவலையில் 100ல் 1 பாகம்கூட தங்கள் இழிவைப் பற்றியோ தங்கள் இன (தமிழர்) இழிவைப் பற்றியோ கவலை இல்லை.
ஆகவே, தமிழர் இழிநிலைக்கு இவற்றைவிட வேறு காரணம் என்ன வேண்டும்?
ஆனால் பார்ப்பனரைப் பாருங்கள்.
காந்தியை, மகான், மகாத்மா, கடவுள் என்கிறார்கள்.
காந்தியாரோ காங்கிரஸ் மெம்பர்கூட அல்ல. காங்கிரசுக்கு இன்று தலைவர்கூட இல்லை. எதிரி ஆட்களில் ஒருவரைப்  பிடித்துத்தான் தலைவர் செய்து தங்கள் இஷ்டப்படி ஆட்டுகிறார்கள்.
தங்கள் இனத்தைப் பற்றிக் காங்கிரசில் ஒரு வார்த்தையும் கிடையாது. ஆனால் காங்கிரசைத் தங்கள் இன நன்மைக்கே நடத்துகிறார்கள். அதில் சேர்க்கப்படும் நம்ம ஆட்களுக்கு எந்த விதமான சுதந்திரமும் கிடையாது. ஆனால் அவர்கள் சேர்த்த நம்ம ஆட்களைக் குரங்குகள் போல் ஆட்டுகிறார்கள். எவனாவது நம் இனத்தைப் பற்றியோ இன நலத்தைப் பற்றியோ நினைப்பானேயானால், உடனே அவனை மகாத்மா, மகா ராஜாவானாலும் தலைகீழாகக் கவிழ்த்தித் துராத்மா ஆக்கிவிடுகிறார்கள்.
தங்களுக்கென்ற ஸ்தாபன மில்லாமலும் அமைப்பு இல்லாமலும் (காங்கிரசையே தங்கள் ஸ்தாபனமாக வைத்து) அவர்கள் காரியம் நடந்து கொண்டே போகிறது. அவர்களில் இனப்பற்று ஜாதிப்பற்று இல்லாதவர்கள் கிடையவே கிடையாது. இவற்றைக் காட்டிக் கொள்ளவோ வேலை செய்யவோ பயப்படுகிறவர்கள் அவர்களில் ஒருவர்கூடக் கிடையாது.
ஒரு காசு செலவு செய்யாமல் ஒரு ஸ்தாபனத்திலும் சம்பந்தம் வைத்துக் கொள்ளாமலும் வெறும் அறிக்கை விடுவதைத் தவிர வேறு ஒரு வேலையும் செய்யாமல் சாஸ்திரிகளும், அய்யர்களும், ஆச்சாரியர்களும் ஆக எத்தனை பேர்கள் இன்று அரசியலையும் இந்திய நாட்டு சமுதாய இயலையும் தங்கள் இன நலத்துக்குத் தங்கள் இஷ்டப்படி நடத்துகிறார்கள்?
இதற்கெல்லாம் காரணம்  அவர்களுக்கு உள்ள இன அபிமானமும், ஜாதி அபிமானமும், இனத்தில் ஜாதியில் தங்களைத் தனியாய்ப் பிரித்துக் காட்டிக் கொள்ளுவதும், அதை அவர்களில் ஆணும் பெண்ணும் அத்தனை பேரும் கொண்டிருப்பதுமல்லாமல் வேறு என்ன என்று சொல்ல முடியும்? இப்படியேதான் முஸ்லீம்களும் இருக்கிறார்கள்.
ஆகவே, நமது கீழ்மைக்கும் நம் எதிரிகளினுடையவும் மற்றவர்களுடையவும் மேன்மைக்கும் வேறு காரணம் என்ன சொல்லுகிறீர்கள்? - 27.11.1943
இதுதான் பெரியார் எழுதிய கட்டுரை. இக்கட்டுரையை முழுமையாகப் படித்தால், பெரியார் தமிழ்மீதும் தமிழர்மீதும்  அளவற்ற பற்றுக் கொண்டே வேதனையோடு சில கருத்துக்களை வெறுப்பின் வெளிப்பாடாக எழுதியுள்ளது நன்கு யாருக்கும் புலப்படும். அப்படியிருக்க, பெரியாரைத் தமிழர்கள் வெறுக்க வேண்டும் என்று நூல் எழுத வந்த ஆரியக் கைக்கூலியான இந்த குணா, துண்டுத் துண்டாகச் சில பகுதியை இக்கட்டுரையிலிருந்து எடுத்துப் போட்டுத் தமிழுக்கும், தமிழருக்கும் பெரியார் எதிரி என்பது போல் காட்டியுள்ளார்; குற்றஞ்சாட்டியுள்ளார்.
பெரியார் இக்கட்டுரைக்குத் தலைப்பைத் தமிழர் தாழ்மைக்கு என்ன என்று கொடுக்கவில்லை. மாறாக, தன்னையும் தமிழர்களோடு சேர்த்து நம் தாழ்மைக்குக் காரணம் என்ன? என்றே தலைப்பிட்டுள்ளார். அதுவே அவரது உயரிய நோக்கை, தமிழர் மீதுள்ள பற்றை, தானும் தமிழரே என்ற உணர்வை வெளிப்படுத்துகிறது. அப்படியிருக்க, பெரியார் தமிழரை இழிவுபடுத்த இப்படியெல்லாம் கேவலமாக எழுதியுள்ளார் என்பது மோசடியான செயலாகும்.
பெரியார் இக்கட்டுரையை எழுதியது 27.11.1943. அன்றைக்குத் தமிழகம் கேரளா உள்ளிட்ட பகுதியில் நிலவிய சீர்கேடுகளைச் சுட்டி இவற்றிலிருந்து மீள வேண்டும் என்று எழுதுகிறார். தமிழர்களுக்கு சூடு சொரணை, தன்மானமுள்ள தமிழர், ஆரிய சூழ்ச்சிக்கு, இழிவுக்கு அடிமைப்படாத பகுத்தறிவு உள்ள தமிழர் இல்லையே என்று வேதனைப்படுகிறார்.
மேலும், இவையெல்லாம் ஏன் சுட்டிக் காட்டுகிறோம் என்றால், தமிழர்களின் பிரமுகர்களுக்குத் தமிழர் சமுதாய இனத்தைப் பற்றி, இழிவைப் பற்றிக் கவலை இருந்ததில்லை என்பதையும், இருக்கிறதில்லை என்பதையும் பார்த்தால் இனியும் இருக்கப் போவதில்லை என்பதையும் காட்டுவதற்கு ஆகவேயாகும் என்று பெரியாரே குறிப்பிட்டுச் சொன்னபின், அவரது இக்கட்டுரையின் பகுதியை எடுத்துப் போட்டு, அவர்மீது குற்றம் கூறுவது எவ்வளவு உள்நோக்கம் உடையது, கள்ளம், கவுடு, சூது நிறைந்தது, மொத்தத்திற்கு இது ஒரு மோசடி செயல்.
இந்த உண்மையை விளக்கவே இக்கட்டுரையின் முழுப் பகுதியையும் தமிழர்கள் அனைவரும் அறியவே இங்கு வெளியிட்டுள்ளேன். பெரியாரின் வார்த்தைகளைப் பார்க்காது, அவரின் உள்ளத்தை, அவரின் உணர்வை ஊடுருவிப் பாருங்கள்; உண்மை விளங்கும்! நான் குணாவைப் பார்த்துக் கேட்க விரும்பும் ஒரு கேள்வி இதுதான்.
பெரியார் ஒரு கன்னடியர் என்பதால் தமிழர்க்கு எதிராய் நடந்தார், தமிழர்களை இழிவுபடுத்தினார் என்கிறீரே அப்படியாயின் அவர் எப்போதாவது, எங்கேயாவது கன்னடர்களுக்கு சார்பாகவோ, ஆதரவாகவோ பேசியுள்ளாரா? எழுதியுள்ளாரா? நடந்துள்ளாரா-? கன்னடப் பற்று இருந்தால் அதையல்லவா செய்திருப்பார்? அப்படி ஏதாவது ஆதாரத்தை உம்மால் காட்ட முடியுமா?
அது மட்டுமல்ல உலக வரலாற்றில் அடுத்த மொழியாள் அடுத்த நாட்டாரே பிற நாட்டின் விடுதலைக்குப் போராடியுள்ளனர். பிரெஞ்சு நாட்டு ரெஸிஸ்டேப்ரே தென் அமெரிக்காவின் விடுதலைக்கு முன்னின்று போராடியுள்ளார். அர்சென்டைனாவைச் சேர்ந்த எர்னஸ்டோ செகுவரே கியூபாவின் போராட்டத்தை நடத்தினார். இத்தாலியரான நெப்போலியன் பிரெஞ்சு நாட்டைக் கட்டமைத்தார்; ஆட்சி செய்தார்.
ஆங்கிலேயரான கிறிஸ்டோபர் கார்டுவெல் ஸ்பானிய நாட்டுப் போரில் பங்கு கொண்டார். இப்படித்தான் பெரியார் தமிழராகப் பணிபுரிந்தார். நாணயமிருந்தால், நேர்மையிருந்தால், உண்மையிருந்தால், ஆரியத்திற்கு விலை போகாதிருந்தால், நெஞ்சத்தைத் தொட்டு பதில் சொல்ல வேண்டும்! முடியுமா? முடியாதென்றால் மூடிக் கொண்டு மூலையில் முடங்க வேண்டும்!
2. வரலாற்றையே மாற்றல் (திரித்தல்)
() சமணமும், புத்தமும் ஆகிய ஆரிய சமயங்களின் வழியாக மட்டுமே ஆரியக் கொள்கையும், பண்பாடும் தமிழகத்திற்குள் புகுந்தன  குணா.
இதைவிட ஓர் அயோக்கியத்தனமான, மோசடியான, ஆதாரமற்ற, உண்மைக்கு நேர் எதிரான செய்தி வேறு எதுவும் இருக்க முடியாது.
ஆரியப் பார்ப்பனர்களின் மீதான பழியைத் துடைக்கவும், அவர்கள் மீதான வெறுப்பை விலக்கவும், அவர்களிடம் கையாளாய் நின்று முற்றிலும் தவறான வரலாற்றுக்கு எதிரான கருத்தை உளச்சான்றே இன்றி கூறியுள்ளார் இந்த குணா. ஆரியக் கொள்கைக்கு முற்றிலும் எதிராக ஏற்படுத்தப்பட்ட அமைப்புகளே சமணமும், புத்தமும். அப்படியிருக்க, அவைகளே ஆரிய சமயக் கொள்கைகளைத் தமிழகத்திற்குள் நுழைத்தன என்பது உலக மகா வரலாற்று திரித்தல் (மோசடி) வேலை அல்லவா?
ஆரிய வரலாற்று ஆசிரியர்கள்கூட கூறத் துணியாத அயோக்கியத்தனமான பொய்ச் செய்தியல்லவா? பிராமண மதத்திற்கு எதிராக (ஆரியக் கொள்கைக்கு எதிராக) வடநாட்டிலிருந்த திராவிட வகுப்பினரால் தோற்றுவிக்கப்பட்டவையே புத்தமும் சமணமும் என்றல்லவா பாவாணர் கூறுகிறார். (ஒப்பியன் மொழி நூல்)
பாவாணர் கருத்தையே தான் பரப்ப வந்ததாகக் கூறும் தமிழரின் பச்சைத் துரோகியான குணாவின் இக்கூற்று பாவாணர் கூற்றுக்கு எதிரானதல்லவா?
() மனுதர்ம சாளுக்கியர் அவையில் கி.பி. நான்காம் நூற்றாண்டில் அரங்கேற்றப்பட்டது. குலோத்துங்கன்தான் மனுநூலைத் தமிழருக்குக் கொண்டு வந்தான். மனுநூல் ஆரியர்களால் இயற்றப்பட்டதல்ல. மனுநூலை ஆக்கியவர் கடம்பன் மயூரவர்மன் என்று வரலாற்று ஆதாரமில்லாத, தான் தோன்றித்தனமான செய்திகளை எழுதியுள்ளார் குணா. ஆரியர்களுக்கு எப்பழியும் வரக்கூடாது என்பதில் அதிக அக்கறை காட்டி வரலாற்றையே மாற்றுகிறார்.
சங்க இலக்கியத்திலேயே மனுநீதிச் சோழன் பற்றிய குறிப்பு உள்ளது. புறம் : 39:5 6; மணிமேகலை (22:210), சிலம்பு (20:53:55 29:22). குலோத்துங்கனுக்கு முந்திய அரசர்களான இராஜகேசரி, இராஜ மகேந்திரன் பற்றிய குறிப்பில் உள்ள தருமநெறி நிற்ப மனுநெறி நடத்திய கோவிராஜகேசரிவர்மரான உடையார் ஸ்ரீ இராஜ மகேந்திர தேவர் என்ற வரியும், மாப்புகழ் மனுவுடன் வளர்த்த கோப்புரகேசரி உடையார் ஸ்ரீ ஆதி இராஜேந்திர தேவர் என்ற வரியும், வீரராஜேந்திர மெய்க்கீர்த்தியில் குறிக்கப்பட்டுள்ள மனுநெறி விளக்கிய கோராஜ கேசரிவர்மரான உடையார் ஸ்ரீ வீரராஜேந்திர தேவர் என்ற வரியும் குணாவின் முகத்தில் காரி உமிழ்ந்து உண்மை உரைக்கின்றன. (ஆதாரம் : கே.. நீலகண்ட சாஸ்திரி, சோழர் 246)
உலகறிந்த உண்மையைக்கூட மாற்றி ஆரியத்திற்கு ஆதரவாய் ஆதாரமில்லாத செய்திகளைச் சொல்லி ஏமாளித் தமிழர்களைத் திசை மாற்றி அழைத்துச் செல்ல முயலும் இந்தத் தில்லுமுல்லு பேர்வழி தன்னை அறிஞர் என்று வேறு அடைமொழி போட்டு அழைத்துக் கொள்கிறார்! சூடு சொரணை வேண்டாம்!
உண்மைகளை உரிய இடத்தில் மறைத்தல் குணாவின் மிகத் திறமையான மோசடி வேலை இது. சில உண்மைகளை மறுக்கவும் முடியாமல், மறைக்கவும் முடியாமல் போகும்போது, அவற்றைச் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லாது மறைத்து, தொடர்பு இல்லா வேறு இடத்தில் சொல்லி, அவ்வுண்மையைப் பயனற்றுப் போகச் செய்துள்ளார். இதன்வழி தன் நோக்கத்தை (பெரியார் மீது பழி போடுவதை) நிறைவேற்றிக் கொள்கிறார்.
எடுத்துக்காட்டாக, தனது சொந்த லாபத்தையே குறிக்கோளாகக் கொண்டு, தமிழர் நலனுக்குத் துரோகம் இழைத்தவர் பெரியார் என்றும், கன்னட ஆண்டைகள், தெலுங்கு ஆண்டைகள்... தமிழ்  மண்ணை விழுங்கிச் செரித்து வரத் திராவிடக் கொள்கை ஒரு பெரிய கருவியானது என்று கூறி பெரியாரின் திராவிடக் கொள்கையைக் கொச்சைப்படுத்தி, பெரியாரின் திராவிடம் கன்னடர் நலனுக்கானது காரணம் பெரியார் ஒரு கன்னடர் என்று பழி சுமத்திய குணா,
திராவிட நாடு கோரிக்கையின் மறுவுருவ தென்மண்டிலத் (தட்சிணப் பிரதேச) திட்டமென்பது கண்கூடான உண்மை. மொழி மாநிலங்கள் அமைந்த பின்னர், திராவிட நாடு என்னும் கோரிக்கையின் (மறுவடிவம்) தென்மண்டிலத்தை அமைத்தால் தமிழக அரசியலுக்கே பெரிய கேடாக விளையும் என நன்கறிந்ததனாலேயே பெரியார் அதை எதிர்த்தார் என்கிறார். இங்கே எவ்வளவு பெரிய முரண்பாடு பாருங்கள்.
கன்னடர், தெலுங்கர், நலன்களுக்காகவே திராவிட நாடு கொள்கையை பெரியார் எடுத்தார் என்ற குணாவின் குற்றச்சாட்டு சரியென்றால், பெரியார் தட்சிணப் பிரதேசத் திட்டத்தையும் ஆதரித்திருப்பார். ஆனால், தமிழர் நலன் கருதியே தட்சிணப் பிரதேசத் திட்டத்தை பெரியார் எதிர்த்தார். இதை குணாவே ஒப்புகிறார்.
ஆனால், இந்த இரண்டையும் ஒரே இடத்தில் குறிப்பிட்டால் பெரியாரைக் குறை சொல்ல முடியாது என்பதால், வேறு வேறு இடத்தில் குறிப்பிடுகிறார். உண்மையைச் சொல்ல வேண்டும், அது பெரியாருக்கு உதவாமல் சொல்ல வேண்டும் என்ற சூழ்ச்சிதானே இது.
மொழிவாரி மாநிலம் வருவதற்குமுன் திராவிட நாடு கொள்கையை ஆதரித்த பெரியார், மொழிவாரி மாநிலம் வந்தபின் தட்சிண பிரதேசத் திட்டத்தை (திராவிட நாடு கொள்கையை) எதிர்த்தார் என்றால் என்ன பொருள், அன்றைக்கும் தமிழர் நலன் கருதித்தான் செய்தார். அதன் பின்னும் தமிழர் நலன் கருதித்தான் செய்தார் என்பதுதானே! கன்னடர், தெலுங்கர் நலனுக்காகத் திராவிடம் பேசியிருந்தால், தட்சிணப் பிரதேசத் திட்டத்தை ஆதரித்திருப்பாரே!
ஆக, தான் கூறும் செய்திகளே தனக்கு எதிராய் நிற்பதை மறைக்க அவற்றை வேறு வேறு இடங்களில் கூறும் சூழ்ச்சியை குணா என்ற குள்ளநரி மேற்கொண்டிருப்பது இங்கு வெளிப்படை!
தமிழர் யார்? :
தமிழர் யார்? அந்நியர் யார்? என்று அடையாளங் காண ஆரியத்திற்குச் சார்பான, அயோக்கியத்தனமான அளவுகோல் ஒன்றை இந்த குணா உருவாக்குகிறார். இந்த எத்தர் செய்யும் சித்துவேலையின்படி, தனித் தமிழ் இயக்கத்தைச் சேர்ந்த, பாவாணரின் பாசறையில் வளர்ந்த, தனித் தமிழில் பேசவும், எழுதவல்ல முன்னாள் சட்டப் பேரவைத் தலைவர் தமிழ்க்குடிமகன் அவர்கள் தமிழர் அல்லவாம். ஆனால், இராகவ அய்யங்காரும், கிருஷ்ணசாமி அய்யங்காரும், சீனிவாச அய்யங்காரும் தமிழர்களாம்.
அட கிறுக்கா, இதுவா உன் தமிழ் தேசியம்?
பூர்வீக தமிழ்க்குடியைச் சேர்ந்த சக்கிலியர், அருந்ததியர், நரிக்குறவர் போன்றோர் இன்று தெலுங்கு, கன்னடம் பேசுவதால் அவர்கள் தமிழர் அல்லவாம். சமஸ்கிருதத்தைத் தாய்மொழியாகக் கொண்டு, அயல்நாட்டிலிருந்து வந்த ஆரியப் பார்ப்பனர்கள் தமிழர்களாம்!
மு. ராகவ அய்யங்கார், இரா. இராகவ அய்யங்கார், பி.டி.சீனிவாச அய்யங்கார், வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர் போன்றோர் தமிழ்ப் பார்ப்பனர்களாம். தமிழ்த் தன்மையை இழக்காதவர்களாம். அதாவது தமிழர்களாம். குணா முத்திரை குத்துகிறார்.
ஆனால், இவர் போற்றும் பாவாணர் இது குறித்து என்ன சொல்கிறார் தெரியுமா?
பிராமணப் புலவர் பலர் தமிழ்த் தொண்டைச் சுட்டி, பிராமணர் எல்லாம் தமிழ்ப் பற்றாளர் என்று நாட்டி விட முடியாது. பிராமணன் தமக்கென நாடும் மொழியும் இன்றி, இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று தங்கி, அவ்வப்பகுதி மொழியைத் தங்கள் மொழியாகக் கொண்டு வாழ்கின்றனர். இதனால் வேதம் ஓதுவதிலும் சமஸ்கிருதம் வளர்ப்பதிலும், பிராமண உயர்வைக் காத்துக் கொள்வதிலும் ஒன்றுபட்டிருப்பினும், தாய்மொழி வகையிலும், வாழிட வகையிலும் வேறுபட்டுள்ளனர். தமிழ்நாட்டுப் பிராமணர் தமிழ்ப் புலமை பெறுவதும், சிறந்த தமிழ்நூல் இயற்றுவதும் அடிப்படையில் தந்நலவினையே என்பதை எவரும் மறுக்க முடியாது.
- (பாவாணர்  தமிழ் இலக்கிய வரலாறு)
ஆரியப் பார்ப்பனர்கள் தமிழ்மொழியில் பேசுவதும், தமிழ்ப் பணி செய்வதும் தன்னலத்தினாலன்றி தமிழ்மீதுள்ள பற்றால் அல்ல என்கிறார்.
எனவே, மொழியினும் இனம் மிகவும் ஆழமான வலுவான அடிப்படைக் கூறு ஆகும். எமது உறவினர் ஒருவர் லண்டனில் சென்று தங்கியுள்ளார், இன்னொருவர் பிரான்ஸில் தங்கியுள்ளார். அவர்கள் இரு தலைமுறையாக அங்கு தங்கியுள்ளனர். அவர்கள் குழந்தைகளுக்குத் தமிழே தெரியாது. அவர்கள் தமிழர்களா இல்லையா? குணா கூட்டம் பதில் சொல்ல வேண்டும்.
ஆனால், வடநாட்டு இந்தி பேசும் மார்வாடி தமிழ்நாட்டில் இரு தலைமுறையாய் தங்கி தமிழைச் சரளமாகப் பேசுகிறார்கள். அதனால் அவர்கள் தமிழர்களா? ஆரியத்தின் வால் பிடிக்கும் அரைவேக்காடுகள் பதில் சொல்ல வேண்டும்! அரசியல் அவலங்களுக்குத் திராவிடத்தைக் குறைசொல்லும் திரிபு வேலை
ஊழல், இலஞ்சம், நிர்வாகச் சீர்க்கேடு, சட்ட மீறல், கள்ளவாக்கு போன்றவை அரசியலில் பொது இயல்பு. இவையனைத்தும் திராவிடத்தால்தான் வந்தது என்பது திரிபு வேலை அல்லவா? மக்களாட்சி முறையில், சொத்துரிமை உடைய சமுதாய அமைப்பில் இவையெல்லாம் எவர் வந்தாலும் நடக்கும். பொதுவுடைமைக் கட்சிகளேகூட முதலாளிகளுடன் கைகோர்க்கும் நிலை வரும். ஊழலைச் சுட்டிக் காட்டுவதில்கூட தி.மு.. ஊழலை ஊதிப் பெருக்கும் சோவும், குணாக்களும், ஜெயலலிதாவின் ...தி.மு.. ஊழலை அடக்கி, ஒடுக்கி, அமுக்கி, மறைத்துக் கூறுவதன் உள்நோக்கத்தைத் தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
உண்மைகளை ஒளித்தல் :

தி.மு.., தி..வை குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவே பல உண்மைகளை மறைத்துத் தனக்குச் சாதகமானவற்றை மட்டும் எழுதியுள்ளார். எடுத்துக்காட்டாக, 1956இல் தேவிகுளம், பீர்மேடு போராட்டத்தில் தி.மு.. .பொ.சி.யுடன் இணைந்து போராடியதை முற்றாக மறைத்து விடுகிறார். கொடி எதுவானாலும் குடி தமிழன் எனில் தேவிகுளம் பீர்மேடு காக்க வாரீர்! என்று தி.மு.. தமிழர்களுக்கு அழைப்பு விடுத்துப் போராடியது என்பது வரலாற்று உண்மை!

நூல் - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம் 
- ஆசிரியர் - மஞ்சை வசந்தன்

Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை