பெரியாருக்குப் பொருளாதாரப் பார்வை இல்லையா?
பிராமண எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு, ஜாதியெதிர்ப்பு, சாத்திர எதிர்ப்பு இவைகளை ஆர்வமுடன் செய்த பெரியாருக்குத் தெளிவான பொருளியல் பார்வை இல்லை.
பிராமண ஆதிக்கம், கடவுள், ஜாதி, சாத்திரம் இவற்றின் ஆதிக்கத்தினின்று நம்மை நாமேதான் விடுவித்துக் கொள்ள வேண்டும். இதற்குப் போய் தன் உழைப்பையெல்லாம் செலவிட்டது சரியன்று என்கிறார் குணா.
பெரியார் மேற்கண்டவைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய காலக்கட்டத்தில், இவற்றில் இச்சமுதாயம், குறிப்பாக அடித்தட்டு மக்கள் எவ்வளவு சீர்கெட்டு, சிதைந்து, அறிவிழந்து, மானம் இழந்து, சொரணையிழந்து, விழிப்பின்றி இருந்தனர் என்பது அதிக ஆய்வுகள் இன்றி அறியலாம். அந்த அளவிற்கு அது அப்பட்டமான உண்மை.
மூடநம்பிக்கை முடைநாற்றம் வீசிய காலம்; தமிழன் சூத்திரனாய், விலங்கொடு விலங்காய் நடத்தப்பட்ட கொடுமை; கல்வியை நினைத்துக்கூடப் பார்க்க முடியாத நிலை. மக்கள் மந்தைகளாய்ச் சாய்ந்த மனநிலை; கடவுள் நம்பிக்கையில் கணக்கற்ற கண்மூடிச் செயல்கள்; ஜாதியின் பேரால் நடத்தப்பட்ட சதிகள், கொடுமைகள் என்று மனித நேயமே மரித்து நின்ற ஒரு சமுதாயத்தில் பெரியார் மேற்கொண்ட பணிகள் என்பது, காலங் கருதிய கட்டாயப் பணி.
உடற்பிணி அகற்றலை ஒத்த சமுதாயப் பிணி அகற்றிய உடனடிப் பணி. அதை அவர் ஆர்வமுடன் (ஏதோ பொழுதுபோக்குக்குச் செய்ததுபோல் சொல்கிறார் குணா)
செய்யவில்லை. அகம் நொந்து, கொதித்து ஆத்திரங் கொண்டு செய்தார்.
பிராமண ஆதிக்கம் என்பது வீதியிலிருந்து வீடு வரை,
கோயிலிலிருந்து குளம் வரை,
கல்விக் கூடத்திலிருந்து கழிவறை வரை நீக்கமற நிறைந்திருந்த நிலை. அதுவும் சாத்திர, கடவுள் பிடி போட்டு, தமிழன் மீள முடியாமல் சிக்கி நின்ற நிலை. எல்லாம் விதி என்று தன்னைத்தானே மக்கள் சமாதானப்படுத்திக் கொண்ட மனநிலை.
இப்படிப்பட்ட சூழலில் பிராமண ஆதிக்கத்திலிருந்து மக்கள் அவர்களாகவே தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்று ஒருவர் கூறுகிறார் என்றால் அவர் குணக்கேடராக மட்டுமே இருக்க முடியும்! இல்லையென்றால் இனத் துரோகியாக இருக்க வேண்டும்!
தன்னை மனிதன் என்றே உணரத் தெரியாது, அறியாமையில் கிடந்த மக்கள்; கடவுள் அச்சத்திலும், தாழ்வு மனப்பான்மையிலும் கூனிக் குறுகி நின்ற மக்கள்; கல்வி கிடைக்காது, தெளிவு கிடைக்காது, உண்மை அறியாது விழிப்பற்றிருந்த மக்கள் தங்களைத் தாங்களே விடுவித்துக் கொள்வது அதுவும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் ஆதிக்கம் செலுத்தும் அதிகாரமும், அந்தஸ்தும் பெற்ற ஒரு சூழ்ச்சிக் கூட்டத்திடமிருந்து அதுவும் கற்று, விழிப்பு பெற்ற ஆதிக்கக் கூட்டத்திடமிருந்து தங்களைத் தாங்களே மீட்டுக் கொள்ளல் எங்ஙனம் இயலும்?
பெரியார் பின்னே அணிவகுத்து நின்ற ஆயிரக்கணக்கான தொண்டர்கள், அன்றாடம் அடிமேல் அடி கொடுத்தே அகற்ற முடியாத அந்த ஆதிக்கப் பிடியினின்று அப்பாவி மக்கள் தங்களைத் தாங்களே விடுவித்துக் கொள்ள வேண்டும், இதற்குப் பெரியாரின் பெரும் முயற்சி தேவையற்றது என்று பேசுவதும் எழுதுவதும் பேதமையா? பித்தலாட்டமா? தமிழர்கள் தவறாது சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அவனவன் ஜாதித் தொழிலையே செய்ய வேண்டும். அதிலே திருப்தி காண வேண்டும். சாஸ்திரத்தில் கூறப்பட்டபடியே
ஒவ்வொரு ஜாதியானும் நடந்து கொள்ள வேண்டும் என்று ஆரியப் பார்ப்பன தலைவர்கள் வெளிப்படையாக முழங்கினர். அதற்குரிய ஆட்சி அமைக்கப்பட வேண்டும் என்றனர்.
ஆரியர்களின் சமஸ்கிருத மொழி செத்துப் போன மொழி. அதையே அவர்கள் கட்டாய மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் ஆக்க முயன்றனர் என்றால் ஆரியர் ஆதிக்கம் அன்றைக்கு எந்த அளவிற்கு இருந்திருக்கும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
எடுத்துக் காட்டாக, தமிழ்நாட்டு ஆரியப் பார்ப்பனர்களின் தலைவர் எஸ். சத்தியமூர்த்தி அய்யர் 1939 ஜூலையில் சென்னை இலயோலா கல்லூரி நிகழ்ச்சியொன்றில் பேசுகையில், சமஸ்கிருத ஆதிக்க வெறியை அப்பட்டமாக வெளிப்படுத்தினார்.
என் கைக்கு அதிகாரம் வந்தால், நான் சர்வாதிகாரியானால் இந்தியர்கள் சமஸ்கிருதத்தையும் கட்டாயமாகப் படிக்கச் சொல்வேன். சர்க்கார் உத்தியோகங்களுக்கும் சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்கின்ற நிபந்தனையும் ஏற்படுத்தி விடுவேன். காந்தியார் உயிருடன் இருக்கும்போதே இந்தியாவில் இராமராஜ்யம் ஏற்பட்டுவிட வேண்டும் என்று ஆவலாய் இருக்கிறேன்.
இராமராஜ்யம் என்பது வர்ணாச்சிரம முறைப்படி ஒவ்வொருவனும் அவனவன் ஜாதித் தர்மப்படி நடந்து கொள்ள வேண்டியதுதான். ராமர் காலத்தில் மக்கள் இந்த வர்ணாச்சிரம முறைப்படியே அதாவது பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என பிரிக்கப்பட்டு அவனவனுக்குச் சாஸ்திரப்படி ஏற்பட்ட கருமங்களை அவனவன் செய்து கொண்டு திருப்தியாய் இருந்தான்.
- (ஆதாரம்: மெயில் 25.07.1939 குடிஅரசு 30.07.1939)
இப்போது சொல்லுங்கள் பெரியார் எடுத்த ஆரிய எதிர்ப்பு எவ்வளவு கட்டாயம் உடையது என்று.
பேச்சு வழக்கொழிந்த மொழி ஆட்சி மொழியாக, வேலை வாய்ப்பு மொழியாக ஆக்கப்பட வேண்டுமாம்; மாடு மேய்ப்பவன் பிள்ளை மாடு மேய்க்க வேண்டும்; கக்கூஸ் கழுவுகின்றவனின் பிள்ளை அந்த வேலையையே செய்ய வேண்டும். இதற்கு இராமராஜ்யம் உருவாக்கப்பட வேண்டும்; அதுவும் காந்தியார் உயிருடன் இருக்கும்போதே உருவாக்கப்பட வேண்டும் என்கிறார் ஒரு ஆரிய தலைவர் என்றால், இங்கு முதலில் செய்ய வேண்டியது ஆரிய எதிர்ப்பா? மலையாளி, கன்னடர், தெலுங்கர் எதிர்ப்பா? பொது எதிரியான ஆரியர்களின் ஆதிக்கத்தினின்று விடுபட்ட பின்பல்லவா? திராவிடர்களுக்குள் இருக்கின்ற உரிமைகள் பற்றி பேச வேண்டும். அதுதானே அறிவியல் அணுகுமுறை. அதைத்தானே பெரியார் செய்தார். அப்படியிருக்க அதனால்தான் (பெரியார் அப்படிச் செய்ததால்தான்) தமிழர் வீழ்ந்தனர் என்பது அடிமுட்டாள்தனம் அல்லது அயோக்கியத்தனம் அல்லவா? சாஸ்திரப்படி அந்தந்த ஜாதியினர் தன் வேலையைச் செய்து திருப்தியடைய வேண்டுமாம். எப்படி?
ஆரியர் நலனுக்காக அவர்களால் எழுதப்பட்ட சாஸ்திரம். அதன்படி அவர்கள் உயர்வானவர்கள், புனிதமானவர்கள், மற்றவர்களால் வணங்கத் தக்கவர்கள், இந்தப் பூமியிலுள்ள செல்வங்களெல்லாம் அவர்களுடையது, கல்வி கற்க அவர்களுக்கு மட்டுமே உரிமையுண்டு. ஆனால் கக்கூஸ் அள்ளுபவன் பிள்ளை அதையே செய்ய வேண்டும்; சுமை தூக்குபவன் பிள்ளை சுமை தூக்க வேண்டும்; ஏர் பிடிப்பவன் பிள்ளை ஏர் பிடிக்க வேண்டும்; துணி வெளுப்பவன் பிள்ளை துணி வெளுக்க வேண்டும். அவன் படிக்கக் கூடாது; ஆரியப் பார்ப்பான் காலைக் கழுவி துடைத்துவிட வேண்டும், அவனைக் கண்டால் தரையில் வீழ்ந்து வணங்க வேண்டும், இவன் நிழல், காற்றுகூட அவன்மேல்படக் கூடாது.
இந்த சாஸ்திரப்படி நடப்பது ஆரியப் பார்ப்பானுக்கு உயர்வு, சுகம், பெருமை, மகிழ்ச்சி, அவன் திருப்தியாய் சாஸ்திரப்படி நடக்கலாம். ஆனால், மலம் அள்ளுபவன் பிள்ளை தலைமுறை தலைமுறையாய் எப்படி திருப்தியாய் அள்ள முடியும்? இப்படிப்பட்ட ஒரு மனிதத்தன்மையற்ற கருத்தை ஒரு ஆரியப் பார்ப்பான், ஒரு கல்லூரியில் பேசுகிறான் என்ற காலத்தில் அவர்கள் ஆதிக்கத்தை ஒழிக்காமல், சூடு சொரணையுள்ளவன் வேறு வேலை பார்ப்பானா?
குணா போன்ற சொரணை கெட்ட சோற்று பிண்டங்கள் வேண்டுமானால், எப்படியாவது சோறு கிடைத்தால் போதும் என்று வயிறு கழுவிக் கொண்டிருக்கலாம், மானமுள்ள மனிதர்களால் அது இயலுமா? மானமுள்ளவர் என்பதால், மானத்தோடு, ஆதிக்கம் அழித்து, அனைத்து உரிமைகளுடன் தமிழன் வாழ வேண்டும் என்று பெரியார் விரும்பியதால் ஆரிய எதிர்ப்பை பெரியார் முதன்மைப் பணியாகக் கையில் எடுத்தார்.
நூல் - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்
- ஆசிரியர் - மஞ்சை வசந்தன்
Comments
Post a Comment