வரலாற்றில் ஒரே ஒரு பெரியார்தான் இருப்பார்



பெரியார் அவர்களுடன் எனது முதல் சந்திப்பு என் உள்ளத்தில் நீங்காத ஒரு நினைவினை ஏற்படுத்தியிருக்கிறது. அவரைப் பற்றி வர்ணிக்க பெரியார் என்ற சொல் பயன்படுத்தப்படுவதை நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன். ஆனால் அவர் அப்படிப் பெரியாராக இருக்க என்ன காரணம் என்று அவரைச் சந்தித்ததற்கு முன்னால் நான் எப்போதும் வியந்ததுண்டு. இதற்குக் காரணம் எனக்குத் தமிழ் படிக்கத் தெரியாது என்பதால் நான் உண்மையைக் காணத் தவறியதாக இருக்கலாம். சில தடவைகள் சந்தித்துவிட்டபடியால் அவரது பெருந்தன்மையைப் பற்றி உண்மையையும் அவருக்குப் பின்னேயுள்ள ரகசியத்தையும் இப்போது நான் புரிந்து கொண்டிருக்கிறேன்.
விஷயங்களை நோக்குவதில் ஏறத்தாழ குழந்தை போன்று மனோபாவம் கொண்டிருக்கும் அவர் முன்னேற்றத்துக்கான விஷயங்களைப் பற்றி அறிந்துகொள்ள எவ்வளவோ ஆர்வமும், ஆராய்ச்சி மனப்பான்மையும் உள்ளவராவார். ஓர் எளிமையான போர் வீரர் போல மூலாதாரமான கண்ணோட்டத்துடன் உள்ள அவர், தம் கருத்தை எடுத்துக்கூறுவதில் எவருக்கும் அஞ்சுபவராகவோ, எவரொருவரின் தயவுக்கு ஏங்குபவராகவோ காணப்படுவதில்லை.
முட்டி மோதுகின்ற சாலைகளில், கலகலத்துப் போயிருக்கும் தமது ஸ்டேஷன் வாகனில் தமக்கே உரித்தான பாணியில் ஓய்வெடுத்துப் பழக்கப்பட்ட அவர், இன்றும் கூட அனேகமாக தினந்தோறும் 200 மைலுக்கு மேல் சில வேளைகள் பிரயாணம் செய்கிறார். வரிசைக்கிரமமாக எதிர்நோக்கியுள்ள பல பிரச்சினைகளைத் தீர்க்க உழைக்க வேண்டுமென்று மக்களை ஊக்குவிப்பதற்காகவும், மதக் கொள்கைகள் மூடநம்பிக்கைகள் ஆகிய தளைகளை அறுத்தெறிய மனத்திட்பம் இல்லாதபடி சிறுமை உள்ளம் கொண்டிருப்பதற்காக மக்களைக் கடிந்துரைக்கவும், கடினமாக உழைக்கும்படி அவர்களை உற்சாக மூட்டவும், அவர்களிடையே கட்டுப்பாடு ஏற்படுத்தி காலத்தோடு ஒட்டி ஒழுகவும், காலத்தை, உணவை, சக்தியை, விரயப்படுத்துவதைத் தவிர்க்கவும், தேசத்தைத் தேக்கப் படுகுழிக்குக் கீழே தள்ளும் பலவீனங்களை ஒழிக்கவுமே அவர் சூறாவளிச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். எவ்வளவு அதிகம் பெரியார் பயணம் செய்கிறாரோ, உரை நிகழ்த்துகிறாரோ, எழுதுகிறாரோ அந்த அளவு அவரது சக்தியும் மனோ வலிமையும் 92 வயதிலும் கூட மீண்டும் உயிரூட்டப்படுகின்றன. விரக்தியான உணர்ச்சியிலிருந்து விடுபட்டு மக்களை மேலெழும்பச் செய்யவேண்டும் என்ற தமது லட்சியத்திற்காக உயிர் வாழ்கிறார்; வேறெதற்காகவும் அல்ல என்று நான் நம்புகிறேன்.
அவர் தமது உரைகளில் கண்ணுக்குப் புலப்படாத லட்சியங்களின் அடிப்படையில் - பொருள் பிடிபடாத சொற்களைப் பயன்படுத்துவதை நான் கேட்டதே இல்லை. எனவே, இயல்பாகவே அவரை ஒவ்வொருவரும் புரிந்து கொள்கிறார்கள். அவரைச் சுற்றிலும் வியாபித்திருக்கும் கருணையும், அன்பும், தாழ்மையுமான சூழ்நிலை சதா அவரிடம் இருக்கும் அவரது துணைவியார் மணியம்மையார் அவர்களால் வளர்க்கப்பட்டிருப்பதை அவரைப் பற்றி எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களை படிப்பதைவிட அவரை நேரில் சந்தித்தால் தான் நம்பக்கூடியதாக இருக்கும். வரலாற்றில் ஒரே ஒரு பெரியார் தான் இருப்பார்; அவர் பெரியார் .வெ.ராமசாமியாக மட்டுமே இருக்க முடியும். தென்னிந்திய வரலாற்றின் இந்தக் கால கட்டம் பெரியாரின் காலகட்டம் என்று பொருத்தமாக அழைக்கப்படலாம்; நம் காலத்தில் உள்ள மிகக்குறைந்த அளவிலான பெரிய மனிதர்களில் பெரியாரும் ஒருவர் என்பதையும் அவரைப் பின்பற்றுவோருக்கும் பாராட்டுவோருக்கும் ஒரு தெய்வ மனிதராக இருப்பது எப்படி என்பதையும் நான் இப்போது பூரணமாகப் புரிந்து கொண்டிருக்கிறேன்.
- டாக்டர் எச்.எஸ்.பட்
தந்தை பெரியார் 92ஆம் ஆண்டு பிறந்தநாள் விடுதலை மலர்




Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை