தாயைக் கண்ட சேய் போல



நாகைக்கடுத்த சிக்கல் என்ற ஊரில் உள்ள வக்கீல் குமாஸ்தா தோழர் சின்னதம்பி அவர்களின் 12 வயதுடைய பள்ளி மாணவன் சி.தங்கராஜ் என்பவர் நேற்று காலை நடைபெற்ற நாகை திருமணத்திற்கு வந்து பெரியாரை நேரில் கண்டு மகிழவும், அவர்தம் அறிவுரையை முதன்முதலாக கேட்கவும் ஆர்வங் கொண்டவனாய் சிக்கல் ரயில் நிலையத்துக்கு ஓடோடியும் வந்து வண்டியில் ஏறும் சமயம், வண்டியிலிருந்த ஒலிபெருக்கியின் மீது மோதி கீழே விழுந்து இடதுகாலில் பலத்த காயமடைந்ததின் காரணமாக உடனே நாகை சர்க்கார் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர்.

இடது கால் விரல்கள் அய்ந்தும் நொறுங்கிவிட்டன. மேற்கொண்டு டாக்டர்கள் குணப்படுத்த ஆவண செய்து வருகின்றனர். இச்செய்தியை அறிந்த பெரியார் அவர்கள் திருமண நிகழ்ச்சி முடிந்ததும், மாலை 4.30 மணிக்கு தோழியர் மணி அம்மையார், தோழர்கள் என்.பி.காளியப்பன், திருவாரூர் தங்கராஜ், வி.எஸ்.யாகூப், என்.வி.நடராஜன் ஆகியோருடன் ஆஸ்பத்திரி சென்று அம்மாணவனைப் பார்த்ததும் மனம் பதறினார். விபத்திற்குள்ளான மாணவன் பெரியாரைக் கண்டதும் தாயைக் கண்ட சேய் போல் ஆனந்தங் கொண்டு படுத்த படுக்கையிலேயே எனக்கு ஒன்றும் பயமில்லை என்று பெரியாரிடம் தைரியமாக பதில் கூறினார். மாணவனிடம் பெரியார் சிறுதொகை செலவுக்காகக் கொடுத்துவிட்டு, மாணவனுக்கும் ஆறுதல் கூறிச் சென்றார். சி.தங்கராஜ் என்ற அம்மாணவன் நாகை உயர்நிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறான்.
(விடுதலை, 23.3.1948, பக்கம் 3)

பெரிய தலைவர், சிறிய பையனைப் பார்க்க ஓடோடி வருகிறார். இதில் எவ்வளவுப் பெரிய மனித உள்ளம் குடிகொண்டிருக்கிறது!

- தந்தை பெரியார் 135ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர்


Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை