கலைவாணரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்
தந்தை பெரியாரின் உதார குணத்திற்கு இதைக் கூட உதாரணமாகச் சொல்லலாம்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராச பாகவதரும் கொலை வழக்கொன்றில் சிக்க வைக்கப்பட்டனர். நம்மவர்களான அவர்களின் வளர்ச்சியில், புகழில் பொறாமைத் தீ பற்றிக் கொண்ட எதிரிகளின் சதி வழக்கு. ஆனாலும் அவர்களுக்குத் தண்டனை தரப்பட்டு விட்டது.
14 ஆண்டு கால சிறைத் தண்டனை. அப்போது அய்யா எழுதினார். 3.11.1945 இல் குடிஅரசு ஏட்டில் எழுதினார்:
அய்யோ, கிருஷ்ணா உனக்கா இந்தக் கதி, உனக்கா தீவாந்திர தீட்சை/தீக்ஷை?
உண்மையிலா உனக்கு? நீ 14 வருட காலம் சிறையில் கடின காவல் தண்டனை அனுபவிக்க வேண்டுமென்று தீர்ப்புக் கூறி உன் வாழ்வு முடிக்கப்பட்டு விட்டதா? அசல் தீர்ப்புக் கொடுமை கொடுமை என்றால் அப்பீல் தீர்ப்பு அதனினும் கடுமை கடுமை என்று சொல்லத் தக்கதாகவல்லவா ஆகிவிட்டது?
இந்த சேதியைக் கேட்கவே காதில் எரிசூலம் பாய்வதுபோல் இருக்கிறதே! நினைக்கவே நெஞ்சம் வெடித்து விடும்போல் இருக்கிறதே! இப்படி ஒரு உலகம். இப்படி ஒரு நடவடிக்கை, இப்படி ஒரு நீதி என்றால் உலகத்திற்கு மனிதர்கள் வேண்டுமா? என்று தோன்றுகிறதே!
நிஜமாகவா நீ குற்றவாளி?
இது என்ன தண்டனை? எதற்காக இந்த தண்டனை அடைந்தாய்? நீதிக்கு ஆகவா? சட்டத்திற்காகவா?
நிஜமான நடத்தைக்காகவா? அல்லது நம் எதிரிகளின் ஆசைக்காகவா?
எதற்காக இந்த தண்டனை? ஒன்றும் புரியமாட்டேன் என்கிறதே! உண்மையாக நீ குற்றவாளியா?
உன் விஷயத்திலா சாட்சியும்,
சட்டமும் நீதியும், நீதிபதிகள் இஷ்டமும் இப்படிப் பயன்பட வேண்டும்?
அடடா, அளவுக்கு மீறிய பரிதாப சம்பவமே! இதை எப்படிப் பொறுப்பது?
தமிழ் மணியே! தமிழர் மூடநம்பிக்கை வாழ்வைத் திருத்த முயன்ற தவமணியே!
நீ சிறையில்
14 வருஷம் கடின காவல் தண்டனை சிறையில் வதிவதை, வாடுவதை தமிழ் மக்கள் எப்படிப் பொறுத்திருப்பார்கள்? என்பது விளங்கவில்லையே! ஏன் அதுவரை பொறுத்திருக்க வேண்டும் என்பதும் புரியவில்லையே!
- என்பதாக தமிழ்நாடு எங்கும் கிருஷ்ணனைப் பற்றியும், பாகவதர் பற்றியும் கூறியவண்ணம் கூச்சலும் கொதிப்புமாக மக்கள் காணப்படுவதுடன் பார்க்கின்ற முகமெல்லாம் பதறிப் பதறிப் பரிதவிக்கிற முகங்களாகவே காட்சியளிக்கின்றனவே.
வாசகர்களே, இந்த சேதியும் சம்பவமும் காட்சியும் உண்மையில் சகிக்க முடியாமல் சங்கடத்தைக் கொடுக்கக் கூடியதாய் இருக்கிறது என்பது மிகைப்படுத்திக் கூறுவதல்ல என்பது உங்களுக்குத் தெரியும். இது தமிழ் மக்களினுடைய ஒருமனப்பட்ட,
ஒன்று போன்ற கஷ்டமான சகிக்க முடியாத சம்பவம் என்பதில் மாறுபாடு இல்லை எனலாம்.
சரி, நம் துக்கத்துக்கு எல்லை இதுவரை போதும். எப்படியோ தமிழ் மணிகளுக்கு இந்த நிலை ஏற்பட்டுவிட்டது.
யார் மீதும் குற்றம் கூறுவதில் பயனில்லை. எவரையும் நோவதிலும் அறிவுடைமை இல்லை. இனி இதற்கு என்ன பரிகாரம்? என்பதைப் பற்றிச் சிந்தித்து நல்ல முடிவுக்கு வந்து இவர்களை விடுவிப்பதுதான் உண்மையில் சங்கடப்படும் மக்களின் கடமை ஆகும்! இதை விளையாட்டாகவோ, வீண் வார்த்தை அலங்காரமாகவோ எவரும் எந்தத் தமிழரும் கருதக் கூடாது!
தமிழ் மக்களுக்கு இது ஒரு புதுமுறையான கேடு என்பதையும்,
இதற்குப் பரிகாரம் செய்ய ஒவ்வொரு தமிழ் மகனும் கடமைப்பட்டவனாவான் என்பதையும் தமிழர் யாவரும் மனத்தில் இருத்தல் வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொண்டு இதற்காக இவர்களது குடும்பத்தார்கள்,
சுற்றத்தார்கள்,
தோழர்கள் படும் துக்கத்தில் நாமும் கலந்து கொண்டு அவர்களுக்கு ஆறுதல் சொல்வதுடன் வேண்டுவன, ஆவன செய்யத் தமிழ் மக்கள் காத்திருக்கிறார்கள் என்பதையும்,
செய்வார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுவதோடு பொதுமக்களையும் இதற்கென ஒரு கிளர்ச்சி துவக்க வேண்டியதும் இதற்கென ஒரு நிதி திரட்ட வேண்டியதும்,
நன்றி விசுவாசம் உள்ள தமிழ் மக்களின் கடமையாகும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.
எப்படிப்பட்ட கிளர்ச்சி, எவ்வளவு நிதி என்பவைகள் உடனே மக்கள் கூடி முடிவு செய்ய வேண்டியதாகும்!
மக்கள் கூடி முடிவு செய்ய வேண்டியதாகும் என்று எழுதி விட்டுச் சும்மா இருந்துவிடவில்லை தந்தை பெரியார் அவர்கள். சென்னை மத்திய சிறைக்கு வந்தார் மனுப்பார்க்க என்று சொல்கிறார்களே, அந்த முறைப்படி அனுமதி பெற்று, கலைவாணரைச் சந்தித்துப் பேசினார். தம் மடியில் மறைத்து வைத்து எடுத்துச் சென்ற பத்தாயிரம் ரூபாயைக் கலைவாணரிடம் கொடுத்து வழக்கு நடத்தத் தேவைப்படும் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.
கலைவாணரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர். தந்தை பெரியார் கண்களில் கவலைக் கண்ணீர். புரந்தார்கண் நீர் மல்க என வள்ளுவன் எழுதினானே, அதைப் போலத் தலைவரின் கண்ணீர் கண்டு கலைவாணர் கண்களில் நீர். பணத்தைப் பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். மனமோ மகிழ்ச்சியால் துள்ளியது அவருக்கு!
தமிழர் மூடநம்பிக்கை வாழ்வைத் திருத்த முயன்ற தவமணி அல்லவா, கலைவாணர்! அதனால்தான் கஞ்சன் என்று சொல்லப்பட்ட பெரியார் தாராளமாகப் பத்தாயிரம் தந்தார்.
1948இல் பத்தாயிரம். இன்றைய ரூபாய் மதிப்பில் எவ்வளவு? கணக்கிட்டுக் கொள்ளுங்கள், இப்போது சொல்லுங்கள்,
தந்தை பெரியார் கருமியா?
தேவைக்கே செலவழிக்காதது கருமித்தனம்.
தேவைக்குமேல் செலவழிப்பது ஆடம்பரம்.
தேவைக்குச் செலவழிப்பது சிக்கனம்.
அறிக்கை எழுதிவிட்டு எதையும் அசைக்காமல் இருந்து விடுபவர்களைப் போல அல்லாது தானே மனமுவந்து பெருந்தொகை வழங்கிய பெரியாரா கருமி?
- கி.வீரமணி
(தந்தை பெரியார்
128ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர்)
Comments
Post a Comment