தமிழ்ப் புலவர்களின் தன்மை
நம் புலவர், பண்டிதர், தமிழறிஞர் என்பவர்களுக்கு தமிழ் மொழிபற்றிய இலக்கியம், இலக்கணம் என்னும் துறையில் ஏதாவது அறிவு, பயிற்சி இருந்தால் இருக்க முடியுமே ஒழிய உலகம், சரித்திரம், பூகோளம், பகுத்தறிவு, விஞ்ஞானம் என்னும் துறைகளில் அறிவோ, ஆராய்ச்சியோ இருக்க முடியுமா? என்பது பெரிதும் ஆலோசிக்கத்தக்கதாகும். இதைச் சொன்னால் நம் புலவர்களுக்குக் கோபம் வருவதில் குறைவில்லை. ஆனால் அப்புலவர்கள் தங்களைப் பற்றிச் சிறிது யோசித்துப் பார்க்கட்டும். தங்களால் நாட்டுக்கோ, தங்கள் சமுதாயத்துக்கோ சிறிதாவது பயன் ஏற்படும்படியான காரியம் ஏதாவது அவர்கள் செய்கிறார்கள்? செய்யத் தகுந்த சக்தியோ, அறிவோ அவர்களுக்கு இருக்கிறதா? என்பதை சிந்தித்துப் பார்த்து பிறகு கோபித்துக் கொண்டால் அதற்கு மதிப்பு இருக்கும். அப்படிக்கில்லாமல் புராணங்களை உருப் போட்டுக் கொண்டும், புராணங்களுக்குப் புதிய கருத்து சொல்லிக் கொண்டும் உலக தற்கால நிலையை உணராமல் பார்ப்பனர்களைப் போல் வேடம் போட்டுக் கொண்டு தங்களை மேல் ஜாதியார் என்று பிறர் மதிக்க வேண்டும் என்கின்ற ஆசையோடு திரிவது புலவர் தன்மையாகுமா என்று கேட்கிறோம். புலவன் என்றாலும்,...