தஞ்சையில் பெரியார் அவர்களின் 89 ஆவது பிறந்தநாள் விழா


09.02.1968 இல் தஞ்சை திலகர் திடலில் தந்தை பெரியார் . வெ. ராமசாமி அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு - தந்தை பெரியார் அவர்களின் 89ஆவது பிறந்த நாளில் பாராட்டுதலுக்கு அவரின் நன்றி உரை:-

தாய்மார்களே! தோழர்களே! இன்றையதினம் கூட்டப்பட்ட இந்த மாபெரும் கூட்டமானது என்னுடைய 89ஆவது பிறந்தநாள் பாராட்டு விழா என்பதாகக் கூட்டப்பட்டிருக்கிறது. 89ஆவது ஆண்டு பிறந்து 4,5 மாதங்கள் ஆகிவிட்டது. ஏதோ ஒரு கூட்டம் நடத்த வேண்டுமானால் அதற்கு ஏதாவது ஒரு பெயர் வைக்க வேண்டுமென்று என்னுடைய பிறந்தநாள்கூட்டமென்று வைத்தார்கள் என்று தான் நான் நம்புகின்றேன். இருந்தாலும், இப்படி இந்தப் பேராலே ஒருகூட்டம் ஏற்படுத்திக் கொண்டு நம்ம கழகக் கொள்கைகளை எல்லாம் மக்களுக்கு எடுத்துச் சொல்ல ஒரு வாய்ப்பு ஏற்படுத்தவேண்டுமென்று கருதி அதற்கு ஏற்றவண்ணமே, ஏதோ என்னை வாழ்த்துவது ஒரு பிரச்சினையாக இரண்டொரு வார்த்தைகளை அவர்கள் சொன்னார்கள் என்றாலும் மற்றபடி நிறைய நம்முடைய கொள்கைகளைப் பற்றி பல அரிய விஷயங்களை ஒவ்வொரு தோழரும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அவைகளை எல்லாம் நீங்கள் அன்போடு கேட்டீர்கள். நல்லவண்ணம் அவைகளை சிந்திக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகின்றேன்.
கூட்டம் துவக்கினபோது கடவுள் மறுப்பு சொன்னார்கள். அது நம்முடைய இயக்கத்தினுடைய அடிப்படைக் கொள்கைகள். சுய மரியாதை இயக்கம் 1925-ஆம் ஆண்டிலே துவக்கப்பட்டபோது கடவுள் இல்லை,மதம் இல்லை, சாஸ்திரங்கள் எல்லாம் ஒழிக்கப்பட வேண்டியது. ஜாதி ஒழிக்கப்பட வேண்டியது. மற்றும் காங்கிரசு ஒழிக்கப்பட வேண்டியது. (சிரிப்பு - கைதட்டல்) தேசியம் என்பது வயிற்றுப் பிழைப்புக்காரனுக்கு ஒரு மார்க்கம் என்றெல்லாம் சொல்லி திட்டம் ஏற்பாடு பண்ணி 1925ஆம் ஆண்டு முதல் நடந்து கொண்டே வருகின்றது. அதையே பிரசாரம் பண்ணிக் கொண்டே வருகிறோம். இன்னைக்குப் புதிதாக ஒன்றுமில்லை. இடையிலே காங்கிரசு பதவிக்கு வந்த போது 1954லே. அதுவரைக்கும் அதற்கு விரோதமாக அதை ஒழிக்க வேண்டுமென்றே செய்த பிரச்சாரம் அப்போது அந்த ஆட்சியின்தலைமை (ராஜாஜியிடமிருந்து) மாற்றப்பட்டு ஆச்சாரியார் ஆட்சி ஒழிந்து, காமராசருடைய ஆட்சி வந்தபோது அவர்கள் நம்முடைய கொள்கைகளை அமல் நடத்துவதாகக் காட்டிய பிறகு (அவரை) ஆதரிக்கிறது என்று முயற்சி எடுத்து உண்மையாகவே, மனப்பூர்த்தியாகவே காங்கிரசை நாம் ஆதரித்து வந்தோம். அந்த காங்கிரசை ஆதரிக்க நேர்ந்த காரணத்தினாலே நம்முடைய இந்தப் பகுத்தறிவுப் பிரச்சாரத்தைக் கொஞ்சம் தளர்த்திக் கொண்டோம். தளர்த்திக் கொண்டோம் என்றால் அதற்கு அதிக நேரம் கொடுக்க வில்லை. அதிக வாய்ப்பு அதற்குக் கொடுக்கவில்லை. அதைப் பற்றி கூட்டங்களில் அதிகமாக பேசுவதில்லை. ஏதோ ஜாடைமாடையாக பேசியிருக்கிறோம். (சிரிப்பு)
பிறகு இப்போது அந்த ஆட்சி மறைந்துவிட்டது ஏன்? அதிகமாகப் பேசவில்லை என்றால் அதில் - உள்ளவர்கள் எல்லாம் பெரும்பாலும் (காங்கிரஸ்) கடவுள் நம்பிக்கைக்காரர்கள். அவர்கள் மனம் நோகாது இருக்கவேண்டும் - அவர்களாலே நடைபெறுகிற காரியம் தடைபடாமல் நடக்கவேண்டும் என்று கொஞ்சம் தாட்சண்யப்பட்டுத் தான் - அந்த (நம்) பிரசாரத்தைத் தளர்த்திக் கொண்டோம். மறுத்துப் பேசவில்லை. மறுத்துச் பேசி நீங்கள் எல்லாம் நான் தந்திரமாகப் பேசுகிறேன் என்று நினைப்பதைவிட உண்மையைப் பேசி அதிலே கொஞ்சம் தப்பு இருக்குது என்றுநினைச்சாலும் எனக்கு அதுபற்றி கவலையில்லை நான் வருத்தப் படமாட்டேன்.

ஆனதினாலே கொஞ்சம் தாட்சயத்துக்காகத் தளர்த்தினோம். இப்பொழுது தாராளமாக மறுபடியும் நடத்துகிறோம். அதுநடத்த ஆரம்பித்த உடனேயே நாங்கள் கடவுள்மறுப்புப் பிரச்சாரம் தொடர்ந்து செய்ய வேண்டியது. திராவிடர் கழகத்தின் பேராலே, சுயமரியாதை இயக்கத்தின் பேராலே, எங்கே எந்தக் கூட்டம் நடத்தினாலும் முதலிலேயே கடவுள் மறுப்புச் சொல்ல வேண்டியது என்று. ஏனென்றால் கடவுள் நம்பிக்கைக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளுகிறவர்கள், எந்தக்கூட்டம்நடத்தினாலும் கடவுள் வணக்கம்ன்னு ஒரு சடங்கை நடத்துகிறார்கள். அதேமாதிரி கருதியே நாங்களும் எங்கே கூட்டம் நடத்தினாலும் கடவுள் மறுப்பு என்று முடிவு சொல்லுவது என்று அவ்வளவுதான் (சிரிப்பு).

தோழர்களே! கடவுள் மறுப்பை பற்றி நாலு வார்த்தை உங்களுக்குச் சொல்லிவிட்டு பிறகு மற்றதைத் துவக்குகின்றேன். நாங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் என்று உண்மையாகவே சொல்லிவிட்டோம். அந்தப் படிக்கே நடந்து கொள்ளுகின்றோம். எங்களுடைய கொள்கையே அதுவே தான். ஆனால் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் யாராவது நம்பிக்கைக்காரர்களாக இருக்கிறார்களா? நீங்கள் சிந்திக்க வேண்டும். நாம இல்லேன்னு சொல்லுகிறோம் அந்தப்படிக்கே நடந்து கொள்ளுகிறோம். கடவுள் உண்டு என்று நினைக்கிறவர்கள் கடவுள் நம்பிக்கைக்காரர்கள் யாராவது கடவுளை நம்புகிறார்களோ? நீங்கள் ஒவ்வொருத்தரும் உங்களையே கேட்டுப் பாருங்க. கடவுள் நம்பிக்கைக்கு ஏற்ற வண்ணம் யாராவது நடந்துக்கிறார்களா? யாருக்காவது கடவுள் இருக்கிறார், கடவுளின் சக்திக்கு இன்னது, அதுக்கேற்ற படி தான் நாம நடக்கணும் என்றாவது யாராவது நடக்கிறார்களா? எல்லாரும் வாயிலே சொல்லிக்கிறாங்க. எங்களைப் போலத் தான்கடவுள் இல்லேங்கிற மாதிரிநடந்து கொள்ளுகிறார்கள். ஆனதினாலே நமக்கும் உங்களுக்கும் நடப்பிலே ஒண்ணும் வித்தியாசமில்லே. சொல்லிக்கிறதிலே தான் (சிரிப்பு) சொல்லுவதிலேதான்.

கடவுள் பத்தி நாங்கள் சொன்னோம். கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்ன்னு ஏன் அப்படி சொன்னோம்? அறிவு இல்லாத காரணத்தினாலே என்னமோ அவனுக்குத் தோன்றிய பிதற்றல் ஆராய்ச்சி பண்ணாமே அல்லது சந்தேகப்பட்டு ஏதாவது ஒண்ணு இருக்கத்தானே வேணும்ன்னு. பயந்து ஏதோ ஒரு கற்பனையாக ஆராய்ச்சி இல்லாது சொன்னதைத் தவிர கண்டு சொன்னவன்னு நினைக்கிறீங்களோ? தெரிஞ்சி சொன்னான்னு நினைக்கிறீங்களோ? கண்டோ தெரிஞ்சோ ஒரு மனிதன் சொல்லியிருப்பானேயானால், அது இன்னதுன்னு சொல்லியிருப்பான். ஒரு மனுஷன் கடவுளைக் கண்டோ அல்லது கடவுளை புரிந்துகொண்டோ சொல்லியிருப்பானேயானால் உடனே கடவுள் என்றால் இன்னதுன்னு சொல்லுவான். யாராவது சொன்னாங்களோ? கடவுள்ன்னு சொன்னா அது உனக்குப் புரியாதுன்னுட்டான் (சிரிப்பு) கடவுள்ன்னு சொன்னவன், என்னாப்பா கடவுள்ன்னா?அது உனக்குப் புரியாது (சிரிப்பு). அடே, உனக்காவது புரிஞ்சிதா? கடவுளே புரியாத சங்கதீன்னான். எல்லாரும் தேடிப் பார்த்திட்டாங்க. எவனுக்கும் அது புரியாது அது? பாப்பான் கூட நான்கு வேதங்களில் தேடியும், காண முடியாத கடவுள்ன்னு சொல்றான் அவன். தான் மாத்திரம் தேடி (கடவுள்) கிடைக்காமல் போகலே நான்கு வேதங்களிலும் தேடியும் அது கிடைக்கலே? அதுக்கு, என்னா அர்த்தம்னா? கடவுள் இருக்குதுன்னு வேதத்தில் ஒரு வார்த்தை கூட இல்லே? அவன் எப்படி இருக்கும்னான்?

கடவுளுக்கு உருவமே இல்லேன்னுட்டான். உருவமில்லாட்டா போகட்டும். அதுக்கு குணமாவது இருக்கணுமே? குணமும் இல்லே.அது எங்கே இருக்குது? அது எங்கேயுமே இருக்குது? எப்படிதெரியும்? உன்கண்ணுக்குப் படாது. (சிரிப்பு) கண்ணுக்குப்படாது போனாலும் மனசுக்காவது தெரிய வேணுமே? மனசுக்கும் எட்டாது (சிரிப்பு) நீங்கள் நல்லா கவனிக்கணும். அவன் எவ்வளவு அயோக்கியன் கடவுளைப் பரப்பினவன்கிறதை? (சிரிப்பு) ஒரு பண்டம் இருக்குது. அதுக்குகுணமில்லே. அதுக்கு உருவமில்லே. அது உன் கண்ணுக்குத் தெரியாது. உன் மனசுக்கும் எட்டாது. நீ அதை நம்புன்னா அதுக்கு என்னா அர்த்தம்? அதனாலேதான் கடவுளை எவனும் நம்பறதில்லே? யாராவது நம்புகிறாங்களோ?

கடவுள் பேரிலே பாரத்தை போட்டு கடவுளுக்குச் சர்வசக்தி இருக்குது, அது பார்த்துகிட்டும் அப்படீன்னு சொல்லி யாராவது எந்தக் காரியத்தையாவது நம்புகிறானோ? கொஞ்சம் தலை வலிச்சா டாக்டர் கிட்டே போறான். கொஞ்சம் மயிர் முளைச்சா பரியாரிகிட்டேபோய் சிறைச்சிகிறான் (சிரிப்பு) அது (மயிர்) வந்துக்கிட்டே இருக்குது. இவன் சிறைச்சிகிட்டே இருக்கிறான் (சிரிப்பு) எந்தநோவு வந்தாலும் உடனே இவனுக்கு என்ன காரியம் வேணுமானாலும் இவனே முயற்சிக்கிறான். என்னா சொல்லுகிறேன் என்றால்? சர்வசக்தியுள்ள கடவுள், அவருக்கு எல்லாம் இருக்குது, அவரில்லாமே ஒண்ணும் அசையாது அப்படீன்னு வாயிலே சொல்றானே தவிர அவன் நம்பி (கடவுள் செயல்னு) ஒருத்தனும் இருக்கலே இருக்க முடியாது.

மனித சுபாவத்திலே, கடவுளை நம்பிகிட்டு கையைக் கட்டிகிட்டு எவனும் இருக்கமாட்டான். இருந்தால் சோற்றுக்கு என்ன வழி? அப்புறம் சம்பாதித்தலுக்கு என்னமார்க்கம்? இன்னொருத்தன் கிட்டே இருந்து எப்படி தப்பிச்சிக்குவான்? இதுபோல. உங்களுக்கு உதாரணமாக ஒன்றுசொல்றேன். ஜாதி இருக்குதுங்கிறான். பாப்பானும் சொல்றான் ஜாதி இருக்குதுனு. மற்றவனும் சொல்றான் ஜாதி இருக்குதுனு. எங்கேயாவது ஜாதி இருக்குதோ? எந்த ஜாதிக்காரனாவது ஜாதிக்கு இன்ன இன்ன யோக்கியதை உண்டு அப்படீன்னு நினைச்சி அதுபோல எவன் நடந்துக்கிறான்? நிறையா பாப்பான் வேஷம் போட்டுகிறான். தானே மேல் ஜாதின்னு சொல்லிக்கிறான். பாப்பான் என்பதற்கு ஆதாரம் இருக்குது. சரி, ஜாதிக்குன்னு சொல்ற, இருக்கின்ற ஆதாரப்படி எவன் நடந்துகிறான்

நமக்கும் ஜாதி இருக்குது. நமக்கும் இன்னின்ன மாதிரி இருக்க வேண்டியது என்று சொல்லுகிற முறை இருக்குது.

அந்தக் காரணத்தினாலே ஜாதின்னு சொல்லப்படுது. நம்மில் எவன் அந்த ஜாதிப்படி நடந்துக்கிறான்? நமக்கும் கீழே இருக்கிறான்னு, வைச்சிக்கங்க. தீண்டாதவன், தீண்டப்படாதவன் தாழ்ந்த ஜாதிக்காரன். அவனுக்கும் இலட்சியம் இருக்குது. ஆதாரமிருக்குது. எவன் அந்தப்படி நடந்துக்கிறான்? ஜாதின்னு சொல்லிக்கிறானே தவிர, ஜாதிக்கு ஏற்றபடி நடந்துக்கிறது எவனுமில்லே? ஆகவே இல்லாத ஒரு பண்டம் அவனவனுடைய முட்டாள் தனம், அயோக்கியத்தனம், சுயநலம் இந்தக் காரணமாக ஏதோ (கடவுள்) இருப்பதாக மற்றவனுக்குச் சொல்லிக்கிறது. தாமும் கஷ்டப்படுகிறது.

ஆகவே கடவுளைப் பற்றிச் சொல்லுவது என்று சொன்னால், உள்ளபடியே இல்லாத ஒரு பண்டத்தை இருக்கிறதாக வைத்து, மனித சமுதாயத்தினுடைய வளர்ச்சியையே பாழாக்கி, மக்கள் எல்லாம் அறிவற்றவர்களாக ஆக்கியிருக்கிறதை மாற்ற வேணும் என்கிறது தான், அதனுடைய அர்த்தமே தவிர இருக்கிற கடவுளை இல்லேன்னு சொல்லி உங்களை நம்பச் செய்ய வேணும் என்கிற எண்ணமல்ல. நீங்களே நம்புகிறதில்லை என்பதும் தெரியும். ஆனால் அதனாலே நம்பாமலே நிறைய பணம் காசைச் செலவு பண்றீங்க. நேரத்தைப் பாழாக்கிறீங்க. இரண்டுங்கெட்டானாசிலசமயங்களிலே அவஸ்தைப்படுகிறீங்க. வளர்ச்சி குன்றிப்போவுது. இதுதான் காரணம். நீங்க மாத்திரமல்ல நாங்க மாத்திரமல்ல. நாட்டிலே இரண்டு பேரும் இருக்கிறாங்க.
கடவுள் உண்டுன்னு நினைச்சிகிட்டு அதை நம்பாமே எல்லாம் தன் காரியத்திலே தான் ஆகனும்ன்னு நினைச்சிகிட்டு இருக்கிற மக்கள், உலகத்திலே ரொம்ப பேரு இருக்கிறாங்க. உலகம் பூராவையும் எடுத்துகிட்டால், 300 கோடிக்கு மேலே (1968ல்) ஜனங்கள் இருக்கிறாங்க. அதில் ஏறக்குறைய 200 கோடி பேர் கடவுள் இருக்குதுன்னு நினைக்கிறான். கடவுளை நம்பறான். முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் இவர்கள் மிகப் பெரிய எண்ணிக்கையுள்ளவங்க. இவுக அத்தனை பேருக்கும் கடவுள் உண்டு என்கிற எண்ணம் உடையவர்கள். ஒரு மனுஷன் தன்னை ஓர் கிறிஸ்தவன்னா அவன் கடவுளை நம்புகிறவன்தான் கிறிஸ்தவன்.

ஒரு மனுஷன் தன்னை ஓர் முஸ்லீம்ன்னா இஸ்லாம்னு சொன்னான்னா கடவுளை நம்பறவன் தான் இஸ்லாம். ஆனதினாலே முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் எல்லாரும் கடவுளை நம்புகிறவங்கதான். அப்படி நம்பக்கூடிய மக்கள் இருக்கிறார்கள். ஏறக்குறைய 200 கோடி மக்கள். கடவுள் இல்லை என்கிற மக்கள் ஒரு 100 கோடி மக்கள் இருக்கிறாங்க. கொஞ்ச நஞ்சமல்ல, மூன்றிலே ஒரு பங்கு மக்கள் இருக்கிறாங்க. ரஷ்யாவை எடுத்துகிட்டா 30,40 கோடி ஜனங்கள் இருக்கிறாங்க. சைனாவை எடுத்துகிட்டா 60 கோடி 70 கோடி மக்களிலே 50,60 கோடி மக்கள் கடவுள் இல்லேன்னு நினைக்கிறவங்க. ஜப்பானிலே 8,9 கோடி மக்களிலே 6 கோடி மக்களுக்கு கடவுள் இல்லேங்கிறவங்க. பர்மாவிலே இருக்கிற பௌத்தர்களில் பெரும்பாலோர் கடவுள் இல்லேங்கிறவங்க. இலங்கையிலே - கொழும்பிலே இருக்கிற ஜனங்கள் அதிலே பெரும்பாலான மக்கள் கடவுள் இல்லேங்கிறவங்க.

கொள்கையின் காரணமாக சிலபேர் கடவுள் இல்லேங்கிறவங்க. ஆராய்ச்சியின்காரணமாக சில பேர் கடவுள் இல்லேங்கிறவங்க. இந்த பர்மாக்காரர் அவுங்க எல்லாம் கொள்கையின் காரணத்தினாலே, பௌத்த கொள்கைகாரர்கள் அவுக பௌத்த கொள்கைக்கு கடவுள் இல்லேபுத்தரை பின்பற்றுபவர்கள்.புத்தர் கடவுள் இல்லேன்னு சொல்லி விட்டு போயிருக்கிறார். எப்படியோ அவர்களுக்குக்கடவுள் இல்லே.

  ரஷ்யக்காரர் ஆராய்ச்சியின்படி கடவுள் இல்லேன்னு ஆரம்பிச்சாங்க. அந்த ரஷ்யா நாட்டிலே உள்ளவங்க. 100க்கு 99 பேரும் கடவுள் நம்பிக்கை இல்லாதவங்க. ஆகவே ஏறக்குறைய உலகிலே 2 பங்குகாரர் கடவுள் நம்பிக்கைக்காரர். மூன்றில் ஒரு பங்குபேர் (கடவுளை) நம்பாதவங்க. நடவடிக்கையிலே நம்புகிறவனுக்கும். நம்பாதவனுக்கும் ஏதாவது பேதம் காணுகிறீங்களோ? அவன் (நம்பிக்கைகாரன்) கும்பிடுகிறதைத் தவிர,அவன் தொழுகிறதைத் தவிர, அவன் கடவுளை பிரார்த்தனை பண்றதைத் தவிர காரியாதிகளில் கடவுளை நம்புகிறோம். கடவுள் நம்பிக்கைபடி நடந்துகிறான் அப்படீன்னு நம்மில் யாரையாவது காணமுடிகிறதோ? எனவே தான் அதன் பேராலே மனிதன் ஏன் இவ்வளவு மூட நம்பிக்கைக்காரனாக, அறிவில்லாதவனா இருக்க வேண்டியதாகிறது. நம்மைப் பொறுத்தவரையிலும் மற்றவர்களைப் பற்றி நாம அதிகமாய் பேசறதில்லை. கிருஸ்தவங்களைப் பற்றியோ, இஸ்லாமியர்களைப் பற்றியோ, அவர்களிடையிலேயோ நாம கடவுள் இல்லேங்கிறதைப் பற்றி பேசுவதில்லை. அவுகளா ஏதாவது வந்தாங்கன்னா கேட்கிறோம். சரின்னுட்டுப் போயிடறாங்க. நாமாபார்த்து அங்கேபோயி அவர்களிடையே நம்ம பிரச்சாரம் செய்யப்போறதில்லை.

நம்ம மக்களிடையே தான் இதை (கடவுள் இல்லை என்பதை) பிரச்சாரம் பண்றோம். நம்ம மக்களிடையே தான் இதைப் பற்றிப் பிரச்சாரம் பண்றோம்.அப்படி பிரச்சாரம் பண்ண வேண்டிய அவசியம் என்னான்னா? கடவுளை நம்புகிறவங்களிலே கூட ஒரு முஸ்லீமும், ஒரு கிருஸ்தவர்களும் எப்படி நடந்துகிறார்களோ அதைவிட 100 பங்கு கேடாய் நாம நடந்துக்கிறோம். முஸ்லீமை எடுத்துகிட்டா நாம சொல்ற குணம் தான் கடவுளுக்கு அவனும் சொல்லியாகணும். நம்மகண்ணுக்குத் தெரியாது மனசுக்கு எட்டாது நம்பித்தான் ஆகணும்னு. கிருஸ்தவரை எடுத்துக்கிட்டாலும் நம்ம கண்ணுக்கு தெரியாது. மனசுக்கும் கண்டுபிடிக்க முடியாது. நம்பித்தான் ஆகணும்னு, அப்படீன்னு. ஏன்னா அவனுங்க எல்லாம் கடவுளை நம்புகிறவங்க. நம்பிக்கைகாரருன்னு Believer  ன்னு பேரு. நம்பிக்கை காரர்ன்னு சொன்னாலே, கடவுளை நம்புகிறவர்கள்ன்னு தான் பேரு.

ஆனாலும், அவர்கள் அதனாலே ஒண்ணும் தங்கள் அறிவைச் செலுத்துகிறதில்லே. ரசா பாசமா ஒண்ணும், முட்டாள்தனமா ஒண்ணும், நடந்துகிறதில்லே. ஏதோ ஓர் சம்பிரதாயப்படி இருக்கிறாங்க.அவுககிட்டே நமக்கு வேலையுமில்லே. நம்ம ஆளுகள் அப்படி அல்ல. நம்ம ஆளுகளுக்கு ஒரு முறையே கிடையாது கடவுள்ன்னா- என்னா வேணும்னாலும் பண்ணுவான்? எப்படிவேணும்னாலும் நடத்திக்குவான்? ஆயிரம் கடவுளைச் சொல்றான். ஒண்ணு அல்ல, இரண்டல்ல. இன்னும் தினந்தினம் புதுபுதுக் கடவுளை உண்டாக்கிகிட்டுவர்ரான். அசிங்கமாய் கடவுளை கற்பிக்கிறான். மனுஷனைப் போலவே தான் கடவுளை வைக்கிறான்.

விஷ்ணுவையும் கிருஷ்ணனையும் கூட மனுஷனாட்டம் தான் கடவுள்ன்னு கற்பிக்கிறான். மனுஷனுக்குள்ள எல்லா குணமும்.ஆனால் மிக உயர்ந்த தன்மையை உண்டாக்குகிறான். கிறிஸ்தவர்களுடைய கடவுளுக்கும், இஸ்லாமியர்களுடைய கடவுளுக்கும் உயர்ந்த தன்மையை வைக்கிறான். இவன் இன்னின்னவன், அவன் அன்பானவன் எல்லாரையும் அவன் ஒன்று போல நடத்துகிறவன் என்று ஏதேதோ. ஆனால் நமக்கு நம்ம மக்களுடைய கடவுள் எப்படின்னா? மனுஷன் மாதிரியேதான், னுஷன்லே கூட உயர்ந்த தன்மையுள்ள மனுஷன் எப்படியோ அவனாட்டம் தான் கடவுளைக் கற்பித்திருக்கிறான். நம்மல்லே பேருபெற்றமனுஷன்யாரு? ஒழுக்கமிருக்காது, திருடுவான். விபசாரித்தனம்கிறதைச் செய்வான்,
பழிவாங்கிறதுங்கிறதைப் பண்ணுவான்

திருட்டுத்தனமா மடத்தனமா செய்கிற காரியங்கள் நம்ம மக்கள் என்னென்ன காரியங்களைச் செய்கிறார்களோ அவ்வளவையும் செய்வான். மனிதனைப்போலவே கடவுளை வைச்சாலும் மனிதனிலேயே கொஞ்சம் உயர்ந்த மனிதனாகவாவது கடவுளை வைச்சிருக்கலாம். அப்படியில்லை. மனுஷனுக்கு வேண்டியது எல்லாம். அதுவும் மனுஷனுக்கு மூணுவேலை சாப்பாடு வேணும்னா சில கடவுளுக்கு ஆறு வேளைசாப்பாடுங்கிறான் (சிரிப்பு) மனுஷனுக்கு ஒரு தடவை கலியாணம்போதும்னா அவன் கடவுளுக்கு வருஷா வருஷம் (கலியாணம்) பண்ண வேணும்கிறான். (சிரிப்பு) மனுஷனுக்கு ஒரு பொண்டாட்டி இருந்தால் போதும்ன்னா. அவனுக்கு (கடவுளுக்கு) 10 பொண்டாட்டி, 100 பொண்டாட்டி, 1000 பொண்டாட்டீங்கிறான்.
மனுஷன் அன்பாயிருக்கனும்னா கடவுள் அவனைக் கொன்னான், இவனைக் கொன்னான் எத்தனாயிரம் பேரைக் கொன்னான். இத்தனை கோடி பேரைக் கொன்னான். அப்படீங்கிறான். மனுஷன் பொறுமையாய் இருக்க வேணும். பழிவாங்குகிற எண்ணம் கூடாதுன்னா, கடவுளுக்கு பழிவாங்குகிற எண்ணம். கொல்றதுக்காகவே வந்தான்னு இவனை ஒழிக்கிறதுக்காகவே வந்தான்னு. அதுக்காகவே இன்ன காரியம் பண்ணினான். என்னா இதெல்லாம்? என்னா அவசியம்? ஒரு கடவுள்ன்னு உயர்ந்த தத்துவத்தைப் பேசி, உயர்ந்த தன்மைகளைச் சொல்லி, மனிதனுக்குள்ளே பூதவைச்சி, நம்பச் செய்து போட்டு, அப்புறம் அயோக்கியத்தனமான முறைகளை கற்பனை பண்றதும், நடக்கிறதும், செய்கிறதும், என்ன காரணம்?

இப்ப ஒரு நண்பர் து. மா. பெரியசாமி சொன்னார் நாளைக்கு வரப்போற மாமாங்கத்தைப் பற்றி. என்னா அது யோக்கியதை? கடவுள் நம்பிக்கைக்காரன் மாமாங்கத்தைப் பற்றி சொல்லலாமோ? கடவுள் இருக்கிறாரு. அவருகிட்டே இந்த நதிகள் எல்லாம் போயி கடவுளிடம் வந்து அழுது, உலகத்திலே இருக்கிறவன் எல்லாம், அவன் பாவத்தைக் கொண்டாந்து கழுவி விட்டுட்டுப் போறானே எங்களிடத்திலே, நாங்கள் அந்த பாவத்தை எங்கே போயி கழுவுகிறதுன்னுகேட்டுது?அதற்கு கும்பகோணத்திலே நான் தண்ணிவிடறேன். அதிலே நீ கழுவுன்னு (பலத்த சிரிப்பு) அவன் சொல்லி (கைதட்டல்) அதை நம்பி இந்த முண்டங்கள் எல்லாம் போயி தண்ணியிலே குளிச்சிட்டு வர்ராங்க. அப்படீன்னாஅவன் கடவுளை நம்பறவன்னு அர்த்தமா? கடவுள் இருந்தா அவுங்கதான் தண்ணி விட வேணுமா? (சிரிப்பு) மனிதனுடைய பாவங்கள் எல்லாம் தீர்க்கிறதுன்னா அங்கேதான் வரச் சொல்ல வேணுமா? இல்லே, பாவங்கள் தீர்க்கிறதுக்கு அந்தக் தண்ணீரிலே ஒரு தடவை முழுகினா போதும்ன்னா எவன் யோக்கியனாயிருப்பான்? (சிரிப்பு) எவன்இருப்பான்? பண்றதெல்லாம் பண்ணறான், ஒரு தடவை முழுகினா தீர்ந்து போகுது. (சிரிப்பு) (கைதட்டல்)

அது ஒரு மனுஷன் யோக்கியனாக இருக்கச் செய்யப்படுகிற காரியமா? மற்றவங்களாவது யோக்கியனாக இருக்க வேணும். நல்லவனாக இருக்கணும். அப்படின்னாவது பேசிக்கிறதுக்காவது மற்ற மதக்காரன் இடம் கொடுக்கிறான். இவன் அப்படியில்லையே. என்ன வேணும்னாலும் பண்ணு. ஒரு முழுக்குப் போட்டா தீர்ந்து போவும்ன்னா? (சிரிப்பு கைதட்டல்)

கடவுள்கள் என்று சொல்றது, காவிரி ஒரு கடவுள். கங்கை ஒரு கடவுள். யமுனை ஒரு கடவுள். அது ஒரு கடவுள், இப்படீன்னு ஒரு பத்து(நதி) கடவுளைச்சொல்றது.அதுகளுக்குப் பாவம் வந்திட்டுதுன்னா?அதுகளை எல்லாம் நாம கடவுளாய் கும்பிடறது. அதுக்குப் பாவம் இருக்குதுன்னு சொன்னா அது எப்படி கடவுள்ன்னு ஆகும்? எந்தச் சிவன் சொன்னானோ, அவன் பாவத்தைக் கழிக்கிறதுக்கு அவன் தபசு பண்ணியிருக்கிறான். அவனும் கஷ்டப்பட்டிருக்கிறான். இப்படியாக ஒரு கடவுளைச் சொன்னான்னா, கடவுள் தன்மைன்னு என்று சொல்லும்படியான ஒரு கடவுளைச் சொல்லவே இல்லை எவனும்? கடவுளை நம்பும்படிச் செய்ய என்னென்னத் தன்மையைச் சொல்லி நம்மை நம்பச் சொல்றானோ அந்தக் காரியங்கள் நடைபெறும் படியாக ஒரு கடவுள் கூட இல்லை நாட்டிலேஅதுமாத்திரமல்ல அக்கடவுளின் அயோக்கியத்தனம், முட்டாள்தனம், நாமெல்லாம் அய்யா அவர்கள் எல்லாம் சொன்னமாதிரி நமக்கெல்லாம் கடவுள் இந்த புராணங்களிலே வர்ரது சாஸ்திரங்களில் வர்ரது தான் கடவுள். பக்திப்படி உண்டாக்கின கடவுளுக்கும் நமக்கும் சம்பந்தமே இல்லை

நாம யாரும் அப்படி நினைக்கிறதில்லை. நமக்குக் கடவுள் எதுன்னா? ராமாயணத்திலே வர்ரவன் கடவுள்.பாரதத்திலே வர்ரவன்கடவுள். கந்த புராணத்திலே வர்ரவன் கடவுள். இன்னொரு புராணத்திலே வர்ரவன் கடவுள். இந்த மாதிரி ஏதோ புராணம் என்கிற முறையிலே எழுதி வைச்ச கதைகளிலே யாராரு பாத்திரங்கள் வருகுதோ அதுங்க எல்லாம் நமக்குக் கடவுள்.அந்தக் கடவுளுக்கு எவன் எவன் விரோதம்ன்னு சாஸ்திரங்களை உண்டாக்கினானோ, அவனுங்க எல்லாம் நமக்கும் எதிரி. என்ன நியாயம்?

கடவுளிலே நமக்கு வேண்டியவன். வேண்டாதவன் கதையிலிருந்துவர்ரவன். இராமாயணத்தை எடுத்துகிட்டா ராமன்கடவுள். அவன் பொண்டாட்டி (சீதை) கடவுள். (சிரிப்பு) வைச்சுக்கங்க பேச்சுக்கு. கடவுளாராமனை உண்டாக்கி இருக்க வேணுமே. கடவுளுக்கு இறப்பில்லே பிறப்பில்லே. வைச்சிக்கோ, பிறப்பு கொடுப்பான்னு. அவுக அப்பனுக்குப்பிறந்தான்னு சொல்லமுடியலே அதிலே. (சிரிப்பு) எவனுக்கோ பிறந்தான். எல்லாரும் ஒத்துக்கிறான் அதை. ஏண்டா அவன் (ராமன்) அப்படி கண்டவனுக்குப் பிறக்க வேணும். கடவுளா இருந்து அவன் அப்பனுக்கு பிறக்க முடியாதுன்னு போயிட்டான்னா? (சிரிப்பு) ஏன்னா அவன் அப்பன் கிழவனா போயிட்டான் (சிரிப்பு) ஆனதினாலே அவன் (தசரதன்) தன் பெண்டாட்டிகளை பாப்பானுங்களுக்கு விட்டுக் கொடுத்து, பிள்ளை உண்டாக்கிக்கிட்டான். (சிரிப்பு) (கைதட்டல்).

இந்த மாதிரி கதையை உண்டாக்கியிருக்கிறான். அவன் இருந்தானா போனானா என்பதை நாம ஒத்துகிறதில்லே. கதை எழுதினவன் ஏன் அந்தமாதிரி எழுதவேணும்? ஏன் சொல்றேன்னா?முட்டாளாய் இருக்கிற போதுகற்பிக்கப்பட்டகற்பனைகள். இப்பஅறிவு வந்துள்ளபோது, அவனைத் தள்ளமுடியலே. அதனாலே பிழைக்கிறதுக்கு ஆளாகி விட்டானுங்க சிலபேரு. அறிவு வந்துள்ளபோது இதை நாம மாத்தலாமான்னா மாத்தினால் அவனுடைய உயர்வு போயிடுது. அதைக் கட்டிகிட்டு அழுகிறான். அவனோடு போகட்டும் .அவனுக்கு (ராமனுக்கு) ஒரு பொண்டாட்டி (சீதை) அந்த பொம்பளையையாவது அவள் பதிவிரதைன்னு பண்ண வேண்டாமோ? அவுசரியாய் போகாமல் இருந்தாள்ன்னு. அவளை அந்த எதிரியாக இருக்கிற இராவணனுக்கு கெட்ட பேரு வரட்டும்ன்னு என் பொண்டாட்டியைக் கொண்டு போயி அவன் சினை பண்ணி அனுப்பிச்சிட்டான் (சிரிப்பு) அப்படீன்னு உட்கார்ந்துகிட்டு (ராமன்) அழுகிறான்னா? (சிரிப்பு)

அதெல்லாம் கடவுள் தன்மைக்கானதா அது? ஏதோ பழிவாங்குகிற முட்டாள்தனமான கதைக்காக அதைச் சொன்னானே தவிர உள்ளபடியே அது கடவுள் தன்மைக்கு சொல்றாப்பிலே இருந்தால், கடவுள், கடவுளுடைய பொண்டாட்டி அதை எவனோ தூக்கிக்கிட்டுபோயி சினை பண்ணி (வெடிசிரிப்பு) (கைதட்டல்) எதிரியைஅவன்ஆளுகளையும்அவனையும் (இராவணனைக்) கொன்னு போட்டு, அவளைக் கூட்டிகிட்டுவர வேண்டியதாச்சி இப்படீன்னா? அப்புறம் எங்கே இவற்றைக் கடவுள் தன்மை என நினைக்கிறது நாம. ஏன் அந்தப்படிக்கெல்லாம் வந்து பிறக்கவேணும்? எதுக்குச் சொல்றேன்னா? இந்த கதைகள் எல்லாம் முட்டாள்தனமான கற்பனைகள்.

பிறந்தான்னான். கடைசியில் அவன் செத்தான்னே கதையை முடிச்சிட்டானே? (ராமன்) ஆற்றிலே விழுந்து செத்தான். கடவுள்ன்னா சாவானேன்?அதே மாதிரி இப்ப பாரதத்திலே வர்ர கதைகள் இப்ப நமக்கு கடவுள். கிருஷ்ணன் என்கிறவன். இந்தக்கதையினாலே தான் இராமனும், கிருஷ்ணனும் கடவுளாக ஆனானே தவிர, கடவுள்தன்மையினாலே, வேறு ஏதோ ஒரு தத்துவத்தினாலே, கடவுள் தன்மையைக் காணுவதற்கு ஒண்ணுமில்லே. கிருஷ்ணனை பிறக்கிறதுக்கு என்னென்னமோ கோளாறைச் சொல்லி, அவனை உண்டாக்கிட்டான். அவன் பிறக்கும் போதே அவனைக்கொல்றதுக்கு எவனோ வந்து, அவனைக் கொண்ணு எவனோ ஒளிச்சி வைச்சான்னு என்னமோ ஆனான். அவன் சின்னப்பையனாக (கிருஷ்ணன்) இருக்கிற போதே, கண்டதை எல்லாம் கதையாக அவன்மேலே வைச்சி அவன் என்னென்னமோ பண்ணினாங்கிறான். அவன்எத்தனையோ பொம்பளைங்களை எல்லாம் அவன் கெடுத்தான்னு எழுதி (சிரிப்பு) பதினாயிரம் பொம்பளைங்களை இரண்டுமூணு தடவையாய்க் கலியாணம் அவன் பண்ணிகிட்டாங்கிறான். (சிரிப்பு) நான்என்னசொல்றேன். சுத்தமடையனா, அயோக்கியனா, இருக்கிற போது உண்டாக்கினது இக் கதைகள் என்பதற்கு நான் ஆதாரம் சொல்றேன் அவ்வளவுதான்.

முட்டாள் கடவுளை உண்டாக்கினான்னு சொன்னேனே அதுக்காகதான் அவுங்களை நான் சொல்றேன். என்ன நியாயம்? அப்படி எல்லாம் சொல்லிப் போட்டு அவன் (வெண்னை) திருடினான்னு எழுதி, அவன் திருடினதுக்கு ஒரு பண்டிகையை நாம் கொண்டாடுகிறதுஅதை. அவன்கண்ட பொம்பளைங்களைக் கெடுத்தான்னு எழுதினதுக்கு, அதுக்கு ஒரு பண்டிகை நாம கொண்டாடறது. அதை நாம கிருஷ்ணலீலை ன்னு நாம அதைக் கொண்டாடுகிறோம். இவைகள் எப்படியோ தொலைஞ்சி போகட்டும். அவனை (கிருஷ்ணனை) முடிவு என்னா பண்ணினான்? செத்தான்னு எழுதிட்டான். கிருட்டிணன் என்னாச்சின்னா செத்துப் போனான். ஏன் செத்தான்னா? ராமனாவது நான் வந்த காரியம் ஆயிச்போச்சின்னு ஆத்திலே விழுந்தான் செத்தான். கிட்டிணன் சாகிறபோது அவன் பாட்டுக்கு அவன் படுத்து தூங்கிகிட்டு இருந்தான். எவனோ ஒரு வேடன் அம்பால் ஒரு பட்சியைப் பார்த்து அடிக்கிறதுக்கு,இவன்காலைப்பார்த்தான்.அதுஅவனுக்கு (வேடனுக்கு) குருவியாட்டம் தெரிஞ்சிது. அதை அடிச்சான். இவன் (கிருஷ்ணன்) காலிலே அம்பு பொத்துகிட்டு போயிட்டுது. அது ரணமாச்சி. அது விஷமாயிப் போச்சி. என்னென்னமோ வைத்தியம் பண்ணினாங்க முடியலே. செத்துப் போயிட்டான். அப்படிக்கொன்னான்னு அந்த கதையை முடிச்சாங்க.

பாரதத்திலே பஞ்ச பாண்டவர்கள் கதை வருது. பாண்டு பொம்பளைங்ககிட்டே படுக்க முடியாது. அவனுக்கு பிள்ளைவேணும். எவன் கிட்டேபோயாவது பிள்ளை பெத்துக்கலாம் என்பது சாஸ்திரம். தேவர்கள் வந்து குந்திக்குபிள்ளை கொடுத்தாருங்கிறான் கதையிலே. எமன்வந்து பிள்ளை கொடுத்தான் அவளுக்கு. அவன்தான் தர்மன் கிறான். வாயு வந்து ஒரு பிள்ளை கொடுத்தான். அந்தகாத்துக்கு பிறந்தவன் தான் பீமன்னு பேரு. இந்திரன் கிட்டேபோயி ஒரு பிள்ளை பெத்தாள் அவனுக்கு பேருதான் அர்ச்சுணன். அப்புறம் அசுவணி தேவர்களிடம் இரண்டு பேற்றை பெற்றாள் குந்தி. அவன்க பேருதான் நகுலன் சகாதேவன் என்கிறவன். இதையெல்லாம் விட அதிசயமான சங்கதி சூரியன்கிட்டேபோயி ஒரு பிள்ளை பெத்தாள் (சிரிப்பு) சூரியனுக்கு அவன் தான் கர்ணன் என்கிறவன். இதையெல்லாம் நீங்கள் நம்புகிறீங்களோ?

இந்த எமன் எங்கேயிருக்கிறான்? வாயு எங்கே இருக்கிறான். இவுக இங்கே இருந்ததாககதை. இவுகஎல்லாம் டெல்லிகிட்டே அஸ்தினாபுரம் என்கிற ஊரில் இருந்ததாக கதை. இங்கே இருந்து ஒரு 1500 மைல், 1700 மைலிலே. இது பூலோகத்திலே. இவுங்க நான் சொல்ற பசங்களெல்லாம் எங்கே இருக்கிறாங்க? மேல் லோகத்திலே (பலத்த சிரிப்பு, கைதட்டல்)இருக்கிறாங்க? மேல் லோகங்கிறது கொஞ்ச தூரத்திலியா? அவன் சூரியன் இருக்கிற இடம் 9 கோடி மைல் தூரம். அப்புறம் அதுகிட்டே இங்கே ஒருத்தனுமே கிடையாது. இந்திரன் இருப்பது தேவலோகத்திலே. எமன் இருக்கிறது அவன் எங்கே இருக்கிறானோ தெரியாது. (சிரிப்பு) எவன் கண்ணுக்குப் படறானோ அவன் எங்கு இருக்கிறானோ தெரியாது (சிரிப்பு)அவளுக்கு (குந்திக்கு) இப்படி எல்லாம் பிள்ளை பிறந்தாங்கன்னாஅவன் (சூரியன்) வர முடியுமா இங்கே?இவன் பொம்பளைங்க கிட்டே வந்து படுக்கமுடியுமா? இடமிருக்குதா (சிரிப்பு) (கைத்தட்டல்) அவனுக்கு ஒண்ணு, இவனுக்கொண்ணுன்னு பிள்ளை இப்படி வைச்சிகிட்டு பிறந்ததுன்னு படிக்கிறான் கதையை. நம்ம முட்டாளும் உட்கார்ந்துகிட்டு கேட்கிறானுங்க. (சிரிப்பு) (கைதட்டல்) நாம ஏன் சொல்லக் கூடாது.

அக்கதையை படிக்கிறவங்க எல்லாம் அயோக்கியப் பசங்கன்னு. அதை நம்பறவனுங்க வணங்குகிறவங்க எல்லாம் முட்டாள் பசங்கஅப்படீன்னு நான் சொன்னா என்னா தப்பு? அல்லன்னு யாராவது சொல்ல முடியுமோ? என்னா இது? எவ்வளவு அக்கிரமம்? பாட்டிங்க கதை சொல்லுவாங்களே? இந்த பூதம் வந்தது இந்த பிசாசு வந்ததுன்னு. அது இது வந்ததுன்னு பிள்ளைகளுக்கு கதை. அந்தமாதிரி கதை இவைகள். 9 கோடி மைலிலிருந்து சூரியன் வருகிறான் இங்கே இவள் (குந்தியிடம்) பிள்ளை கொடுக்கிறதுக்காக (சிரிப்பு) அவன் சூரியன் அங்கு இருக்கிறபோதே சூரியனின் வெப்பத்தால் இங்கு நெருப்பு பிடிச்சிக்குது. 9 கோடி மைலில் இருக்கிறபோது. ஒரு 107 டிகிரி வெயிலு அடிச்சால், தானா பிடிச்சிருக்குது நெருப்பு. ஏதாவது அசைஞ்சா உறைஞ்சா. பத்திரிகையிலே இதைப் பார்க்கிறோம் நாம. விசாகப்பட்டினத்திலே வெயிலடிச்சி நெருப்பு புடிச்சிக்கிச்சி அங்கே மரம் விறகு நெருப்பு பிடிச்சிகிச்சூன்னு. காரணம் என்னான்னா 120 டிகிரி வெயிலு அப்படீங்கிறான். அவன் எங்கிருக்கிறான்னா 9 கோடி மைலுக்கு அந்தப்புறம். அவன் இங்கே வந்து இவள்கிட்டே (குந்தியிடம்) படுத்தான்னா உலகம் மிஞ்சுமா முதலாவது. (வெடிச்சிரிப்பு) அதை எதாவது அறிவுக்குப் பொறுத்தி பேசுகிறானுங்களா? இதே மாதிரி சிலர் சைவ முறையிலே கந்தனுக்கு ஓர் கதை சொல்றான்.

சிவனுக்கு ஒரு பிள்ளை பிறந்தான். அவன்பேரு கந்தன் அப்படீன்னு. அவ்வளவோட விட்டுட்டா பரவாயில்லே. அந்த கதையில் எவ்வளவு அசிங்கம் பண்றான். தேவர்கள் எல்லாம் போயி சிவனைக் கேட்டுகிட்டாங்களாம். அந்த அசுரர்களாலே ஏற்படுகிற தொல்லை எங்களாலே சகிக்க முடியலே. எங்களுக்கு தேவ சேனாதிபதி வேணும் ஒருத்தனை பெத்துக்கொடும்னானாம்அவன் சரி அப்படியானா பலமுள்ள பிள்ளையைப் பெத்துக் கொடுக்கிறேன்னானாம். சிவன் கூப்பிட்டு அவன் பொண்டாட்டி (பார்வதி) கிட்டே படுத்தானாம். (சிரிப்பு) படுத்தான், படுத்தான் ஆயிரம் வருஷம் படுத்து அதே வேலையாய் (பலத்த சிரிப்பும் கைத்தட்டலும்) அதே வேலையாய் இருந்தானாம். (கைதட்டல்) அப்படி இருந்தும் கூட அவளுக்கு கர்ப்பம் ஆகலே. இவனுக்கு விந்து ஸ்கலிதம் ஆகலே. (சிரிப்பு) அப்புறம் தேவர்கள் எல்லாம் பயந்துகிட்டாங்களாம்.

ஆயிரம் வருஷம் பொறுத்தும் ஆகலே, ஒரு சமயம் ஆச்சின்னா அவன் எத்தனை பெரிய ஆளாயிருப்பான். நம்மளையும் கூட ஒழிக்கிறவனாயிருப்பான். (சிரிப்பு) ஆனதினாலே நாம (தேவர்கள்) போயி சிவனை கேட்டுகிட்டு வேண்டாமப்பா வேலையை நிறுத்திப்போடு (சிரிப்பு) அப்படீன்னு போயி சிவனைக் கேட்டாங்களாம். அவன் சிவன் இவுங்களை நிபந்தனை கேட்டானாம். ஏண்டா நடுவிலேவந்து இந்த மாதிரி சொல்றியே (சிரிப்பு) எப்படியப்பா முடியும்? என்னமா நிறுத்த முடியும்ன்னானா? எப்படியாவது தயவு செய்து செய்யணும்ப்பா இல்லாட்டா உலகமெல்லாம் நாசமாய்ப் போயிடும்னு. அசிங்கமான அந்த இடத்திலே. அந்த இந்திரியம் ஸ்கலிதமானால் அதை யாரு தாங்கிறது? அது அப்படி போயிடுமே, இப்படி போயிடுமேன்னு மிரட்டினானாம் சிவன். தேவர்கள் எல்லாம் அதை (இந்திரியத்தை) நாங்கள் தாங்கறோம்னாங்களாம். (சிரிப்பு கைதட்டல்) சிவன் இந்திரியத்தை ஒவ்வொருத்தன் கையிலேயும் ஊற்றினானாம். (சிரிப்பு) ஒவ்வொருத்தனும் குடிச்சானாம். (சிரிப்பு கைதட்டல்) எல்லாருக்கும் பிள்ளையாயிப் போச்சாம் வயிற்றிலே. (கைதட்டல்) இப்படி அசிங்கம். இதை கதையை பரப்புகிறவன் அயோக்கியன்னா கோவிச்சிக்குவீங்க. இதுக்கு என்னா சமாதானம்?

விஷ்ணுவே (சிவன் இந்திரியத்தை) வாங்கிக் குடிச்சான்னு எழுதியிருக்கிறான். அப்புறம் போயி நாங்கள் வேண்டாம் (கலவி) எனச் சொன்னதற்கு எங்களுக்கெல்லாம் (தேவர்களுக்கு) பிள்ளை ஆயிப்போச்சே. நாங்கள் என்னா பண்றதுன்ன கேட்டாங்களாம். சிவன் சொன்னானாம். காஞ்சிபுரத்திலே ஒரு குளம் இருக்குது. அதிலே (நீங்கள் போயி) குளிச்சீங்கன்னா இந்த கர்ப்பம் (கலைஞ்சி) போயிடும்ன்னானாம். எல்லாரும் போயி காஞ்சிபுரத்திலே போயி குளிச்சாங்களாம்அவுங்களுக்கெல்லாம் கர்ப்பம் போயிட்டுதாம். இப்படி கதையைச் சொல்றான். காஞ்சிபுரத்திலே அந்த குளம் பற்றி இருக்குது. இன்னைக்கும் திருட்டுப்பிள்ளைத்தாச்சிகளெல்லாம் போயி அந்த குளத்திலே குளிக்கிறாங்க. (சிரிப்பு) அவன்
அவ்வளவோடு விடலே கதையை. அந்த கர்ப்பமெல்லாம் வாய்க்காலாய் போய் கங்கையிலே விழுந்துட்டுதுங்கிறான். அது ஆறு வழியாய் போச்சிதாம். அந்த ஆறு தலமா ஆறு பொம்பளைங்க எடுத்து வளர்க்க ஆரம்பிச்சாங்க. எடுத்த உடனே அவைகள் குழந்தைகளாயிப் போச்சாம். அந்த குழந்தையை எடுத்த அந்த பொம்பளைங்க மாருலே பால் வந்திட்டுதாம். அதை (பாலைக்) கொடுத்தாங்களாம். ஆறு பேரு எடுத்துகிட்டு ஆறு குழந்தைகளுக்கு பால் கொடுப்பது தொல்லையாய் இருக்குதுன்னு எல்லா குழந்தைகளையும் ஒண்ணா சேர்த்தினாங்களாம். ஆறு தலையோட ஒரு குழந்தையாய் அது போச்சிதாம். அதனாலே தான் அவனை ஆறுமுகம்ன்னுதான் அவுக சொல்றதாம்.

இந்த மாதிரி எல்லாம் கதை எழுதினா அந்த கடவுளுக்கு இவ்வளவு மரியாதைன்னா எங்கெங்கே ஆறுமுகம், எங்கெங்கே சுப்ரமணியன் எங்கெங்கே முருகன் எங்கெங்கே தண்டாயுதபாணி வெங்காயம் பாணி, என்று பண்ணி வைச்சிருக்கிறானோ, அங்கெல்லாம் இந்தக் கதையைத்தான் சொல்றான். (சிரிப்பு) அது ஏதாவது ரகசியமாய் இருக்குதோ? இவன் படிக்கிற புராணத்திலே இருக்குது. அந்த புராணம் இல்லாட்டா கந்தனேது? இராமாயணம் இல்லாட்டா ராமன் இல்லே. பாரதம்இல்லாட்டா கிருஷ்ணன் இல்லே. கந்தன் இல்லாட்டா கந்த புராணம் இல்லே. அந்த புராணத்தை தான் சொல்றேன் நானு. இதெல்லாம் எப்படி மக்களுக்குப் பொறுத்தமுடையதாகும்? இந்தக் காலத்திலே, அதுவும்?

ஆகவே நாங்கள் இந்த மாதிரி கடவுளை நம்புகிறவனை முட்டாள் என்றும் அயோக்கியன் என்றும் மடையன்னு சொல்றதைப்பற்றி வருத்தப்படக் கூடாது நீங்கள். உடனே அந்த எண்ணத்தை விட்ற வேணும். ராமனாவது, கிருஷ்ணனாவது, கந்தனாவது கடவுளாவது வெங்காயமாவது, எனத்தான் நீங்கள் நினைக்கணுமே தவிர அய்யய்யோ, இப்படி சொல்றானேன்னு நீங்கள் நினைச்சீங்கன்னா, நகைமேலே நகை போட்டாப்பிலே முட்டாள் மேலே இன்னொரு முட்டாள் பட்டம் வந்தாப்பிலே. (சிரிப்பு) நாசமாக்கிறான். இவ்வளவு ஜனங்களை அந்தக்கதி ஆக்கிப்போட்டான். இவ்வளவையும் அவன் பண்ணிப்போட்டு அவன் (பாப்பான்) மேல் ஜாதியாயிருக்கிறான். என்னடான்னா? சாஸ்திரம்கிறான்.

ஜாதிப்படி நடந்துக்கிறானான்னா? நீ ஏன் அதைப் பற்றிக் கேட்கிறே என்கிறான்? இப்படியாக மனித சமுதாயத்தையே மடையர்களாக ஆக்குவதற்கு இந்தக்கடவுள் கருத்தும், கடவுள் சம்பந்தமான கதைகளும், காரணமாய் இருக்கிறதினாலே மக்கள் எல்லாம் பகுத்தறிவுவாதிகளாகி, நல்லபடி முன்னேற்றமடைய வேணும். மனிதனுக்குண்டான அறிவினுடைய பயனை மனிதன் பெறவேணும் என்கிறதுக்காக சொல்றோம் நாம. மனிதனுக்கு இருக்கிற அறிவுக்கு எவனும் இன்னும் எல்லைகாணலே? இன்னமும் காணலே? இன்னுமும் போகனும்ன்னு, அதிசயங்களையும், அற்புதங்களையும் கண்டுபிடிச்ச வண்ணமாய் இருக்கிறான். நீங்க பார்க்கிறீங்க
உலகத்தை சுற்றினான். வாரத்துக்கு இரண்டு தடவைங்கிறான். ஒரு மணிக்கு 5000 மைல் 4000 மைல் வரையிலும் பறக்கிறாங்கிறான். சந்திரனுக்குப் போயிட்டு வந்தான்ங்கிறான். அங்கிருந்து சாமான் எடுத்து வருகிறான். இதையெல்லாம் பொய்யின்னு சொல்லமுடியுமா? படத்தோடு போய் வந்ததை போடுகிறானே. இவ்வளவு காரியம் அவன் பண்றான். இங்கே இவன் இந்த கதையை நம்பிகிட்டு, சாமியைக் கும்பிட்டுகிட்டு, இருக்கிறானே என்னா அர்த்தம்? அப்படி (சாமி - கடவுள்) ஒண்ணு இருக்கிறாப்பிலே இருந்தால், அவனை விடவா இவன் புத்திசாலி? 9 கோடி மைலுக்குத் தூரத்தைப் பார்த்துக் கண்டுபிடிக்கிறான்?

உலகத்தை எல்லாம் சுற்றி வந்து சங்கதிகளை எல்லாம் தெரிஞ்சிகிட்டு வந்து சொல்றான். இவன் எங்கேயும் போகாமல் இங்கேயே இருந்துகிட்டு இவன் அங்கே கைலாசம், வைகுண்டம்சாமி, வெங்காயம்ன்னு மாணத்தைப் பார்த்துக் கும்பிட்டு கிட்டு இருக்கிறான்னா? (சிரிப்பு) இவன் என்னைக்கு மனுஷனாவான். சொன்னால் கோவிச்சுக்கிறானே தவிர நம்மை இவன் காட்டுமிராண்டின்னு சொல்றானேன்னு காட்டுமிராண்டி மாதிரி தானே இருக்கிறோம். காட்டுமிராண்டியாய் இருந்து ஜாதி ஒண்ணு இருந்தது. நீக்ரோன்னு கரேர்ன்னு இருப்பாங்க. உதடு எல்லாம் நல்லா தடிப்பமா இருக்கும். தலைமயிர் எல்லாம் சுருண்டு சுருண்டு இருக்கும். நீட்டினா வரும்விட்டால் சுருங்கிக்கும். அவன் இன்றைக்குப் பெரிய விஞ்ஞானியாய் இருக்கிறான். அவன் வெள்ளைக்காரனுக்கு மேலே போயிட்டான் .(நீக்ரோ) வெள்ளைக்காரன் பொறாமைப்படுகிற அளவிலே இருக்கிறான். வெள்ளைக்காரனை (அவன்) கொல்லறான். வெள்ளைக்காரன் தான் ஒஸ்தி இவனை மட்டம்னான் சொல்றான் அவனை.

அதுபோல ஒரு நீக்கிரோவை கொன்னால், பத்து வெள்ளைக் காரனை கொல்றாங்களே, நாங்கள் பத்து பேரு செத்தாலும் சரி எங்களால் ஆனதைச் செய்கிறோம்ன்னு இவனை (வெள்ளைக்காரனைக்) கொல்றான். அவ்வளவு மோசமாய் இருந்த காட்டுமிராண்டி ஜாதி. இன்னும் அவுக கதையெல்லாம் கேட்டால் அசிங்கமாயிருக்கும். அக்கா தங்கச்சியையே கலியாணம் பண்ணிக்குவாங்க. அப்படிப்பட்ட சமுதாயம் இன்னைக்கு பெரிய ஒரு ஆராய்ச்சியிலே புகுந்து, அற்புத அதிசயங்களைக் கண்டு பிடிக்கிற வேலையிலே இருக்கிறாங்க அவுங்க.

நாம 200 வருஷ காலம் வெள்ளைக்காரன் ஆட்சியிலே இருந்தும் கூட நமக்குப் புத்தியில்லையே. ஒரு நாள் அல்ல இரண்டு நாளல்ல, 200 வருஷம் இருந்திருக்கிறோம்.அவன்கண்டஅற்புதங்களை எல்லாம் நாம அனுபவிச்சிருக் கிறோம். அவன் காலத்திலேதான் ரயிலில் ஏறினோம். அவன் காலத்திலே தான் ஆகாய விமானம் ஏறினோம். அவன் காலத்திலே தான் சைக்கிள், மோட்டார்கள், எல்லாம் நமக்கு. அவன் காலத்திலே இவ்வளவு அனுபவிச்சும் அவனுக்கு இருக்கிற புத்தி நமக்கு வரலியே. படிக்கவே முடியலியே, நம்மளாலே, நம்மை படிக்க வைக்க வேணும்னு வந்தான் வந்த உடனே, இந்த இந்தியா நாடு இவ்வளவு காட்டுமிராண்டி நாடாக இருக்குது. இதை எல்லாம் நாங்க மாத்தவேணும். மாற்றப் போறோம். அப்படீன்னான். பாப்பான் எங்கே அவனை (நம்மைச்) செய்யவிட்டான்? நீ எங்க மதத்தின் மேலே கை வைக்காதே? எங்களுக்குத் தான் படிக்கிற உரிமை?

பாப்பான் போல மற்றவர்களுக்கு படிப்புச் சொல்லிக் கொடுத்தால் எங்கள் மதத்துக்கு விரோதம் அப்படீன்னு படிப்புத்தர வந்தவனுக்குப் பாப்பான் மனுதர்ம சாஸ்த்திரத்தை காட்டிட்டான். துணிஞ்சி (வெள்ளைக்காரன்) செய்தான். படிப்பை நமக்குத் தந்தான். அதுக்குப் (பாப்பான்) ரகளை பண்ண ஆரம்பிச்சான். நாசமாய் போங்கடான்னு விட்டுட்டான் அவன். வெள்ளைக்காரன் வர்ரபோது நாம 100க்கு 3 பேர் தான் படிச்சிருந்தோம். அப்புறம் (100க்கு) 5 பேர் தான் படிச்சிருந்தோம். அப்புறம் (100க்கு) 5 பேர் ஆனோம். அப்புறம் ஜஸ்டிஸ்கட்சி (ஆட்சிக்கு) (1920 லே) வந்து ரகளை பண்ணிப் படிக்கவைக்க ஆரம்பிச்சதனாலே நாம படிப்பிலே 100க்கு 7பேர் ஆனோம். அவ்வளவு தான்.

 காமராசர் (ஆட்சிக்கு) (1954லே) வந்த பிறகு தான் 100க்கு 50பேர் படிச்சவராக்கினார். அவரு சாஸ்திரமா, வெங்காயமான்னு பேசி அதைத் தீ வையி, நெருப்பு வையின்னு சொன்னதுக்கு அப்புறம் அந்த பசங்க (பாப்பான்) குறுக்கேபடுக்கலே. அடியோடு காங்கிரசில் பாப்பானுங்களை ஒழிச்சபிறகுத் தடை பண்றதுக்கு ஆளில்லை. 50 பேர் படிச்சவங்கலானோம். இல்லாட்டா தொட்டதற்கெல்லாம் எதிர்ப்பு. ஆஸ்பத்திரி வைச்சா எதிர்ப்பான். வெள்ளைக்காரனை. உடன் கட்டை ஏற்றதுங்கிறதுக்கு ஒரு சண்டை. அவன் வெள்ளைக்காரன் என்னா நினைக்கிறான்? இந்துக்கள் இப்படி பண்றாங்கன்னு நினைச்சிக்கிறான். பாப்பான் தான் இதையெல்லாம் பண்றான்னு அவன் (வெள்ளையன்) நினைக்கிறதில்லே, ஆகவே நீங்க எப்படியோ நாசமாய் போங்கடான்னுட்டு, என் காரியத்தை நான் பண்றேன்னுட்டான். அப்படிசொல்ல வேண்டியதை நான் பண்றேன்னுட்டான். அப்படி சொல்ல வேண்டிய அவசியம் அவனுக்கு வந்துட்டுது. மீண்டும் நம்ம அறிவைத் தெளிவு பண்ணிக்கவே இல்லை. அதைச் சொல்லக்கூடாது. இதைச் சொல்லக் கூடாது. அதை நம்ப கூடாது. இதை நம்பக் கூடாது. அதை ஆட்சேபிக்கக்கூடாது. சாஸ்திரமிருக்குது நடப்புக்கு விரோதமாகக் கூடாது. இப்ப இன்றைக்கும் எல்லாருக்கும் தெரிந்தபடிதானே.

இன்றைக்கு எல்லாராலும் கொண்டாடப்படுகிற இந்த ராஜகோபாலாச்சாரி என்கிற ராஜாஜி ஜாதியில் கை வைத்தால் நான் விடமாட்டேன். என்னால் ஆனவரைக்கும் அதை எதிர்த்து பாடுபடுவேன். என் உயிரையே ஜாதி நிலைக்க நான்கொடுப்பேன். அதற்காகத்தான் இருக்கிறேன். அப்படீன்னு சத்தம் போட்டான். ஒரு பயலுக்குக் கூட இந்த ஜாதியைப் பற்றி பேச எண்ணமில்லை.
வடநாடு பூராவும் உள்ள மக்கள் பெரும்பாலும் சூத்திரன்தான். பாப்பான் 100க்கு 3பேர் தான் இருப்பான். ஜாதியைப் பற்றி பேச மாட்டானே. அதைப் பேசினால் கடவுளுக்கு விரோதம். சாஸ்திரத்துக்கு விரோதம் தான். நம்ம கடவுளும் நம்ம மதமும், நம்ம சாஸ்திரங்களும் காட்டுமிராண்டி காலத்திலே இருக்குதுன்னு சொன்னா, என் மீது கோவிச்சு என்னா பண்றது? நம்ம நாட்டிலே படிச்சவன் நிறையா இருக்கிறான்னு ஜம்பமடிச்சிக்கிறான். புலவனுங்க. தமிழ்படிச்சவனெல்லாம் வித்வான்.எல்லாம் இங்கே (தஞ்சையில்) கூட புலவனுக்குன்னு (கரந்தையில்) ஒரு பள்ளிக்கூடம் இருக்குது. படிச்சிருக்கிறானுங்க ஏராளமாய். அந்த புலவன், இந்தப் புலவன் வெங்காயப் புலவன் எல்லாம் அதைப் படிச்சான், இதைப் படிச்சான்னு (சிரிப்பு) ஒரு புலவனாவது,இது தப்பு இந்த முறை தப்பு தவறு இந்த புராணம் இப்படி அசிங்கம்.

இந்த கதை இப்படிப் புரட்டு அது நமக்கு இன்ன கேடுன்னு, ஒருவனும் எழுதலியே. நேற்றுக் கூட (உலகத்தமிழ்மாநாட்டுக்கு) எல்லாப் புலவன்களும் வந்தானுங்க, கோடிக்கணக்காய் ரூபாய் நாசமாகிறாப்பிலே. ஒரு நூல் ஒரு சிறிய நூல், ஒரு துண்டுப் பிரசுரம் கூட ஒரு பயலும் போடலியே? இந்த புராணமெல்லாம் அசிங்கம், நம்மை (அது) இப்படிஎல்லாம் சொல்றது தப்பு. இதிலே இருக்கிற தெல்லாம் முன்னுக்குபின் விரோதம். இதிலே இருக்கிறதெல்லாம் மனிதத் தன்மைக்கே, நாகரிகத்துக்கே கேடு. அப்படீன்னு சொல்லலாமே. டாக்டர் பட்டம் வாங்கின புலவனிருக்கிறானய்யா. அரை டஜன் இருக்கிறாங்க. (சிரிப்பு) எல்லாம் அவனவன் வேலைக்குத்தான் பாடுபட்டானேதவிர எடுத்துச் சொன்னா தன் பிழைப்பு போயிடும்ன்னு பயப்படுகிறான்.




நூல் - பெரியாரின் சிந்தனைத் திரட்டு
தொகுப்பாசிரியர் - து.மா.பெரியசாமி

Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை