பெரியார் அவர்களின் 86 ஆவது ஆண்டு பிறந்த நாள் உரை


(தந்தை பெரியார் உரைத் தொகுப்பு)


1964இல் சென்னை பெரியார் திடலில் தந்தை பெரியார் . வெ. ராமசாமி அவர்களின் 86 ஆவது பிறந்த நாள் விழாவினைப் பெண்களே முன்னின்று நடத்தினார்கள் அதில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய நன்றி உரை:-
இன்றைக்கு ஏற்பாடு செய்திருக்கும் இந்த கூட்டமானது என்னுடைய 86 வது ஆண்டைப் பாராட்டி எனக்கு பல அறிஞர்களைக் கொண்டு ஆசி கூறவும் ஏற்பாடு செய்யப்பட்டது இக் கூட்டம். இந்தக் கூட்டத்தில் எனக்கு சம்பந்தமே இல்லை. நண்பர் திரு. பரமசிவம் அவர்கள் ஏற்பாடு செய்ததாகக் கூறப்பட்டது. நான் அனேகமாக ஏற்பாடு செய்து விட்டோம் என்று சொல்லுகிறபோது நானும் வரவேண்டும் என அவர்கள் விரும்பினார்கள். அவர்கள் எல்லோரையும் பார்த்து எல்லோரையும் வரும்படி கேட்டுக் கொண்டார்கள். மற்ற ஏற்பாடுகளை எல்லாம் அவர்களே செய்தார்கள். நேற்று நடந்த நிகழ்ச்சியும் அப்படிதான். இந்த ஆண்டு மாத்திரமல்ல. இரண்டு மூன்று ஆண்டுகளாகவே அவர் தன்னுடைய முயற்சியினாலே இம்மாதிரி கூட்டங்கள் நடத்தி நல்ல வண்ணம் என்னைப் பெருமைப்படுத்தி பலர் ஆசி கூறும்படி செய்திருக்கிறார்கள். முதலாவது நான் அவருக்கு நன்றி செலுத்தவேண்டும்.
அய்யாவின் ஏற்புரை இரண்டாவது இந்தக் கூட்டத்திலே அனேகமாக இங்கே தாய்மார்களே முன்னின்று நடத்துகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் தலைவர் அவர்களை எனக்கு 10, 12 வருஷங்களாகவே தெரியும். அந்த அம்மையார் பத்மாவதி அவர்கள் ரொம்ப பழக்கமாக இருந்தவர்கள். அவர்களுக்கு என்னைப் பற்றி ஒரு 30 வருடங்களுக்கு மேலாகத்தெரியலாம். இங்குள்ள எல்லா தாய்மார்களையும் பார்த்திருக்கிறேன். எனக்கு சிலரை மறந்து போயிருக்கும். என்னை மன்னிக்கணும். அருமையான அம்மையார்கள் என்னிடத்தில் மிக்க அன்புள்ளவர்கள். மனம் விட்டு என்னால் பாராட்டி எனக்கு ஆசி கூறினார்கள், என்றாலும் அவர்கள் என்னை உற்சாகம் மூட்டினார்கள் என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு நல்ல வண்ணம் இங்கே என்னைப் பாராட்டி அன்பு செலுத்தியிருக்கிறார்கள். என்னுடன் இப்படிப்பட்ட அறிஞர்கள் பெருமக்கள் எத்தனையோ பேர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் வாய்ப்பு இல்லாததினாலே அவர்கள் பொது நிகழ்ச்சிகளிலே கலந்து கொள்ளாது இருந்துவிட்டார்கள். இப்படிப்பட்ட காரியங்கள் மூலம் அவர் களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு. பல விஷயங்களை எல்லாம் அவர்கள் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு. நமக்கும் ஒரு மகிழ்ச்சி தரக்கூடிய காரியம். அவர்கள் என்னைப் பாராட்டினார்கள் என்றால் உள்ளபடியே அவ்வளவு பாராட்டுதலுக்கும் நமக்குதகுதி உடையவனா? இல்லையா? என்பது ஒருபுறமிருந்தாலும் கொஞ்சமாவது அவர்கள் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் விஷயத்திலே, நம்ம நாட்டிலே ஏதாவது ஒரு ஸ்தாபனம் பெண்கள் நலத்துக்காக பாடுபட்டது என்று இருக்குமானால் நாம் தான் என்று மனப்பூர்த்தியாகச் சொல்ல முடியும். தைரியமாகவும் சொல்லமுடியும். பெருமையோடவும் சொல்ல முடியும். மன்னிக்கணும். அந்த அளவுக்கு அவர்கள் விஷயத்திலே நம்முடைய கழகம் முயற்சிகள் எடுத்து அவர்களுடைய வளர்ச்சிக்காக பாடுபட்டிருக்கிறது. எந்த அளவுக்கு?

பெண்கள்நலம் காக்கும் ஒரே இயக்கம் திராவிடர் கழகம்

மற்ற மக்கள் நினைக்காத அளவுக்கு அவர்களுக்கு பின்னாலே இருந்து பாடுபட்டிருக்கிறது. அந்த தாய்மார்களுக்கே தோன்றிடாத அளவு சில கொள்கைகள் எல்லாம் அவர்களாலேயே வெறுக்கும் படியான அளவுக்கு முதன்முதல் இந்தியாவிலேயே பெண்களுடைய நலத்துக்கு என்று தீவிர விஷயங்களை எடுத்துச் சொல்லி மக்களிடையிலேயும் அரசாங்கத்துக்கும் தெரியும்படி பிரச்சாரம் பண்ணி கிளர்ச்சியும் பண்ணியிருக்கிறது என்று சொன்னால் அது நம்ம இயக்கம் ஒன்றுதான் . பலர் பெண்களுக்குப் பாடுபட்டிருப்பார்கள். அவர்கள் முன்வந்து செயல்பட தைரியமில்லையோ என்னமோ? வேறுயாரும் முன்வரலே நாம் தான் நம் இயக்கம் தான் முன்வந்தது. யாராவது வந்திருப்பதாகச் சொன்னால் நான் என் காதார கேட்டுக் கொள்ளத் தயாராய் இருக்கிறேன்.

புராணகால பெண்களின் அவலநிலை

ஏதோ சரித்திரத்தைப் பார்த்தால் ராஜாராம் மோகன் ராய் இரண்டொரு காரியத்தைப் பற்றி பெண்களுக்காகப் பாடுபட்டு அவர் வெற்றியும் பெற்றிருக்கிறார். இந்த பெண்களை புருஷனோடு உயிரோடு எரிக்கிற (சதி உடன்கட்டை ஏறுதல்) காரியத்திலே அவர் வெற்றி பெற்றிருக்கிறார். அவ்வளவுதான். அவருக்குப் பின்னாலே பெண்களைப் பற்றிச் சிந்திக்கிறதுக்கு ஆளே இல்லை. புலவர்கள், மகா புருஷர்கள், மகாத்மாக்கள், மகான்கள், வேறு யாரு யாரோ நம்முடைய தமிழ்வாணன் கேலி பண்ணினார். வெங்காயங்கள் பெண்கள் பற்றி யார் யார் பண்ணினார்களோ அவ்வளவு பேரும் பெண்களுக்கு பதிவிரதாத் தன்மை, அடக்கம், ஒடுக்கம், நாணம், மடமை, இந்த மாதிரி குணங்களைத்தான் பேசி அவர்கள் (பெண்கள்) விஷயத்திற்காகப் பாடுபட்டார்களே தவிர நம்ம பெண்கள் எப்படி இருக்கணும்? அப்படி இருக்கணும், பெண்கள் பிறந்தவீட்டானைத் தவிர பிற வேறு ஒருத்தனையும் பார்க்கக்கூடாது. இன்னொரு நெஞ்சிக்குள்ளே புகுந்தாலே அவள் பதிவிரதை அல்ல. எவ்வளவுக்கு அவர்களுடைய அறியாமையோ - அல்லது ஆணவமோ அந்தஅளவுக்குத்தான்பெண்களுக்காகப் பாடுப்பட்டார்கள்.

இன்னைக்கு இருக்கிற பெண்களுக்குத் தெரியாது. சுதந்திரத்தோடு இருக்கிறார்கள். அன்று பெண்கள் கண்ணிலே தென்படக்கூடாது. அடிமை வேலைகாரிதான் அவள். பொண்டாட்டின்னு பெயரிருந்தாலும், வேலைக்காரிதான் அவள். ஒரு குடும்பத்திலே ஒரு வேலைக்காரியாய் இருப்பது போலத்தான் அவர்கள் நிலைமை. அவர்கள் கல்யாணம் பண்ணிகிட்டாங்க. அது ராஜா வீட்டுக் கல்யாணமானாலும் சரி - பெண்களும் அப்படித்தான் நினைச்சிகிட்டு இருந்தாங்க. நமக்கு எவன் வந்து வாய்க்கப் போகிறானோன்னு பெண்னைப் பெத்தவங்களும், இவள் எவன் கிட்டே போயி சீரழியப்போறாளோ அல்லது எவன் இவளைக்கட்டிக்கிட்டு போறானோ? என்பது. இது அவர்களுடைய எண்ணம். அவ்வளவு இழிவாகப் பெண்களை நடத்தினாங்க. புராணங்களில் கதைகளைப் பார்த்தீங்கன்னா நாம சொல்றதுக்கே வெட்கப்படணும்.

பெண்களை வைச்சிகிட்டு அவ்வளவு இழிவு. பெண்களை யாருக்கு வேணும்னாலும் விற்பாங்க வாடகைக்கு விடுவாங்க. யாருக்கு வேணும்னாலும் போக்கியதுக்கு விடுவாங்க (சிரிப்பு). கடனுக்குப் பெண்களை அடமானம் வைப்பாங்க. அதுக்கெல்லாம் சம்மதிச்சவங்கதான் பதிவிரதை. சம்மதிக்காதவள் விபசாரி. அப்படிப்பட்ட கதைகளைக்கொண்டது தான் புராணம். அதுதான் இராமாயணம். அது தான் பாரதம். அதுதான் அரிச்சந்திர புராணம். அதுதான் பெரியபுராணம் கூட (கைத்தட்டல்)

வள்ளுவர் காட்டும் பெண்கள்

இன்னும் மகான்களும் - மகாத்மாக்களும் - பற்றி நாம சொல்ல வேண்டியதே இல்லை. (சிரிப்பு) நம்ம காந்தியார் கூட பெண்கள் ஆண்கள் - எங்களை இழிவு பண்ணிட்டா எங்கள் கதி என்ன ஆகிறதுன்னு கேட்டால் ராட்டை இருக்குதும்மா போ அதுவே எல்லாம் கொடுத்திடும்ன்னு அவரே சொல்லியிருக்கிறார். அதுக்கு மேலே அவராலே சொல்லமுடியலே. நிலைமையை உத்தேசித்து அவர் சொன்னார். உண்மையும் அப்படித்தானே? ரொம்ப நான் பாராட்றது வள்ளுவரை. இருக்கிற கருத்துக்களில் கொஞ்சமாவது எடுத்துக்கலாமல்ல. மற்றது அதைவிட மோசம். ஆனால் இதை கொஞ்சமாவது வைச்சுக்கலாம்னு

அவர்கூட பெண்களை அடிமையாகத்தான் நடத்தினார்.சொல்லுவாங்க வித்துவானுங்க அவர் அப்படிச் சொல்லியிருக்கிறார் - இப்படிச் சொல்லியிருக்கிறாருன்னு. அப்படி இப்படின்னு. கருத்து பெண்கள் பற்றி அவளே எவன் உன்னை விலைக்கு வாங்கிறானோ? அவனுக்கு நீ ஆளாக இரு. அவன் சொல்றதைக் கேட்டுட்டுப் போ.

அப்படித்தான் பெண்களுக்கு வள்ளுவர் சொன்னார். அதே மாதிரி அவரு ஆம்பளைங்க சங்கதி பற்றி சொல்லலே. பெண்களைப் பற்றி ஏற்படுத்தின கதைகள் எல்லாம் ரொம்ப கொடுமை. ஆணுக்கு அடங்குவது பெண்மை. நீங்க பெரிய மனுஷன் அப்படி எல்லாம் பண்ணாதீங்க. புருஷன் ரொம்ப நல்லவன் அப்படீன்னுதான் சொன்னாரே தவிர, அப்படி பண்ணக்கூடாது - நீ பெண்ணை அடிமைப் படுத்தினீயானால் நீ அயோக்கியன்னு வள்ளுவர் சொல்லலே.  

ஆண் ஆதிக்க சமூகம்

எதுக்குச்சொல்றேன்?நம்மநாட்டு நிலைமை 1000, 2000, 3000 வருஷமாக பெண்கள் ஜீவப்பிராணியே அல்ல. ஒரு இயந்திர மாதிரி - விலைக்கு வாங்கின மிஷின் மாதிரி - பெண்கள் நடத்தப்பட்டார்கள். அவர்களுக்கே தெரியாது. ஒரு புருஷன் ஆயிரம் பொண்டாட்டியைக் கட்டிக்கலாம். (இராமாயணக்கதைப்படி) இந்தம்மா கொஞ்சம் கதவு திறந்திருந்தா ஏன் கதவுதிறந்திருக்குன்னு? கேட்பான். வீட்டுக்குள் வருகிற போதே,(சிரிப்பு) ஆண்கள்ஏராளமான பொண்டாட்டியையும் வச்சிக்கிட்டு பதினாயிரக்கணக்கான வைப்பாட்டியையும் வைச்சிக்கலாம். கிருஷ்ணன் கதைப்படி (சிரிப்பு) அதெல்லாம் நீதியில் சேர்ந்துப் போகும். இம்மாதிரி கடுமையான முறை. சொத்து ஒண்ணும் கிடையாது. அடிச்சா உதைச்சா ஏன்னுக் கேட்கக்கூடாது. அழுதா அடுத்த வீட்டுக்காரி வந்து என்னடி புருஷன் அடிச்சா நீ அழுவலாமாம்பாள். அந்த மாதிரி கேவலமான நிலைமையிலே கொடுமையாக வைச்சிருந்ததை அப்ப தட்டிகேட்கிறதற்கே ஆளே இல்லே. கேட்டால் ஒழுக்கம் கெட்டுப் போகும்பாங்க.எங்க சங்கதியை சொல்றேன். 1927 முதல் பெண்களுக்கு என்னென்ன உரிமை வேணும், என்னென்ன சுதந்திரமிருக்கணும்ன்னு, இதையெல்லாம் தைரியமாக எடுத்துச்சொன்னோம்.

ஒரு புருஷன் இரண்டு பொண்டாட்டியைக் கட்றதே கஷ்டமாயிருந்தது - ஆண்களுக்கெல்லாம்.புருஷனைக் கண்டிக்கிறதெல்லாம், பெண்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஒரு மகாநாடே 1929 லே (பிப்ரவரி 17,18 நாட்களில் நடந்தது) செங்கற்பட்டு முதல் மாகாணச் சுயமரியாதை மாநாட்டிலே நான் செய்த தீர்மானத்துக்கு விரோதமாக 1930லே ஒரு மாநாடு போட்டு 1929 லே மந்திரி பெண்டாட்டிகள் எல்லாம் அதில் இருந்து இவ்வளவு காரியம் செய்தது தவறுன்னு (பெண்களே) கண்டிச்சாங்க. அதுக்குப் பதிலாக மந்திரி பெண்டாட்டிகள் இருந்தது உங்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கலாம்மா அவன் கையை வைக்கிறவன் - உன்கதி என்னம்மா? அப்படீன்னு எல்லாம் பதில் சொன்னேன். (கைதட்டல்)

பெண்ணுரிமை

பெண்கள் விரும்பாத அனேக காரியங்கள் மளமளவென்று ஒரு 10,20 வருஷத்திலே, இப்ப 10 வருஷத்துக்குள்ளே நல்ல அளவுக்கு அமலுக்கு வந்தது சுருக்கமாகச் சொல்றேன். மேல் நாட்டிலே இருக்கிற பெண்களுக்கு இல்லாத உரிமை நம்ம நாட்டுப் பெண்களுக்கு வந்திருக்கு. இன்னும் என்னாவரும்ன்னு எனக்குத் தெரியலே. காலையிலே எழுந்திரிச்சா புருஷன் - மனைவியை சுற்றி வந்து நமஸ்கரித்துப் போகணும். அந்த மாதிரி சட்டம் வரணும். அதுதான் பாக்கி. பாக்கி எல்லாம் உரிமையும் ஏறக்குறைய பெண்களுக்கு வந்திட்டுது. அவர்கள் அதனாலே மனிதத் தன்மை அடைந்திருக்கிறார்கள். பெண்மக்களுக்கு ஆணுக்கு சமமாக சொத்துரிமை தரலாம். புருஷன் சொத்தும் வந்து தகப்பன் சொத்தும் பெண்கள் அடையும் உரிமை வந்திட்டுது. சில தடைகள் எல்லாம் விட்டுவைச்சிருந்தாங்க அதுயெல்லாம் இப்ப நீங்கிப் போச்சு. அந்தஸ்து அந்தஸ்து ஆண்களுக்கு உண்டான அந்தஸ்து பெண்களுக்கும் உண்டு என சர்க்கார் சட்டமூலம் செய்திட்டாங்க. இரண்டு பேரையும் நடத்தையில் எந்த விதமான பேதமும் இல்லே. அதுபோலவே கல்வியும் பெண்களுக்குக் கொடுத்துக்கிட்டு வர்ராங்க. கொஞ்சம் படிப்பில் பாக்கி இருந்தது. எல்லா மக்களும் படிச்சாகணும்ன்னுட்டாங்க ஆணும் பெண்ணும் சம்பளமில்லாபடிப்பு எஸ்.எஸ்.எல்.சி வரை இருந்தது. இப்ப அதுக்குமேலும் படிக்கலாம்ன்னுட்டாங்க

இயக்கம் கண்ட வெற்றி

ஆகவே இன்றைக்கு ஆண்களைவிட உரிமையோடு சமுதாய உரிமையோடு - சுதந்திரத்தோடு - இப்ப வாழ்வது பெண்கள்தான். அவர்கள் கிடைத்துள்ளதை நழுவ விடாமல் அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதை நான் சொல்லுவேன். அதற்கு அவர்களுக்கு தைரியம் வேணும். பெண்களைப் பிடிச்சிருக்கிற பெரிய பிசாசு, இந்த முட்டாள்த்தனமான பதிவிரதாதர்மம் - பதிவிரதாதர்மம் எனச் சொல்லி ஏய்க்கிறது. அந்த வார்த்தைக்கு அர்த்தமே இல்லை. அந்தப்புரட்டினாலே - அந்த மாயையினாலே பெண்கள் அந்த உணர்வில் இருக்கிறார்கள். பெண்கள் இன்னும் படிக்க ஆரம்பிச்சால் இவர்களுக்கு அந்த பதிவிரதா - தர்மம் என்கிற உணர்ச்சியெல்லாம் மாறிவிடும். பதிவிரதா - தர்மம் கூடாதுன்னா பெண்கள் எல்லாம் ஒழுக்கக்கேடாக இருக்க வேணும்கிற அர்த்தமில்லை.

பதிவிரதா தர்மத்துக்கும் ஒழுக்கத்தும் சம்பந்தமில்லே. அதைப் பொறுத்து இருக்கிற முறை காரியம் எல்லாம், ஒழுக்கமாக இருக்கணும். ஆணுக்கு என்னா ஒழுக்கமோ அதுதான் பெண்ணுக்கும் இருக்கணும். ஆனால் யாரும் அப்படி சொல்லலே. ஆகவே அவர்கள் இந்த முப்பது வருஷத்துக்குள்ளாக நம்ம இயக்கம் ஏற்பட்ட (1925க்குப்) பிறகும் நாம என்னென்ன கருதினோமோ என்னென்ன சொன்னோமோ எதை எதைக் காங்கிரசு எதிர்த்ததோ - எதை எதைக் காந்தியார் எதிர்த்தாரோ - மற்றும் பெரிய பெரிய வைதீகர்கள் பெரிய தலைவர்கள் எல்லாம் எதிர்த்தார்களோ, அதுகளையெல்லாம் இரண்டாம் பேருக்குத் தெரியாமல் சாதாரணமா நிறைவேறியது.

நம் வெற்றிக்குக் காரணம்

முக்கியமாக இன்றைய தினம் ஒரு ஆம்பளை ஒரு பொம்பளையைத்தான் கட்டிக்கலாம். புருஷன் பொண்டாட்டியாக இருக்கிற வரைக்கும். திருமணம் விலக்கு பண்ணுகிற வரைக்கும். அதுக்கு மேலே இரண்டாவது கல்யாணம் செய்துக்கிட்டா சிறை அபராதம் உண்டு. இது கடவுளுக்கு விரோதம். மதத்துக்கு விரோதம். மனுதர்ம சாஸ்திரத்துக்கு விரோதம். பெரியவங்க கடவுள்கள் முன்னோர்கள் நடந்த நடப்புக்கு விரோதம். எப்படி இந்த நிலைமை வந்ததுன்னா? கடவுளை மதத்தை, பெரியவங்களை, சாஸ்திரங்களை எல்லாத்தையும் நாம ஒழிக்கிறதுங்கிற முயற்சியை எடுத்ததினால்தான்; அதுக்கு அப்புறம் தான் இதுவெல்லாம் இப்ப நடக்க முடிந்தது. விளையாட்டா சொல்லிடலாம். அவன் கடவுள் இல்லேங்கிறான், மதம் இல்லேங்கிறான், சாஸ்திரங்கள் இல்லேங்கிறான். கடவுளை மதத்தை சாஸ்திரங்களை நாம் கண்டித்து சொல்லாமல் இருந்திருந்தோமேயானால் நாமெல்லாம் கூட இன்னும் மடையர்களாகக் தான் இருந்திருப்போம்.

அவ்வளவு தூரம் நாம அங்கே போன பிறகுதான் மக்கள் நம் கருத்துக்களுக்கு இணங்கிவருகிறான். எல்லாரும் கடவுள் போனா நமக்கென்னா? இருந்தால் நமக்கென்னா? அதுவேலை அது பார்க்குது. இல்லாட்டா நாம இருக்கிறோம். நம்மாலானதை நாம பார்க்கிறோம். எருமைக்கு கழுதைக்கு, மாட்டுக்கு, ஆட்டுக்கு, கடவுள் இருந்தா காப்பாத்துகிறான். பிழைக்குதா இல்லியா அவைகள்? மனுஷனுக்கு மாத்திரமா (கடவுள்) வேணும்? அறிவு இருக்கிறதினாலே அவன் மடையனாக இருக்க வேணுமா?ஆனதினாலே பலர் கடவுளை சொல்லி மக்களை உணர்ச்சி அற்றவர்களாக ஆக்கி சிந்தனைக்கே அறிவில்லாது பண்ணிட்டானுங்க. சிந்திக்கும் படி செய்து உணர்ச்சியை ஊட்டினதும் தன்மானத்தை உண்டாக்கியதும் மனித தர்மத்தை எடுத்துச் சொன்னதும் நம்ம இயக்கம் தான். நம்ம இயக்கம் சொன்னதற்கு ஆதாரமாக வைச்சிக்கிட்டது எது? கையில் ஆயுதமாக வைச்சிகிட்டது எது? கடவுள் இல்லை. மதம் ஒழிக. சாஸ்திரம் ஒழிக. பாப்பான் ஒழிக. காந்தி ஒழிக. காங்கிரஸ் ஒழிக
என்றெல்லாம் சொன்ன பிறகுதான் வசதி ஏற்பட்டது நமக்கு. இதிலே எது மிஞ்சியிருந்தாலும் நமக்கு இந்த நிலை வந்திருக்காது.

தேவதாசிகள் மாநாடு

ஆனதினாலே நான் சொல்லுகிறேன் நீங்கள் பாதுகாப்பாய் இருங்க. நான் என் லட்சியத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். யாரையும் நான் எதிர்ப்பையும் லட்சியம் பண்ணாமல் இருந்தேன். எல்லாரும் வரிசையாய் நம் லட்சியத்துக்குஆளாகவேண்டியிருந்தது.பொட்டுக்கட்டுகிறது (தேவதாசிகளாக சாமிக்கு) வழக்கத்தில் இருந்த போது, பழக்கத்தில் இருந்தபோது, பாப்பான் நம்ம கிட்டே சண்டைக்கு வந்தான். அவன் தொழில் போய்விடுமேன்னு. மற்றும் நம்ம மக்களே சண்டைக்கு வந்தாங்க என்னிடம். அது கூட எனக்கு பெரிசா இல்லை. அப்பெண்களே (பொட்டுக் கட்டிக் கொண்ட தேவதாசிகளே) ஓர் மகாநாடு போட்டு அந்த பெண்கள் மாநாட்டிலே நான் தேவதாசிமுறை ஒழியவேண்டும் - என்று சொன்னதற்காக என்னை அவர்கள் கண்டித்தார்கள். எங்கள் பிழைப்பிலே மண்ணைப் போடுறியேன்னு. சில பெண்கள் எனக்காகக் கர்த்தர் ஞானம் போதிக்க வந்தாங்க. நீங்கள் பகுத்தறிவுவாதி ஒரு மனுஷனுக்கு அவசரமாய் இருந்தால் அவன் என்னா பண்ணுவான்? (சிரிப்பு , கைத்தட்டல்) அந்த மாதிரி நமக்கு ஞானம் போதிக்க வந்தாங்க. அப்பெண்கள் இப்போது இல்லாததினாலே ஒன்றும் உலகம் கெட்டுப் போயிடலே. அந்த சமுதாயம் ஒழிஞ்சி போனதினாலே எங்கேயும் ஓட்டைவிழுந்திடலே. இப்படியாக நாம எடுத்துகிட்ட முயற்சி அவுகளுக்கு எப்படி இருந்தாலும் அவர்கள் வாழ்வும் நாளுக்கு நாள், நாளுக்கு நாள் அவர்கள் முன்னுக்கு வந்துள்ளனர் பெண்மக்களே. சட்டப்படியும் அல்ல .

எல்லோருக்கும் சுயமரியாதை சுதந்திரம்

நேற்று ஒரு அய்யா வைக்கத்தைப் பற்றி பேசினாரு. அங்கு (வைக்கத்திலே) 1924இல் நான் ஒரு கூட்டத்திலே பேசிகிட்டே இருந்தேன். அங்கே இதே மாதிரி பெண்களைப் பற்றி எல்லாம் சொல்லிப்போட்டேன். அங்கு ஆண்களும் சிரிச்சாங்க. பெண்களும் சிரிச்சாங்க. அடுத்தநாள் ஒரு கூட்டம் நடந்தது. அதிலே ஒருத்தர் எழுந்திரிச்சி ஏதோ பேசிகிட்டு இருக்கிறபோது முக்கியமான ஓர் ஆள் அவர் காலமாயிட்டார். டி.கே. நாயர்ன்னா எல்லாருக்கும் தெரியும். அவர் ஏதோ ஒரு விஷயத்தைக் கண்டிக்கிறபோது என்னை இவுக பொம்பளைன்னு நினைச்சிகிட்டாரான்னு கேட்டுட்டார். பதில் சொல்லுகிறபோது உடனே ஒருத்தர் அதை வாபஸ் வாங்குன்னார். ஏன்னேன்? பெண்கள் எல்லாம் அவ்வளவு மட்டமான்னார். (கைத்தட்டல்) அவர் டி.கே.நாயர் சிரிச்சிகிட்டே அதை வாபஸ் வாங்கினார். அந்த மாதிரி உணர்ச்சியுள்ளவர்கள் அங்கெல்லாம் .அங்கே எது ஏதோ மாற்றம் வந்திட்டுது. நாங்கள் போறதுக்கு முன்னோலேயே இருந்த நிலைமையை மலையாளிகளைப் பற்றிச் சொன்னால் மலையாளிகளே கோவிச்சுக்குவான். அப்படியெல்லாம் இருந்தது. இன்றைய தினம் அங்கே நம்ம நாட்டைப் போல ஏறக்குறைய சட்டம் சம்பிரதாயங்கள் எல்லாம்.

இப்படியாக (பெண்கள்) அவர்கள் சமுதாயத்திலே பெரியமாறுதல். அதை அனுபவிக்கிறதுக்கு நல்ல தகுதிகள் எல்லாம் மக்களுக்கு எல்லாருக்கும் படிப்பு எல்லாருக்கும் எல்லா வித பதவியும், எல்லாருக்கும் சுய மரியாதைச் சுதந்திரம்.

பெண்களுக்குள் ஆண்களைத் தேடுதல்

இந்த நிலை நமக்கு குறைஞ்சது ஒரு 25 வருஷத்தை தாண்டி கிட்டேபோயிற்று. நம்முடைய பெண்கள் முன்னேற்றமானது அறிவியல்
முன்னேற்றத்தின் பயனாக. நம்முடைய நாடு - அது இல்லாது இருந்தால் 25 வருஷத்துக்கு எவ்வித வளர்ச்சியும் இல்லாது போகும். அதைத் தாண்டி 25 வருஷத்திய வளர்ச்சியை அடையும்படி ஆயிற்று. இது ரொம்ப நல்ல காரியம். நம்முடைய ஆண்மக்கள் இதை எல்லாம் உணரவேண்டும். இப்ப போகிற போக்கில் ஆண்கள் பெண்களை அடக்கி அடிமை செய்ய முடியாது. பெண்களைப் பற்றி தலைவர் அம்மா சொன்னாங்க. ஆம்பளை இருந்துதான் தீரவேண்டும் என்று. ரொம்ப மரியாதையோடு அவர்களுக்கு நான் என்னுடைய மாற்றுக் கருத்தைச் சொல்லுகிறேன். ஆம்பளைங்களுக்கு இருக்க வேண்டியதற்கு பொம்பளை இருக்கவேண்டியது அவசியமல்ல. ஆம்பளைக்கு பொம்பளை இருக்க வேண்டிது அவசியம். (கைத் தட்டல்) பொம்பளைங்களுக்கு இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஆம்பளைங்க இல்லாட்டா நம்ம கதி என்னவாகும்? நம்மை காக்கிறதுக்கு எந்த ஆளு? நமக்கு கஞ்சி ஊத்தறதுக்கு யாரு? இப்படியாக வந்திட்டதினாலே பெண்களுக்குள் ஆண்களைத் தேட வேண்டியதாய்ப் போச்சி
பெண்களின்றி ஆண்களில்லை
இனிவரும் காலத்திலே, கட்டாயம் பெண்கள் இல்லாட்டா ஆம்பளை இருக்கவே, வாழவே முடியாது என்கிற நிலைமை வரப்போவுது. இப்பவே கொஞ்ச கொஞ்சம் வந்துகிட்டே இருக்குது. அந்த தன்மை பெற்றாப்பிலே. ஆகையினாலே, ஏதோ அவர்களுடைய பாராட்டுக்கும் - அவர்களுடைய புகழ்ச்சிக்கும் - அவர்களுடைய ஆசிக்கும் - முழு உரிமையோடு நான் சொல்லிக் கொள்ள எனக்கு யோக்கியதை இல்லையானாலும் ஏதோ நமக்கு அதில் பங்கு உண்டு. நம்ம இயக்கத்துக்குப் பங்குண்டு. நாங்கள்தான் முதன் முதலில் துணிஞ்சோம் இதற்காக. எந்த இயக்கத்தாராரும் - யார் இருந்தாலும் சொல்லட்டும்,இல்லே அதுக்கு முன்னாலே நாங்கள் துவங்கினோம்ன்னு. அப்படியே ஒவ்வொரு துறையிலேயும் முதலில் எடுத்தது - அதற்கு முன்னாலே எப்பவாவது இருந்திருக்கலாம்?

வாழ்த்துவது மூட நம்பிக்கை

நமக்குச் சரித்திரமில்லே. நமக்குப் புராணம் - குப்பை இதுகள்; இந்த அசிங்கம் தான் நமக்குப் பழக்கமே தவிர, உண்மையான நாணயம், ஒழுக்கம் பற்றி நமக்கு காதிலே கேட்க கூட வாய்ப்பு இல்லே. அதனாலே நமக்கு விஷயம் தெரியலே. இப்ப நமக்கு எல்லா விஷயமும் புரியும்படியானநிலைமைவந்திட்டுது. இதில் நாம வளர்ச்சியடைந்திருக்கிறோம். அதனுடைய பலன் இம்மாதிரியான மாணிக்கங்கள் தாய்மார்கள் நல்ல அருமையான விஷயங்களைப் பேசி விஷயங்களை நன்கு உணர்ந்திருக்கிறதை அவர்கள் காட்டி நம்மை வாழ்த்தினார்கள். அவர்கள் வாழ்த்து பயன்படுகிறதோ இல்லையோ எனக்கு அதைப் பற்றிய அக்கறையில்லை. எனக்கு வாழ்த்துவதிலே நம்பிக்கையில்லை. அது ஒரு மூடநம்பிக்கை. என்னை வையிரான் பாருங்க. அவன் நாசமாயப் போகமாட்டானான்னு அதுவும் ஒரு மூடநம்பிக்கைதானே.

உடனே நான் நாசமாய்ப் போயிடுவேனா நான். ஆனதினாலே எல்லா மூடநம்பிக்கை போல வாழ்த்தும் - ஒரு மூடநம்பிக்கை. ஆனாலும் அது ஒரு செல்வாக்குப் பெற்றிருக்கிறதினாலே. அது காதுக்கு இனிமை கொடுக்கிறது. அது என்னா செய்கிறதுன்னா? வாழ்த்துகிறபோது அது இனிமையைக் கொடுக்கிறது. வைகிறபோது கொஞ்சம் துன்பத்தைக் கொடுக்கிறது. (பலத்த கைத்தட்டல்) ஆனாலும் அவர்களுடைய அன்பைப் பெற்றிருக்கிறோம் என்பதற்கு நான் பெருமைப் படுத்திகிட்டு இன்றைய தினம் இவ்வளவு தூரம் வாழ்த்தி ஊருக்கெல்லாம் என்னை அறிமுகம் செய்கிற முறையிலே, ஏதோ என்னுடைய தொண்டு கடுகளவு இருந்தாலும் அதை மலையளவு ஆக்கி எடுத்துச் சொல்லி, அதை அறிமுகம் பண்ணினதற்கும் அவுகளுக்கு இதுக்கு நான் என்ன நன்றி செலுத்த வேணும்? நன்றி செலுத்த மாட்டேன். அதற்கு அர்த்தமும் இல்லை

நன்றி செலுத்துவது தேவையற்றது

ஒரு மனிதன் செய்த நன்றி நல்ல காரியத்துக்கு அவன் செய்ய வேணும்னு நம்பி காத்துக்கிட்டு இருந்தால், பகுத்தறிவுப்படி நாங்கள் சொல்வோம், அவனுக்கு ஒரு கேடு வரட்டும் நாம உதவலாம்னு காத்துகிட்டு இருக்கலாம்னுதான் அர்த்தமாகிடும். (சிரிப்பு) நினைக்கவே கூடாது. மனசிலே வேணும்னா கொஞ்சூண்டு நன்மையை நாம பாழாக்கிட்டு இருக்கலாம். நன்றி செலுத்துவதும், நன்றி செலுத்த வேணும்கிறதும், அவனுக்கு ஒரு கஷ்டகாலம் வரும் இப்ப நாம திருப்பிச் செய்யலாம்னு போயிடும் அது. ஆனால் இது எல்லாம் வீணாய்ப்போறதா? இதுக்கு ஒண்ணும் மரியாதை இல்லியா? - என்று நீங்கள் கேட்டீங்கன்னா? அவர்கள் எந்த எந்தக் கருத்துக்களைக் கொண்டு வாழ்த்தினார்களோ அவைகளையெல்லாம் பொய்யாக்காமே ஏதோ என் வாழ்நாளிலே திருத்திகிறதுக்கு மனப்பூர்த்தியா வைக்கிறேன் என்கிற வாக்குறுதியை அவுகளுக்குக் கொடுப்பது மூலம் (கைத்தட்டல்) அவுகளுடைய வாழ்த்துக்கு என் கடமையைச் செலுத்துவேன்.

வாழ்த்தெல்லாம் நல்ல மனுஷனுக்கு - வாழ்த்து - பாராட்டு -இதெல்லாம் கடன். நல்ல மனுஷனுக்கு இதைச் சொல்றேன். மற்றவனுக்குச் சொல்லவரலே அவனுக்கு கவலை இல்லே.(கைத்தட்டல்) அவுங்க வாழ்த்தினதுக்கு நான் பரிகாரம் பண்ணியாகவேண்டும். திருப்பிக் கொடுக்கணும். நான் கொஞ்சமாவது சந்தோஷப்பட்டேனோ இல்லையோ? காதுக்கு இனிமையாயிருந்து - மனசுக்கு இனிமையாயிருந்தது. அதுக்கு நான் பதில் சொல்லி ஆகணுமே. இல்லாட்டா கடன். இல்லாட்டா துரோகி. அந்தக் கடனை எப்படி செலுத்துகிறது என்றால் அந்தக் காரியத்தை பூரணமாய் நிறைவேற்றிக் கொடுக்க ஏதோ நம்மாலான அளவுக்கு உழைக்கிறதுதான். அதிலேதான் இப்ப நான் அது பண்றேன். இதுபன்றேன்னு நான் சொல்லிடலாம் எனக்கு அதிகபாரமில்லை. ஏன்னா இப்ப நமக்கு முதல் மணி அடிச்சாச்சு. 86 (ஆண்டு) ஆயிப்போச்சி. இன்னும் மாசமோ அல்லது வருஷம்ன்னு சொல்றதுக்கு இல்லே. இருந்தா ஒரு வருஷம் இரண்டு வருஷம் இருக்கலாம். அது கூட எண்ணலாம். சுலபமாய் காலமாயிப் போச்சின்னு சொல்லிப் போடலாம் அவுகளே.

இப்ப நான் அவுகளுக்கு என்னுடைய வாக்குறுதியைக் கொடுக்கிறதினாலே கஷ்டமில்லே. இன்னும் நான் எவ்வளவோ நினைச்சிகிட்டு இருக்கிறேன். அவைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் நடைபெறும். அனைவருக்கும் என்னுடைய அன்பு கலந்த வணக்கத்தைக் தெரிவித்துக் கொள்ளுகிறேன். நான் பொசுக்குன்னு போனாலும் போயிடலாம். அய்யா அவர்கள் ஜி.டி.நாயுடு அவர்கள் பேசினார்கள். உங்களுக்கும் தெரியும் அய்யா ஜி.டி.நாயுடு அவர்களுக்கும் எனக்கும் இருக்கிற நட்பு. எப்பவும் அவுங்க, எந்தக் கூட்டத்துக்கு வந்தாலும் என்னைப் பாராட்டுவதற்கு அவர் கொண்டிருக்கிற ஒரு உறவு என்னைப் பற்றி கேலியா சில வார்த்தைகள் சொல்லுவது என் காதுக்கு இனிய சில சிக்கல் சம்பிரதாயங்களை எடுத்து எடுத்துச் சொல்லுவார்கள். ஒண்ணும் பொய் இருக்காது. அதை நான் சொல்லிகிறேன். நிஜம் தான் (கைத்தட்டல் சிரிப்பு) அய்யா அவர்களுக்கும் அது வேடிக்கை. சிக்கனம். நாங்கள் இரண்டு பேரும் ஒரு இலையில் உட்கார்ந்துகிட்டு சாப்பிட்டவன் தான். என்னால் ஆனவரைக்கும் தடுப்பேன். அவரு வேலைக்காரன்தானே எனக்கு அதிகமாகப் போட்டுட்டு போயிடுவான். (சிரிப்பு) அது அவருக்கு வேடிக்கை. போடுங்கிறேன். அவரு திங்கிறாரா இல்லையான்னு பார்ப்பார். அப்படி ரொம்ப எங்கள் இருவருக்கும் பழக்கமாயிடுச்சி.

அதனாலே இந்த வேடிக்கையை எல்லாம் எடுத்துச் சொல்லுகிறதுதான். அது என்னைப் பற்றிச் சொல்லுகிறதுக்கு (என்னைப்) பாராட்டுவதிலே அது அவருக்கு ஒரு முறை அவ்வளவுதான். (கைத்தட்டல் சிரிப்பு)வேறு சில விஷயங்களையும் அவரு சொன்னாரு. முக்கிய விஷத்தையும் நான் சொல்றேன். இந்த இடம் (பெரியார் திடல்)அவர் ஜி. டி . நாயுடுகாரு) வாங்கிக் கொடுத்தது. (பெரியார் அவர்களுக்கு அடிக்கடி ஏப்பம் வந்து தொல்லை தருகிறது ஆனாலும் பேச்சி தொடர்கிறது). ஆரம்பத்திலே நான் வேண்டான்னுட்டேன். இதற்கு முன்பே என்கிட்டே விலைக்கு வந்தது. வந்து சொன்னாங்க வாங்கலாம்னு. பின்னால் அவர் வாங்கிட கட்டாய படுத்தவே -இயக்கத்துக்காக வாங்கினேன். இத்தோடு என் பேச்சை முடிச்சிக்கிறேன். வணக்கம்.


 நூல் - பெரியாரின் சிந்தனைத் திரட்டு
தொகுப்பாசிரியர் - து.மா.பெரியசாமி




Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை