ஆத்தூர்சிவகடாட்சம் இல்ல திருமணத்தில் பெரியார் உரை (12.11.1967)


12.11.1967இல் ஆத்தூர் சிவகடாட்சம் இல்லத்தில் நடந்த செல்வன் ஆறுமுகம் - செல்வி கஸ்தூரி வாழ்க்கை துணைநல ஒப்பந்த நிகழ்ச்சியில் முத்தமிழ்க் காவலர் கி..பெ.விசுவநாதம் அவர்கள் முன்னிலையில் தலைமை தாங்கிய தந்தை பெரியார் .வெ.ராமசாமி அவர்கள் ஆற்றிய உரை.

தோழர்களே! தாய்மார்களே! முத்தமிழ்க்காவலர் அய்யா அவர்களே! நாம் இப்போது இங்கே நண்பர் சிவகடாட்சம் அவர்களின் இல்லத்தில் மணமக்களாக விளங்கும் செல்வர் ஆறுமுகம் அவர்களுக்கும் செல்வி கஸ்தூரி அம்மைக்கும் நடைபெறப்போகும் வாழ்க்கைக் துணை ஒப்பந்த நிகழ்ச்சியை முன்னிட்டு இங்கே கூடி இருக்கிறோம். இந்த நிகழ்ச்சி நீண்ட நாட்களாக நம்மவரிடையே பெரும்பாலும் நடந்திருந்த நிகழ்ச்சி முறைகளுக்கு மாறாக சீர்திருத்த முறையிலே சமுதாயம் வளர்ச்சி அடைய வேண்டும் என்கிற உணர்ச்சி இப்போது மாறுதலான முறையிலே இது நடைபெற இருக்கிறது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்திலே நானும் அருமை நண்பர் விசுவநாதம் அவர்களும், இதே குடும்பத்தை சேர்ந்த நண்பர் இல்லத்தில் வாழ்க்கை ஒப்பந்த நிகழ்ச்சி நடந்த போது கலந்து கொண்டோம்.

மனித சமுதாயம் மாண்புற பாடுபடும் பெரியார்

நாட்டிலே இந்த அளவுக்கு இம்மாதிரி நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறோம். குறிப்பாக நான் இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதன் நோக்கம் - பழமைகளை எல்லாம் அழித்து, இம்மாதிரி நிகழ்ச்சிகள் மக்களிடத்திலே நடைபெறச் செய்ய வேண்டுமென்றும், அதுவும் தமிழர் என்பதன் பேராலேநீண்ட நாட்களாகவே காட்டு மிராண்டிகளாகவே வாழ்விலே இருந்து வந்திருக்கிறதனாலேயே, பகுத்தறிவைபற்றி சிந்திக்காது மிருகப் பிராயத்திலே இருந்து வருவதினாலேயே, இதை எப்படியாவது மாற்றி, உலகத்திலுள்ள மற்ற சமுதாயத்திற்குஏற்ப மக்கள் இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தினால் அனேகப்பழயவிஷயங்களைக் காரியங்களை கண்டித்து மாற்றி புரட்சிகரமான கருத்துக்களைப் புகுத்தி இந்தத்துறையை மாத்திரமில்லாமல், மனித சமுதாயத்தில் பல துறைகளிலேயும் ஓர் அளவுக்கு நாங்கள் பாடுபட்டு வருகிறோம்.
பெரியாரின் குறிக்கோள் பெண்கள் விடுதலை
மனித சமுதாயம் பகுத்தறிவுள்ள சமுதாயமாக வேண்டும். தமிழர் ஜாதி முறைப்படி, தமிழர் நிகழ்ச்சிப்படி, நீண்ட நாளாக நடந்து வந்த ஆதாரப்படி, இது காலம் வரை நடந்து வந்திருக்கிறோம். உலகில் முக்காலே அரைக்கால் வாசி மக்கள் திருந்தியும், நாம் இன்னமும் இந்தக் காட்டு மிராண்டித் தன்மையிலேயே இருந்துவருகிறோம். நாம் காட்டு மிராண்டித் தன்மையிலேயே இருக்கிறோமென்பதிலே சமுகத்தில் மற்ற சமுதாயத்துறையிலே, ஜாதியிலே - பழக்கவழக்கங்களிலே - தொடர்ந்து இருந்து வருகிறோம் என்றாலும் கூட - இந்த வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த நிகழ்ச்சிக்கு மாறாக நம் சமுதாயத்தில் இருந்து வந்த முறை கல்யாணம்- விவாகம் என்னும் பேராலே இருந்து வந்த காட்டு மிராண்டித்தனமானது மட்டுமல்ல மிருகப்பிராயத்திலேயே இருந்து வந்திருக்கிறது. அதற்கு உதாரணம் வேண்டுமென்றால், நம்முடைய பெண்களை நம்முடைய ஆண்கள் நடத்திவந்த விதமும் நம்முடைய ஆண்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தியிருக்கிற திட்டங்களின் தன்மையும், மிகவும்கொடுமையானது. நாட்டிலே சீர்திருத்தம் செய்யவேண்டுமென்று சிலர் கூறுகிறார்களே தவிர பெண்கள் அடிமை வாழ்வு போகப் பாடுபடுவதில்லை. பெண்கள் என்றால் யார்? தாயார், நம்முடைய மகள், நம் உடன்பிறப்புக்கள், போன்ற பெண்கள் சமுதாயம். அப்படிப்பட்ட பெண்கள் சமுதாயத்தின் வளர்ச்சியைப் பற்றி எவனுமே கவலைப்படவேயில்லை (கைதட்டல்) நாங்கள் இதுபற்றி நீண்ட நாட்களாகவே சொல்லிக்கொண்டு வருகிறோம். நாங்கள் எங்கள் (சுயமரியாதை) இயக்கம் 1925இல் தலையெடுக்கிற வரைக்கும் பெண்களின் நன்மை தீமையைப்பற்றிக் கூட எவனும் எண்ணவில்லை. நாங்கள் பெருமையாகக் கூடச் சொல்லுவோம். பெண்கள் விடுதலைக்கு நாங்கள் பாடுபடமுன்வந்தோம். பெண்கள் விஷயத்தில் மாறுதல் ஏற்பட யாரும் பாடுபட முன்வரவில்லை. பொது மக்களும் பெண்கள் மாறுதல் அடைய வேண்டுமென்று கருதவில்லை.
கல்யாணம் கிரிமினல்
இந்த மாதிரியான வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த முறையைக் கூட கிரிமினல் காரியமாக ஆக்க வேண்டும் என்று நான் பேசிக் கொண்டு வருகிறேன் கல்யாணம் என்று சொன்னாலே அதை கிரிமினல் ஆக சட்டத்தில் இடம் பெறவேண்டும். பெண்களின் முன்னேற்றமும் சமுதாய வளர்ச்சியில் தடைப்பட்டுப்போச்சி. ஆகவேதான் இதையெல்லாம் அடிப்படையிலிருந்து மாற்றியமைக்கணும். நம்முடைய பெண்களுக்கும் நம்முடைய முன்னோர்கள் என்பதன் பேராலே காட்டு மிராண்டிகள் ஏற்பாடு செய்திருக்கின்ற திட்டங்கள் - குணங்கள் - அமைப்புகள் - என்னவென்றால் பெண்களுக்கு அச்சம், மடம், ஞானம், பயிர்ப்பு இதுதான் பதிவிரதா தர்மம். அது பெண்களுக்கு வேண்டும் என்றார்கள். இவற்றை நாம் ஏற்கவில்லை. பொம்பளைக்கு கற்புதான் வேண்டுமென்றார்கள். பக்கத்திலே கணவன் உட்கார்ந்தால் நாரும். அப்படி இருந்தாலும் அவனருகில் இருந்தால்தான் அவள் பதிவிரதை. கணவனுக்கு பயப்படவேணும். இப்படியாக ஒரு காட்டுமிராண்டித் தன்மையிலேயே மக்கள் சிந்திக்க முடியாத தன்மை இருந்த காலத்தில் ஏற்பாடு செய்த திட்டங்கள் அவை. 1967லே மனிதன் சந்திர மண்டலத்துக்கு போயிட்டு வருகிற காலத்திலே 15 ஆயிரம் மைலுக்கு அப்பால் இருக்கிறவனை நாம் இப்பால் இங்கிருந்து பார்க்கிற காலத்திலே இன்னைக்கு சொல்கிறானய்யா பெண்கள் கணவனுக்கு அடங்கிதான் நடக்க வேணுமென்கிறான். ஆகவே நாம் இவைகளை எல்லாம் மாற்றி பெண்கள் விடுதலைக்குப் பாடுபட வேண்டும் என்கிற தன்மையிலேயே கடுமையாக அவர்களுக்காகப் பாடுபட வேண்டும். இது நம்ம மக்களுக்கு நான் சொல்லுவது பிடிக்காது. ஆண்களுக்கும்பிடிக்காது. யார் பெண்களுக்கு விடுதலை வேண்டுமென் கிறார்களோ அவர்கள்தான் பாடுபடவேண்டும். இது நம்ம மக்களுக்கு நான் சொல்லுவது பிடிக்காது. ஆண்களுக்கும் பிடிக்காது. யார் பெண் களுக்குவிடுதலைவேண்டுமென்கிறார்களோ அவர்களுத்தான் பிடிக்கும். மக்களுக்கும் என்னா இவன் இப்படி பேசறானே என்பார்கள். ஆனால் பெண்கள் நீங்கள் தாய்மார்கள் ஆம்பளைங்களுக்கு வேலை செய்யும் அடிமைகளாக இருக்காதீர்கள். ஏனென்றால் உங்களிடம் அதிக சக்தி இருக்குது. ஆம்பளை உங்களை அடிச்சால் பட்டுனு நீங்கள் உடனே எதிர்த்து அடிக்கணும். இதுமாதிரி இல்லாததினாலேதான் பெண்கள் ஆண்களுக்கு அடிமையானார்கள். பெண்ணடிமை பெயரிலும் சாஸ்திர சம்பிரதாயம் இருக்கிறது பெண்களை அடிமையாக்கவே சாஸ்திரம், சம்பிரதாயம் இலக்கியம் எல்லாம் இருக்கின்றன. நான் பெண்களை எவ்வளவோ மாற்றியிருக்கிறேன். நான் வாழ்க்கைத் துணைவியாக அவரை ஏற்றுக் கொண்டேன் என்றால் சரி இதை விட்டு பார்ப்பான் சொல்லுகிற கடவுள் வெங்காயம் இதுவெல்லாம் இந்தக் காலத்துக்கு எதற்கு? அதுவெல்லாம் மக்களைமடையனாக ஆக்குவதற்குதான். அதுவெல்லாம் நமக்கு பிரயோஜனமில்லை. எந்த அளவுக்கு மதத்துக்கு கடவுளுக்கு எதிர்ப்பாக இந்தக் காரியங்களை எந்த அளவுக்குச் செய்ய வேண்டுமோ அந்த அளவுக்கு செய்து கொண்டுவருகிறோம்.
அந்த முறையிலே இந்த நிகழ்ச்சி இங்கு நாம் பழமையும் புலவர்களும் நம்முடைய முன்னோர்களும் இலக்கியங்களும் நமக்கு கேடாக நாம் எவ்வளவு திருத்திக் கொண்டே வருகிறோமோ அதை அவைகள் அழித்துக் கொண்டே வருகின்றன. அருமைத் தாய்மார்களே! தோழர்களே! நீங்கள் நான் சொல்வதை சிந்தியுங்கள். ஆராய்ச்சி பண்ணுங்கள். சரியென்றால் ஏற்றுக் கொண்டு மற்றதை தள்ளி விடுங்கள். ஒரு பழக்கமிருக்குது. முள்ளு மேலே காலை வைத்தாலும் உன் இஷ்டத்துமேலே (காலை ) வைக்கணும். அப்பதான் இருக்கின்ற குறைபாடுகள் எல்லாம் நீங்கும். நான்சொல்லுவதை அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டுமென்பதில்லை. என் ஆசை சிலதைச் சொன்னேன். இங்கு மணமக்கள் செல்வர் ஆறுமுகம் செல்வி கஸ்தூரி மாலை அணிவித்துக் கொள்வார்கள். மணமக்கள் வாழ்க்கை ஒப்பந்த நிகழ்ச்சி முடிவுற்றதும் திருச்சி முத்தமிழ்க் காவலர் கி..பெ.விசுவநாதம் மணமக்களுக்கு அறிவுரை கூறி பின்பு தந்தை பெரியார் .வெ.ராமசாமி அவர்கள் முடிவுரையில் குறிப்பிட்டதாவது:-
மணமக்கள் வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் இனிது நிறைவேறிற்று. அய்யா அவர்கள் விசுவநாதம் அவர்கள் மணமக்களுக்கு நல்ல அரியக் கருத்துக்களை எடுத்துச் சொல்லி நல்லவண்ணம் அரியதொரு சொற்பொழிவாற்றினார்கள். முடிவுரை என்னும் பேரில் நான் சில வார்த்தைகள் சொல்லி நிகழ்ச்சியை முடிவுக்குக் கொண்டு வருகிறேன். நான் மறுபடியும் சொல்லுகிறேன். நான் சொல்லுவதை எல்லாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதல்ல, சிந்திக்க வேண்டும் சரி என்று பட்டதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மானுட வளர்ச்சிக்கு தடை கல்யாணம்
சாதாரணமாக சொல்லுகிறேன். இனிமேல் இந்த திருமணம் என்கிற முறை கிரிமினலாக ஆக்க வேண்டுமென்று ஒரு வார்த்தை சொன்னேன். கல்யாணமே கூடாது, புருஷன் பெண்டாட்டியாக ஒரு வாழ்க்கைக் கூடாது. மனிதன் சுதந்திரத்தோடு பிறந்தான். என்னத்துக்கு புருஷனுக்கு பொண்டாட்டி அடிமையாகிறது? பொண்டாட்டிக்கு புருஷன் என்னத்துக்கு அடிமையாகிறது? இரண்டு பேருக்கும் காதல் உண்டாகணும். அவர்கள் இஷ்டம் போல் அனுபவிக்க வேண்டும். கட்டுப்பாடுவேணும். இந்த இரண்டு பேரோட இருந்துக்க வேணும். கல்யாணம் என்ற ஒன்றை மனிதன் இழுத்துப் போட்டுக் கொண்டு வாழவேணுமென்கிற அவசியம் என்ன? அதனாலே யாருக்கு லாபம்? இந்தமுறை வந்த பின்பு பெண்கள் எந்த முறையில் வளர்ந்து உயர்ந்திருக்கிறார்கள்? இல்லை ஆண்கள் தான் எந்த அளவுக்குச் சுதந்திரம் பெற்றிருக்கிறார்கள்? திடீரென்று உங்களுக்குக் கோபம் வரும். இது ஒண்ணு மாத்திரமல்ல. இதற்கு முன்னே இருந்தவர்கள் எவ்வளவு கிரிமினல் பண்ணியிருக்கிறாங்க தெரியுமா? காட்டு மிராண்டித்தனமான அவசியத்தை முன்னிட்டு?
உடன்கட்டை ஏற்றுதல் கிரிமினல் குற்றம்
புருஷன்செத்தால்பெண்டாட்டியை உயிரோடு பாடையிலே வச்சுக் கட்டி, நெருப்பிலே அவளை வைக்கப் போகிறவரைக்கும், அந்தப் பாடையிலே ஒரு ஆளு ஒரு தடியை எடுத்துக்கிட்டு போவான், அந்த பொம்பளை கையை காலை ஆட்டினா அவளை அடிக்க. எங்கே போவாங்கன்னா உடன் கட்டை ஏறுவதற்கு. அந்த பொம்பளையும் அதை பெருமையா எடுத்துக்கிட்டு புருஷன் பாடையோட போயி படுத்துக்குவாகொஞ்சம்சிலபேருக்கு கஷ்டமா இருக்கும். அவங்களை கட்டிப் போட்டுக் கொண்டு போவாங்க. வெள்ளைக்காரன் வந்த பிறகு அதை கிரிமினல் என்று சொல்லி விட்டான். எதை? சாஸ்திரப்படி, சம்பிரதாயப்படி நம்ம மதப்படி உயர்ந்த தத்துவமாக இருந்து, நடந்த ஒரு காரியத்தை வெள்ளைக்காரன் பார்த்த - உடனே - இது - கிரிமினல் இது காட்டுமிராண்டிப்பசங்க கொலைக்கார பசங்க வேலை அப்படீன்னு சொல்லி சட்டம் பண்ணினான். இப்ப நான் சொல்லுவது எப்படித் தோணுகிறதோ அதே மாதிரிதான் அப்ப பல பேருக்கும் தோன்றியிருக்கும். பினை கைதி கிரிமினல்
அது மாத்திரமல்ல அடிமையாக 5 வயசு 6 வயசு குழந்தையை விலைக்கு வாங்கிக்கிறது - வேலை செய்கிறதுக்குன்னு அக்காலத்தில். அதை எல்லா விதக் கொடுமைகளையும் செய்வாங்க. அது அடிமையாக நடத்தப்பட்டால் அது கிரிமினல். குழந்தையின் அப்பன் எனக்கு சம்மதம் நான் விற்றுவிட்டேன் என்பான். வாங்கினவன் எனக்கு ஆசை வேலை பண்ண வாங்கினேன் என்பான். அது வேறு. கிரிமினல் படி குற்றமானால் தான் தண்டனை.
குடும்ப வன்முறை சட்டம்
ஒருகணவன் அவன் மனைவியை ஏதாவதுஅடிச்சி போட்டான்னா அது கிரிமினல். பொம்பளைகள் எல்லாம் முன் காலத்திலே எப்படி நினைத்து சொல்லுவாள் தெரியுமா புருஷனிடம்? மகாராசா உன் கையாலே நான் செத்தால்நான் புண்ணியத்துக்குப் போய்டுவேன் என்பாள். இப்ப சட்டப்படி அது கிரிமினல். இப்போ வைதால் கிரிமினல். வாடி போடீன்னா இவன் கிட்டே இருக்க இஷ்டமில்லை அய்யா என்னைக் காட்டுமிராண்டி- யாட்டம் பேசுறான் என்பாள் - இதையெல்லாம் மனிதனுக்கு சுதந்திரம் ஏற்பட்ட பிறகு மாறுதல் ஏற்பட்ட பிறகு ஏற்படுகிற மாற்றம். உலகம் இன்னும் எவ்வளவோ மாறிகிட்டு வரப்போவுது.
பகுத்தறிவால் சுதந்திர உணர்ச்சிவளரும்
அப்படி உலகம் சுதந்திரத்துக்கு போகிற போது, பின்னாலே திரும்பிப் பார்க்கமாட்டாங்க. எப்படி இருக்கும் தெரியுமா சுதந்திரம்? சுதந்திரம் இருக்கலாம். யாரு பெரியவங்கங்கிறதை யார் எந்தக் கருத்தோடு பார்த்தாலும் சரி. கடவுள் உண்டாக்கினார் என்று சொன்னாலும் சரி. இயற்கை அப்படி அமைச்சிது என்று சொன்னாலும் சரி. அதிலே இருக்கிற முக்கியமான கருத்தெல்லாம் சந்ததி விருத்தியாகிறதுதான். அது இரண்டோட போயிடக்கூடாது. மறுபடியும் வரும். அது எப்படியோ இயற்கையிலே அடிபட்டுப் போச்சி. புழு பூச்சி முதற்கொண்டு புல் பூண்டு முதற்கொண்டு அது விருத்தி பண்ணுகிறமுறையிலே. அந்த ஒரு காரியம்தான். அதற்கு வேண்டிய உணர்ச்சிகளை எல்லாம் ஊட்டினாங்க. மற்ற படி - ஆணும் பெண்ணும் கொஞ்சும் படி வீடு கட்டிக்கிட்டு வாழ்ந்துகிட்டு - ஒருத்தருக்கொருத்தர் அடிமை - எஜமான் தன்மை வைச்சிக்கிட்டு அப்படி வாழ்கிறதுக்காகன்னு அல்ல. ஆனதினாலே மனிதன் பகுத்தறிவு உயர, உயர சுதந்திர உணர்ச்சிகள் வளர வளர. எந்தெந்த துறையிலேநாம் இனம் சமுதாயம் பழமை என்கிற முறையிலே நாம் அடிமைப்பட்டு கிடக்கிறோமோ அதையெல்லாம் மாற்றிக்கவேணும். அதுவும், மனிதன் பகுத்தறிவுவாதி. அதற்காகத்தான் சொல்லுகிறேனே தவிர மனிதன் தன்னை மாற்றிக்க வேணும் என்பதற்காக சொல்லவில்லை.
எல்லாத்துறையிலும் விடுதலை பெற பாடுபடுவோம்
இரண்டாவது அய்யா அவர்கள் (முத்தமிழ் காவலர் கி..பெ.விஸ்வநாதம் அவர்கள்) நம்முறைகளைப் பற்றி எடுத்துச் சொன்னார்கள். நமக்கு முறைகள் எப்ப வந்திச்சி? எப்ப ஆரம்பம் ஆச்சு? என்பதெல்லாம் பல புத்தகங்களை பார்த்தால் தான் தெரியும். அறிவைக் கொண்டு நாம் பார்த்தோமானால் எது இருந்தாலும் இப்ப தேவையில்லை. பழசைப் பார்த்து இப்ப மாற்றிக்கிட்டு வரவேணும் என்கிற அவசியமில்லை. பழசுஇருந்தாலும் இன்னைக்கு தேவை என்னா? மாறுதல் அது இயற்கை. அது அனுபவிக்கத்தக்க பலன் என்னா? மாற்றுவதற்காக மாற்றலே. நமக்கு சில சௌகரியத்திற்காக. நாம் சுதந்திரம் உண்மையானதாக இருக்க வேண்டுமென்று நினைத்தோமானால் எல்லாத்துறையிலும் விடுதலை பெறத்தான் பாடுபடவேணும். விடுதலையின் வளர்ச்சியிலே நமக்கு மாத்திரமில்லாமல் சமுதாய நலத்துக்கும் இருக்கிற அளவுக்கு, நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நம்முடைய சின்ன விஷயத்தை சொல்லிவிட்டு நான் மேலே பேசவிருக்கிறேன். இந்த சடங்கு முறைகளைப் பற்றி எனக்கும் சில புலவர்களுக்குமே, இந்த சடங்கு இருந்திருக்க முடியாது. இது ஆரம்பமான பிறகு இதுக்கு கண்ணு மூக்கு வச்சிருப்பாங்க. எப்படி குழந்தை பிறக்குது? நிர்வாணமாத்தானே பிறக்குது. அப்புறம்தானே, சீலை, அப்புறம்தானே நடக்க அப்புறம்தானே காரிலே உட்கார்ந்துகிட்டு ஓட்ட. அதுபோல அது பிறக்கிற போது ஒண்ணும் இருந்திருக்காது. ஏதோ அவுக இஷ்டத்தை பொறுத்திருக்கும். அது ஏதோ பழக்க வழக்கத்தினாலே வந்துருக்கும். சில புலவர்கள் சொன்னார்களாம் சடங்கு இருந்ததாகக் தெரியலே. அப்படி இருந்திருந்தால் மாற்றிக்கலாம்ன்னு. ஒரு புலவர் சொன்னார் கூத்து இருந்திருக்கும், அந்தப் பழக்கம் இந்தப்பழக்கம் என்று சொல்லிவிட்டுஎன்னா சொன்னாருன்னா வீட்டுக்காரனெல்லாம். பொண்ணு வீட்டுக்காரன் மாப்பிள்ளையையும் மாப்பிள்ளையோட ஆளுங்களையும் பார்த்து உன் பையனுக்கு என் பொண்ணை கொடுக்கணும்னா அவன் அந்தப் புலியை அடிச்சி அதன் நகத்தை கொண்டு வந்தா நான் பொண்ணைக் கொடுக்கிறேன் என்று சொல்லுவான். ஆகவே அதுதான் நிகழ்ச்சின்னார்.
புலவர்களின் பொய்யும் புரட்டும்
இன்னொருத்தர் சொன்னார்! ஒருத்தன் மாடு வளர்ப்பான் அது ரொம்ப காட்டுமாடாக இருக்கும். அதை அடக்கு நான் என் பொண்ணை உனக்கு கொடுக்கிறேன் என்று சொல்லுவான். அப்புறம் ஒருத்தன் சொன்னான் பொண்ணு அப்படியே வரும், எதுக்காலே பையன் வருவான். ஒருத்தருக்கொருத்தர் பார்த்துக்கிட்டா பட்டுக்கும். ஆனதினாலே ஒருத்தருக்கு ஒருத்தர் பேரிலே ஆசை அதற்கு காதல்னு பேரு. அதற்கு பிறகு கல்யாணம். இப்படியா இருந்திருக்குதுன்னார். எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது இவைகளைக் கேட்டு, புலவனுங்க வாயிலே எல்லாம் இப்படி வருதேன்னு. என்னா? புலியை அடிக்க பத்து பேருபோனா இரண்டுபேரு திரும்பி வருவானா? (சிரிப்பு) புலியை பத்து பேரும் கல்லால அடிக்கணும் அல்லது ஈட்டியால் குத்துவான். புலியை சாகடிச்சல்ல நகத்தை கொண்டு வரணும்? பலியாகிதானே ஆகனும் தனியா போனா? மாட்டை அடக்கணும்பான் அது கொம்பால இவனைக் குத்தினால் செத்துப் போவான். என்னா? நீ வச்சிருக்கிற பிள்ளை அப்படி என்னா போக்கிரிப்பிள்ளையா? அதை அடக்க இவனுக்கு அவ்வளவு சக்தி வேணுமா. இவைகள் எல்லாம் முட்டாள் தனமான கற்பனைகள். நந்தவனத்திலே இவள் இப்படி வந்தா அவன் இப்படி வந்தான் என்றா சினிமாக்காரன் மாதிரி வேஷம் போட்டுக்கிட்டு வாரான். சொல்லை மூஞ்சிக்காரன் (சிரிப்பு) தூரத்திலிருந்து அவனைப் பார்த்தா அவன் அழகாத்தான் தோன்றுவான் யார் அவன்? நேத்து அவன் சரித்திரம் என்னா? முந்தா நாள் அவன் எப்படி இருந்தான் என்பது தெரியுமா? அவனுக்கு இந்தப் பொண்ணு கை எல்லாம் குட்டமா இருக்கும். அப்படியிருக்கிறவள் தான் இவன் எதுக்காலே வருவாள் (சிரிப்பு)நான்எதுக்குசொல்கிறேன்னா முட்டாள் தனமாக கருத்துக்களை பயனற்ற கருத்துக்களைச் சொல்கிறார்கள்.
நான் போன மாதத்திலே ஒரு திருமணத்துக்குபோயிருந்த போது ஒருபுலவர் எனக்கு படட்டுன்னுதான் சொல்லியிருக்கிறார். ஆனால் என்னை யார் கண்டிச்சாலும் நான் அவர்களுடைய முட்டாள்தனத்தை பற்றி வருத்தப்படுவேனே தவிர அவர்கள் என்னை வைகிறதைப் பற்றி கவலைப்படுவதில்லை. டாக்டர் வந்து ஊசி போட்டா எனக்கு வலிக்கத்தான் செய்யும். அதனாலே அவரை நான் வருத்தமுடியுமா?என்நோவுக்காகபோடுகிறார்.அப்படியேகருத்துக்களை சொன்னார்.நான்சும்மாவே இருந்தேன். அவர் சொன்னார் நமக்கு ஆதாரம் எல்லாம்தொல்காப்பியம்தான். தொல்காப்பியத்திலே இருந்தது நமக்குக் கரணம். கரணத்தை நமக்கு உண்டாக்கிக் கொடுத்திருக்கிறாங்க. பொய்யும் வழுவும் தோன்றி பின்னர் ஐயர் யாத்தனர் காரணங்கள் என்று சொல்லி அப்பவே காரணம் இருக்குது. தொல்காப்பியம் வயசு மூவாயிரம். அந்த சடங்கு இந்த சடங்கு என்று வாதாடினார்.
தொல்காப்பியம் கூறும் திருமணமுறை யாருக்கு?
நான் அதைப்பற்றி அவர்கிட்டே ஒண்ணும் சண்டைக்குப் போகலே. அய்யா நீங்க சொன்னது தொல்காப்பியத்திலே இருக்குதுதான். அதை உமக்கு அவன் சொல்லலே. மடப்பசங்களுக்கு சொன்னான் (சிரிப்பு கைதட்டல்) அதுவும் எந்த மடப்பசங்களுக்கு சொன்னான் மேல்ஜாதிக்கார மடப் பசங்கள் இருக்கிறாங்களே அந்த மடப்பசங்களுக்கு சொன்னான். போக்கிரிப் பசங்களுக்கு சொன்னான். உனக்கல்ல உன்னை அவன் குறிப்பிடவே இல்லை.
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்           
ஐய்யர் யாத்தனர் கருமங்கள்
மக்கள் அயோக்கியர்களான பிறகு பொய்யும் குற்றமும் செய்தவன் அயோக்கியன்தானே. மக்கள் எல்லாம் அயோக்கியர்களாக பிறகு அய்யர் ஏதோ ஒரு குறிப்பிட்ட பெரியவன் உண்டாக்கினான். யாருக்கு அது? உனக்குன்னு சொல்லவில்லையே? அந்த தொல்காப்பியத்திலேயே அது உனக்குன்னு சொல்லலே நல்லா கவனிக்கணும். புலவனைக் கண்டாலும் கேளுங்க என்னைப் புலவர்கள் திருத்தினாலும் நான் மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன்.
மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணங்கள் கீழோர்க்கு ஆக்கப்பட்டது. அவ்வளவு தான் அந்தக்கரணங்கள் யாருக்கு சொந்தம்? யாருக்காக உண்டாக்கப்பட்டது? இந்த மேலோருங்கிற மூணு ஜாதிக்கு,ஏன்? அவனுங்க தான் அயோக்கியப்பசங்களாக ஆயிட்டானுங்களே. பொய்பேசறதும், புரட்டுபேசறதும், தப்பாகநடக்கிறதும், பெண்களை ஒழுங்கா நடத்தலே - ஆனதினாலே அய்யர் யாத்தனர் கரணங்கள். அது உனக்கு எப்படி வந்தது?மேலோர்மூவர்க்கு ஆக்கிய கரணங்கள் கீழோர் கீழ்ஜாதிப்பயலுங்கதான் கொண்டு வந்து புகுத்தினாங்க.
உனக்காக இயற்கையாய் இல்லை. உனக்காக ஆக்கப்பட்டதுமல்ல. அப்படீனு சொன்னேன் போனமாசம். அவுக இரண்டு பேர் சிரிச்சாங்க. (புலவர்கள்) புரிஞ்சிக்கிட்டாங்கனு என்னால கண்டுக்க முடியலே. கொண்டுவந்து (கீழ்ஜாதியானுக்குப்) குத்தினாங்க. மதம் சம்பந்தமாக புல்லாகி பூண்டாகி, வெங்காயமாகி கருவாடாகி என்று சொன்னாலும் சரி அல்லது மனுசன் புழுவாகி, ஜந்துவாகி, குரங்காகி, மனிதனாக வந்தானென்னு சொன்னாலும் சரி. மனுசன் எப்படி இருப்பான்? அப்ப அவன் பக்குவம் எப்படி இருக்கும்? அதிலிருந்தே மனிதன் வளர்ந்துகிட்டே வருகிறான்? அதுவும் ஒத்துக்க வேணுமே. அவனே உயர்ந்த ஜாதி அவனே மகா அறிவாளி அவனே தெய்வீக சம்பந்தப்பட்டவன் என்று 9 ஆயிரம் வருஷம் 10ஆயிரம் வருஷமிருந்து 5ஆயிரம் வருஷத்துக்கு முன்னே இருந்தவனை நீ இந்துன்னு சொல்லிபுட்டேன்னா நீ எப்படி இருக்கிற யோக்கியமா? சிந்திக்கணும் நாம! மனசிலே ஏதும் எண்ணம் இருந்துக்க வேணாம். இயற்கையோடு வந்தால் தானே நமக்கு? தெளிவு வரும். ஆனதினாலே நமக்கு எதுக்கு தொந்தரவு? எதுக்காக நமக்கு கலியாணம்? எதுக்காக நமக்கு பொம்பளை வாழ்க்கைத் துணைவி வேணும்?
கல்யாணம் கிரிமினல் ஆக்கப்படுவது தவறல்ல
சாதாரணமாக இப்ப நான் கலியாணத்தைக் கிரிமினல் என்று சொல்லவேணும்னு சொன்னால் கலியாணம் இல்லையானால் பொம்பளைங்க கதி என்னா ஆகும்பான்? ஒருத்தன். ஆம்பளைங்க கதி என்ன ஆகுமோ அந்த கதிதான் பொம்பளைங்க கதியும்? காக்கா தூக்கிட்டுப் போயிடுமா கலியாணமில்லாத பொம்பளையை? இப்ப கலியாணமில்லாத ஆம்பளையை எந்த காக்கா தூக்கிட்டு போவுது? பொம்பளைங்க இப்ப ரொம்ப பேரு படிக்கிறாங்க. வேலைக்கு போறாங்க. செலவுக்கு சம்பாதிச்சிக்கிறாங்க. சாப்பிட்டுட்டு சௌகரியமாக உட்கார்ந்து இருக்கிறாங்க.
யாரிடமாவது விரும்பியவரிடம் அன்பு காட்டிக்கிறாங்க. புருஷனில்லாட்டாலும் நாம இப்ப வேணும்னா பொம்பளை தானே சம்பாதிச்சி, ஆம்பளை தானே சம்பாதிச்சிக்கிறாப்பிலே நிலமை வந்தால் சமுதாயத்துக்கு எவ்வளவோ நன்மைதானே. என்னத்துக்கு ஒரு ஆம்பளைக்கு அவள் அடிமையா இருக்கணும். சுதந்திரமாக இல்லாமல்-தானே தனியாக சம்பாதித்து தனிப்பட்ட முறையிலேதங்கள் இஷ்டப்பட்ட வாழ்வை அமைச்சிக்கிறாங்க. அப்போதே தேவைப்பட்ட உணர்ச்சியை பயன்படுத்திக்குவாங்க. அப்ப சுதந்திரம் எங்கேயும் போகாது மனிதனுக்கு. இப்ப என்ன பண்ணினாலும் அவுக பொம்பளை ஆம்பளைக்கு அடிமைதானே. கலியாணம் பண்ணுவது தப்பு இதை கிரிமினல்ஆக்க வேணும்கிறது முன்னே நான் சொன்னபடி அந்த புருஷன் சாகும்போதேஅவன் பொம்பளையையும் உடன்கட்டை ஏறச் சொல்வதை வெள்ளைக்காரன் தடை செய்தான். அந்தப் பொம்பளை மோட்சத்துக்கு போகிறதை - அல்ல - தடைப்படுத்திட்டான். கலியாணம் கிரிமினல் ஆக்கப்படுவதால் தவறு இருப்பதாக நான் கருதவில்லை.
வாழ்நாள் சராசரி வளர்ச்சி
பொம்பளைங்களை நீங்கள் முட்டாள்ன்னு சொல்லாதீங்க. அந்தக்காலத்துக்கு ஏற்றதை அவுக செய்தாங்கன்னா இந்தக் காலத்துக்கு ஏற்ற படி நீ செய்ய வேண்டியதுதானே? அந்த அளவுக்காவது நாம சொல்லணும். நம்ம முன்னோர்கள் நம்ம பெரியவர்கள் என்று சொன்னா நான் சொல்றேன் உங்கள் பாட்டன் அல்லது பாட்டனோடு அப்பன் யாரு மோட்டார் கார்லே போயிருப்பாங்க? யாரு பஸ்ஸிலே போயிருப்பாங்க? இப்ப நம்ம காலத்திலேதானே ஏரோப்பிளேனிலே போகிறாங்க. இப்போ மனுசனுடைய தொழிலை வேலைப் பளுவை குறைச்சிகிட்டே வருகிறது. என்னென்னமோ பண்ணி நாம இது வரைக்கும் 1920 லே கூட நாம வாழ்ந்த வயசே சராசரியா 20 வருஷம் தான் இருந்தோம் 1960 லே, 30 வருஷமிருந்தோம். இப்போ 50 வருஷம் சராசரி இருக்கிறோம். சராசரி நம்முடைய ஆயுசு 50. இன்னொரு 10 வருஷத்திலே கேவலமான வாழ்க்கையில்லாமல் கொஞ்சம் கௌரமாக இருப்போமானால் 70 வருஷம் இருக்கலாம். எல்லாருமே சராசரியாக. சராசரி எங்கள் ஊரிலே செத்தாங்கன்னா சின்ன பையன் பெரியவங்க செத்ததெல்லாம் கணக்கு போட்டு வகுத்தா இப்போ 50 வயசிலே இருக்கிறோம். மற்ற நாடுகளிலே 64,65 வயசு சராசரி வாழ்வு. ஆம்பளைங்களை விட பொம்பளைங்க ஒரு 2 மூன்று வருஷம் அதிகமா இருக்கிறாங்க. இப்படியாக நம்ம ஆயுசு வளரும்.
கல்லாதோர் தற்குறிகள்
நாம ஏன் முட்டாளாக இருந்தோம்? கோவித்துக் கொள்ளக் கூடாது. ஏன் காட்டுமிராண்டியாக இருந்தோம்? கோவிச்சுக்கக் கூடாது. நீங்களும் நானுமா இருக்கலையே நம்மவர்களில் 100க்கு 90 பேர் ஏன் தற்குறிகளாக இருந்தார்கள்? இப்ப இந்த காமராசர் அரசாங்கம் வருகிற வரைக்கும் 100 க்கு 90 பேர் படிப்பு இல்லே. ஜஸ்டிஸ் கட்சியார் அரசாங்கம் வருகிற வரைக்கும் 100க்கு 6 பேர் படிச்சி 94 பேர் தற்குறியா இருந்தாங்க. இப்போ 45 பேரு படிச்சிருக்கிறோம். 55 பேர் தற்குறியா இருக்கிறோம். அதிலே பொம்பளைங்க 70 பேர் 75 பேர் தற்குறி. தற்குறியாக இருந்தா அவுங்களெல்லாம் காட்டு மிராண்டியா இருக்கிறதுக்கு, யாரைக் கேட்க வேணும்? மேல் நாட்டில் இருக்கிறவன் ஏன் அறிவாளியாக இருக்கிறான்?100க்கு 96 பேர் ஆணும் பொண்ணும் சகலமும் படிச்சதுங்க. நான் சொல்கிறதிலே நல்லது என்னான்னு பார்க்க வேண்டுமே தவிர, தமிழை குற்றம் சொல்றான் தமிழனை குற்றம் சொல்றான்னா அது சரியாயிடுமா? எவன் தமிழன் அக்காலத்தில் படிச்சிருந்தான்? ஏதோ புலவன் படிச்சான். எதுக்காக புலவன் படிச்சான் பாடுபடாம பிச்சை எடுக்க புலவன் படிச்சான். எதுக்காக புலவன் படிச்சான்?ராஜாவுக்கு ஒரு புலவன் மந்திரிக்கு ஒரு புலவன். பாடிகிட்டு நோகாமல் வயிறு வளர்த்துகிட்டு இருந்தான். அவன் புத்திக்கு எட்டினதை எல்லாம் கண்டபடி பாடினான். அப்ப இருந்த மக்களுக்கு அவன் சரியா பாடுகிறானா? பொய்யா புரட்டா என்று கண்டறிய சக்தியில்லே. எவ்வளவோ இருந்திருக்கு தெரியுமா? இப்பதான் கொஞ்சம் மறைஞ்சிருக்கு.முன்பெல்லாம் புலவனைக் கண்டால் நடுங்குவானுங்க. அவன்அறம் பாடிவிடுவான்னு. அவன் பாடினால் அது நிலைக்குமாம்.
புலவனையும் புரட்டையும் விரட்டுங்க
நான் இம்மாதிரி பாடுகிறவனை எல்லாம் உதையுங்கன்றேன். என்கிட்டேயேஎன்னைப்பற்றிபாடவந்தான். கழுத்தை புடிச்சி தள்ளினேன். பெரிய புலவனாக இருந்தவன். அவன் பாட்டிலே இருந்த பெயரை எடுத்துவிட்டு என் பேரை சேர்த்து பாடினான். குறிப்பிட்ட இடத்திலே. அது மாதிரி புரட்டு செய்து பாடுவது. நம்மை பற்றி பாடினதாக நாம் நினைக்கிறாப்பிலே பாடிடுவானுங்க. இதையெல்லாம் கண்டிச்சேன் நான். என் கடையிலே உட்கார்ந்துக்கிட்டு ஏண்டா நீ யோக்கியமா பிழைக்காமல் இப்படியெல்லாம் பண்ணுகிறாயே உனக்கு வெட்கமில்லையா என்றேன். நான் பார்க்கிறேன். அறம் வைச்சி பாடினால் நீ ஒழிஞ்சு போவேன்னான். அவனை முதலில் கழுத்தைப் பிடிச்சி வெளியிலே தள்ளினேன், என் கடையிலே இருந்த ஆளைக் கூப்பிட்டு. இது 45- 50 வருஷத்துக்கு முன்ன நடந்த சம்பவம். அவ்வளவுதான் படிப்பு. உலகத்தோடு ஒத்த படிப்பு இல்லே. சோற்றுக்கு ஏதாவது வாங்குகிறது. அதுதான் வேலை படிச்ச புலவனுக்கு. இன்னும் சில புலவர்கள் இருக்காங்க தாயுமானவர், பட்டினத்தார், ராமலிங்கம் அவுங்க எல்லாம் புலவரானாங்க மக்களிடத்திலே செல்வாக்கு இருந்தது. பாடறதுக்கு புலவராக சக்தி உண்டாக்கிக்கிட்டான்.
அப்புறம் அவனுக்குள்ள புத்தி அவ்வளவுதான் இருந்திச்சி. அவன் காலில் விழுந்து கும்பிட ஆரம்பிச்சோம். அப்படி வந்தவன் தான் சாதாரண புலவனெல்லாம். சோத்துக்கு வழி தேடிக்கிட்டவங்கதான். அவர்களை எல்லாம் இன்றைக்கு நான் குற்றம் சொல்லுவதுன்னு இல்லை. அந்தக் காலத்து மக்களுக்கும் அவனுக்கும் (புலவனுக்கும்) வரவு செலவு சரியாப் போச்சி. இந்தக் காலத்திலே உண்மைகளுக்கு அவனுங்களாலே என்ன ஆகணும்? இந்த விஞ்ஞான பகுத்தறிவு காலத்திலே அவங்களாலே நமக்கு என்ன ஆகவேண்டியிருக்கு?
ஆகவே அருமைத் தோழர்களே! தாய்மார்கள் எல்லாம் சிந்திக்க வேண்டும். சந்திரனை பார்த்த புலவன் யாரு? மனிதன் சந்திர மண்டலத்துக்கு போய்ட்டு வருகிறாங்க. நமக்கு இருக்கிற கடவுள் எல்லாம் யாரு? சந்திரன் ஒரு கடவுள். அவனுக்கு ஒரு பெண்டாட்டி பத்தினித்தன்மை என்றெல்லாம் கதை எழுதியிருக்கிறான். அந்தக் காலத்திலே. 80 லட்சம் மைலுக்கு அப்பால் சந்திர மண்டலம் இருக்கு பூமியிலிருந்து. அந்த சந்திர மண்டலத்தைப் பற்றி சந்திரனை பற்றி இவன் என்னா கண்டான்? பூமியிலிருந்து 80 கோடி மைல் தூரத்திலே சூரியன் இருக்கிறான். அவனைப் பற்றி இவனுக்கு என்னா தெரியும்? அவனைப்பற்றி இவன் என்னா கண்டான்? அவன் கிட்டே நெருங்கினால் கருகிப் போய்டுவான். அவனைப்பற்றி இவன் எப்படி அறிந்தான்? சூரியன் அவளைக் கெடுத்தான், இவளைக் கெடுத்தான், என்றெல்லாம் எழுதி வைச்சானுங்களே, இதெல்லாம் உண்மையாக கண்டவன் எவன்? கதையை எழுதி உங்கள் மனசிலே புக வைச்சிட்டான்.சூரியன் 80 கோடி மைலுக்கு அப்பாலிருக்கும் போதே இங்கே அடிக்கிற வெயிலு நெருப்புப் புடிச்சிக்குதே. 100 டிகிரி 150 டிகிரி வெப்பம் தாங்காது, காடுகளில் நெருப்பு புடிச்சிக்குது. 80 கோடி மைல் தூரத்திலிருந்தும் இங்கே நெருப்பு பிடிக்குதைய்யா? இந்த முட்டாள் பயல், அவன் இங்கேவந்தான், இங்கே இருக்கிற பொம்பளைங்க கிட்ட படுத்துக்கிட்டான். அவன் பிள்ளை கொடுத்தான் இதெல்லாம் எப்படி முடியும்? அங்கே இருக்கும் போதே நெருப்பு பிடிக்குதே, அவன் பக்கத்திலே வந்து படுத்தான்னா அவள் உடம்பு பஸ்வமால்ல ஆகிடும்? யாராவது வாழ் வாங்களா? ஏன் சொல்லுகிறேன்னா உங்கள் பகுத்தறிவைப் பயன்படுத்தி அவனுங்களை எல்லாம் பரிகாஷம் பண்ண வேண்டிவரும்.
பெண் அடிமை பேணும் இலக்கியம்
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு - என்கிறானே என்ன யோக்கியத்தனம்? நான் சென்னை பச்சயப்பாஸ் காலேஜிலே பேசுகிற போது மிகச் சாதாரணமாக எடுத்துச் சொன்னேன். நம்ம இலக்கியம் செய்த முட்டாளு இளங்கோவடிகளைப் பற்றி சொன்னேன். கல்யாணம் பண்ணிக்கிட்டவன் மாதவி கிட்ட போய் வாழ்ந்தது பற்றியெல்லாம் எழுதுகிறானே இந்தஇலக்கியம் பற்றி யாருக்கு என்ன லாபம்? நான் அப்ப சிலப்பதிகாரத்தைப் பற்றி சொன்னேன். அதுக்கு ஒரு புலவன் என் கையைப் பிடிச்சிக்கிட்டு உட்கார்ந்து கிட்டு நமக்கு அதுபற்றி சரியாத்தெரியலை அதனால குற்றம் சொல்லுகிறோம். அவன் தேவடியாள் (மாதவி) வீட்டுக்கு (கோவலன்) போனது தப்புதான். அது அவன் பேரிலே தப்பு இல்லே. கண்ணகி கவர்ச்சியாய் இல்லே. அதாவது அவள் புருஷனுக்கு அழகாக இல்லே அவள். அப்படியே (அப்புலவன்) சொன்னான் என்னிடம் கவர்ச்சியாக கண்ணகி இல்லே. அதனாலே கோவலன் அவள் (மாதவி) பின்னாலே போயிட்டான். தாய்மார்களே! உங்கள் கூட்டுக்காரர் களுக்கெல்லாம் நீங்கள் கவர்ச்சியாய் இல்லேனு வேறு ஒரு பொம்பளையைத்தேடி போயிடவேண்டியது. தலைவாரிக்காமல் - பெஞ்சி போட்டு சாப்பிடாமல் - பாயிலே படுத்துக்காமல் - கீழே படுத்துக்க வேண்டியது. ஏம்மா நீ இப்படி கீழே படுத்துகிறேன்னா நான் கவர்ச்சியாய் இல்லே என் புருஷனுக்குன்னு சொன்னால் என்ன அர்த்தம்? இதே மாதிரி எழுதியிருக்கிறானய்யா? பயிர்ப்பு என்றால் அசுத்தம். சுத்தமாக இருக்கக் கூடாது பெண்கள். பெண்கள் விடுதலைக்காக பாடுபட்டு வருகிற எனக்கு இதுவெல்லாம் எவ்வளவு வேதனையைக் கொடுக்கும். பத்தினி மழை பெய்யென்றால் மழை பெய்யும் என்றும் கடவுளைக் கும்பிடாமல் புருஷனைக் கும்பிட வேணும் என்றும் இப்படிப்பட்ட கருத்து மிகப்பெரிய இலக்கியக் கர்த்தா (திருவள்ளுவர்) முக்காலத்துக்கும் அறிவாளி சொன்னதாக எழுதி வைச்சிருக்கான். சாமி கும்பிடமாட்டா புருஷனையேதான் கும்பிடுவாள். அவள் மழை பெய்யின்னா பெய்யும் இதுவெல்லாம் எழுதி வைச்சிருக்கிறான். ஏன் சொல்லுகிறேன் என்றால் பழய குப்பைகளையெல்லாம் ஒரு மூலையிலே போட்டு அடுக்கி வையி. உங்களுக்கு உள்ளபடியாக நடக்க வேண்டிய உரிமை வரணும். உங்களைப் பார்த்து ஆண்களுக்குப் புத்திவரணும். அந்தகாரணத்தினாலேதான் பழய புராணக் கருத்துப்படியான கதைகளால் பொம்பளைக்கு கெட்ட பெயர் ஏற்படும்படியாக வந்திட்டுது.

கலியாணத்தால் ஆவது என்ன?

நம்நாட்டிலே பெண்கள் சுதந்திரமாக ஆகும் நிலை வர வேண்டும் .ஆம்பளைக்கு என்னா கேடு? அவுங்களைபற்றி நமக்கென்ன கவலை? பொம்பளைங்களை எப்படிக் கதையிலே சொன்னாலும் கவலையில்லேன்னுட்டாங்களே! அதனாலே அவனுங்களைப்பற்றி (ஆண்களை) நாம கவனிக்க கவலைப்பட வேண்டியதில்லை. அவுங்களை திருத்த வேணுமானா நாம துணிவா முன்வரணும். இந்தக் கருத்தை வச்சித்தான் நான் சொன்னேன் கலியாணம் கிரிமினல் ஆக்கப்படவேண்டும் என. எதுக்காக கலியாணம் பண்ணுகிறான்? நான் உங்களை (தாய்மார்களை நோக்கி)த்தான் கேட்கிறேனே? எதுக்காக கலியாணம் பண்ணிக்கிறீங்க? அதனால, யாருக்கு என்ன லாபம்? உலகத்துக்கு என்னா லாபம்? புருஷனைக் காப்பாத்த - பிள்ளையைக் காப்பாத்த, அவன் காலைஅமுக்க - அவனுக்கு சுவையா சமைச்சி போட கூப்பிட்டப்ப ஆசையா நடந்துக்க - அவன் அடிச்சா - உதைச்சா - பட்டுக்க - இவ்வளவுதானே நீங்கள் பண்ணினது. இதனாலே யாருக்கு என்ன லாபம்?ஒரு மனுசன் பிறந்தான்னா அவனாலே நாட்டுக்கு என்னா? சமுதாயத்துக்கு அவனால் என்ன லாபம்? நம்ம நாட்டிலே பெண்கள் விடுதலையோடு சுதந்திரமாக உலாவ என்னைக்கு முடியுமோ அன்றைக்குதான் நம் சமுதாயம் முன்னேறும். ஆம்பளைக்கு என்னா கேடு? ஆம்பளைங்க என்ன செய்தாலும் சரி? எப்படி நடத்தினாலும் சரி பெண்களை அதைப்பற்றி ஒண்ணும் தப்பு இல்லேன்னுட்டாங்களே! அதனாலே அவனைப்பற்றி இப்ப நாம கவனிக்க வேண்டியதில்லே. அவுங்களைத் திருத்த நாம திருந்தணும். இந்தக் கருத்தை வச்சிதான் நான் சொன்னேன். கலியாணம் பண்ணினால் இனிமேல் அதை கிரிமினல் ஆக்கப்பட வேண்டும். தாய்மார்கள் சொல்லட்டுமே? நீங்கள் எதற்காக கல்யாணம் பண்ணியிருக்கீங்க? ஏன்னா? யாருக்கு என்ன லாபம்? உலகத்துக்கு என்னா லாபம்?

உண்ணுகிறவரை உழைக்க விழையும் பெரியார்

நேற்று குறிச்சி வைச்சேன் சொல்லலாம்னு. நேற்று வந்து என்னை சந்தித்தவரு 90வயசு ஆகுதே கொஞ்ச நாளைக்கு சும்மாயிருங்களேன்னாரு. அடே பயித்தியக்காரா ஒரு ஆளு சோறு திங்கிறேன். கொஞ்ச கொஞ்சமா சாப்பிட்டாலும் என் ஒருத்தனுக்கு செலவு ரூ200 ஆகுது. ஒரு வேளை காபி, ஒரு வேளை பாலு, ஒரு நாளைக்கு அரைகிலோ கறி. கறி இல்லாமல் (இறைச்சி) சாப்பிடவே மாட்டேன். முட்டை அது இது எல்லாம். முன்பு ரூ15லே அடங்கின செலவு இப்ப எனக்கு 200 ரூபாய் ஆகுது என் ஒருத்தன் செலவு. எப்படி ஆகுதுன்னு கேட்பிங்க. எட்டு பழம் மலைப்பழம் ஒரு பழம் இரண்டனா 1 டஜன் ஒன்னரை ரூபாய். இந்த மாதிரி நான் சாப்பிடுவது பொது மக்களுடைய பணம்தானே. ஒரு மாசத்துக்கு 200 ரூபாய்க்கு தின்னுட்டு நான் சும்மாயிருக்க வேணும்னா அது சரியல்ல. ஆனதினாலே அய்யா என்னாலானதைப் பத்தில் ஒரு பங்காவது பொதுத் தொண்டு செய்யணும்னு சொன்னேன். அது மாதிரி மனிதன்னா தானுண்டு, தன் பொண்டுபிள்ளை உண்டுனு, சோறு தின்னுக்கிட்டு பொதுத் தொண்டு செய்யாமலிருப்பது சுயவாழ்வை விட கேவலம் அது. நம்மாலே உலகத்துக்கு என்னா? அதனாலே மக்கள் ஆணும் பெண்ணும் பக்குவமடைய வேணும்.

அனாவசியமா இந்த ஒரே காரியத்தை வைச்சிகிட்டு உலகத்திலே இருக்கிற பொம்பளைங்க எல்லாம் பூச்சாண்டி பிடிக்கிறாங்க. பொம்பளையை ஒருத்தன் கட்டாமல் இருந்தால் உலகம் என்னா கதியாகும். அப்படீங்கிறாங்க. நீ யாருடா அன்னக்காவடிப் பயல் இதெல்லாம் பேசுறதுக்கு? நீ என்ன கட்டாட்டா என்ன ஆகும்கிறே? வெங்காயம் (சிரிப்பு) உன்னாலே அவுங்களுக்கு என்னா ஆகும்? எல்லாம் ஆகிறது ஆகுது. சுதந்திரத்தாலே தன் சொந்த காரியம் எப்படி இருந்தாலும் தன்னால் பிறர்க்கு என்ன ஆச்சி? என்னுடைய பெருமையையே பார்த்துக்கிட்டு இருந்தால் போதுமா? எத்தனையோ எருமையோட நானும் ஒரு எருமை. எருமையோடு எருமையா இருந்தால் போதுமா? ஆதலினாலே மனித ஜீவன்கள் தங்களுடைய லட்சியத்தை தம்மாலானது என்னா? மனிதனுடைய சுதந்திரம் இன்னொருத்தருக்கு அடிமையாச்சா? இன்னொருவருக்கு பயன்பட்டதா? அதுக்கு அப்புறம்தான் வளரும் உலகம். வளரும் உலகம்

உலகம் சுற்றி வந்த பெரியார்

சும்மா உட்கார்ந்துக்கிட்டு வீட்டுலேயே இருந்துகிட்டு இதெல்லாம் பேசலே.நான் ரஷ்யா போயிட்டு வந்திருக்கிறேன். ஜெர்மனி போயிட்டு வந்திருக்கிறேன். இங்கிலாந்து போயிட்டு வந்திருக்கிறேன். ஏதென்ஸ் துருக்கி போனேன். ஈஜிப்டுக்கு போனேன் கிரீஸ் போனேன். வெள்ளைக்காரன் ஊரெல்லாம் 10,20 நாடெல்லாம் சுற்றி நல்லா ஒரு வருஷம் சுத்தி பாத்துட்டு வந்தேன். அங்கே உள்ள ஆம்பளைங்க பொம்பளைங்க அவுங்க குழந்தைகளை எல்லாம் சந்திச்சி பேசி வந்திருக்கிறேன். அங்கே பள்ளிக்கூடத்துப் பாடம் என்னா தெரியுமா எங்க பெரிய பையன் சிறிய பையன் பாடம் படிக்கிற போது இந்தியா என்கிற ஒருநாடுஇருக்குது அந்த நாட்டுப்பசங்கள் சுத்த காட்டுமிராண்டிப் பசங்க. அவுங்களுக்கு இத்தனை கடவுள். அவன் கடவுளுக்கு இத்தனை பெண்டாட்டி. அவன் கடவுளுக்கு இத்தனை வைப்பாட்டி. அவன் கடவுளுக்கு ஒரு வருஷத்திலே இத்தனை தடவை கல்யாணம். அவன் சாமி தேவடியாள் வீட்டுக்கு போகும். இவ்வளவு காட்டு மிராண்டிப் பசங்க உள்ள நாடு இந்தியா. இப்படி பிள்ளைங்க அங்க படிக்கிறாங்க. இதை யார் மறுக்கிறாங்க? இந்திய நாடு - வெங்காய நாடு - செந்தமிழ் நாடு- பாருக்குள்ளே நல்லநாடு - தேன்பாயும் - வெங்காய நாடு - (சிரிப்பு கைதட்டல்) என்று புலவனுங்க சொல்லுகிறான் அவன் என்னா உன் நாட்டை பற்றி சொல்கிறான் என்று கேட்டாலல்லவா உன்னுடைய நாட்டினுடைய யோக்கியதை தெரியும்? இங்கே இதைப் பாடிவிட்டால் போதுமா? அந்த நாடுகளை பற்றியல்ல நம் காதிலே தேன்பாயுது. ஏன் சொல்லுகிறேனென்றால் மக்கள் துணிகிறதில்லே. மக்களுடைய நன்மையை பற்றி கவலை எடுத்துக்கிறதில்லே. இந்த அரசாங்கம் மாறி வந்ததாலே உங்க பிள்ளை குட்டியெல்லாம் கொஞ்சம் பிழைக்குது. இல்லாதிருந்தால் அவுக கதி என்னாகும்? சோறாக்கணும், புருஷனுக்கு உடம்பு தேய்க்கணும் காலு கையி புடிச்சி விடணும் சாவு வீட்டுக்கு போயி ஒப்பாரி பழகணும். புருஷனை விட்டுட்டு அடுத்தவனோட சுத்தணும் அதுக்குத் தானே பெண்களை ஆக்கி வச்சிருக்கிறான் ஆம்பளைங்க எல்லாம்.

இப்பதானே பொம்பளை ஆகாயத்திலே பறக்குறதுக்கு பக்குவமாகுது. ஆகவே தோழர்களே நாம் இப்போ நாம ரொம்ப கீழ்நிலையிலே இருக்கோம். வளரணும் மள மளன்னு. நாம துணிஞ்சால் இருபத்தைந்து வருஷத்திலே வளர்ந்திடலாம்.இருபத்தைந்து வருடத்திலே. இங்கே அதிக நேரமாகுது. எனக்குள்ள ஆசை இந்த நிகழ்ச்சிக்கான்னு இல்லே. இதைச் சாக்காக வைத்து உங்களை எல்லாம் பார்க்கணும். என்னுடைய கருத்துக்களை உங்களுடைய காலடியில் வைக்கணும். அப்படீங்கிற எண்ணத்தை முன்னிட்டுதான் வருகிறேன். இங்கெல்லாம். இப்ப நான் வெளியே எங்கேயும் போகிறதில்ல. கலியாண விஷயங்கள் மாத்திரம்தான் ஒத்துக்கிறேன். அங்கே போயி சில விஷயங்கள் தாய்மார்களுக்கு பேசலாம்ன்னு.

நான் ரொம்ப தப்பு பண்ணியிருக்கிறேன். முட்டாள் தனம் இருக்கும் இதிலே எல்லாம். எல்லா கட்டிலிருந்தும் விடுபட்டு நீங்கள் துணிச்சலா வெளியே வந்திடுங்க. அதை வைச்சிக்கிட்டுதான் சொல்றேன். ஆராய்ந்து பார்த்து செய்யுங்கனு. ஆகவே அருமைத் தோழர்களே! ஏதோ இன்றைய தினம் உங்களையெல்லாம் பார்க்கும் படியான நிலமை வந்தது இது வளர்ச்சியாகும். தாய்மார்களுக்கு சொல்லுகிறேன் - உங்கள் குழந்தைகளை எல்லாம் படிக்க வையுங்க. உங்களுக்கு படிப்பு போதிய அளவு இல்லாத காரணத்தினாலேதான் இந்த அடிமை நிலை. இனி அரசாங்கத்திலே இருபத்தைந்து வருஷத்திலேதான் பெண்களுக்கு கலியாணம் பண்ணவேணும்னு சட்டம் வரப் போகுது. இதை30,40வருஷங்களுக்குமுன்னாலே நாங்களெல்லாம் சொன்னவங்க. இப்ப வரப்போவுது.பொம்பளைக்கு 25 வயசுக்கு முன்னாலே கலியாணம் பண்ணக் கூடாது. அப்பதான் அவுகளும் சுதந்திரத்தோட இருக்க முடியும். அதுக்குள்ளே நீங்கள் வயசுக்கு வந்ததும் கல்யாணம்னு வைக்காதிங்க. பெண்களும் படிச்சி நான் உத்தியோகத்துக்கு போறேன். நான் வாத்தியாராய்ப் போறேன். நான் டாக்டராகப் போறேன் நான் தாசில்தார் ஆகப்போறேன் - நான் கலெக்டராகப் போறேன் என்று நினைச்சிப் படியுங்கள் மளமளன்னு. இப்ப 5,6 பொம்பளைங்க கலெக்டராக இருக்கிறாங்க. அய்நூறு, ஆயிரம் பொம்பளைங்க வாத்தியாராக இருக்கிறாங்க. நீங்கள் நல்லா படிச்சிங்கன்னா இந்த திமுக அரசாங்கம் இருக்கும் போதே ஆம்பளைங்களுக்கு வாத்தியார் வேலை கொடுக்கக் கூடாதுன்னு சட்டம் செய்வாங்கன்னு நினைச்சிக்கிட்டு இருக்கேன். வாத்தியார் வேலை பொம்பளைக்குத்தான். மேல் நாட்டிலே அப்படி இருக்கு. ஓர் அளவுக்கு நான் பார்த்திட்டு வந்தேன். வாத்தியார் வேலை ஆபீஸ் வேலை அந்த வேலை இந்த வேலையிலே எல்லாம் ஆம்பளைங்களே நுழையக்கூடாது. இப்படியெல்லாம் ஓர் நிலை வருகிற போது நீங்கள் சுகமாக இருக்கலாம். உங்களுக்கு உங்க அம்மா அப்பா கலியாணம் பண்ணணும்னா நீங்கஇப்ப என்னா அவசரம் அப்புறம் பார்த்துக்கலாம்னு சொல்லணும். அது உங்களுக்கு வசதியாக இருக்கும்.

ஆனால் இப்ப பொம்பளைங்க தம்பெண் குழந்தை (பூப்படைந்தால்) உட்கார்ந்தால் போதும் உடனே அவளை எவன் தலையிலே கட்டுகிறது? எவனும் வரமாட்டேன்கிறானே? இதே கவலையாகவே பொம்பளைக்கும் ஆம்பளைக்கும் இருந்துகிட்டு இருக்குது. ஆனதினாலே கலியாணமாகாத பெண்கள் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும். உங்களை பெண் கேட்க வருகிறவன் பயப்பட வேணும். அந்த பொண்ணை நாம போயி கேக்கிறதான்னு அவன் நினைக்க வேணும். தாய்மார்கள் பெண்களை எல்லாம் படிக்க வைக்க வேண்டும். ஏதாவது ஒரு தொழிலுக்கு அவர்களைத் தயாராக்க வேணும். அப்ப அவர்களைக் காப்பாற்றிக்க தாராளமாய் வழி இருக்கு. அடிமைங்கிறது சோற்றுக்காகத்தானே? வேண்டான்னா நாம எங்கே போகிறது. சோற்றுக்கு என்கிற இந்த கவலைதானே? அந்த மாதிரி எண்ணம் நம் பெண்களுக்கு இருக்கக் கூடாது. அருமைத் தாய்மார்களே! நேரமாச்சி ஏதோ எனக்கு தோணினதைச் சொன்னேன்.

மறுபடியும் சொல்லுகிறேன் என்னுடைய வேண்டுகோள் எல்லாம் அவ்வளவையும் ஏற்றுக்காதிங்க. நல்லா யோசனை பண்ணுங்க. பெண்களையும் கல்யாணம்னா அவுங்களையும் கலந்துக்குங்க. ஏம்மா சரிதானான்னு சம்மதம் கேட்டு அந்தப் படி செய்யுங்க. 15 வருஷத்துக்கு முன்னே வந்தோம் இப்ப திரும்பவும் வந்தோம். இந்த வீட்டு நிகழ்ச்சிக்கு. இன்னும் 5 வருஷம் போனா பெண்கள் நிலை மேலும் சுதந்திரத்தோடு இருக்கும் நிலை வரும்நீங்கள் சினிமாவுக்கும், கோயிலுக்கும், தேர்த்திரு விழாவுக்கும் போகிற வேலையை விட்டு விடணும்.15,20 வருஷத்துக்குள்ளே நம்முடைய ஆண்கள் பெண்களிடத்திலே ஒழுக்கமே கெட்டுப் போச்சி எல்லோரும் ஒழுக்கம் கெட்டு போகிறதாலே யாரும் ஒருத்தரை ஒருத்தர் குற்றம் சொல்லிக்கிறதில்லே. இப்ப பார்க்கிறேனே பள்ளிக் கூடத்துப் பிள்ளைங்க குலுக்கு மினிக்கி நடக்கிறதை (சிரிப்பு) (கைதட்டல்) எப்படி நடந்துக்க வேணும்னு தெரியவேயில்லே? அந்த பொம்பளைங்க உடலிலே அந்த மாதிரியான உணர்ச்சிகளே அது சினிமாதான் உண்டாக்குகிறது. எவ்வளவு மோசமானாலும் ஒழுக்கம் - பண்பு - என்பதற்கு - மரியாதை இருக்கு. நடத்தையிலே குறைஞ்சி போனாலும் - அதற்குரிய மரியாதை வேணும். அதை நாம் ஒவ்வொருத்தரும் பாதுகாக்க வேண்டும். அவர்களை நாம் கட்டிக்காக்க வேண்டும்.

இந்த வருஷம் கழிஞ்சு அடுத்த வருஷம் வருகிற போது சிந்திக்க வேணும். ஒரு வருஷம் நாம் வாழ்ந்தோம். நம்மால் உலகத்துக்கு என்ன லாபம்? நம்மால் மற்ற மக்களுக்கு என்ன செய்தோம்? நம்முடைய கருத்துக்களால்நாம் எதைமாற்றிக் கொண்டோம்? வருஷம் ஆனதும் கணக்குப் போட்டுப் பார்க்கணும். அப்படியே ஒருத்தருக்கு ஒருத்தர் பார்க்க ஆரம்பிச்சா நீங்கள் எல்லாரும் ஒரே குடும்பமாக ஆகும் வாய்ப்பு உண்டாகும். கருத்துக்களை நல்லா சிந்தித்து எது உங்களுக்கு திருப்தி என்று தோன்றுகின்றதோ நல்லது என்று உங்களுக்கு தோன்றுகிறதோ அதைப் பின்பற்றுங்கள். அய்யா முத்தமிழ் காவலர் கி..பெ.விசுவநாதம் அவர்களை எல்லாம் ரொம்ப நேரம் காக்க வைச்சிட்டேன். மன்னிக்க வேணும். எனக்கு தோணியதைச் சொன்னேன்நான். நான் சும்மா சொல்லலே உலகமெல்லாம் சுற்றிவிட்டு வந்தவன் எனக்கு இப்ப 79 வயசும் 3 மாதமும் ஆகுது. ஏதோ 5 வயசு முதற்கொண்டே ஏதோ உலக அனுபவம் தெரிஞ்சவன் பல துறைகளிலேயும் பாடுபட்டு இருக்கிறவன். இதெல்லாம் வீணாகப் போகக்கூடாதுன்னு சொல்கிறேன் அவ்வளவுதான்.

அதனாலே எது நல்லதோ மற்றதைத் தள்ளி விடுங்கன்னு கேட்டுக் கொண்டு இந்த வீட்டுக்காரர் துணிந்து இதுமாதிரி தொடர்ந்து பின் பற்றணும். அய்யா (கி..பெ) அவர்களைத் தொடர்ந்து பின்பற்றணும். அவரையும் என்னையும் வரவழைத்து ஏதோ எங்கள் இருவரின் கருத்தை எடுத்து சொல்ல வாய்ப்பை அளித்து நீங்கள் எல்லாம் இவ்வளவு பொறுமையோடு இருந்ததற்கு என் மனப்பூர்த்தியான நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். வணக்கம். நன்றி.



நூல் - பெரியாரின் சிந்தனைத் திரட்டு
தொகுப்பாசிரியர் - து.மா.பெரியசாமி

Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை