தஞ்சை செல்வம் உணவு விடுதி (முதலாம் ஆண்டுவிழா 09.2.1968)
09.02.1968இல் தஞ்சை திரு.நாராயணசாமி அவர்களின் செல்வம் உணவு விடுதியின் முதலாவது ஆண்டு விழாவில் தந்தை பெரியார் ஈ. வெ.
ராமசாமி அவர்கள் உரை:
பேரன்புமிக்கத் தலைவர் அவர்களே! தாய்மார்களே!
தோழர்களே!
மற்றும் அறிவுரை ஆற்றிய அறிஞர்களே!
இன்றைய தினம் தஞ்சை மாநகரிலே செல்வம் உணவு விடுதி யின்
முதலாவது ஆண்டு விழாவாக இக்கூட்டம் நடைபெறுகிறது.
உணவு விடுதியைப் பற்றியும் நடப்பைப் பற்றியும் தலைவர் அவர்களும் மற்றும் பல அறிஞர்களும் நல்ல வண்ணம் உங்களுக்கு விளக்கம் தந்திருக்கிறார்கள்.
உணவு விடுதிக்கும் நல்ல அறிவுரை ஆற்றியிருக்கிறார்கள்.
நான் அவர்களைப் பின்பற்றி துவக்கிவைப்பது என்ற கடமையை ஏற்று இருக்கிற படியினாலே ஏதோ சில வார்த்தைகள் சொல்ல ஆசைப்படுகிறேன்.இந்த உணவு விடுதிக்கும் செல்வம் உணவு விடுதி என்று பெயர் வைத்திருக்கிறது நமக்கு எல்லாம் பெருமை தரத்தக்கது.
இந்தஊரில்
(தஞ்சைமாநகரில்)
என்நண்பர் பன்னீர் செல்வம் அவர்கள் மிக்கப் பிரபல வழக்கறிஞராகவும்,
பெரிய பொதுத் தொண்டராகவும் இருந்து அனேக நல்ல காரியங்களைச் செய்திருக்கிறார்கள். மந்திரியாகவும் இருந்திருக்கிறார். நம்முடைய பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்குப் பல அரிய தொண்டுகளைச் செய்திருக்கிறார்கள். (பெரியார் அவர்கள் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு பேச்சை சற்று நிறுத்தி பின்னர் தொடர்கிறார்.) அப்பேர்பட்ட ஒரு பெரியாருடைய பெயரை இந்த உணவு விடுதிக்கு வைத்திருப்பது அவர் ஞாபகம் இருக்கும் படியாக உள்ளது. அதனால் உணவு விடுதிக்கும் பெருமை ஏற்படுவதாகும். இவ்வாறு ஏற்பாடு செய்த திரு.நாராயணசாமி அவர்களுடைய செயலைப் பாராட்ட வேண்டியதுதான்.
அடுத்து,
உணவு விடுதியைப் பற்றிப் பல அறிஞர்கள் சொன்னதையே நானும் சொல்லுகிறேன்.உணவு விடுதி என்பது ஒரு ஊருக்கே ஒரு அலங்காரமான ஸ்தாபனமாகும்.
எல்லா மக்களும் வந்து பயன்படும்படியான பயன் அனுபவிக்கும் படியான ஒரு சாதனம். நல்ல நாகரிகமுள்ள ஊர்களிலே, நான் பார்த்து இருக்கிறேன்.
வீட்டிலே சமயலை வைத்துக் கொள்ள மாட்டார்கள்.
எல்லோரும் எல்லா மக்களும் குடும்பத்தோடு உணவு விடுதிக்கு சென்று சாப்பிட்டுவிட்டுத்தான் வீட்டுக்கு வருவார்கள், சொல்லுவார்கள். முதலாவது அவர்கள் வீட்டு வாடகையிலே பெரும்பாலும் மிச்சமாகும் என்பார்கள்.
அதாவது தாங்கள் படுப்பதற்கு தங்கள் ஆடைகள் மற்றும் புழக்கமுள்ள சாமான்கள் வைப்பதற்கு வேண்டிய அலமாரிகளும்,
தட்டுகளும் இடமும் ஒரு ரூம் இருந்தால் போதும். தவறினால் இரண்டு அறைகள், இரண்டு ரூம் இருந்தால் போதும். அப்படி தான் அங்கே எல்லாம் வீடு கட்டியிருப்பார்கள்.
முன்னாலே வாசல் பின்னாலே வாசல். அது எல்லாம் ஒண்ணும் இருக்காது.
அறைதான் ஒன்று. தப்பினால் இரண்டு.அவைகளில் தான் எல்லாத் தொண்டுகளிலே இருக்கிறவர்களும் ஒரு அறை, குழந்தை குட்டிகள் அதிகமாக இருந்தால் இரண்டு அறை எடுத்துக் கொள்ளுவார்கள்.
சாப்பாட்டுக்கு அந்த நேரம் வந்த உடனே குழந்தைகளோட உணவு விடுதிக்குப் போவார்கள்.
ரெஸ்ட்டாரண்டுக்கு
.அங்கே போயி சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வந்துவிடுவார்கள். முதலிலே சொன்னேன் வாடகை. 100க்கு 50 வீதம் அவர்களுக்கு மிச்சமாகும். பெரிய நகரங்களிலே இரண்டாவது சாப்பாடு. தாங்கள் வீட்டிலேயே சமையல் செய்து சாப்பிடுவதைவிட குறைவாக இருக்கும்.
எந்தக் காரணத்தை முன்னிட்டும் வீட்டில் நடக்கும் சாப்பாட்டுச் செலவுக்கு மேலே ஓட்டலில் அதிகம் இருக்காது.
விருந்தாளிகள் வந்தால் கூட ஒரு ஆளுக்கு ரேட் போட்டு செய்து விடுவார்கள்.
இல்லாவிட்டால் சொல்லி விடுவார்கள்.
ஒவ்வொரு ஓட்டல்களிலே 200 குடும்பங்கள், 300 குடும்பங்கள் தினப்படியாக அங்கே போயிசாப்பிட்டுவிட்டு வந்து விடுவார்கள். ரெஸ்ட்டாரெண்ட் என்றால் உணவு விடுதி என்றால் இங்கே நாம் அனேகமாக சாப்பாடு எல்லாம் வீட்டிலே தான். ஏதோ வெளியூருக்குப் போன நேரத்திலே வீட்டிலே வசதியில்லாத காலத்திலே ஏதோ ஓட்டலுக்குப் போகிறதென்று வைத்திருக்கிறோம்.
அங்கே ரெஸ்ட்டோரெண்டிலேயே சாப்பிடுகிறதுங்கிறது தான். அதைச் சொன்னேன். சாப்பாடு நல்ல வண்ணம் இருக்கும். ஏனென்றால் அய்ந்நூறு,
ஆயிரம் பேருக்கு செய்கிற சாப்பாடு, சுகாதார முறைப்படி நல்ல அளவோடு விஞ்ஞான முறைப்படி செய்வார்கள். திருப்தியாக சாப்பிட்டு விட்டு வந்து விடுவார்கள். நம்ம வீட்டிலே நாலு பேர் இருந்தால், ஒரு அய்ந்து பேருக்காவது சமைப்போம்.
ஒரு ஆளுக்கு மிச்சமாகிறாப்பிலே.
அதுக்கேற்ற விறகு, அதுக்கேற்ற முயற்சி, அந்த சமையல் பண்ணுகிற அம்மையார் அவர்கள்.
இந்த விடுதியிலே சாப்பிடுகிறதினாலே அவர்களும் ஒரு வேலையை ஒத்துக் கொண்டு நல்லாசம்பாதிக்கும் படியான வசதியாய் இருப்பாங்க. குழந்தைகளுக்கும் கவலை இருக்காது. சாப்பாட்டு விஷயமாய் இவ்வளவு வளர்ச்சி அடைவதற்குக் காரணம், அந்த நாடுகளிலே நடைபெறுகிற உணவு விடுதிகள் வீட்டை விட வசதியாகவும், நல்ல உணவாகவும் வீட்டிலே செய்துசாப்பிடுகிற செலவைவிட நயமாகவும்,
பெரிய வேலைத் தொந்திரவு ஒழியும்படியாகவும் இருக்கிறதினாலே,
ரெஸ்ட்டாரண்ட்டுகள்,
ஓட்டல்கள் ஆங்காங்கு அதிகமாகிறது.
அவை நிறையா இருக்கும்.
நான் போன காலத்திலே ஒரு நண்பர் வீட்டுக்குப் பார்க்க போனபோது என்னையும் ஒரு ஓட்டலுக்குத்தான் அழைத்துப் போனார். சாதாரணமாகவே கேட்டேன். எப்பவும் ஓட்டலில்தான் சாப்பாடு என்றார்.
10 வருஷத்துக்கு மேலாகவே நான் ஓட்டலில் தான் சாப்பிட்டுகிட்டு இருக்கிறேன் என்று அவர் சொன்னார். அது பண்டங்கள் வாங்குவது செலவு செய்து நாம ஒரு படி, இரண்டுபடி வாங்குகிற விலைக்கும் ஒரு மூட்டை, இரண்டு மூட்டை வாங்குகிற விலைக்கும் 100க்கு இரண்டு ரூபாய், மூன்று ரூபாய் சில சமயத்திலே அய்ந்து ரூபாய்க்கும் கூட வித்தியாசமிருக்கும்.
அதெல்லாம் ஓட்டல்காரருக்கு வசதி.
நாகரிகமே அதுவாகத்தானேஇருக்கும். ரெஸ்ட்டாரெண்டிலே தான் நாம் சாப்பிடுகிறாம். அந்தப்பழக்கம் இங்கே வருகிறது ரொம்ப கஷ்டம். நான் இந்தியா வந்ததும் இங்கே இதையெல்லாம் சொல்லியிருக்கிறேன்.ஒரு கோவாபரேடிவ் ஸ்தாபனத்திலே ஒரு ஆண்டு விழாவிலே பேசுகிற போது மற்ற நாட்டிலே எப்படி இருக்குதுன்னு. அந்த மாதிரி இங்கே நடத்தலாம்.
அந்த மாதிரி இடங்களை நல்ல வசதியாய் வைத்துக் கொண்டு பண்டங்களை பெருவாரியாக வாங்கி வைத்துக்கொண்டுநல்ல சமையல்காரனை வைத்து ஒழுங்காக கொஞ்சம் கூட, அதிலே எனக்கு முன்னே பேசிய அறிஞர்கள் சொன்னதை போல, தவறான கருத்தே இல்லாமல் அதாவது மோசம் பண்ணுகிறார்கள்.
மாற்றுகிறார்கள்.
ஏமாற்றுகிறார்கள் என்று அந்த மாதிரியான பேர் வருவதற்கு இடமில்லாமல் செய்வது என்று ஆரம்பித்தால், சென்னையிலே அம்மாதிரி நடக்கும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை.
ஏனென்றால் ஒரு குடும்பத்துக்கு ஒரு வீடு வேண்டுமானால் எவ்வளவு குறைஞ்ச வரும்படியில் உள்ள குடும்பமும் 35 ரூபாய் முதல் 50 ரூபாய் வரைக்கும் வாடகைக் கொடுத்தால் தான் சமைக்கிற இடம் குளிக்கிற இடம், படுக்கிற வீடு இந்த மாதிரியான வசதி அங்கே கிடைக்கும்.
இருக்க இருக்க வாடகை அதிகமாயிட்டுது. வீட்டு வாடகைகள்
300 ரூபாய் 400 ரூபாய் கொடுத்து குடியிருக்கிறாங்க. வியாபாரிகள் குடியிருக்கிறாங்க.
வியாபாரிகளிடம் இருக்கிற மேனேஜர்கள்
300 ரூபாய் கொடுத்துவிட்டுக் குடியிருக்கிறாங்க.
அப்படி அவ்வளவு வாடகை அதிகமாயிருக்கிறது. அந்த மாதிரியான குடும்பங்கள் எல்லாம் ஒரு சின்ன அறை படுத்துக் கொள்ளவும், மற்றதுக்கும் குளிக்கிற வீடு பொதுவாக இருக்கும். (அய்ரோப்பாவிலே) அங்கே எல்லாம் நீளமாயிருக்கும் ஒரு
200 அடி நீளத்துக்கும் 10 அடிக்கு ஒரு ரூபாய், எட்டு அடிக்கு ஒரு ரூபாய் இருக்கும். அதுக்குள்ளே ஒரு குளிக்கிற வீடு. ஒண்ணு அல்லது இரண்டுக்குப் பின்னாலே புழக்கடைக்குப் போகிற இடம் உண்டு.
ஆதலினாலே ரொம்ப பணம் மிச்சமாகும். அந்த மாதிரி ஏறக்குறைய இன்னொரு 5,
6 வருஷத்துக்குள்ளே சென்னையிலே எல்லாரும் ரெஸ்ட்டாரெண்டிலே சாப்பிடுகிற வழக்கம் வைச்சுக்குவாங்க.
அவுகளாலே முடியலே. தவிரவும் இப்ப நம்ப பெண்களை எல்லாம் படிக்க வைக்கிறோம். அவர்கள் எல்லாம் சமையல் வேலைக்கு அவ்வளவு உற்சாகமாய் இருக்கமாட்டாங்க. சம்பாதிக்கத்தான் போய் விடுவாங்க.
சமைக்கனுமானால் வீட்டுக்கு ஒரு ஆளை வைக்கவேண்டும்.
பொம்பளையை சமையலுக்கு வைச்சாலும் அந்தம்மாளுக்கு மாதம் 20 ரூபாயுடன் சோறும் போட வேண்டும்.கொஞ்சம் நல்லவர்களாய் இருந்தால் 30 ரூபாய் கொடுத்து சாப்பாடு போடணும். அதை அந்தப் பொருளாதார உணர்ச்சியோடு பார்த்தோமானால் விடுதியிலே சாப்பிடுவது லாபமாக இருக்கும்.
அங்கே ஏன் அவ்வளவு பெருகுது என்றால்? சாப்பிடுகிறவர்களால் மாத்திரம் அல்ல. அந்த விடுதி அவ்வளவு நாணயமாய் அவ்வளவு பொறுப்பாய் வந்திருக்கிற மக்களைத் திருப்திபண்ணி அவர்களுக்கு நம்மிடத்தில் வரும்படியான ஒரு கவர்ச்சியை, ருசியை, உண்டாக்கி செய்ய ஆரம்பித்தோமேயானால் கொடுக்கிற உங்களுக்கும் கஷ்டமிருக்காது.
நமக்கு விடுதிக்காரருக்கும் எந்தவித நஷ்டமும் இருக்காது
சாதாரணமாக ஊற்றிலே வருகிறபடி வரும்படி வந்துக் கொண்டே இருக்கும்.
நம் நாட்டினுடைய அமைப்பு நமக்கும் நாணயத்திற்கும் வெகுதூரம். என்ன ஆனாலும் எப்படியாவது ஏமாற்றத்துக்குப் பழகுகிறதுக்குத்தான் தவிர,
அதைத்தான் கெட்டிக்காரத்தனம்னு நினைப்பாங்களே தவிர, நாணயமாக இருந்து அதிலே அடிமையாக்கணும்.
நம்மைக் கவர்ச்சியாக்கணும், அவர்கள். நம்மைத் தேடிக் கொண்டு வரணும்னு செய்கிறதிலே ஜனங்களும் உற்சாகம் இருக்கிறதில்லே. நான் பார்க்கிறேன் சாதாரணமாக.
அய்யா அவர்கள் சொன்னார்கள்.
நான் வியாபாரியாக இருக்கிற போது ஒரு இடத்திலேன்னு உண்மையே. அந்த வீட்டுக்கார அம்மா ஒரு விதவை தான். அந்தம்மா பேரு ராமாயி அம்மாள்ன்னு.
ராமாயி அம்மாள் ஓட்டல் எனப்படுவது ஈரோட்டுத் தாலுகாவிலுள்ள அத்தனை கிராமத்துக்கும் தெரியும்.
யார் வந்தாலும் சரி அவர்கள் சொந்த வீடு மாதிரி. சமையல் வீட்டுக்குள் போகிறது முதற் கொண்டு, குளிக்கப் போய் தண்ணீர் எடுத்து ஊற்றிக்கிறது முதற் கொண்டு அவ்வளவு வசதி. அன்னியர் வீட்டுக்கு போறோமேங்கிறது இல்லாமல் வீட்டை எல்லாம் தங்கள் சொந்தவீடு மாதிரி பொழங்கிக் கொள்ளுவது மளமளன்னு. இலையைப் போட்டுக்கிறது.
சாப்பிடுகிறது.
போயிடறது.
பணம் கொடுக்கிறது. அந்தக் காலத்திலே அது ரொம்ப அதிகமான வீடுதான். இப்பவும் உணவு விடுதிகள் நிறைய இருக்குது.
இருந்தாலும் நிவர்த்தியில்லாத காரியத்துக்குத்தான் போறாங்களே தவிர அதிலே நாம புழங்கி கிட்டு இருக்கலாம். வீட்டிலே அந்த வேலை வைத்துக் கொள்ள வேண்டாம். அனேகரை வரும்படியாகச் செய்கிறது விடுதிக்காரருடைய முயற்சியிலேயாகும் அவர்கள் நடந்து கொள்ளுகிறதிலேயாகும். அய்யா அவர்கள் சொன்னார்கள் கவர்ச்சியாக வருகிறவர்களுக்கு ரொம்ப இதமாக நடந்து கொள்ள வேணும் என்பதை வியாபாரமாகட்டும் இந்த மாதிரியான மற்ற பொது மக்களின் இடையில் புழங்குகிற வசதிகள் ஆகட்டும், அதுக்கு முதலாவது கை முதல் நாணயம் தான். பணமில்லாமலே வெறுங் கையிலேயேவைச்சிடலாம். நாணயம் இருந்தால் எல்லா வசதியும் நமக்கு வந்துவிடும். நம்பிக்கையும் உண்டாக்கும்.
ஒண்ணும் பேதமிருக்காது.
அப்புறம் நாணயம், நம்பிக்கை, இருக்கிறதோடு நம்மிடத்திலே வருகிற வாடிக்கைகாரர்களிடத்திலே நமக்கு ஒரு நட்புரிமை இருக்க வேண்டும். நம்மளவர் நமக்கு வேண்டியவர், நம்ம சினேகிதக்காரர் நம்மாளான அளவுக்கு நாம் ஆதரவு கொடுக்கும்படியானது இது என்று மக்கள் கருதும்படியான அளவுக்கு அந்த விடுதிக்காரர் ரொம்ப கவலை எடுத்துக்க வேண்டும்.சில இடங்களிலே எல்லாம் நடக்குது. அவர்களிடத்திலே ரொம்ப மக்களிடத்திலே கவர்ச்சி இருக்குது என்றால் அங்கே நடந்து கொள்ளுகிற முறையும் மற்றும் நாணயம், பண்டங்கள் வியாபாரங்களிலே சொல்லுகிறது. அளவு இப்படி எல்லாம் சரியாக இருக்கவேண்டும்.
இதிலே ரொம்ப வளர்ச்சி அடைந்தோமானால் நம்ம ஊருக்கு அதுவே ரொம்ப பெரிய நாகரிகம் என்று சொல்லுவார்கள். வசதி இருக்கணும் பின்னேயும் உங்களுக்கு அதிசயமாயிருக்கும், ஒரு விடுதியிலே Common Kitchen என்று பெயர் ரஷ்யாவிலே. 26,000 பேர் ஒரு வேளைக்கு சாப்பிடுறாங்க.
ஆமாம்
26,000 பேர். இரண்டு பக்கம் இரண்டு பேர் உட்கார்ந்து சாப்பிட்டால்
2000 ஒரு பந்தியிலே ஆயிடும். அவ்வளவு பெரிய கொட்டகை. பெரிய ஹால். அங்கே ஒரு டாக்டர் இருந்து எல்லா பண்டங்களையும் பரிசோதனை பண்ணிடுவான்.
தினமும் புதிய புதிய பண்டங்களை வாங்கிப் போட்டுச் செய்வார்கள்.
ரொம்பநல்ல மாதிரியாக சுகாதாரத்துக்குக் கெட்ட பண்டங்கள் இல்லாமல், அப்படியே செய்து அதை வளர்த்திவிட்டு விட்டார்கள். பெரிய சௌகரியமாகவும் போயிடும். அது ஒரு நாகரிகமாகவும் போயிடும். நடக்கும்.
நம்ம நாடுகளிலே அதுதான் வேண்டியது. இப்பவரவர இந்த விடுதிகள் பலகாரக்கடை என்பதன் பேராலே, மிட்டாய்க்கடை என்பதன் பேராலே,சாப்பாட்டு விடுதிகள் என்பதன் பேராலே, நிறையா நடக்குது. முன்பைவிட இப்ப நண்பர்கள் சொன்னமாதிரி ஜாதி உணர்ச்சியைப் பார்க்கிறதில்லே,
முன்னே எல்லாம் ஜாதி உணர்ச்சி பார்ப்பாங்க.
அது யார்ஓட்டல்பாப்பான் ஓட்டலா சரி, பாப்பனரல்லாதார் ஓட்டலா அவன் யாரோ, அவன் என்ன ஜாதியோ என்று கஷ்டப்படுவாங்க.
இப்ப அப்படி இல்லை.எந்த ஓட்டலானாலும் நல்லாய்ப் பண்டங்கள் இருக்கிறதென்றால் யாரும் போயி சாப்பிடுவாங்க. அது மாத்திரமே அல்ல, எங்க ஊரைப் பொறுத்த வரைக்கும் சொல்லுவேன் நான். மற்ற ஊரிலேயும் அப்படி இருக்கலாம் தமிழனும் ஓட்டல் விடுதி வைத்திருக்கிறாங்க. முஸ்லீம்களும் வைத்திருக்கிறார்கள்.
அதிகமாய் இருக்கிற விடுதி எவன்னா, முஸ்லீம்களுடைய விடுதிதான் அதிக ரூபாய்க்கு அதிலே விற்பனையாகுது.
ஜனங்கள் அதிகமாய்ச் சாப்பிடுகிறாங்க.
பிரியாணியும் செய்வாங்க. இன்னும் வேறெ ஏதேதோ சப்பாத்தின்னு,
புரோட்டான்னு,
குஸ்கான்னு,
அய்ந்தாறு பண்டங்கள் செய்வாங்க.
ஜனங்கள் அதே வேலையாய் அங்கே போயி சாப்பிட்டுவிட்டு வருகிறாங்க.
அது யாருடைய விடுதி? அவுக என்ன ஜாதி? என்ன மதம்? என்கிற எண்ணமே ஜனங்களுக்கு வராது. காரணம் அந்த பண்டங்கள் அவ்வளவு பக்குவமாய் ஜனங்களிடத்திலே அவ்வளவு கவர்ச்சி ஏற்படுகிற மாதிரியில் நடந்து கொள்ளுவதினாலே ஒண்ணையும் நினைக்கிறதில்லே. போயி சாப்பிட்டு வந்து விடுவாங்க.
மாதக்கணக்காய்ப் பணமும் கொடுப்பாங்க.
நல்ல பெரிய வசதியாய் இருக்கிறவங்க அந்த விடுதிக்காரனுக்கு உதவி பண்ணுகிறதுக்காக அட்வான்சையே
200, 100, 150 என்று கொடுத்து விடுவாங்க.
வசதி இருக்கிற ரொம்ப பேருக்குக்கொடுத்து வைச்சிடுவாங்க.
பார்த்தா அங்கு ஒரு பெரிய விஷயம் வியாபாரம் மாதிரி அவருக்கு எல்லா பெருமையும், எல்லாவசதியும், நல்லவரும்படியும் வரும்.அந்தமாதிரி எல்லா ஊரிலேயும் ஆக வேண்டுமென்பது என்னுடைய ஆசை.
எங்கே அம்மாதிரி நடக்கலேன்னு சொன்னால், காரணம் அந்த
விடுதிக்காரர் சரியாய் இல்லேன்னுதான் சொல்லமுடியுமே தவிர ஜனங்கள் மதிக்கிறதில்லேன்னு சொல்ல முடியாது.
(சிரிப்பு)
கஷ்டப்படணும் அதிகலாபம் இல்லாவிட்டாலும் கொஞ்சம் வந்தாலும் போதும். தொழில்விருத்தி பண்ண வேணும்கிற கவலை வந்து ஜனங்களிடத்திலே அன்பு அதிகமாகி நடத்த வேணும். எனக்கு எப்பவும் இந்த விடுதி நடத்துவதிலே பார்ப்பனர் விடுதின்னா எனக்கு ஒரு விதமாய்வெறுப்பு உண்மையிலேயே சொல்லுகிறேன். கொஞ்ச நாளாக திராவிடர் கழகத்தைவிட சுயமரியாதை இயக்கத்திலே ஒரு கொள்கை என்னான்னா பாப்பான் ஓட்டலுக்குப் போகக் கூடாதுங்கிறது. நம்ம ஆளுங்க போகவே மாட்டானுங்க.
எந்தக்காரணத்தை முன்னிட்டாவது நம்மவங்க ஓட்டலாயிருக்குதா? நம்மவங்க கடையாய் இருக்குதா? காப்பிக்கடைன்னுட்டு. எங்களை போல ஆளுகளும் போக மாட்டாங்க.
ஏன் போக மாட்டாங்கன்னா?
அவன் தொட்டதைச் சாப்பிடக்கூடாது என்கிற முறையல்ல. நம்ம மனசிலே நம்மளவன் ஓட்டலைவிட அது ஒஸ்திங்கிற எண்ணமிருக்குதே. அந்தக் கீழ்மை ஒழிய வேணும். நல்லாய் இருந்தால் கூட பாப்பான் ஓட்டலுக்குப் போகிறதுதான் பெருசும்பாங்க.
அது கொஞ்ச நாளாய் இருந்தது. யார் பேரிலேயும் தப்பு சொல்றதுக்கு இல்லே. ஜனங்களிடையே கொஞ்ச நாள் இருந்தது. சுமார் ஒரு 40, 50 வருஷத்துக்கு முன்னே எங்கள் வீட்டுப் பழக்கம் கூட.
எங்கள் வீட்டிலேயே எங்கள் தாயாருக்காக ஒரு கோல் இருக்கும்.
அதிலே கயிறு போட்டுக் கட்டி ஒரு கூடை இருக்கும்.
பணத்தைக் கொடுத்து இதை எடுத்துக்கிட்டுப் போயி அய்யன் கடையிலே வாங்கிகிட்டு வாங்கம்பாங்க.
அங்கே கொண்டு போனால் அந்த அய்யன்
காசை வாங்கிகிட்டோ அல்லது இன்னார் வீட்டுக்குன்னு தெரிஞ்சோ அல்லது கணக்காய் மடிச்சி, கச்சிதமாய் மடிச்சி, அதிலே கூடையிலே போட்டிடுவான்.
அப்படியே தூக்கிக்கிட்டு வருவான் போகிற ஆளு .வந்தால்எங்கம்மாதான் அதைக் கையிலே வாங்கிடுவாங்க. கூடையை வழியில் எங்கேயாவது வைச்சியான்னு கூட கேட்பாங்க.
யாராவது சாப்பாட்டுக் கூடையை தொட்டாங்களான்னு கூட கேட்பாங்க (சிரிப்பு) அவ்வளவு முதிர்ந்த ஜாதி உணர்ச்சி. நல்லா இருக்குதா, நல்லா இல்லையான்னு பார்க்கிறதே இல்லை. அய்யர்தானா?
அய்யர்கடையிலே தான் வாங்கிகிட்டு வந்தியா? பிராமனாள் கடையிலே வாங்கிகிட்டு வந்தியா? இந்த மாதிரி இன்னமும் வெகு பேர் அப்படி இருக்கிறாங்க.ஆனால் ரொம்பபேரு அப்படி இல்லை. எண்ணிக்கையிலே இருக்கிறாங்க அதிகம். இப்ப நாம் சொல்லுகிற மாதிரி நம்ம உணர்ச்சி வந்தபிறகு, எங்கு பார்த்தாலும் இருக்கிற ஓட்டல்களிலோ,
விடுதிகளிலேயோ கணக்குப் பார்த்திங்கன்னா பார்ப்பனர் விடுதிகளை விட ஒரு பங்கு இரண்டு பங்கு சில இடங்களிலே மூன்று பங்கு கூட பார்ப்பனரல்லாதார்களால் நடத்தப்படுகிற விடுதிகள் நிறையா இருக்கும். ரொம்ப ஒழுங்காகவும் நடத்துகிறாங்க.
நீங்கள் அதிசயப்படுவீங்க. 600 ரூபாய்,
700 ரூபாய் வாடகை கொடுக்கிறான்.
ஒரு ஓட்டல்காரன் மதறாசிலே (சென்னையிலே)
அவ்வளவு நடக்குது அங்கே. அந்த மாதிரியான இந்த நகரங்கள் எல்லாம் ஆகணும். மக்களுக்கும் அந்த உணர்ச்சிவர வேணும். நடத்துகிறவங்களும் சுத்தமாய் வைச்சிகிட்டு இருக்கணும். இடங்களை எல்லாம் கவர்ச்சி வருகிறாப்பிலே கவலையோடு நல்ல பண்டங்களை எல்லாம் பக்குவம் பண்ணவேணும்.
நண்பர்கள் சொன்ன மாதிரி இது நல்லாய் இருக்குதுன்னு சொல்லுகிறதோடு இது கொஞ்சம் சல்லிசாகவும் இருக்குது அங்கே.அப்படீங்கிற எண்ணத்தை உண்டாக்கணும் நாட்டிலே. ஆதலினாலே நல்ல பண்டமாகவும்,
விலை நயமாகவும், வாய்க்கு ரொம்ப ருசி இருக்கும்படியாகவும்,
இவ்வளவெல்லாம் வேலை செய்யணும்.
சும்மா உணவு விடுதின்னு சொன்னால் விளையாட்டல்ல. அது ஒரு பெரிய விஞ்ஞானம்,
கலை,
ஆகையினாலே நான் பல காரியங்களையும் முன்னிட்டு இந்த மாதிரி உணவு விடுதிகள் பெருகவேண்டும். முன்னே நான் சொன்னமாதிரி நம்ம வீட்டிலே சமையல் பண்ணுகிற வழக்கத்தைக் கூடுமான வரையிலும் குறைச்சிக்க பார்க்கப்.
ஆதலினாலே நான் முன்னமேயே சொன்னேன். வாடகைக்கு இருக்கிறவங்களுக்கு வீட்டுவாடகை கொஞ்சம் சல்லிசிலே ஆகும்.வீட்டிலே இருக்கிற அம்மையாருக்குச் சமையல் பண்ணுகிறதுதான் தன்னுடைய வாழ்க்கையின் லட்சியம் என்றில்லாமல்,
ஏதாவது நாட்டுக்குத் தொண்டு செய்து கொண்டு, வரும்படி வரும்படியான வேலைகளை ஏற்றுக் கொண்டு இருக்கனும் ஏனெனில் நாமெல்லாம் படிக்கப் போகிறோம். அவர்களை எல்லாம் இந்தக் காரியத்துக்கே உபயோகப்படுத்துகிறதுன்னா முடியாது?
இந்தசமையல் வேலைக்குன்னு ஆனதினாலே ஒரு நாட்டிலே பெண்களுக்கு விடுதலை கொடுப்பது என்றாலும்,
நாட்டுக்கு நல்ல நாகரிகத்தையும் ஏற்படுத்துவது என்றாலும்,
இந்த உணவு விடுதி பெருக வேண்டும். முன்னேற்றமடைய வேண்டும். பண்டங்களும் (விலை) குறையும். அதிகம் செலவாகாது.
ஒரு வீட்டுக்குச் சமையல் பண்ணுகிற விறகு ஒரு 50 பேர் 100 பேர்களுக்கு சமையல் பண்ணுவதற்கு ஆகும். விறகு ஒரு வீட்டிலே சமையல் பண்ணுவதற்கும் ஆகும். விறகையும் கணக்குப் பார்த்தால் இதை விட சல்லுசாய்த் தான் இருக்கும் சேதாரம் ஆவது. ஆகவே உணவு விடுதியை மக்கள் ஆதரிக்கவேண்டும்.
மறுபடியும் சொல்லுகிறேன். ரொம்ப நாணயமாய் இருக்கவேணும். அதுதான் இருக்கிறதிலேயே எல்லாவற்றையும் விட விசேஷம். அந்த விடுதிக்கும் போனால்நல்லபண்டம், குறைஞ்சவிலை சௌகரியம் அப்படீங்கிறது உண்டாக்கவேணும்.
அது கஷ்டமல்ல. அதுக்குத் தகுந்த வரும் படி வரும். அதிகமாகச் செய்கிறதிலே வந்துவிடும். இந்தக் காரியங்கள் எல்லாம் அதுக்குள்ளே இருக்கிறது என்று எடுத்துச் சொல்ல ஆசைப்படுகிறேன். ஒரு வருஷம் தாண்டிட்டாரு. நடந்துப் போச்சி.
இரண்டாவது வருஷம் துவங்குகிறது.
முதலிலே இப்ப புதிசாய் இருக்கிறதினாலே இந்த வருஷம் நடந்த வியாபாரம் அதைவிட இரண்டாவது வருஷத்திலே குறைஞ்சது இரட்டிப்பாவது ஆகணும். அவ்வளவு முயற்சி எடுத்துக்கவேணும், ஜனங்கள் வரும்படியாக,
ஆதரிக்கிறதாக.
நம் மக்களுக்கு மறுபடியும் சொல்லுகிறேன். இந்த ஜாதி உணர்ச்சியை எதிர்ப்பார்க்கக் கூடாது. நம்மவர்கள் நடத்துகிறார்கள் என்று கருதினால் அது வளர்ச்சியடைய வேணும். அதற்குப் பெருமை அடையவேணும் என்று தான் ஆசைப்படவேண்டும்.
ஆகவே தோழர்களே! இந்த சந்தர்ப்பத்தில் இவ்விடுதியைப் பற்றி ஏதோ சில வார்த்தைகள் சொல்லுவது என்பதை நானும் மற்ற தோழர்களைப் பின்பற்றி நானும் ஏதோ சொன்னேன். இன்றைய தினம் பொதுக்கூட்டம் ஒன்று இந்நகரில் இருக்கிறது. அதிலே நம்முடைய கொள்கைகளை எல்லாம் நல்ல வண்ணம் விளக்கிப் பேசுவார்கள்.
நானும்பேசுவேன்.
எல்லா தோழர்களும் அருள்கூர்ந்து வந்து விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன். எனவே இந்த நிகழ்ச்சியை இந்த சொற்களோடு நண்பர் நாராயணசாமி அவர்களையும் நண்பர் செல்வராஜூ அவர்களையும் நான் முன்னேற்றமடைய வேண்டும். அவர்கள் முயற்சி என்று மனப்பூர்த்தியாக ஆசைப்பட்டு,
மக்களுடைய ஆதரவு இருக்க வேண்டுமென்றும் மக்களையும் கேட்டுக் கொண்டு என்னுடைய பேச்சை முடித்துக் கொள்ளுகிறேன்.
நூல் - பெரியாரின் சிந்தனைத் திரட்டு
தொகுப்பாசிரியர் - து.மா.பெரியசாமி
Comments
Post a Comment