தமிழ்ச் சான்றோர் பார்வையில்

தமிழறிஞர் முனைவர் மா. இராசமாணிக்கனார் :
தமிழுக்கு ஆபத்து வரும் போதெல்லாம் முன்னடியாக நின்று அவ்வின்னலை நீக்குதல் பெரியாரது இயல்பு. 1933 இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் அன்பர் மாநாடு கூட்டப் பெற்றது. பேசுவது போல் எழுத வேண்டும் என்பது அம்மாநாட்டில் முடிவு செய்யப்படுவதாக இருந்தது. இத்தீய முடிவு வெற்றி பெற்றிருப்பின் செந்தமிழ் வழக்குச் சிதைந்து ஒழியும் என்பதை உணர்ந்த பெரியார்  அம்மாநாடு நன்முறையில் நடைபெற வேண்டும் என்று விரும்பினார். அதன்பயனாய் திரு.குருசாமி முதலிய தமிழ் வீரர்கள் அம்மாநாட்டில் கலந்துகொண்டு அதன் முடிவு நிறைவேறா வண்ணம் செய்தனர். அன்று பெரியாரும் அவர்தம் வீரரும் தலையிட்டிராவிடின், பெருஞ் செல்வாக்குப் படைத்த தமிழ் அன்பர்களால் கூட்டப் பெற்ற அம்மாநாடு இதுவரையில் செந்தமிழ் வழக்கைச் சிதைத்திருக்கக் கூடும். இங்ஙனம் தலையிட்டுச் செந்தமிழ் வழக்கினை நிலைநிறுத்திய பெருமை பெரியார் அவர்கட்கே உண்டு.
1935 இல் தவத்திரு மறைமலை அடிகளார் எழுதிய அறிவுக் கொத்து என்னும் நூலைப் பல்கலைக் கழகத்தார் பி.. வகுப்பிற்குப் பாடநூலாக வைத்தனர். அதனில் சில குறைபாடுகள் இருப்பதாகச் சிலர் கூக்குரலிட்டனர். சிலர் அதனைப் பாடநூல் பட்டியலிலிருந்து நீக்கிவிட வேண்டும் என்று செய்தித் தாளில் எழுதினர். எதிர்ப்புக்கு எதிர்ப்புக் கட்டுரைகள் செய்தித் தாளில் வந்தன. இந்நிலையில் பெரியார் அவர்கள்........... குடிஅரசு இதழிலும், பகுத்தறிவு ஏட்டிலும் பல கட்டுரைகள் எழுதினார்கள். நாடெங்கும் சுற்றுப்பயணம் சுற்றிச் சொற்பொழிவு ஆற்றினார்கள். இறுதியில் அந்நூல் பாடநூலாக ஏற்கப்பட்டது.
1936இல் இந்தி எதிர்ப்பு இயக்கத்தின் தலைவராக பெரியார் திகழ்ந்தார். வாழ்க என்னும் சொல் தமிழ்ப் பொதுமக்கள் வாயிலும் நுழைந்த ஆண்டும் அதுதான். தமிழ் வாழ்க!, கட்டாய இந்தி ஒழிக! என்னும் முழக்கம் தமிழ்நாடு முழுக்க முழங்கச் செய்த பெருமை பெரியாருக்கே உரியது
இந்தி எதிர்ப்பின் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் (தமிழ் வீரர்கள்) சிறைக் கோட்டம் தண்ணினர். அதுகாறும் தமிழ்மொழிப்பற்று இல்லாதிருந்த பொதுமக்களும், பெருமக்களும் விழிப்படையத் தொடங்கினர். அவ்வாண்டிற்றான் தமிழ் மறுமலர்ச்சியடைந்தது. தூய தமிழ் பேசவும், எழுதவும் வேண்டும் என்னும் பிடிவாத நல்லெண்ணம் தமிழ்மக்களுக்கு அப்போதுதான் முகிழ்த்தது. டாக்டர் சோமசுந்தர பாரதியார், திரு.வி.., மறைமலையடிகளார் போன்ற தமிழ்ச் சான்றோரும், பி.டி. இராசன், சர். .டி. பன்னீர்செல்வம், சர். ஆர்.கே. சண்முகம் செட்டியார் போன்ற அரசியல் அறிஞர்களும், பெரியார் இயக்கத்திற்கு ஆதரவு அளித்தனர்.
திருச்சியிலிருந்து பெரியாரின் ஆசியோடு கால்நடையாகப் புறப்பட்ட தமிழர் படை சென்னை வரையிலும் தனது வழியிலிருந்த சிற்றூர்களிலும் பேரூர்களிலும் இந்தியினால் தமிழ் எவ்வாறு கெடும் என்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்தது. பாசறை, திடல், அணிவகுப்பு, மன்றம் போன்ற அருந்தமிழ்ச் சொற்கள் இப்போராட்டத்தின்போதுதான் பொதுமக்களாலும் பயன்படுத்தப்பட்டன.
சென்னை கடற்கரையில் இந்தி எதிர்ப்புக்காகக் கூட்டப் பெற்ற மக்கள் தொகை லட்சத்திற்கும் மேற்பட்டதாக இருந்தது. வெள்ளம் போன்ற தமிழர் கூட்டம் ஒரே நேரத்தில் உணர்ச்சியோடு தமிழ் வாழ்க! என முழக்கமிட்டமை நற்றமிழ் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஜாதி சமய வேறுபாடு இன்றி அறிவுடைய எல்லா தமிழர் உள்ளங்களிலும் பெரியார் கோயில் கொண்ட காலம் அதுதான். அப்பெருந்தகையரது அரிய போராட்டத்தினால்தான் கட்டாய  இந்தி ஒழிந்தது. அன்று முதல் பெரியார் தமிழ்ப் பெரியாராகக் கருதப்பட்டார்.
புகைவண்டி நிலையங்களில் முதலில் இந்தியிலும், பின்னர் ஆங்கிலத்திலும், இறுதியில் தமிழிலும் பெயர்ப் பலகைகள் எழுதப்பட்டிருந்தன. முதலில் தமிழில் பெயரமைதல் வேண்டும் என்று பெரியார் போராட்டம் தொடங்கினார். அவரது போராட்டம் வெற்றி பெற்றது. அதன் பயனாகப் பெயர்ப் பலகைகளில் தமிழை முதல் வரிசையிற் காண்கிறோம். உண்மைத் தமிழர் அதை மறைத்தல் இயலாது.
திருக்குறளைப் பலவுரைகளோடு நன்கு பயின்றவர் பெரியார். 1948இல் திருக்குறள் மாநாட்டைக் கூட்டிய பெருமை அவருக்கே உரியது.
- (விடுதலை பெரியார் பிறந்த நாள் மலர்  17.09.1956)
தேவநேயப் பாவாணர்
 நயன்மைக் கட்சித் (காங்கிரஸ் கட்சி) தலைவர்,
பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தபின் இருக்குமிடம் தெரியாது ஓடி ஆங்காங்கு பதுங்கிக் கொண்டனர். அன்று பெரியார் ஒருவரே திராவிட  ஆரியப் போர்க்களத்திற் புகுந்து, உடைபடை தாங்கி, இடைவிடாது போராடி, கல்லாப் பொதுமக்கள் கண்ணைத் திறந்து, கற்றோர்க்குத் தன்மான உணர்ச்சியூட்டி, பிராமணியத்தைத் தலைதூக்கவொண்ணா தடித்து வீழ்த்தி, ஆச்சாரியார் புகுத்திய இந்தியை எதிர்த்துச் சிறைத் துன்பத்திற்கு ஆளாகி, கணக்கற்ற சீர்திருத்தத் திருமணங்களை நடத்தி வைத்தும், பகுத்தறிவியக்கத்தைத் தோற்றுவித்தும், மூடப் பழக்க வழக்கங்களையொழித்தும்,
இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு
செயற்கரிய செய்வார் பெரியார் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
எனும் குறட்கட்கு இலக்கியமானார்.
- (தமிழர் வரலாறு - பாவாணர்)
தமிழினத்தை முன்னேற்ற மூவர் தோன்றினர். திருவள்ளுவர் தலை, உயர்நிலை மக்கட்குரிய தொண்டாற்றியவர். மறைமலையடிகள் இடைநிலை மக்கட்குரிய தொண்டாற்றியவர். பெரியார் கடைநிலை மக்கட்குரிய தொண்டாற்றியவர்... எனக் கூறிய பாவாணர் இக்கருத்தைக் கீழ்க்கண்டவாறு கவிதையாகவும் வடித்தார்.
தமிழன் விடுதலைத் தலைவர் மூவருள்
அமரும் ஈகையர் அறநூல் வள்ளுவர்
தமியின் மொழியினர் தவநன் மறைமலை
இமிழ்தன் மானியர் இராமசாமியார்
அரிய செயல்களை ஆற்றுவார் தமை
பெரியர் எனச்சொலும் பிறங்கு திருக்குறள்
உரியர் இப்பெயர்க் கொருவர் நேரினே
இரியீ ரோடையர் இராமசாமியார்
இல்லத் திருந்துநல் லின்ப வாழ்வுதும்
செல்வச் சிறப்பினில் சிறிதும் வேட்டிலர்
வல்லைத் தமக்கென வாழ்வு நீக்கினார்
ஒல்லும் வகையெல்லாம் உழைக்க இனவர்க்கே!
மல்லைப் பதவிகொள் மாட்சி யிருப்பினும்
அல்லிற் பகலினில் அடுத்த வழியெலாம்
கல்லிற் சாணியிற் கடுத்த வசவுறுஞ்
சொல்லிற் படும் பொறைச் சூர வாழ்க்கையர்!
மலையெனும் மறை மலையென் அடிகளும்
தலையென் சோமசுந்தரபா ரதியும்பின்
தொலையும் இந்தியைத் தொடர்ந்தொக்கினும்
நிலைசிறந்த திராம சாமியால்!
குடிசெய் வார்க்கிலை கூறும் பருவமே
மடிசெய் தேயவர் மானம் கொளக்கெடும்
இடிசெய் உடம்பு பல்இடும்பைக் கலமெனத்
துடிசெய் தேயவர் தொண்டு பூண்டுளார்!
தானமிட்ட தன் தலைவன் நிலைகெட
ஈனச் சூத்திரன் என்னுந் தீயனை
வானங்காட்டென வணங்குத் தமிழன்தன்
மானங்கெட்டு வழமை கடிந்துளார்!
படிமை மேல்மிகு பாலை ஊற்றலும்
குடுமி மலையெரி கோநெய் கொட்டலும்
கடவுள் தேரினைக் கடத்தலும் முனோர்
கொடை மடம் பகுத்தறிவில் கோளென்றார்!
கட்டுக் கதைகளைக் கடவுள் தொன்மத்தைப்
பாட்டுப் பிட்டவை பிதற்றல் புரட்டலை
வெட்ட வெளிச்சமாய் விளக்கினார் முனம்
பட்டப் படிப்பெலாம் பயனில் குப்பையே!
அடரும் தமிழரோ டணையுந் திரவிடர்
மடமை தவிர்ந்து தன்மான வாழ்வுற
இடர்கொள் ஆர்வலர் இராமசாமியார்
கடவுள் இலையெனக் கழறும் எல்லையே!
- (தமிழிலக்கிய வரலாறு  பாவாணர்)
புண்ணூற்றுக் கல்லடியும் சாணக் குண்டும்
                பொறுத்தலருஞ் சொல்லடியும் புகழ்போற்
மண்ணாற்றில் கலஞ்செலுத்தும் கடுஞ்செய்கைபோல்
                கைதூக்கி தென்னவரை கரையிலேற்றி
தொண்ணூற்று மூன்றாண்டு தொடர்ந்தபின்னும்
                துளங்காது துலங்குபகுத் தறிவுத் தொண்டால்
நண்ணூற்றைத் தாண்டவரும் நோற்றலாற்றின்
                நானிலத்துப் பெரியாரை வாழ்த்துவோமே!
- (பாவாணர் முதன்மொழி  -1:3:1)
..சி.
திரு நாயக்கரிடத்திலுள்ள விசேஷ குணம் என்னவென்றால், மனத்திற்படும் உண்மையை ஒளிக்காமல் சொல்லும் ஓர் உத்தமக் குணம்தான். அவரை எனக்கு 20 வருடமாய் தெரியும். அவரும் நானும், ஒரே இயக்கத்தில் சேர்ந்து வேலை செய்து வந்தோம். அங்கு (காங்கிரஸ்) நேர்மையற்றவர்கள் சிலர் வந்து புகுந்தபின், நானும் அவரும் விலகிவிட்டோம். பிறகு நாயக்கர் அவர்களால் ஆரம்பித்து நடத்தப் பெறும் சுயமரியாதை இயக்கத்தைப் பார்த்து, இது என்னாலான உதவியை அவ்வியக்கத்திற்குச் செய்து வருகின்றேன். சுருங்கச் சொல்லின் நாயக்கர் அவர்கள் தமிழ்நாட்டின் எல்லாத் தலைவர்களையும் விடப் பெரிய தியாகி என்றுதான் சொல்ல வேண்டும் - (1928லேயே பெரியார் பற்றி ..சி. கூறியவை இவை.
(தரவு : பகுத்தறிவின் சிகரம் பெரியார்  .எஸ்.கே.)
 ஓர் அப்பழுக்கற்ற தியாகத்தின் சுடராய் நின்ற ..சி. அவர்களே பெரியாரைப் பற்றி இப்படிக் கணித்தபின், குணா போன்ற குள்ளநரிகள் பெரியார் என்ற இமயத்தைக் குழி பறித்து தள்ள முயல்வது முட்டாள் தனமாகும்.
. ரா. தேர் இல்லை, திருவிழா இல்லை, தெய்வம் இல்லை என்கிறார் நாயக்கர்; சுவாமியைக் குப்புறப் போட்டு வேட்டி துவைக்கலாம் என்றார். இவரைக் காட்டிலும் பழுத்த நாத்திகன் வேறு எவருமே இருக்க முடியாது... அநீதியை எதிர்க்க  திறமையும் தைரியமும் அற்ற ஏழைகளாய் சொரணையற்றுக் கிடந்த தமிழர்களின் உள்ளத்தை, அடி தெரியும்படி கலக்கிய பிரம்மாண்டமான பாக்கியம் நாயக்கரைப் பெரிதும் சேர்ந்ததாகும். அப்பா! நாயக்கரின் அழகு பிரசங்கத்தை, ஆணித்தரமான சொற்களை, அணி அணியாய் அலங்காரம் செய்யும் உவமானங்களை உபகதைகளை அவரது கொச்சை வார்த்தை உச்சரிப்பை, அவரது வர்ணனையை உடல் துடிப்பைப் பார்க்கவும், கேட்கவும் வெகு தூரத்திலிருந்து ஜனங்கள் (மக்கள்) வண்டுகள் மொய்ப்பது போல் வந்து மொய்ப்பார்கள். அவர் இயற்கையின் புதல்வர். மண்ணை மணந்த மணாளர். மண்ணோடு மண்ணாய் உழலும் மாந்தர்களுக்கு நாயக்கரின் பிரசங்கம் ஆகாய கங்கையின் பிரவாகம் என்பதில் சந்தேகமில்லை... செய்ய வேண்டும் என்று தோன்றியதைத் தயங்காமல் செய்யும் தன்மை அவரிடம் காணப்படுவதாகும். தமிழ்நாட்டின் வருங்காலப் பெருமைக்கு, நாயக்கர் அவர்கள் முன்னோடும் பிள்ளை; தூதுவன். வருங்கால வாழ்வின் அமைப்பு அவர் கண்ணில் அரைகுறையாகப்பட்டிருக்கலாம்... ஆனால், மலைகளையும், மரங்களையும், வேரோடு பிடுங்கி யுத்தம் செய்த மாருதியைப் போல் அவர் தமிழ்நாட்டின் தேக்கமுற்ற வாழ்வோடு போர்புரியும் வகையைக் கண்டு நாம் வியப்படையாமல் இருக்க முடியாது.
என். எஸ். கிருஷ்ணன் நமது நாட்டிலே விழிப்புணர்ச்சி மக்களிடையே ஏற்படுவதற்கு நமது பெரியார் அவர்களே காரணம். அவருக்குப் பக்கத்துணையாக நின்று தொண்டு புரிகின்றவர்களில் ஒருவராகிய நமது அண்ணாதுரை அவர்கள் பத்திரிகை உலகிலும், பேச்சு உலகிலும், அரசியல் உலகிலும் சிறப்புற்று விளங்குவது போன்று நாடக உலகிலும் சிறப்புடன் திகழ்வது மகிழ்ச்சியளிக்கிறது. அவரைப் போன்று ஆயிரக்கணக்கான அண்ணாதுரைகள் தோன்றி பெரியார் கொள்கையைப் பின்பற்றி உழைக்க வேண்டும்.
பெரியார் பற்றி பெரியார் பெரியாரின் தூய்மையான, வாய்மையான, நேர்மையான, அப்பழுக்கற்ற, தன்னலமற்ற தொண்டைக் குறை சொல்லும், குற்றம் சொல்லும், பழி சொல்லும், களங்கம் கற்பிக்கும் முயற்சிகள் அவர் காலத்திலே நிகழ்ந்துள்ளன. குணாக்கள் போன்ற குள்ளநரிகளும், மோசடிப் பேர்வழிகளும் இன்று புதிதல்ல. அன்றும் வாழ்ந்துள்ளனர். அன்றைக்கே பெரியார்மீது களங்கம் சுமத்தியுள்ளனர். அதைக் கண்டு பெரியாரும் வேதனைப்பட்டுள்ளார். அதன் உச்சக்கட்டமாகப் பதிலும் அளித்துள்ளார். உணர்வு பொங்கும் அப்பதிலை இங்கு குறிப்பிட்டால் அது குணாக்களுக்கும், அவர் வார்த்தைகளில் மயங்கிச் செல்லும் மந்தைத் தமிழர்களுக்கும் உறைக்கும் என்பதாலும், மற்றவர்களுக்கும் விளக்கம் தரும் என்பதாலும் பெரியாரின் மனக்குமுறலை அப்படியே எழுதுகிறேன்.
நான் சாதாரண ஆள்தான் என்றாலும், இன்றைய மந்திரிகள் போன்றவர்களைவிட எவ்வளவோ மேலானவன். உலகம் சுற்றியவன். பூரண பகுத்தறிவுவாதி. சொத்து சம்பாதிக்க  வேண்டிய தேவையில்லாதவன்; ஜாதி உணர்ச்சி, ஜாதிப்பற்று இல்லாதவன்; என்ன செய்தாவது ஜாதியை ஒழிக்க வேண்டும் என்பவன். 70 ஆண்டு உலக அனுபவம், 30 ஆண்டு வியாபார அனுபவம், 1915, 16, 17, 18, 19 வரை பதிவு செய்யப்பட்ட ஈரோடு சங்கத் தலைவன்; தெ.. வியாபாரச் சங்க நிர்வாக சபை அங்கத்தினனாக இருந்தவன். 5 மாவட்டங்களுக்கு இன்கம்டாக்ஸ் டரிபியூனல் கமிஷனர்கள் மூவரில் ஒருவனாக இந்திய அரசால் நியமிக்கப்பட்டவன். ஈரோடு டவுன் ரீடிங் ரூம் செக்ரட்டரி; பிறகு தலைவர்; 1914 ஆண்டு நடந்த கோவை மாவட்ட காங்கிரசு தாலுக்கா போர்டு பிரசிடண்ட்; பல வருடங்கள் ஈரோடு முனிசிபல் சேர்மன்; ஜில்லா போர்டு மெம்பர்; வாட்டர் ஒர்க்ஸ் கமிட்டி செக்ரட்டரி; பிளேக் கமிட்டி செக்ரட்டரி; கோவை ஜில்லா 2 ஆவது சர்க்கிள் தேவஸ்தான கமிட்டி செக்ரட்டரியாக 10 ஆண்டு காலம்; பிறகு 1929 வரை வைஸ்பிரசிடெண்ட்; 1918 ஆண்டு உலக யுத்தத்தில் ஆனரரி ரெக்ரூட்டிங் ஆஃபீசர்; 1918 ஆண்டு யுத்தத்தில் தாலுக்கா, ஜில்லா அரிசி கண்ட்ரோலிங் கவர்ன்மெண்ட்டாரின் நிர்வாகி; கார்னேஷன் கமிட்டி செக்ரட்டரி; தலைவர்; காதிபோர்டு அமைப்பாளராக இருந்ததோடு, 5 வருடம் தலைவராக இருந்தபோது எனக்குச் செயலராக டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன், கே. சந்தானம், எஸ். ராமநாதன், தங்கபெருமாள், அய்யாமுத்து முதலியவர்கள் இருந்தார்கள். இவை ஒருபுறமிருக்க 1940, 42 இல் இரண்டு வைஸ்ராய்கள், 2 கவர்னர்கள் என்னை அழைத்து மந்திரிசபை அமைக்க வேண்டினார்கள். நான் மறுத்துவிட்டேன்
1919 ஜூலையில் நான் ஜில்லா, தாலுக்கா போர்டு மெம்பர், சேர்மென் முதலிய பதவியை ராஜிநாமா கொடுத்த காரியம் பேப்பரில் வெளியானவுடன் லோகல் அண்டு முனிசிபல் போர்டு, கவுன்சில் மெம்பர். பி.இராசகோபாலாச்சாரியார் அவர்கள் ஈரோடு வந்து, என்ன ராமசாமி நாயக்கரே! இப்படி முரட்டுத்தனமாக வேலை செய்து விட்டீரே, உமக்குப் புத்தியில்லையா என்றார். அவர் பக்கத்திலே கெரோசின் ஆயில் டீலர்ஸ் ஏஜெண்ட் கோவிந்தாச்சாரி இருந்தார். உடனே நான் வணங்கி, நான் என்ன செய்துவிட்டேன்? என்று கேட்டேன். அவர் தன் மனைவியைப் பார்த்து அம்மா அவருக்குச் சொல்லு என்று சொல்லிவிட்டு அமைதியாக இருந்துவிட்டார். அந்த அம்மையார், அய்யர் உங்களுக்கு, நீங்கள் உங்கள்  முனிசிபாலிடியில் தண்ணீர் குழாய் ஏற்படுத்தியதற்காக, ராவ்பகதூர் கொடுப்பது என்று சிபாரிசு பண்ணியிருக்கிறார். உங்கள் கலெக்டர், ராவ் சாகிப்தான் சிபாரிசு செய்தார். அய்யர், ராவ் பகதூர் என்று சிபாரிசு செய்து கவர்னருக்கு ஃபைல் போய் இருக்கிறது.
நீங்கள் இப்படி அய்யருக்கு அவமானம் செய்து விட்டீர்களே இது சரியில்லை என்று சொன்னார். நான் பல காரணங்களைக் கூறி மறுத்துவிட்டேன். நான் காங்கிரசுக்கு விரோதி என்று ஆன பிறகுகூட ஆச்சாரியார் என் வீட்டிற்கு வந்தும் என்னைச் (காங்கிரஸில் சேராமல் கதர் போடாமல்) சட்டசபைக்கு நாமினேஷன் போட ஃபாரம் நீட்டிக் கையெழுத்துக் கேட்டார். நான் மறுத்துவிட்டேன்.
41இல் மந்திரிசபை அமைக்க ஒப்புக் கொள்ளும்படி சொன்னார். நான் கவர்னர், கவர்னர் ஜெனரல் ஆகியவரிடமெல்லாம் மந்திரிசபை அமைக்க மறுத்துவிட்ட பிறகு என்னை மந்திரிசபை அமைக்கும்படியும், நான் விரும்பினால் தானும் ஒரு மந்திரியா யிருந்து எனக்கு உதவியும் காங்கிரசு ஆதரவும் தருவதாயும் சொன்னார். நான் மறுத்துவிட்டேன்.
போதும், இவ்வளவு எடுத்துக்காட்டுவதற்கே நான் மிக மிக வெட்கப்படுகிறேன். தறுதலைகளும், பொறாமைக்காரர்களும் சொந்த எதிரிக்கும் இதன் மூலம் ஒரு பொதுமனிதன் என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டுமோ அதை விட்டுவிட்டுக் குற்றம் குறை சொல்ல வழி காணத் துடிக்கிறார்கள்.
இருந்தாலும் நான் ஏன் வெட்கம் என்பதை விட்டுவிட்டு இவ்வளவு எடுத்துக் காட்டுகிறேன் என்றால், துரோகம் செய்து அயோக்கியனாய் வாழ வேண்டிய அவசியம் எனக்கு எந்தக் கட்டத்திலும் வந்ததில்லை என்பதைக் காட்டவேயாகும். மேலும், எல்லாத் துறைகளிலும் எனக்கு இந்த மந்திரிகளுக்குச் சிறிதுகூட குறையாத அனுபவமும் திறமையும் உண்டு என்பதைக் கூறவும் ஆகும்.
ஒன்றை ஒப்புக் கொள்கிறேன். அதாவது நான் பல விஷயங்களில் அறிவு குறைவு உள்ளவனாக இருக்கக்கூடும். பல தவறுகள் செய்திருக்கக்கூடும். இன்றையக் கருத்திலிருந்து நான் மாறுதல் அடையக்கூடும். பல கருத்துக்களை மாற்றியும் இருக்கிறேன். இவை எல்லாம் எனது கண்ணியமான அனுபவம், ஆராய்சியைக் கொண்டே இருக்குமே தவிர, பணம் சேர்க்கவோ, பதவி பெறவோ, வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளவோ, பெரிய ஆள் ஆகவோ, இழிவை மறைத்துக் கொள்ளவோ கடுகளவும்கூட காரணம் கொண்டதாய் இருக்காது.
அதாவது ஒரு பண்டம் கைநழுவி விழுந்து உடைந்து போவதற்கும், உடைக்க வேண்டுமென்றே கருதி, கீழே போட்டு உடைப்பதற்கும் உள்ள பேதம் போன்றதாகும்.
இப்படிப்பட்ட என்னை இந்த நாட்டு விடுதலைக்குக் குறுக்கே இருந்தவன், துரோகம் செய்தவன் என்று சொல்லும் போது எவ்வளவு மன உரம் இருந்தாலும் நிதானம் தவறத்தான் தூண்டுகிறது. அந்த நிதானம் தவறிய சொற்கள்தாம் மேலே என்னைப் பற்றிக் குறிப்பிட்டவையாகும். பொருத்தருள்க.
இன்னமும் சொல்கிறேன், நான் வெள்ளையன் வெளியேறுவதற்குக் குறுக்கே இருந்தாலும், இந்திய சுதந்திரத்திற்கு நான் துரோகம் செய்தது உண்மையாக இருந்தாலும் இந்தப் பாவிகள் மாபாவிகள் பார்ப்பான் ஆதிக்கத்திற்கும், அதனால் ஏற்பட்ட வடநாட்டான் சரண்டல் ஆட்சிக்கும் இடங்கொடுத்து, அடிமையாகி அதனால் பணமும், பதவியும், பெருமையும் சம்பாதிக்கும் சுயநலம் கொண்டல்ல.
இப்படியொரு வெளிப்படையான, வெள்ளையான ஒரு மாபெரும் உலகத் தலைவரை, துரோகியாகவும், விலை போகக் கூடியவராகவும், சுயநலக்காரராகவும், வழிகாட்டத் தெரியாதவராகவும் எவன் சித்தரித்தாலும் அவன் அயோக்கியனாக மட்டுமே இருக்க முடியும் என்பதை ஆணித்தரமாக அடித்துச் சொல்லுவதுடன், இதற்கு மேலும் பெரியாரைக் கொச்சைப்படுத்துகின்றவர்களுக்கும், திராவிடத்தால் வீழ்ந்தோம் என்போருக்கு வேறு என்ன சொல்ல முடியும்!
குற்றம் சுமத்துகின்றவன் அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி அவன் ஆரியத்திற்குத் துணை போகின்றவனே! எனவே, இவ்வுணர்வுகள் தமிழர்கள் இது போன்ற குற்றச்சாட்டுகளில் மயங்காது, தெளிவோடு எடைபோட்டுத் தமிழர் நலன் காக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கின்றோம்.
ஆரியம் ஒவ்வொரு காலத்திலும் ஓர் ஆற்றலுள்ள தமிழனை விலை பேசி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தும். கவிஞர் கண்ணதாசனை விலை பேசி அர்த்தமுள்ள இந்துமதம் எழுதச் செய்து, சரிந்த இந்து மதத்தைத் தாங்கிப் பிடித்தனர். தற்போது குணாவைப் பயன்படுத்தி, வீழ்ந்த ஆரியத்தை நிமிர்த்த தமிழர்களையே துணைக்கழைக்க முயலுகின்றனர்.
பொதுவாகத் தமிழ் உணர்வும், தமிழர் உணர்வும் எப்போது எழுச்சி பெறுகிறதோ, அப்போது அந்த உணர்வை வளர்ப்பதற்கு மாறாகத் திராவிடத்தை, பெரியாரைத் தாக்குவதையே கைக்கூலிகள் யுக்தியாகக் கொள்கின்றனர். தற்போது இலங்கை பிரச்சினையால் எழுச்சி பெறும் தமிழர்களைத் திசை மாற்ற திராவிடத்தைத் தாக்குகின்றனர். பெரியார் திராவிடத்தை விட்டுத் தமிழர், தமிழ்நாடு என்று செயல்பட ஆரம்பித்து 60 ஆண்டுகள் ஆகிவிட்டன
தற்போது, ஆரியத்திற்கு எதிரான ஒரு குறியீடாக மட்டுமே திராவிடம் என்ற சொல் பயன்பாட்டில் உள்ளது. தமிழ்த் தேசிய உணர்வை பெரியார் தொண்டர்கள் பேசத் தொடங்கி பல பத்தாண்டுகள் ஆகிவிட்டன. தோழர் சுப. வீரபாண்டியன் போன்றவர்களெல்லாம் அந்த வகையில் அணியமைத்து ஆற்றலுடன் செயல்படக் கூடியவர்கள். திராவிடர் கழகமும், தமிழர் நலன் என்ற வட்டத்திற்குள் வந்து செயல் திட்டங்களை 60 ஆண்டுகளாகச் செய்து வருகிறது. அப்படியிருக்க திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று ஒரு பொய்ப் பிரச்சாரத்தைத் தமிழர்களைத் திசை திருப்ப குணா போன்ற ஆரிய கைக்கூலிகள் முயல்வது கண்டிக்கத்தக்கது.
குணாவின் நூலை பார்ப்பன ஏடுகள் விளம்பரம் தந்து விற்கின்றன என்றால் குணா யாருடைய கையாள் என்பதும் விளங்கவில்லையா?

ஆரியத்தின் வலையில் வீழ்ந்த குணாவின் நூல்கள் எதுவும் உண்மையை, சரியானவற்றை ஆதாரத்தோடு கூறுபவையல்ல. எங்காவது பீராய்ந்து கிடைக்கும் சில குறிப்புகளைப் பேனை பெருச்சாளியாக்கி பெருமாளாக்குவது போல் ஆக்கி, அதிமேதாவி போல் காட்டி வருகிறார்
உண்மையில் அவர் ஓர் அரைவேக்காடு. ஆரியத்தின் அடியாள். அப்படிப்பட்ட கபடப்பேர்வழியால் திட்டமிட்டு எழுதப்பட்டதே திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற நூல். எனவே, ஆரியத்தின் ஆதிக்கத்தைத் தூக்கி நிறுத்த தமிழர்களைத் திசை திருப்பிக் கொண்டு செல்ல வந்துள்ள அந்நூலை உண்மைத் தமிழர்கள் ஒதுக்கித் தள்ள வேண்டும்!

நூல் - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம் 
- ஆசிரியர் - மஞ்சை வசந்தன்

Comments

  1. Fails information about E.V.Ramasamy naicker, nothing is true

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை