திருச்சியில் தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்களின் 89 வது பிறந்தநாள் விழா!



பெரியார் சிலை திறப்பு விழா உரை!


17.09.1967 ஆம் நாள் திருச்சியில் தந்தை பெரியார் .வெ. ராமசாமி அவர்களின் 89 வது பிறந்தநாள் விழாவும் பெரியார் சிலை திறப்பு விழாவும் நடைபெற்றது. அவ்விழாவில் தமிழக முதல்வர் அறிஞர் அண்ணா துரை அவர்கள்; தமிழக சட்டப் பேரவைத் தலைவர் சி..ஆதித்தனார்; செட்டிநாடு ராஜா சர் முத்தையா அவர்கள்; முன்னிலையில், நன்றியுரை:- தந்தை பெரியார் .வெ. ராமசாமி அவர்களின் சொற்பொழிவு:

தமிழக முதல்வர் அண்ணா அவர்களே! சட்டசபைத் தலைவர் அவர்களே! மற்றும் திருச்சிவாசிகளே! செட்டிநாடு ராஜா அவர்களே! ராணி அவர்களே!

இன்றைய நிகழ்ச்சி எனக்குத் தெரிய போதையாகத்தான் இருக்கு. (கைத்தட்டல்) தாய்மார்களே, தோழர்களே, இப்படிப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் கூடியுள்ளீர்கள். இப்படியாக ஒரு பெரிய பாராட்டுதல் என்னா? என்னிடத்திலே இருக்கின்ற காரியங்களிலே நான் செய்தவேலைகளினாலே எனக்கு இந்தப் பாராட்டுதலைச் செய்கிறார்கள் எனப் பெருமை கொள்ளுறேன்.
இரண்டாவது, முதலில் நல்ல அளவுக்கு நமக்குப் பாராட்டுதல். தோழர்களே, அண்ணா அவர்கள் நமக்குக் கிடைத்தது நமக்காக ஒரு நன்மையாக நம்மைப் பலப்படுத்தி ஆட்சி நடத்திட (தமிழக முதலமைச்சராக) ஆட்சித்தலைவராக தேர்ந்தெடுத்திருப்பதற்கும் உண்மையிலேயே நான் பெருமைப் படுகிறேன், (கைத்தட்டல்) அவருக்கு இங்கு பாராட்டுவதற்கான இந்த முக்கியமான காரியத்திற்காகவும் இந்த நிகழ்ச்சி என நான் கருதுகிறேன். எனக்கு மாத்திரமல்ல. நம்முடைய நடப்புக்கும் இது பெருமைப்படத்தக்க காரியம் என்றே சொல்லுவேன்.

அண்ணாவின் ஆட்சி தனித்தமிழர் ஆட்சி

ஏன் இப்படி சொல்லுகிறேன் என்றால்? இந்த நாடு-நானறிய-பலருடைய ஆட்சியைக் கண்டிருந்தாலும் கூட இப்படிப்பட்ட ஒரு தனித்தமிழர் ஆட்சி என்பது இப்பொழுதுதான் நடந்து வருகிறது. (பலத்த கைத்தட்டல்) இப்பொழுதுதான் நாம் அதை அனுபவிக்கிறோம். பல தோழர்கள், பல கட்சிக்காரர்கள், பல கட்சி உணர்ச்சிக்காரர்கள், வேறு பல சொந்த கருத்து, விருப்பு, வெறுப்புள்ளவர்கள் ஏராளமாக இருக்கலாம் என்றாலும், ஒரு காரியம் நாம் இன்றைய தினம் தான் தமிழருடைய ஆட்சியில் இருக்கிறோம். அதை நாம் ஒவ்வொருவரும் ஏற்று அதை அங்கீகரிக்க வேண்டும். அவன் எவ்வளவு தேசபக்தனாக இருந்தாலும்சரி?அவன் எவ்வளவு பெரிய தேசியவாதியாக இருந்தாலும் சரி?நாம்இன்றையதினம்நம்ம நாட்டிலே தமிழர் ஆட்சியில் இருக்கிறோம் என்று நாம் மதிக்க வேண்டும். அதை மதிக்காதவன் சுத்தமான தமிழ் நாட்டான் அல்ல, தமிழனும் அல்ல (கைத்தட்டல்), அவன் யாராக இருந்தாலும் சரி. அந்த ஒரே காரியம் தான். நம் நாட்டிற்கு நல்ல ஆட்சி இது தான்.

தமிழர் தலைவர் கி.வீரமணி கருத்தை ஆமோதித்தல்

மற்றுமொன்று கூட சொல்லுவேன், நமக்கு நல்ல வாய்ப்பு என்று கூட நான் சொல்லலே, இவர்கள் பதவிக்கு வந்தது மட்டும் நாம் அனுபவிக்கிற வாய்ப்பு.ஒரு அடிமை வாழ்க்கைஎன்றுதான் சொல்லுவேன். நீங்கள் நன்றாக கவனமாக சிந்திக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறேன். நாம் இப்பொழுது நமது நாட்டை அந்நியனுக்கு அடிமைப்படுத்திவிட்டு நாம் அந்நியனுக்கு அடிமையாகவே இருந்து வந்தோம். வெள்ளைக்காரன் இந்த நாட்டிற்கு வருகிறவரைக்கும் நம் நாட்டைப் பொறுத்த வரையிலும் பொதுவாக எடுத்துக்கொண்டாலும் நாம் இன்னும் அடிமையாகத்தான் இருக்கிறோம் வடநாட்டானுக்கு. நம்ம நாட்டவரில் பலர் தேசியம் என்பார்கள்அது அவர்களின் வயிற்றுப் பிழைப்பிற்காக(கைத்தட்டல்)அவர்களின் வாழ்க்கை வசதிக்கு அவர்களுடைய பதவி வேட்டைக்கு. இதை தேசியம் என்பார்கள். கடுகளவு அறிவு இருந்தாலும்நாம் சுதந்திரமாக இருக்கிறோம், நம்ம நாடு சுதந்திரமான நாடு என்று சொல்ல யாரும் முன்வர மாட்டார்கள். நண்பர் வீரமணி சொன்னதுபோல், நேற்றைய தினம் நாம் சொன்னதை வெளிப்படுத்த வேணும். நம்ம நாட்டை, நாம் சுதந்திர நாடாக ஆக்க வேண்டும்.

நமக்கு வலிமையே இல்லாத நாடாக இருந்தாலும் சரி, தினமும்அள்ளிக்கொட்டுகிற செல்வம் கொழிக்கிற நாடாக இருந்தாலும் சரி,அடிமை நாடாக இருப்பதிலிருந்து விட்டுட்டு விலகிட வேண்டும். அதற்கு தான் அஸ்திவாரம் இது. அந்த எண்ணத்திலே தான் நான் ஏதோ இன்னும் கொஞ்ச நாளைக்கு வாழ்கிற வாழ்க்கை வந்தாலும், அதற்காக இருக்கலாம் என்று இருக்கிறேன். இப்படிப்பட்ட ஒரு பெருங்கூட்டம் இதற்கு முன்கூட கூடியதில்லை. எதற்காக இங்கு கூடியது?நம்ம நாளிலேயே, நம்முடைய வாழ்நாளிலேயே அய்யா (தமிழக முதல்வர்-அண்ணா)அவர்கள்இங்குகலந்து கொள்கிறார் என்பதாலேயே, இருந்தாலும்கூட, இப்படிப்பட்ட ஒரு பெருங்கூட்டம் இன்று இங்கு வந்திருக்கிறது. இந்த கூட்டம் என்னுடைய பத்திரிகை பெயராலேயே அதைக் கண்டு வந்துள்ள சில பேரைத்தவிர இங்கே மற்றவர்களெல்லாம் தமிழர்கள் தான்.100க்கு தொண்ணூற்று ஒன்பதே முக்காலே அரைக்கால் பேர்கள் தமிழர்கள் தான். (பலத்த கைத்தட்டல்) நீங்கள் எல்லோரும் வந்திருக்கிற வாய்ப்பிலிருந்து நாம் வாழுகிற நாடு ஒரு சுதந்திர நாடாக அவர்களுக்கு ஒருசுதந்திரமுள்ள நாடாகணும். நம்மை அடிமைப்படுத்துகிறவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும்சரி, நமக்கு சம்பந்தப்பட்டவனாக நடப்பில் நம்மீது ஆதிக்கம் செலுத்துபவனாக இருக்கக் கூடாது என்பதைத்தான் இக்கூட்டம் காட்டுகிறது. தமிழ்நாடு தமிழருக்கே உரியது (தனித்தமிழ்நாடு அமைய வேண்டும்)

1000, 2000 -வருஷ காலமாக அந்நியனுடைய ஆட்சியில், வடநாட்டானுடைய ஆட்சியிலே நீங்கள் இருந்தாலும், நீங்கள் அடிமை, அடிமைதான் (சிரிப்பு) எவனோ பொறுக்கித் தின்னுட்டுப் போவான். யாரோ நாலு காலிப் பசங்களுக்கு வாய்ப்பு இருக்கும். (கூட்டத்தினரோ வெட்கம்,வெட்கம்எனமுழக்கமிட்டனர்). நாட்டு மக்கள் அனுபவிக்கும் படியாக நாட்டு வளப்பம், நாட்டு நலன், நாட்டு மக்களுக்கே கிடைக்கும்படியாக ஆகின்ற ஒரு காலம் வருமென்றால், கண்டிப்பாக நாம் இன்றைய தினமிருக்கிற அடிமை வாழ்விலிருந்து விலகி தமிழ்நாடு சுதந்திர நாடு தமிழ்நாடு தமிழருக்கே உரிய நாடு (கைத்தட்டல்) என்றநிலைமை வளரணும். நீங்கள் நன்றாகக் கருத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.எல்லாத்தமிழன்கிட்டேயும் நான் கேட்பேன். தேசியவாதியாகஇருந்தாலும் சரி. அவர்களுக்கு மானம் வெட்கம் இருக்குமானால் (சிரிப்பு) அவன் நாட்டை அவன்தான் அனுபவிக்கவேணும்.

வெள்ளைக்காரரை விரட்டினோம் பார்ப்பனர்கள் ஊடுருவிட்டாங்க

சாதாரணமாக ராஜா சாகிப் (ராஜா சர் முத்தையா செட்டியார்) அவர்களும், அண்ணா அவர்களும் மற்றவர்களும் நம்முடைய பூர்வ சரித்திரத்தைப் பற்றிக் கொஞ்சம் சொன்னார்கள். நான் ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்தும் தமிழர் கட்சியாக இருந்து அதிலே நான் அன்று தொண்டாற்றியது எல்லாம். ஆனால் தேசியத்தின்படி எனது தொண்டு தேசத்துமூலமாக கருதப்படுகிறது. காரணம் நம்மளவன் அந்நியனுக்கு அடிமையானதினாலே அந்த ஜஸ்டிஸ் கட்சி ஆட்சி அந்த கொள்கை அப்போது நடந்த காரியங்கள் எல்லாம் இன்றைக்குத் தேசத் துரோகமாகக் கருதப்படுகிறது. நான் மிக உயர்ந்த தேசியவாதிக்கே சொல்லுகிறேன். தேசியவாதி மாத்திரம் அல்ல. காங்கிரசிலே தலைவராக இருக்கிறகாமராசர் அவர்களுக்கும் நான் சொல்லுவேன். (கைத்தட்டல்) அந்த ஜஸ்டிஸ் கட்சியே இல்லாதிருந்தால் காமராசர் தொழில் என்னவாயிருக்கும்? (கைதட்டல்) அந்த ஜஸ்டிஸ் கட்சியே இல்லாதிருந்தால் காங்கிரசிலே மந்திரியாக இருப்பவர் யோக்கியதை எப்படி இருந்திருக்கும்? யார் யார் சட்டை போட்டுகிட்டு இருப்பா? சுலபமாகச் சொல்லி விடுவார்கள். நம்மை வெள்ளைக்காரனுக்கு அடிமையாக இருந்தவர்கள் என்று. அதை நான் பெருமையாக நினைக்கிறேன். அவன் போனான் நமக்குச் சனியன் பிடிச்சிட்டுது. (கைத்தட்டல்). அவன் போன உடனே நாடு நமக்கு வரலே. எந்தக் குறைபாட்டுக்காக அவன் போகவேணும்னு கூப்பாடு போட்டோமோ அந்தக் குறைபாடு இன்னும் இருக்குது. நம்ம எதிரிகள் (பாப்பானுங்க) வந்திட்டானுங்க பதவிக்கு. நம்முடைய எதிரிகளினுடைய கூலிகள் வந்தானுங்க கூட பதவிக்கு.

காமராசர் பதவிக்கு கழக உணர்வே காரணம்

என்னுடைய மதிப்புக்குரிய தலைவர் என்று கருதுகிற காமராசருக்கே சொல்லுவேன். நாம இல்லாதிருந்தால் இவருக்குத் தலைமைப்பதவி வருமா? (பலத்த கைத்தட்டல்) காங்கிரசிலே இவருக்கு இவ்வளவு மரியாதை வந்திருக்குமா? (மீண்டும் கைத்தட்டல்) இவருக்குள்ள அந்தஸ்தைக் கருதியா காங்கிரசிலே தலைமைப் பதவி தந்தானுங்களா? (கைத்தட்டல்) நல்லா சொல்லுவேன் நான். நம்மவர் உணர்வு இருந்ததினாலே பாப்பான் இந்தப் பதவிக்கு வர முடியலேன்னு அவர்களின் அடிமையாக இருக்க பார்ப்பான் காமராசரைப் பிடிச்சி அந்த இடத்திலே வைச்சானுங்களே தவிர, வேறு என்னா? (கைத்தட்டல்) என்னா அந்தஸ்த்தைக் கொண்டு இவரைப் பிடிச்சி வைச்சான்? அங்கே தலைவராக வைச்சானுங்க? (கைத்தட்டல்) வெள்ளைக்காரனுக்கு நம்மை பூட்சைக்கழுவுகிற வர்க்கன்னாங்க யாரு? இவரோடு (காமராசரோடு) போட்டி போட்ட அந்த பெரிய மனுஷன் யாரு? சுப்பய்யா கோயம்புத்தூர் மீனாட்சியம்மாள் மகன். அவன் ஒரு பக்கம் போட்டி. இவரு (காமராசர்) ஒரு பக்கம் போட்டி. இந்த இரண்டு பேருக்கும் என்னா அந்தஸ்து இருந்தது? அன்றைய தினம் பார்ப்பனர் அல்லாதார் என்கிற ஒரு அந்தஸ்த்தை தவிர, வேறு ஏதாவது மரியாதை இவர்களுக்கு. அன்னைக்கு இருந்ததோ? ராஜகோபாலாச்சாரி சுப்பய்யாவை பிடிச்சி வைச்சார். சத்தியமூர்த்தி இவரை (காமராசரை) பிடிச்சி வைச்சான்.காமராசர்ஜெயிச்சாரு.ஆனால் அவர்கள் இரண்டுபேரும் வருவதற்கு அவனை எவனும் மதிக்கமாட்டான். அப்படி நிலைமை இருந்தது. பார்ப்பனரல்லாதார் என்கிற ஒரு காரணத்துக்காக பிடிச்சி வைச்சி பதவிக்கு வைக்கப்பட்டவர் தான் காமராசர். நம்முடைய ஆதிக்கம்அன்னைக்கு இல்லாதிருந்தால்இவரு கொடிபிடிச்சிகிட்டுதானே ஒரு பக்கம் நிற்கணும்(கைத்தட்டடல்) அம்மாதிரி உணர்வு இல்லாதிருந்தால் அந்த சுப்பய்யாதான் என்ன பண்ணியிருப்பார்? கொடி பிடிச்சி கிட்டுதானே இருப்பார்? வெட்கமே இல்லையே, இவர்கள் நம்மைக் குற்றம் சொல்றதிலே?

வெள்ளைக்காரன் அடிவருடிகள் காங்கிரஸ்

எனக்கென்னா கூச்சம் உண்மையைச் சொல்றதிலே, நம்மை வெள்ளைக்காரனுக்கு பூட்சைத் துடைச்சவங்கன்னு சொன்னவங்க காங்கிரஸ்காரரு. வெள்ளைக்காரன் காங்கிரசை ஆதரிக்கிறபோதே வெள்ளைக்காரனுடைய பெருவிரலைத் தூக்கி சூப்பிகிட்டு தானே காங்கிரஸ் காரனானான். எவனை எடுத்துக்கிட்டாலும் சரி? காந்தியை எடுத்துக்கிட்டாலும்சரி, திலகரை எடுத்துக்கிட்டாலும்சரி, வெங்காயத்தை எடுத்துக்கிட்டாலும் சரி. (வெட்கம் - வெட்கம் - பின்பு கைத்தட்டல்). எல்லா பயல்களும் வெள்ளைக்காரனுக்கு பிறந்தவனுங்க. அதற்காக (அவனிடம்) கூலி வாங்கினவனுங்க (சிரிப்பு, கைத்தட்டல்) நாங்க பங்கு கேட்கபோக அவன் வேறுப்பக்கம் திருப்பினான். அவ்வளவு தானே தவிர. ஏன் அப்படிச் சொல்றேன்னா? அவுங்களுக்கு ஒரு இடம் தான் இருக்குது. எந்த இடம்? எல்லாம், வெள்ளைக்காரன் அனுபவிச்ச இடம். வெள்ளைக்காரன் பூட்சை நக்கிகிட்டு இருந்த இவுங்க. நமக்கு எதிரியாகஆனாங்கஏன்? வெள்ளைக்காரனுக்கு எதிரியாக ஆனாங்கன்னா எதுக்காக ஆனாங்க? வெள்ளைக்காரன் இவுகளையே (காங்கிரஸ் காரனையே) நம்பிகிட்டு இருந்தான். அவுகளை (காங்கிரசை) எதிர்த்து மக்கள் பார்ப்பனரல்லாதாருடைய (இயக்கத்தின்) எதிர்ப்பும் வலுத்தது. வெள்ளைக்காரன் சொன்னான் ஏனப்பா அவுங்களுக்கும் ஒரு பங்கு அனுபவிச்சிகிட்டு போகட்டுமேன்னான் காங்கிரஸ்காரன் அதற்காக வெள்ளைக்காரனை எதிர்த்தான்.

ஏன் அப்படி சொல்றேன்னா? அந்த தேசியவாதிகள் பதவியிலிருந்து கொண்டு ஒழுக்கக்கேடு, நாணயக்கேடு, அயோக்கியத் தனக்கேடு வளர்ந்தவண்ணம் இருந்தது, நேற்று முந்நா நாள் வரைக்கும். அதுக்குமுன்னே வெள்ளைக்காரன் காலத்தைச்சொல்லலாம். வெள்ளைக் காரன் பூட்சை நக்குகிறாங்கன்னு நம்மைச்சொன்னான். நான் சொல்லுவேன் வெள்ளைக்காரன் காலு கொஞ்சம் சுத்தமாயிருக்கும் (கைத்தட்டல்). அவன் காலில் அழுக்கு வராது. பாப்பானுங்க எத்தனையோ நாளாய் (வெள்ளைக்காரனுடைய பூட்சை) நக்கினானுங்களே (கைத்தட்டல், வெட்கம்,வெட்கம்எனகூட்டத்தினர் முழக்கம்) அதைப் பற்றி எவனாவது வெட்கப்படறானா? நாட்டிலே இருக்கிற உணர்ச்சியைப்பற்றி ஏதாவது கவலைப்படறானா?இல்லே, நம்மநாடு இந்த மாதிரி அடிமைப்பட்டு கிடக்குதே 1500 மைலுக்கு அந்தப் பக்கம்ன்னு இருக்கிறவன் காலடியிலேன்னு. யாரு? எப்ப வெட்கப்படுகிறா? அவன் காலடியில் இருக்கத்தானே தேசியம் என்கிறாங்க. தேசபக்திங்கிறாங்க. நல்லா நினையுங்கள் தோழர்களே
தமிழர்களே

வடவர் ஆதிக்கம்சுரண்டல்

நம்மநாடு நமக்காகணும் நம் நாட்டிலே நம்ம நாடு அல்லாதவனுடைய வாசனையே இருக்கக் கூடாது. ஆதிக்கமே இருக்கக்கூடாது. நேற்று (16-09-1967இல்) நம்ம ஆளுக சொன்னார்கள். நண்பர் பாவலர் (பாலசுந்தரம்) கூட எடுத்துச் சொன்னார். தினமும் 200 கோடி,500கோடி ரூபாய் நம்ம பணத்தை(வடநாட்டான்)கொள்ளையடிச்சி கிட்டு போறான். நம்ம நாட்டிலே யாரும் அதட்டிக் கேட்கலே. சும்மா இருக்கிறாங்கன்னு. இந்த நாட்டிலே நம்முடைய பணம் ரூ 200 கோடி, 500கோடி ரூபாய் கொள்ளையடிச்சிகிட்டு போவதற்கு அவனுங்களுக்கு ஏன்ஒரு நல்ல வாய்ப்பு? அதுக்கு கதவைத் திறந்துவிட்டு பார்த்துகிட்டு இருப்பானா? கேட்கிறேன் நான்.
(கைதட்டல்

அரசியல்வாதிக்கு அய்யா தரும் விளக்கம்

ஜஸ்டிஸ் கட்சிக்குத் தமிழனுடைய ஆதிக்கம் அதற்கு உதவி பண்ணிச்சி என்பதினாலே. நான் ஒரு தமிழன் என்கிற எண்ணத்திலே. ஜஸ்டிஸ்கட்சியினர் பதினாயிரக்கணக்கா, இருபதாயிரம் கணக்கா அவர்கள் பணத்தை அள்ளிவிட்டானுங்களே தவிர , நாலு காசு அவர்கள் சம்பாதிக்கிலியே? நானும் ஜஸ்டிஸ் கட்சியிலே இருந்தேன். ஏன்னா சம்பாதிச்சேன் நானு? அய்யா ( ராஜா சர்) சொல்றாப்பிலே என் பிழைப்பை விட்டேன். என் இருப்பை விட்டேன். என் (சுகம்) எல்லாத்தையும் விட்டேன். காந்தி நேருவை விட நான் பாடுபட்டேன். நான் அரசியல் வாதியல்ல. அரசியல்வாதின்னா என்னாடான்னா? பிழைப்புக்கு வழிதேடறது. பதவிக்கு வழிதேடறது. இதைத் தவிர வேறு வேலை என்னா?

தோழர்களே! ஜஸ்டிஸ் கட்சி இல்லாவிட்டால் இந்த நாட்டிலே தமிழன் என்கிற ஒரு ஜாதி இருக்குதுன்னு வெளியாகியிருக்குமோ? நீங்களேசொல்லுங்களேன்? ஜஸ்டிஸ் கட்சியோடு போட்டி போடறதுக்கு, ஜஸ்டிஸ் கட்சிக்காரனுக்கு ஒரு தமிழன் பெயரைச் சொல்லுங்க, நாடறிந்த தமிழன்? மதிப்பு பெற்ற தமிழன். நாயர் வந்தார். தேசாய் வந்தார். ராஜாஜி வந்தார். ராஜன் வந்தார். பொப்பிலிவந்தார். அய்யா (ராஜாசர்) வந்தார். இப்படியாக இருக்குதே தவிர அதுக்கு முன்னே நம்ம பேரிலே நம் கூட்டத்திலே நம் இனத்திலே, மதிக்கும்படியான வாழ்வு வாய்ப்புஎதிலே இருந்தது சொல்லட்டுமே? தேசியவாதியே சொல்லட்டுமே?

அவர்களின் தலைவரே சொல்லட்டுமே ஜஸ்டிஸ் கட்சிக்கு முன்னே 1919க்கு முன்னே. இவர்களுடைய (காங்கிரஸ்) யோக்கியதை என்னா? இவர்களை எல்லாம் மதிக்கும் படியான ஒரு வாய்ப்பு எப்படி வந்தது? போட்டி வந்து எப்படியோ அண்ணா வந்தார். (முதலமைச்சராக) அவர்கள் வாழ்க்கை அன்னைக்கு எப்படி இருந்தது? மூன்றாம் தரம் நாலாந்தர ஆளாக. ஆட்சியைப் பிடிக்கிற போது அவர்களுடைய வளர்ச்சி அப்ப எப்படி இருந்தது? அந்த மாதிரி ஆளுகளை வைத்து தானே பதவிக்கு வந்தான். அந்த (காங்கிரஸ்) மந்திரிகளெல்லாம் எப்படி வந்தாங்க?

மந்திரி பதவிக்காக மக்கள் விரோத செயல்

நான் சொல்றேனே. 6000 பள்ளிக்கூடத்தை மூடி(1954லே) (ராஜாஜி) அரைநேரம் அவனவன் ஜாதித் தொழிலைப் படீன்னு சொல்றதிட்டத்துக்கு கைழுத்துப் போடாதிருந்தால் பக்தவத்சலத்துக்கு ஏது மந்திரிவேலை? சி.சுப்ரமணியத்துக்கு ஏது மந்திரிவேலை? மற்றெந்த வெங்காயத்துக்கு ஏது வேலை? (வெட்கம், வெட்கம்) (கைத்தட்டல்) சொல்லுங்க. தலைவர் (ராஜாஜி) என்ன தேசத் தொண்டு பண்ணி வந்தாங்க? அந்த ஆளுக.

நம்ம சமுதாயத்துக்கு நாசத்தை உண்டாக்கினாங்க. நம்ம நாட்டு வளப்பத்தைப் பாழாக்கினாங்க? எதுக்காக தமிழன் பிள்ளைகள் படிக்க வேணும்ன்னு? அவனவன் ஜாதித் தொழிலைப் படிங்கிறதுக்கு இந்த மந்திரிகள் எல்லாம் கையெழுத்துப் போட்டாங்க ஏன்? அப்படி நடக்காதிருந்தால் இவர்களுக்கு ஏது மந்திரி வேலை? எதுக்காக இவுங்களைப் பாப்பான் (ராஜாஜி) சட்டை பண்ணியிருப்பான்? அந்த மாதிரி முறையிலே ஒவ்வொருத்தாராகப் பதவிக்குப் போனவங்க நாட்டைப் பாழடிச்சிட்டாங்க. ஏதோ அப்ப காமராசராலே, 1954லே நாம போட்ட கூப்பாட்டினாலே சுப்பிரமணியம்; பாப்பான் (ராஜாஜி) போட்ட உத்தரவைமாற்றி கேடு விலகிச்சி. அது மாதிரி வேலையா மந்திரிக்கு? காலிப்பயங்களெல்லாம் மேடையில்ஏறினா எங்களை தேசத்துரோகிகள். வெள்ளைக்காரனுக்குக் கால் பிடிச்சவங்க-ன்னு பேசினானுங்க. இவன் தான்விடியவிடிய வெள்ளைக்காரனுக்கு என்னனென்னமோ பண்ணினீங்க, சொல்லவே நா-கூசுது.எந்த வெள்ளைக்காரனுக்கு காலைப் பிடிச்சோம். வெள்ளைக்காரன் இல்லாதிருந்தால் என்ன கதியாயிருக்கும்? இவன் கேட்ட சுதந்திரத்துக்கு நான் எதிரியாக இருந்தேங்கிறான். இவனெல்லாம் சுதந்திரம் கேட்டபோது நான் எதிரியாக இருந்தேனா? இவுங்க (காங்கிரஸ்தான்) சுதந்திரம் எப்படி கேட்டாங்க? வெள்ளைக்காரன் கிட்டே சுதந்திரம்கேட்டது எப்படி கேட்டானுங்க.

உலகப்போரின்போது வெள்ளையரை ஆதரித்தது

ஜப்பான்-காரனையும்,ஜெர்மனிகாரனையும் கூப்பிட்டுகிட்டு சுதந்திரம் ன்னு கேட்டாங்க. இல்லேன்னு சொல்லட்டும் யாராவது? வெள்ளைக்காரன் போகணும். பின்னே யார் வரணும்? ஜப்பான் வரணும். இல்லாட்டா ஜெர்மனி வரணும். அந்த நிலையிலேயும் நாங்க (காங்கிரசை) எதிர்த்தோம். இந்த பசங்க மாதிரி நாங்க ஜப்பானையோ ஜெர்மனிகாரனையோ வரணும்மிங்கலே நாங்க. சொல்லட்டுமே இன்னைக்கு. அந்த தலைவர்களோ மற்ற ஆளுகளோ சொல்லட்டுமே. இவுங்க சுதந்திரம் கேட்டபோது யாரைக் கூட்டி வர்ரதுக்கு சுதந்திரம் கேட்டாங்க? யாரைக் கேட்டாங்க? தாங்கள் ஆள கேட்டாங்களா? அப்ப சண்டை நடக்குது. (2ஆம் உலகப்போர் 1939 செப்டம்பர் 3இல் மூண்டது) சென்னை மாநில பிரதமர் ராஜாஜி மந்திரி சபை பிரிட்டனுக்கு எதிராக 29-10-1939-இல் பதவி விலகிடவே பெரியார் வெள்ளையர் ஆட்சிக்கு ஆதரவு தந்தார். (1940இல்) ஊரெல்லாம் ஜனங்கள் பிழைக்கிறதுக்கு அவனவன் குகையிலே அண்டிகிட்டு திரிகிறான். வெள்ளைக் காரனுக்கு எதிரியாக ஜப்பான்காரனும், ஜெர்மனிகாரனும் சண்டைபோடறான். இங்கே இந்தியாவுக்கு (அவர்களை) வர்ரதுக்கு நீ அவனுக்குக்கையாளாய் இருந்துகிட்டு வெள்ளைக்காரன் பட்டாளத்திலே நீ சேராதே. (அவனுக்கு)சண்டைக்குப் பணம் கொடுக்காதே கடன் கொடுக்காதே அப்படீன்னுநீ சொன்னா? அப்புறம் இங்குயார் வருவா? வெள்ளைக்காரன் தோற்றிருந்தால் இங்கு யார் பதவிக்கு வந்திருப்பா? இவனுங்களுக்கெல்லாம் (காங்கிரஸ்காரனுக்கு) பியுன் வேலையாவது கிடைக்குமா? ஜப்பான், ஜெர்மனி மொழியை படிச்சிகிட்டு இருந்தானுங்க (பாப்பானுங்க). அது கூடாதுன்னு தான் நாங்கள் அப்ப வெள்ளைக்காரனுக்கு அப்ப ஆதரவு தந்தோம் சண்டைக்கு.(03-09-1939 முதல் 2ம்உலகப்போர்முடியும் வரை பெரியார் ஆதரவு தந்தார்) (பார்ப்பனரும் - காங்கிரசும் ஜெர்மனிக்கு ஆதரவு பிரிட்டனுக்கு எதிராக).

தனித்தமிழ்நாடு கோருதல்

இதையே சாக்காய் வைச்சிகிட்டு, நாங்கள் சுதிந்தரப் போராட்டம் செய்கிறபோது இவுக எதிரியாக இருந்தாங்க என்கிறாங்க அவுக. இன்னும் அதைப் பற்றி சொல்றதுன்னா அது ரொம்ப அசிங்கம். அந்த மாதிரி பேச்சை விடமாட்டோங்கிறாங்க.நாங்கவேனும்ன்னுகாங்கிரசைஎதிர்க்கலே

காங்கிரஸ்காரன் வடநாட்டானுக்கு அடிமையாக இருக்கிறவரைக்கும், அந்த புத்தி போகிற வரைக்கும் நம் நாடு பிரிந்துதான் தீரணும். பிரியாட்டா நாம் போராடி நாட்டைப் பிரித்துதான் தீரணும்(கைதட்டல்) அதனாலே எவனுக்கும் நாங்கள் வால் பிடிப்பதாக நினைக்காதீங்க. யார் எதைச் சொன்னாலும் சரி. நம்ம நாட்டை நாம ஆளணும் சுதந்திரத்தோடு என்கிறதில் தான் நாம கவலை எடுத்துக்க வேணும். பெரிய போராட்டம் எல்லாம் இதற்காக துவக்க இருக்கிறோம். நமக்கெல்லாம் பெரிய கேடெல்லாம் வரும். ஜெயிலு வரும். தண்டனை வரும். ஆனாலும் வடநாட்டான் ஒழிகிற வரையிலும் நாம் எத்தனை தடவை ஜெயிலுக்குப் போனாலும் எத்தனை தடவை தண்டனை அனுபவிச்சாலும் நம்ம நாட்டை நாம் தான் ஆளனும். நம் நாட்டில் அதிகாரிஇல்லையா?மகான் இல்லையா? தர்ம பிரபுக்கள் இல்லையா? கடினமாக உழைக்கும் சக்தியுள்ளவர்கள் இல்லையா? யாரு இல்லை?

அண்ணாவின் ஆட்சி பகுத்தறிவு ஆட்சி

ஏன்?அண்ணா அவர்கள் சொல்றாப்பிலே நாங்கள் சுய மரியாதைக்காரர், தமிழர் - திராவிடர் கழகத்துக்காரர். மூடநம்பிக்கை எல்லாம்ஒழிஞ்சிநாம தமிழன். மானத்தோடு வாழணும். சுதந்திரத்தோடு சுயமரியாதையோடு வாழணும். அப்படிப்பட்ட வாழ்க்கை நமக்கு இருக்கு. இந்த ஆட்சி பகுத்தறிவு ஆட்சி அது மாத்திரம் அல்ல. அவர்கள் பகுத்தறிவாளர்கள். ஒருநாளும் முட்டாள்தனமா, ஈனத்தனமா, காட்டுமிராண்டித்தனமா, அவுக (தி.மு. ஆட்சி) ஒண்ணும் செய்ய மாட்டாங்க (கைத்தட்டல்). மற்றவங்கஎல்லாம் செய்தாப்பிலே புரியாததை எதையும் ஒண்ணும் செய்ய மாட்டாங்க. அப்படிப்பட்ட ஒரு ஆட்சி (கைதட்டல்) வந்திருக்குது சுலபமாக (சிரிப்பு) (கைதட்டல்) எதனாலே வந்தது? நாமெல்லாம் உயிரைப்பிடிச்சிகிட்டு எதிர்த்தும் இந்த ஆட்சி வந்திருக்குது. (பலத்த கைத்தட்டல்) அந்த 28ஆம் தேதி (1967இல் பிப்ரவரி) ராத்திரி வரைக்கும் ரகளை பண்றோம் (சிரிப்பு) அவுக ஒழியணும், ஒழியணும்ன்னு (கைத்தட்டல்). அந்த உணர்ச்சி எதிர்ப்பெல்லாம் தாண்டியும் அவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டாங்க. (கைதட்டல்) பழம் நழுவி பாலிலே விழுந்ததுங்கிறாப்பிலே நம் வாழ்வையே மகிழ்ச்சியாக மாற்றிடுச்சி (கைத்தட்டல்) இதை மனசிலே வைச்சிக்கங்க- ஒவ்வொருத்தரும் எவன் பேச்சையும் கேட்காதீங்க நீங்க.

தமிழர் ஆட்சியை காக்க கட்டுப்பாடு அவசியம்

இன்னைக்குத்தான் நம் தமிழர் ஆட்சியைப் பெற்றிருக்கிறோம். நம்மாலான உதவியை அவர்களுக்குச் செய்யணும். எந்தவிதமான கெடுதியும் ஏற்படாமல் நாம இந்த ஆட்சியைப் பாதுகாக்கணும் நம்முடைய நன்மைக்காக.அதை நீங்கள் மனசிலே நினைச்சிக்கங்க. ஆகவே அருமைத் தோழர்களே! தமிழர்களுக்கு இது நல்லாட்சி என நாம நினைக்கணும் நாமெல்லாம் கட்டுப்படாக. நம்ம நாட்டை விடுதலை பண்ணவேணும். தமிழ்நாடு சுதந்திர நாடாக இருக்கணும். நமக்கு முழுசுதந்திரநாடாக இருக்கணும். இப்ப ஒரு சுதந்தரமும் இல்லே நமக்கு. நாளை இந்த ஆட்சியைக் கவிழ்த்தாலும் கவிழ்த்து விடுவாங்க. அதுதான் அதுக்கு சாக்கு. சமாதானம் சொல்லிவிட வேண்டியதில்லை. இந்த ஆட்சி பிடிக்கலே போகணும்னுடுவான்.சுலபமாக சொல்லி விடுவானுங்க. அந்த அரசியல் சட்டம் அப்படித்தான் இருக்குதுஅரசியல் சட்டத்திலே இருக்கிற ஆட்சியை ஒழிச்சிக் கட்ட வேணுமானால் தள்ளிடவேண்டுமானால் எதை எதையோ சொல்லிப்போட்டு கடைசியிலே ராஷ்டிரபதிக்குப் பிடிக்கலேன்னா தள்ளி விடலாம்.என்ன காரணத்தினாலே பிடிக்கலேங்கிற அந்த வார்த்தை இல்லை. ராஷ்டிரபதி விரும்பி பிடிக்கலேன்னு தெரிஞ்சா அந்த ஆட்சியைத் தள்ளிப்போடலாம். அவ்வளவு விவரமா தேசத்துச்சட்டம் வைச்சிருக்கிறான். அந்த சட்டப்படி நாம மீறவே முடியாது. (போட்டோ எடுக்காதீங்கப்பா என்கிறார் பெரியார் அவர்கள்)

பம்பாய் கலவரத்தை கண்டிக்காத காங்கிரஸ்

பம்பாயிலே தமிழனை விரட்டி விரட்டி உதைக்கிறான். பூட்ஸ் காலிலே அவனை மிதிக்கிறான். தமிழன்னு சொல்லியே உதைக்கிறான். வேட்டிகட்டின பசங்களையே உதைக்கிறதுங்கிறான். இதைக் கண்டிக்க நாதியேகிடையாது. மத்திய அரசாங்கத்துக்காரன் ஏண்டா இப்படி சொல்றேன்னு கேட்டானா? வங்காளத்து அரசுக்காரன் ஏண்டா இப்படி பண்றீங்கன்னு கேட்டானா? நம்மஊர்லே இருக்கிற காங்கிரஸ்காரனாவது ஏண்டா இப்படி பண்றேன்னுட்டு கேட்டானா? எப்படியோ தமிழன் அடிபட்டுசாகட்டும்ன்னு இருக்கிறாங்க. அதுதானே நிலைமை தமிழனை விரட்டவேணும்ன்னு. இன்னைக்குச் சிவசேனாக்காரன் சொன்னான். எதுக்கு அப்படிசொன்னான்? அவனுங்க யாருன்னு தெரியாதா? பாப்பானும் வட நாட்டானும் சேர்ந்துக்கிட்டு தமிழனை அக்கிரமம் பண்ணுகிறானுங்க. சிவசேனாகாரன் செய்தது சொன்னது தப்புன்னு எவனும் கேட்க வரலே? நீங்கள் நல்லாகவனியுங்க. தமிழனுக்கு அங்கே என்னாவாய்ப்புஇருக்குது? நம்ம கதி இப்படீன்னா? காங்கிரஸ்காரன் இந்தியா பூரா இருக்கிறான். இவன் என்னான்னு கேட்டானா? தமிழன் மூன்றாம் தர ஆளாகத்தானே இருக்கிறான் அந்நிய ஆட்சியில். நம்ம கதி இப்படீன்னா?

அண்ணாவின் ஆட்சியை குற்றம் சொல்வோர் உண்டா?

ஆகவே அருமைத் தோழர்களே ! நம்ம நாடு பிரிஞ்சா அக்ரமங்கள் இருக்காது தமிழனுக்கு. இந்த ஆட்சியை வடநாட்டு மத்திய ஆட்சி அவ்வளவு சல்லிசா விடாது(கைதட்டல்) நாம் எத்தனை நாளைக்கு அடிமை வாழ்வு வாழ்கிறது? நீங்கள் எல்லாம் நல்ல வாழ்வு அடையணும், உணர்ச்சி பெறணும், புரட்சி வரணும். நீங்கள் எல்லாம் இங்கே பெருந்திரளாகக் கூடியுள்ளீர்கள். அண்ணாவை ஆயிரம் தடவை பார்த்திருப்பீங்க. தமிழன் என்கிற உணர்ச்சியோடு இங்கு கூடியுள்ளோம். தமிழனுக்கு கிடைத்த நல் வாய்ப்பு இந்த ஆட்சி என்று. யார் முகத்தைப் பார்த்தாலும் புன்சிரிப்போடு அவர்கள் முகத்திலே புன்னகை இருக்கு, ஒரு கலை இருக்குது (சிரிப்பு) இது இந்த ஆட்சியின் பயன்தான். (கைத்தட்டல்) உற்சாகமாக இருக்கிறாங்க மக்கள். ஒருத்தனாவது இந்த ஆட்சியைக் குற்றம் சொல்ல மாட்டான். காங்கிரஸ்காரனைத் தவிர (கைத்தட்டல்). நான் எத்தனையோ பேரோடு புழங்குகிறேன். ஒருத்தராவது இந்த ஆட்சியைக்குற்றம் சொல்லலே. பதவி கிடைக்காத சிலபேருக்கு இந்த ஆட்சி மீது வெறுப்பு இருக்கும்.

ஆனால் பொதுவாக மக்களைப் பார்க்கிற போது, இந்த ஆட்சியினாலே மக்களுக்கு எந்த விதமான குறைபாடுகள் இருக்கக் கூடாது. குறைபாடுகள் இல்லேங்கிறது மாத்திரம் பத்தாது. அவர்கள் நமக்காக நல்லது செய்ய இந்த (அண்ணா) ஆட்சியை உற்சாகமாக நடத்த நாமெல்லாம் அவர்களுக்கு ரொம்ப தைரியம் கொடுக்கணும். இப்ப கொஞ்சம் பயப்படுவாங்க. அப்புறம் துணிஞ்சிக் காரியம்செய்வாங்க.(கைதட்டல்) நாம யாருகிட்டேயும் சண்டைக்குப் போறதில்லே. இந்த காங்கிரஸ்காரரும் வெறுப்பு கொள்ள வேண்டியது இல்லை. இதுவரை செய்யாத வேலை எல்லாம் இந்த ஆட்சி நாட்டுக்குச் செய்யணும்.அண்ணா அவர்களுக்கு நாம உற்சாக மூட்டணும். இதுவரை நடந்தது எப்படியோ போகட்டும். இனி நாம இந்த ஆட்சியைப் பாதுகாக்கணும்.
              
  காமராசர் நமது பிள்ளைகளுக்குச் செய்ததை நான் மறந்திடலே. அவரால் 50 ஆயிரம் பள்ளிக் கூடங்கள். 2500 ஹைஸ்கூல்கள். 150 காலேஜ்கள் ஏற்பட்டன. தமிழருக்கு அவர் எவ்வளவோ பாடுபட்டிருக்கிறார் அதற்காக அவருக்கு எவ்வளவோ எதிர்ப்பு வந்திருக்குது. அதை ஒன்றும் நான் மறந்திடலே. அதுக்காக நமது நாட்டையே வடநாட்டானுக்கு அடிமையாக்குவதா? (கைத்தட்டல்) நம்ம நாடு நமக்கு ஆகணும். நான் அதை நேற்று (16.09.67இல்) சொன்னேன். உங்கள் எதிரிலே தோழர்கள் வந்தால் வணக்கம் என்று சொல்லாதீர்கள் தமிழ்நாடு தமிழருக்கே என்று சொல்லுங்கள் (கைத்தட்டல்) நம்ம நாடு இது. எத்தனை நாளைக்கு அந்நியன் (வடவன்) ஆட்சியில் அடிமையாய் இருப்பது? இதை நினைவில் கொள்ளுங்கள். ஆதரவு தாருங்கள். அண்ணா அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் என் நன்றியைக் கூறி என் உரையை முடித்துக் கொள்ளுகிறேன். வணக்கம்.

நூல் - பெரியாரின் சிந்தனைத் திரட்டு
தொகுப்பாசிரியர் - து.மா.பெரியசாமி


Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை